பிரதமர் அலுவலகம்
தேசியப் பாடல் “வந்தே மாதரம்” 150-வது ஆண்டு கொண்டாட்டத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
07 NOV 2025 2:01PM by PIB Chennai
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்... இந்த வார்த்தைகள் ஒரு மந்திரம், ஓர் ஆற்றல், ஒரு கனவு மற்றும் ஒரு மனஉறுதி. வந்தே மாதரம் எனும் இந்த ஒரு சொல் பாரத மாதாவிற்கு நாம் செய்யும் வழிபாடு, பாரத அன்னையின் மீதான ஆராதனை. வந்தே மாதரம் எனும் இந்த ஒற்றைச் சொல் நம்மை வரலாற்றிற்கு அழைத்துச் செல்கிறது. இது நமது தன்னம்பிக்கையையும், நமது நிகழ்காலத்தையும் ஊக்கத்தால் நிரப்புகிறது; மேலும், நம்மால் நிறைவேற்ற முடியாத சங்கல்பமே இல்லை என்கிற புதிய துணிச்சலை நமது எதிர்காலத்திற்கு வழங்குகிறது. இந்தியர்களாகிய நம்மால் அடைய முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை.
நண்பர்களே,
வந்தே மாதரம் பாடலை அனைவரும் கூட்டாகப் பாடிய இந்த அற்புதமான அனுபவம், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. இத்தனை குரல்களில் ஒரே லயம், ஒரே தொனி, ஒரே உணர்வு, ஒரு சிலிர்ப்பு, ஒரே ஓட்டம்... இத்தகைய ஒத்திசைவு மற்றும் அலை போன்ற இந்த ஆற்றல் இதயத்தைத் துடிக்கச் செய்துள்ளது. உணர்ச்சிகள் நிறைந்த இந்தச் சூழலில் நான் எனது உரையைத் தொடர்கிறேன்.
மேடையில் வீற்றிருக்கும் எனது அமைச்சரவை சகாவான கஜேந்திர சிங் ஷெகாவத் ஜி, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஜி, முதலமைச்சர் ரேகா குப்தா ஜி மற்றும் இதர முக்கியப் பிரமுகர்களே, சகோதரர்களே, சகோதரிகளே!
இன்று நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் நம்முடன் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது வந்தே மாதரம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, நவம்பர் 7ஆம் தேதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்; இன்று நாம் வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டின் பிரம்மாண்ட திருவிழாவைக் கொண்டாடி வருகிறோம். இந்த மங்களகரமான சந்தர்ப்பம் நமக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தரும், மேலும் கோடிக்கணக்கான நாட்டு மக்களிடம் புதிய ஆற்றலை நிரப்பும். வரலாற்றில் இந்த நாளைக் குறிக்கும் வகையில், வந்தே மாதரம் குறித்த ஒரு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன. இன்று, பாரத அன்னையின் புதல்வர்களான, வந்தே மாதரம் எனும் மந்திரத்திற்காகத் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்த நமது தேசத்தின் மாபெரும் தலைவர்களுக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். மேலும் இந்தத் தருணத்தில் எனது சக குடிமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
ஒவ்வொரு பாடலுக்கும், ஒவ்வொரு கவிதைக்கும் அதற்குரிய ஒரு மையக் கருத்து, ஒரு அடிப்படைச் செய்தி இருக்கும். வந்தே மாதரத்தின் மையக் கருத்து என்ன? வந்தே மாதரத்தின் மையக் கருத்து பாரதம், பாரத அன்னை. இந்தியாவின் நித்தியமான தத்துவமும், மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்தே தன்னை வடிவமைக்கத் தொடங்கிய அந்தத் தத்துவமுமே அதுவாகும். இது பல யுகங்களை அத்தியாயங்களாகப் படித்த ஒன்று. வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு தேசங்களின் உருவாக்கம், பல்வேறு சக்திகளின் எழுச்சி, புதிய நாகரிகங்களின் வளர்ச்சி, அவை ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உச்சத்துக்கும், மீண்டும் உச்சத்திலிருந்து ஒன்றுமில்லாத நிலைக்கும் சென்ற பயணம், மாறி வரும் வரலாறு, உலகின் மாறி வரும் புவியியல் என அனைத்திற்கும் இந்தியா சாட்சியாக இருந்துள்ளது. மனிதனின் இந்த முடிவற்ற பயணத்தில் இருந்து, அவ்வப்போது புதிய முடிவுகளை நாம் கற்றுக்கொண்டோம் மற்றும் உருவாக்கினோம். அவற்றின் அடிப்படையில் நமது நாகரிகத்தின் விழுமியங்களையும் லட்சியங்களையும் நாம் செதுக்கி வடிவமைத்தோம். நாம், நமது முன்னோர்கள், நமது முனிவர்கள், துறவிகள், நமது ஆசிரியர்கள், தெய்வங்கள் மற்றும் நமது நாட்டு மக்கள் என அனைவரும் சேர்ந்து நமக்கென்று ஒரு கலாச்சார அடையாளத்தை உருவாக்கினோம். வலிமைக்கும் அறநெறிக்கும் இடையிலான சமநிலையை நாம் புரிந்து வைத்துள்ளோம். அதனால்தான், ஒரு தேசமாக இந்தியா, கடந்த காலத்தின் ஒவ்வொரு அடியையும் தாங்கி நின்று, அதன் மூலமாக அழியாத நிலையை (immortality) அடைந்த ஒரு தங்க ரத்தினமாக உருவெடுத்துள்ளது.
