பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புத்தொழில் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

प्रविष्टि तिथि: 08 JAN 2026 2:48PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று காலை தமது இல்லத்தில் நடைபெற்ற  இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புத்தொழில் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இந்திய ஏஐ தாக்கம் குறித்த உச்சிமாநாடு 2026 அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ள 12 இந்திய ஏஐ புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகள் மற்றும் பணிகள் பற்றி எடுத்துரைத்தனர்.

நாட்டில் செயற்கை நுண்ணறிவு சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஏஐ புத்தொழில் நிறுவனங்கள் பாராட்டின. வலுவான, ஏஐ மேம்பாட்டுக்கு உகந்த சூழல் இப்போது இந்தியாவிற்கு தேவைப்படுவதாக கூறிய இந்நிறுவனங்களின் தலைவர்கள் இதன் மூலம் உலகளாவிய ஏஐ வரைபடத்தில் நாடு உறுதியான இடத்தை பெறும் என்று தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர், சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய ஏஐ தாக்கம் குறித்த உச்சிமாநாட்டின் மூலம் தொழில்நுட்பத்துறையில் நாடு மிகப்பெரிய பங்களிப்பை செய்யும் என்று அவர் கூறினார். ஏஐ பயன்பாட்டின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர இந்தியா முயற்சி மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

புத்தொழில் நிறுவனங்களும் ஏஐ தொழில்முனைவோரும் இந்தியாவின் எதிர்காலத்திற்கான சிற்பிகள் என்று தெரிவித்த பிரதமர், புதிய கண்டுபிடிப்பு மற்றும் பெருமளவிலான அமலாக்கத்திற்கு நாடு மிகுந்த திறனைக் கொண்டுள்ளது என்றார். இந்தியா மீதான உலகத்தின் நம்பிக்கை நாட்டின் மிகப்பெரிய பலம் என்று பிரதமர் தெரிவித்தார். இந்திய ஏஐ மாதிரிகள் நெறிமுறை சார்ந்தவை, பாகுபாடு இல்லாதவை, வெளிப்படைத்தன்மை கொண்டவை, தனிநபர் தரவு கோட்பாடுகள் அடிப்படையானவை என்பதை உறுதி செய்வது அவசியம் என்று பிரதமர் கூறினார்.

அவதார், பாரத்ஜென், ஜென்லூப், சர்வம், ஷோத் ஏஐ, டெக் மகிந்திரா, ஜென்டெக் உள்ளிட்ட இந்திய ஏஐ புத்தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள்/ தலைவர்கள்/ பிரதிநிதிகள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

***

(Release ID: 2212390)

AD/SMB/RJ/SH


(रिलीज़ आईडी: 2212569) आगंतुक पटल : 37
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada