பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் தலைமை வகித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 DEC 2025 9:32PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் நடைபெற்ற 5-வது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் உரையாற்றினார். மூன்று நாள் மாநாடு 2025 டிசம்பர் 26 முதல் 28 வரை தில்லியின் பூசாவில் நடைபெற்றது.

கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை வலுப்படுத்துவதிலும், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய மத்திய-மாநில ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும் இந்த மாநாடு மற்றொரு முக்கிய அம்சம் என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீத மக்கள் உழைக்கும் வயதினரைச் சேர்ந்தவர்கள் என்றும், இது ஒரு தனித்துவமான வரலாற்று வாய்ப்பை உருவாக்குகிறது என்றும், இதை முறையாக பயன்படுத்தினால் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை கணிசமாக துரிதப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்சார்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.  இறக்குமதி சார்புநிலையைக் குறைத்து பொருளாதார மீட்சித்தன்மையை வலுப்படுத்த உள்நாட்டு உற்பத்திக்கான 100 தயாரிப்புகளை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக அடையாளம் காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு சுற்றுலா மிகப்பெரிய பங்காற்ற முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா ஒரு வளமான பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்டுள்ளது என அவர் எடுத்துரைத்தார். குறைந்தபட்சம் ஒரு உலக அளவிலான சுற்றுலா தலத்தை உருவாக்கு ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்குமாறு மாநிலங்களை அவர் வலியுறுத்தினார். விரைவில் தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். ஒவ்வொரு மாநிலமும் இதற்கு முன்னுரிமை அளித்து, உலகளாவிய நிறுவனங்களை ஈர்க்க உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  உற்பத்தியை ஊக்குவிக்கவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும், சேவைத் துறையை வலுப்படுத்தவும் மாநிலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த மாநாடு இந்தியாவின் கூட்டு சிந்தனையையும் ஆக்கபூர்வமான கொள்கை உரையாடல் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது என்றும், மத்திய அரசால் நடத்தப்படும் தலைமைச் செயலாளர்கள் மாநாடு, கூட்டு விவாதத்திற்கு ஒரு பயனுள்ள தளமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அதிகாரிகளிடையே தேசிய கண்ணோட்டத்தை ஊக்குவிக்கவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதில் நிர்வாகத்தை மேம்படுத்தவும் இதேபோன்ற மாநாடுகளை தொடர்ந்து நடத்தலாம் என்று பிரதமர் பரிந்துரைத்தார்.

மூன்று நாள் நடைபெற்ற இந்த மாநாடு, தொடக்கக் கல்வி, திறன் மேம்பாடு, உயர்கல்வி, விளையாட்டு உள்ளிட்ட சிறப்பு கருப்பொருள்களை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தலைமைச் செயலாளர்கள், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள், வல்லுநர்கள் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

----

(Release ID: 2209301)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240898) வருகையாளர் எண்ணிக்கை : 20