சகோதரர்களே, சகோதரிகளே!
இந்த இந்தியத் தத்துவமே அதன் பின்னால் இருக்கும் கருத்தியல் ரீதியான ஆற்றலாகும். நிலையற்ற உலகத்திலிருந்து மாறுபட்டு, ஒருவருடைய சுதந்திரமான இருப்பைப் பற்றிய விழிப்புணர்வு, அந்தச் சாதனையை அடைவது, பின்னர் அது ஒரு லயத்துடன் எழுதப்பட்டு, இதயத்தின் ஆழத்திலிருந்து, அனுபவங்களின் சாரத்திலிருந்து, உணர்ச்சிகளின் எல்லையற்ற நிலையை அடைந்த பிறகு, 'வந்தே மாதரம்' போன்ற ஒரு படைப்பு கிடைக்கிறது. ஆகவேதான், அந்த அடிமைத்தனமான காலத்தில், வந்தே மாதரம் இந்தத் தீர்மானத்தின் பிரகடனமாக மாறியது. அந்தப் பிரகடனம் - இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றியது. பாரத அன்னையின் கைகளில் உள்ள அடிமை விலங்குகள் உடைக்கப்படும், அவளுடைய பிள்ளைகள் தங்களின் விதியைத் தாங்களே தீர்மானிப்பவர்களாக மாறுவார்கள் என்பதுதான் அது.
நண்பர்களே,
குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ஒருமுறை கூறினார் - “பங்கிம் சந்திரரின் 'ஆனந்தமடம்' வெறும் நாவல் மட்டுமல்ல, அது சுதந்திர இந்தியாவின் ஒரு கனவு”. நீங்கள் பாருங்கள், ஆனந்தமடத்தில் வந்தே மாதரத்தின் சூழல், வந்தே மாதரத்தின் ஒவ்வொரு வரி, பங்கிம் பாபுவின் ஒவ்வொரு சொல், அவருடைய ஒவ்வொரு உணர்வு என ஒவ்வொன்றுக்கும் ஆழமான அர்த்தங்கள் உள்ளன. இந்தப் பாடல் நிச்சயமாக அடிமைத்தனத்தின் போதுதான் இயற்றப்பட்டது, ஆனால் அதன் வார்த்தைகள் ஒருபோதும் அந்தச் சில ஆண்டுகால அடிமைத்தனத்தின் நிழலுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. அவை அடிமைத்தனத்தின் நினைவுகளிலிருந்து விடுபட்டிருக்கட்டும். எனவே, வந்தே மாதரம் ஒவ்வொரு காலகட்டத்திற்கும், ஒவ்வொரு யுகத்திற்கும் பொருத்தமானது; அது அழியாத நிலையை அடைந்துள்ளது. வந்தே மாதரத்தின் முதல் வரி - “சுஜலாம் சுபலாம் மலயஜ-சீதலாம், சஸ்யசியா மலாம் மாதரம்”. அதாவது, இயற்கையின் தெய்வீக ஆசீர் வாதங்களுடன் விளங்கும், நல்ல நீர் வளமும், நல்ல நில வளமும் கொண்ட நமது தாய்நாட்டிற்கு எனது வணக்கம்.
நண்பர்களே,
இதுதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் அடையாளமாக இருந்து வருகிறது. இங்குள்ள ஆறுகள், இங்குள்ள மலைகள், இங்குள்ள காடுகள், இங்குள்ள மரங்கள் மற்றும் இங்குள்ள வளமான மண் என இந்த நிலத்திற்கு எப்போதும் பொன்னை விளைவிக்கும் ஆற்றல் உண்டு. பல நூற்றாண்டுகளாக உலக நாடுகள் இந்தியாவின் செழுமையைப் பற்றிய கதைகளைக் கேட்டு வந்தன. ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
ஆனால் சகோதரர்களே, சகோதரிகளே,
பங்கிம் பாபு வந்தே மாதரத்தை இயற்றிய போது, இந்தியா தனது பொற்காலத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றிருந்தது. அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களின் தாக்குதல்கள், சூறையாடல்கள், ஆங்கிலேயர்களின் சுரண்டல் கொள்கைகள் என அந்த நேரத்தில் நமது நாடு வறுமை மற்றும் பசியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சுற்றிலும் வேதனையும், அழிவும், துயரமும் நிறைந்திருந்த போதும், அனைத்தும் மூழ்கிப் போவது போல் தோன்றிய தருணத்திலும், பங்கிம் பாபு ஒரு செழிப்பான இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தார். ஏனெனில், சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், இந்தியாவால் அதன் பொற்காலத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்று அவர் நம்பினார். அதனால்தான், அவர் 'வந்தே மாதரம்' என்று முழங்கினார்.
நண்பர்களே,
இந்தியாவைத் தாழ்ந்ததாகவும், பின்தங்கியதாகவும் சித்தரித்து, தங்கள் ஆட்சியை நியாயப்படுத்துவதற்காக அடிமைத்தனத்தின் போது ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பரப்புரைகளை (Propaganda) இந்த முதல் வரி முற்றிலும் தகர்த்தெறிந்தது. எனவே, வந்தே மாதரம் சுதந்திரத்திற்கான கீதமாக மாறியது மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியா எப்படி இருக்கும் என்பதற்கான அந்த 'சுஜலாம் சுபலாம் கனவை' கோடிக்கணக்கான நாட்டு மக்களின் முன் நிறுத்தியது.
நண்பர்களே,
இன்றும் கூட, வந்தே மாதரத்தின் அசாதாரணமான பயணம் மற்றும் அதன் தாக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை இது நமக்கு வழங்குகிறது. 1875-ல் பங்கிம் பாபு 'பங்கதர்ஷன்' (Bangadarshan) இதழில் “வந்தே மாதரம்” பாடலை வெளியிட்டபோது, சிலர் இது வெறும் ஒரு பாடல்தான் என்று நினைத்தார்கள். ஆனால், குறுகிய காலத்திலேயே வந்தே மாதரம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் குரலாகவும், கோடிக்கணக்கான மக்களின் குரலாகவும் மாறியது. ஒவ்வொரு புரட்சியாளரின் உதடுகளிலும் ஒலித்த ஒரு குரல், ஒவ்வொரு இந்தியனின் உணர்வுகளையும் வெளிப்படுத்திய ஒரு குரலாக அது திகழ்ந்தது. வந்தே மாதரத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இல்லாத சுதந்திரப் போராட்ட அத்தியாயமே கிடையாது என்று சொல்லலாம். 1896-ஆம் ஆண்டு, கல்கத்தா மாநாட்டில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். 1905-ல் வங்கப் பிரிவினை நடந்தது. இது நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக ஆங்கிலேயர்கள் செய்த ஒரு ஆபத்தான முயற்சி. இருப்பினும், வந்தே மாதரம் அந்தத் திட்டங்களுக்கு எதிராக ஒரு பாறை போல உறுதியாக நின்றது. வங்கப் பிரிவினைக்கு எதிராக வீதிகளில் போராடியவர்களின் ஒரே குரலாக 'வந்தே மாதரம்' மட்டுமே இருந்தது.
நண்பர்களே,
பரிசால் (Barisal) மாநாட்டில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது கூட, அவர்களின் உதடுகளில் அதே மந்திரம், அதே வார்த்தைகள்தான் இருந்தன: வந்தே மாதரம்! இந்தியாவுக்கு வெளியே வசித்துக் கொண்டே சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட வீர சாவர்க்கர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதெல்லாம் 'வந்தே மாதரம்' சொல்லி வாழ்த்திக் கொண்டார்கள். பல புரட்சியாளர்கள் தூக்கு மேடையில் நின்றபோது கூட 'வந்தே மாதரம்' என்று முழங்கினார்கள். வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள், எத்தனையோ தேதிகள், இவ்வளவு பெரிய நாடு, வெவ்வேறு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்கள், வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள், அவர்களின் இயக்கங்கள்... என அனைத்தும் வேறாக இருந்தாலும், ஒவ்வொருவர் நாவிலும் இருந்த முழக்கம், அந்தச் சங்கல்பம், அந்தப் பாடல் ஒன்றுதான் - அது 'வந்தே மாதரம்'.
எனவே, சகோதரர்களே, சகோதரிகளே,
1927-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி, "வந்தே மாதரம் பிரிக்க முடியாத முழுமையான இந்தியாவின் படத்தை நம் முன்னே நிறுத்துகிறது" என்று கூறினார். ஸ்ரீ அரவிந்தர், வந்தே மாதரம் என்பது வெறும் பாடலை விட மேலானது, அது ஒரு மந்திரம் என்று குறிப்பிட்டார். அவர் சொன்னார் - "இது தன்னம்பிக்கையைத் தூண்டும் ஒரு மந்திரம்". பிகாஜி காமா வடிவமைத்த இந்தியக் கொடியின் நடுவிலும் "வந்தே மாதரம்" என்று எழுதப்பட்டிருந்தது.
நண்பர்களே,
காலப்போக்கில் நமது தேசியக் கொடி பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது, ஆனால் அன்றிலிருந்து இன்று வரை, தேசியக் கொடி ஏற்றப்படும் போதெல்லாம், நாம் இயல்பாகவே: பாரத மாதா கீ ஜெய்! வந்தே மாதரம்! என்று முழங்குகிறோம். அதனால்தான், இன்று நாம் அந்த தேசியப் பாடலின் 150 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், இது தேசத்தின் மாபெரும் வீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். மேலும், வந்தே மாதரம் என்று முழங்கிக்கொண்டே தூக்குமேடையில் ஏறியவர்கள், வந்தே மாதரம் என்று முழங்கிக்கொண்டே கசையடிகளைத் தாங்கிக்கொண்டவர்கள், வந்தே மாதரம் என்று முழங்கிக்கொண்டே பனிக்கட்டிகளின் மீது (சிறையில்) தளராமல் நின்றவர்கள் என அந்த லட்சக்கணக்கான தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதைக்குரிய வணக்கமும் இதுவாகும்.
நண்பர்களே,
இன்று, நாம் 140 கோடி நாட்டு மக்களும், தேசத்திற்காக வாழ்ந்து மறைந்த தெரிந்த, பெயர் தெரியாத மற்றும் அறியப்படாத அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறோம். "வந்தே மாதரம்" என்று முழங்கிக்கொண்டே நாட்டிற்காகத் தங்களது உயிரைத் தியாகம் செய்த, வரலாற்றின் பக்கங்களில் பெயர்கள் பதிவு செய்யப்படாத அத்தனை பேருக்கும் நாம் தலை வணங்கு கிறோம்.
நமது வேதங்கள் நமக்குக் கற்பித்துள்ளன - "மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா:" அதாவது, இந்தப் பூமி நமது தாய், இந்த நாடு நமது தாய். நாம் அதன் குழந்தைகள். வேத காலத்திலிருந்தே, இந்திய மக்கள் தேசத்தை இந்த வடிவத்தில் கற்பனை செய்து, இந்த வடிவத்திலேயே வணங்கி வந்துள்ளனர். இந்த வேத கால சிந்தனையிலிருந்துதான், வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய உணர்வை ஊட்டியது.
நண்பர்களே,
தேசத்தை வெறும் ஒரு புவிசார் அரசியல் அங்கமாக கருதுபவர்களுக்கு, நாட்டை ஒரு தாயாகக் கருதும் இந்த எண்ணம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தியா மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. இந்தியாவில், தாய் என்பவள் அன்னையாகவும் இருப்பவள், அதே சமயம் போற்றி வளர்ப்பவளாகவும் (nurturer) இருப்பவள். தன் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அவள் அழிப்பவளாகவும் மாறக்கூடியவள். எனவேதான், வந்தே மாதரம் கூறுகிறது - "அபலா கேனோ மா எதோ பலே.. பகுபல தாரிணீம் நமாமி தாரிணீம் ரிபுதல வாரிணீம் மாதரம்
வந்தே மாதரம், அதாவது எல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ள பாரத அன்னை, நாம் இன்னல்களைக் கடக்க உதவவும் முடியும், அதே சமயம் நமது எதிரிகளை அழிக்கவும் முடியும். தேசத்தைத் தாயாகவும், அந்தத் தாயைச் சக்தியின் வடிவமாகவும் கருதும் இந்தச் சிந்தனையின் விளைவுகளில் ஒன்றுதான், நமது சுதந்திரப் போராட்டம் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரின் பங்கேற்புக்கான ஒரு தீர்மானமாக மாறியது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண் சக்தி முன்னணியில் இருக்கும் ஒரு இந்தியாவை நம்மால் மீண்டும் ஒருமுறை கனவு காண முடிந்தது.
நண்பர்களே,
வந்தே மாதரம், சுதந்திரத்திற்கான ஒரு கீதமாக இருப்பதுடன், அந்தச் சுதந்திரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கும் நமக்கு உத்வேகம் அளிக்கிறது. பங்கிம் பாபுவின் முழுமையான அசல் பாடலின் வரிகள் பின்வருமாறு - "த்வம் ஹி துர்கா தசபிரஹரண-தாரிணீ கமலா கமல-தள-விஹாரிணீ வாணீ வித்யாதாயிணீ, நமாமி த்வம் நமாமி கமலாம் அம்லாம் அதுலாம் சுஜலாம் சுபலாம் மாதரம், வந்தே மாதரம்!"
அதாவது, பாரத அன்னை அறிவை வழங்கும் சரஸ்வதி, செழிப்பை வழங்கும் லட்சுமி, மற்றும் ஆயுதங்களையும் சாஸ்திரங்களையும் ஏந்திய துர்க்கை ஆவார். அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலிடத்தில் இருக்கும், அந்த அறிவு மற்றும் அறிவியலின் வலிமையுடன் செழிப்பின் உச்சத்தில் இருக்கும், மேலும் தேசியப் பாதுகாப்பில் தன்னிறைவு பெற்ற ஒரு தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
நண்பர்களே,
கடந்த ஆண்டுகளில், இந்தியாவின் இந்த வடிவத்தின் எழுச்சியை உலகம் கண்டு வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாம் இதுவரையில்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக நாம் உருவெடுத்துள்ளோம். மேலும், பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தின் மீது தாக்குதல் நடத்த எதிரி துணிந்தபோது, புதிய இந்தியா மனிதகுல சேவைக்காக 'கமலா' மற்றும் 'விமலா'வின் (லட்சுமி மற்றும் சரஸ்வதி) வடிவமாக இருந்தால், பயங்கரவாதத்தை அழிப்பதற்காக பத்து ஆயுதங்களை ஏந்திய துர்க்கையாக மாறவும் அதற்குத் தெரியும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது.
நண்பர்களே,
வந்தே மாதரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டிய சமமான முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு தலைப்பும் உள்ளது. வந்தே மாதரத்தின் உணர்வு சுதந்திரப் போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தேசத்தையும் ஒளிரச் செய்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 1937-ல் வந்தே மாதரத்தின் முக்கியமான வரிகள், அதன் ஆன்மாவின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. வந்தே மாதரம் உடைக்கப்பட்டது, அது துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டது. வந்தே மாதரத்தின் இந்தப் பிரிவினை, நாடு பிரிக்கப்படுவதற்கான விதைகளையும் விதைத்தது. தேசத்தைக் கட்டியெழுப்பும் இந்த மாபெரும் மந்திரத்திற்கு ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது? இன்றைய தலைமுறை இதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம், ஏனென்றால் அதே பிரிவினைவாதச் சிந்தனை இன்றும் நாட்டுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது.
நண்பர்களே,
இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக நாம் மாற்ற வேண்டும். இந்த ஆற்றல் இந்தியாவில் உள்ளது; இந்த ஆற்றல் இந்தியாவின் 140 கோடி மக்களிடம் உள்ளது. இதை அடைவதற்கு நம்மை நாமே நம்ப வேண்டும். இந்த சங்கல்பப் பயணத்தில், நம்மைத் தவறாக வழிநடத்த முயல்பவர்களை நாம் சந்திப்போம்; எதிர்மறைச் சிந்தனை கொண்டவர்கள் நம் மனதில் சந்தேகங்களை உருவாக்க முயல்வார்கள். அப்போது நாம் 'ஆனந்தமடம்' நாவலில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர வேண்டும். ஆனந்தமடத்தில், சந்தான் பவானந்தர் வந்தே மாதரம் பாடும்போது, மற்றொரு கதாபாத்திரம் அவரிடம் வாதிடுகிறது. "உன்னால் மட்டும் தனியாக என்ன செய்ய முடியும்?" என்று அவர் கேட்கிறார். அப்போது வந்தே மாதரத்திலிருந்து நமக்கு ஒரு உத்வேகம் கிடைக்கிறது. இத்தனை கோடி மகன்களையும் மகள்களையும், கோடிக்கணக்கான கைகளையும் கொண்ட ஒரு தாய் எப்படி பலவீனமாக இருக்க முடியும்? இன்று பாரத அன்னைக்கு 140 கோடி குழந்தைகள் உள்ளனர். அவளுக்கு 280 கோடி கைகள் உள்ளன. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இளைஞர்கள். உலகில் மிகப்பெரிய மக்கள் தொகை சாதகத்தை (demographic advantage) நாம் பெற்றுள்ளோம். இந்த ஆற்றல் இந்த நாட்டிற்குச் சொந்தமானது; இந்த ஆற்றல் பாரத அன்னைக்குச் சொந்தமானது. இன்று நமக்கு எதுதான் சாத்தியமில்லை? வந்தே மாதரத்தின் அசல் கனவை நாம் நிறைவேற்றுவதிலிருந்து நம்மை யாரால் தடுக்க முடியும்?
நண்பர்களே,
இன்று, சுயசார்பு இந்தியா எனும் தொலைநோக்குப் பார்வையின் வெற்றி, இந்தியாவில் தயாரிப்போம் எனும் உறுதிப்பாடு மற்றும் 2047-ல் வளர்ந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி நாம் எடுத்து வைக்கும் அடிகள் என, இத்தகைய முன்னெப்போதும் இல்லாத காலக்கட்டத்தில் நாடு புதிய சாதனைகளைப் படைக்கும்போது, ஒவ்வொரு குடிமகனும் சொல்கிறான் - வந்தே மாதரம்! இன்று, நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா மாறும்போது, விண்வெளியின் தொலைதூரக் கோடிகளில் புதிய இந்தியாவின் குரல் கேட்கும்போது, ஒவ்வொரு குடிமகனும் சொல்கிறான் - வந்தே மாதரம்! இன்று, விண்வெளித் தொழில்நுட்பம் முதல் விளையாட்டு வரை அனைத்திலும் நமது மகள்கள் உச்சத்தைத் தொடுவதைக் காணும்போது, நமது மகள்கள் போர் விமானங்களை இயக்குவதைக் காணும்போது, பெருமிதம் நிறைந்த ஒவ்வொரு இந்தியனின் முழக்கம் - வந்தே மாதரம்!
நண்பர்களே,
நமது ராணுவ வீரர்களுக்காக 'ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நமது படைகள் எதிரியின் தீய எண்ணங்களை முறியடிக்கும்போது, பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் மாவோயிச பயங்கரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்படும்போது, நமது பாதுகாப்புப் படைகள் ஒரே ஒரு மந்திரத்தால் மட்டுமே உத்வேகம் பெறுகின்றன, அந்த மந்திரம் - வந்தே மாதரம்!
நண்பர்களே,
பாரத அன்னையை ஆராதிக்கும் இந்த உணர்வு, வளர்ந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். நமது இந்த 'அமிர்த யாத்திரை'யில் வந்தே மாதரம் எனும் மந்திரம் பாரத அன்னையின் கோடிக்கணக்கான குழந்தைகளுக்குத் தொடர்ந்து வலிமையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி எனது நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நாடு முழுவதிலுமிருந்து என்னுடன் இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். என்னுடன் இணைந்து நின்று, உங்கள் கைகளை உயர்த்தி, முழு வலிமையுடன் சொல்லுங்கள் -
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
மிக்க நன்றி!
***
(Release ID: 2187270)
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2242283)
வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam