பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரத் மண்டபத்தில் 'உலக உணவு இந்தியா 2025' நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2025 8:59PM by PIB Chennai

ரஷ்ய துணைப் பிரதமர் திரு. டிமிட்ரி பாட்ருஷேவ் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சிராக் பாஸ்வான் மற்றும் திரு. ரவ்னீத் அவர்களே, திரு. பிரதாப்ராவ் ஜாதவ் அவர்களே, பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வருகை தந்துள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளே, சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

'உலக உணவு இந்தியா' (World Food India) நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இன்று, இந்த நிகழ்வில், நம் விவசாயிகள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் என அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடியுள்ளனர். உலக உணவு இந்தியா ஒரு புதிய தொடர்பு, புதிய உறவுகள் மற்றும் படைப்பாற்றலுக்கான ஒரு திருவிழாவாக மாறியுள்ளது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கண்காட்சிகளை நான் இப்போதுதான் பார்வையிட்டேன். இதில், ஊட்டச்சத்து, எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தல், மற்றும் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களின் முழுமையான தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்வுக்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

ஒவ்வொரு முதலீட்டாளரும் முதலீடு செய்வதற்கு முன், எந்த இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறாரோ அந்த இடத்தின் இயற்கையான பலங்களை மதிப்பிடுகிறார். இன்று, உலகம் முழுவதும், குறிப்பாக உணவுத் துறை தொடர்பான முதலீட்டாளர்கள், பெரிய நம்பிக்கையுடன் இந்தியாவை நோக்கிப் பார்க்கின்றனர். ஏனென்றால், இந்தியா பன்முகத்தன்மை தேவை  மற்றும் அளவு ஆகிய மூன்று பலங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு தானியமும், ஒவ்வொரு பழமும், ஒவ்வொரு காய்கறியும் விளைவிக்கப்படுகிறது. இந்த பல்வகைத்தன்மையின் காரணமாக, இந்தியா உலகிலேயே தனித்துவமானது. நம் நாட்டில் ஒவ்வொரு நூறு கிலோமீட்டருக்கும் உணவு மற்றும் அதன் சுவை மாறுகிறது. இந்தியாவில், பலதரப்பட்ட உணவு வகைகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இந்தத் தேவை, இந்தியாவுக்கு ஒரு போட்டித்தன்மையை அளிக்கிறது, மேலும் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாகவும் திகழ்கிறது.

நண்பர்களே,

இந்தியாவில் இன்று பணிகள் மேற்கொள்ளப்படும் அளவு (Scale) முன் எப்போதும் இல்லாத வகையிலும், கற்பனை செய்ய முடியாத வகையிலும் வேகமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இந்த குடிமக்கள் அனைவரும் இப்போது நவீன நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர். இந்த நவீன நடுத்தர வர்க்கம்தான் நாட்டின் மிகவும் வீரியமான மற்றும் மிகுந்த லட்சியம் கொண்ட பிரிவாகும். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களின் லட்சியங்கள் நம் உணவுப் போக்கை வடிவமைக்கும். இந்த லட்சிய வர்க்கம்தான் நம் தேவையைத் தூண்டுகிறது.

நண்பர்களே,

இன்று, நாட்டின் திறமையான இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். நம் உணவுத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய  புத்தொழிலுக்கான சிறந்த சூழலைக் கொண்டுள்ளது. இந்தப் புத்தொழில்களில் பல உணவு மற்றும் விவசாயத் துறைகளில் ஈடுபட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI), மின்னணு வர்த்தகம் (e-commerce), ட்ரோன்கள் மற்றும் செயலிகள் (apps) ஆகியவையும் இந்தத் துறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நம் புத்தொழில்கள் விநியோகச் சங்கிலிகள், சில்லறை விற்பனை மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. எனவே, இந்தியா ஒரே நேரத்தில் பல்வகைத்தன்மை, தேவை மற்றும் புதுமை (innovation) ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளது. இந்த காரணிகள் இந்தியாவை முதலீடுகளுக்கு மிகவும் உகந்த இடமாக மாற்றுகின்றன. அதனால் தான், நான் செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து கூறியதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்: இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் இதுவே தருணம், ஆகச் சிறந்த தருணம் ஆகும்.

நண்பர்களே,

21 ஆம் நூற்றாண்டு உலகத்தின் முன் கொண்டு வந்துள்ள பல சவால்களை நாம் அனைவரும் நன்கு அறிவோம். உலகத்தின் முன் சவால்கள் எழும்போதெல்லாம், இந்தியா ஒரு நேர்மறையான பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா தொடர்ந்து பங்களித்து வருகிறது. நம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் மற்றும் துணை நிற்கும் அரசாங்கக் கொள்கைகளின் கடின உழைப்பால், இந்தியாவின் திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், நம் உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று, உலகின் பால் விநியோகத்தில் 25% பங்களிப்புடன், இந்தியா பாலின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. சிறுதானியங்களின் (Millets) மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் நாம் இருக்கிறோம். அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில், நாம் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன்வளம் ஆகியவற்றிலும் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. அதனால்தான், உலகில் பயிர் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், விநியோகச் சங்கிலிகள் சீர்குலைக்கப்படும்போதெல்லாம், இந்தியா தன் பொறுப்பை நிறைவேற்ற பலத்துடன் முன்வருகிறது.

 

நண்பர்களே,

உலக நலனுக்காக, இந்தியாவின் திறனையும் பங்களிப்பையும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காக, உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஒவ்வொரு பங்குதாரரையும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையும் அரசு வலுப்படுத்தி வருகிறது.

எங்கள் அரசு உணவு பதப்படுத்தும் துறைக்கு ஊக்கமளித்து வருகிறது. அதனால்தான், இந்தத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, PLI (உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்பு) திட்டம் மற்றும் மெகா உணவுப் பூங்காக்களின் விரிவாக்கம் ஆகியவை இந்தத் துறைக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளன. இன்று, இந்தியா உலகின் மிகப்பெரிய சேமிப்புக் கட்டமைப்பை (storage infrastructure) கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகளின் விளைவுகள் கண்கூடாகத் தெரிகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் பதப்படுத்தும் திறன் இருபது மடங்கு அதிகரித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஏற்றுமதியும் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

நண்பர்களே,

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் மற்றும் சிறிய பதப்படுத்தும் அலகுகள் ஆகியவை உணவு விநியோகம் மற்றும் மதிப்புச் சங்கிலியில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக, இந்த அனைத்துப் பங்குதாரர்களையும் எங்கள் அரசு வலுப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 85%க்கும் அதிகமானவர்கள் சிறிய அல்லது விளிம்புநிலை விவசாயிகள் (Small or Marginal Farmers) என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, நாங்கள் கொள்கைகளை வகுத்து, ஒரு ஆதரவு அமைப்பை உருவாக்கினோம். இதன் மூலம், இந்தச் சிறிய விவசாயிகள் இப்போது சந்தையில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளனர்.

நண்பர்களே,

உதாரணமாக, சிறு உணவுப் பதப்படுத்தும் அலகுகள்  நம் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படுகின்றன. இந்த சுய உதவிக் குழுக்கள் நம் கிராமங்களில் லட்சக்கணக்கான மக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஆதரவளிக்க, எங்கள் அரசு மானியத்தடன் கூடிய கடன்களை (credit-linked subsidies) வழங்கி வருகிறது. இன்றும் கூட, சுமார் 800 கோடி ரூபாய் மானியம் உங்கள் முன்னிலையில் இந்த பயனாளிகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது.

நண்பர்களே,

அதேபோல, எங்கள் அரசு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) விரிவுபடுத்தி வருகிறது. 2014 ஆம் ஆண்டு முதல், நாடு முழுவதும் பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன, இவை இலட்சக்கணக்கான சிறு விவசாயிகளை இணைக்கின்றன. இந்த அமைப்புகள் சிறு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பெரிய அளவில் சந்தைக்குக் கொண்டு செல்ல உதவுகின்றன. மேலும், அவற்றின் பங்கு இத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உணவு பதப்படுத்தும் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து, தரக்குறியீடு செய்யப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கி வருகின்றன.

நம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் வலிமையைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இன்று, நம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் 15,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இணையதளங்களில் கிடைக்கின்றன. காஷ்மீரின் பாஸ்மதி அரிசி, குங்குமப்பூ மற்றும் வால்நட்ஸ்; இமாச்சலப் பிரதேசத்தின் பழக்கூழ் (ஜாம்) மற்றும் ஆப்பிள் சாறு; ராஜஸ்தானின் சிறுதானிய பிஸ்கெட்டுகள்; மத்தியப் பிரதேசத்தின் சோயா நக்கெட்ஸ்; பீகாரின் மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு மக்கானா; மகாராஷ்டிராவின் கடலை எண்ணெய் மற்றும் வெல்லம்; மற்றும் கேரளாவின் வாழைச் சிப்ஸ் மற்றும் தேங்காய் எண்ணெய்— காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் இந்தியாவின் விவசாயப் பல்வகைத்தன்மையை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்கின்றன.

மேலும், 1,100-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளன (அதாவது, அவற்றின் ஆண்டு விற்றுமுதல் ஒரு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது) என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

நண்பர்களே,

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளைத் தவிர, கூட்டுறவு சங்கங்களும் இந்தியாவில் ஒரு பெரிய பலமாகும். இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டு ஆகும். இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் நம் பால்வளத் துறைக்கும், கிராமப்புறப் பொருளாதாரத்திற்கும் புதிய பலத்தை அளித்து வருகின்றன.

கூட்டுறவு சங்கங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அவற்றிற்காக ஒரு தனி அமைச்சகத்தை நாங்கள் நிறுவியுள்ளோம். இதன் மூலம், அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப எங்கள் கொள்கைகளை வடிவமைக்க முடிந்தது. இந்தத் துறைக்காக வரி மற்றும் வெளிப்படைத்தன்மை சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொள்கை மட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் கூட்டுறவுத் துறைக்கு ஒரு புதிய பலத்தை அளித்துள்ளன.

நண்பர்களே,

கடல்சார் மற்றும் மீன்வளத் துறையிலும் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. கடந்த பத்தாண்டுகளில், மீன்வளத் துறை தொடர்பான கட்டமைப்பை நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். மீனவர்களுக்கு நிதியுதவியும், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு உதவியும் வழங்கியுள்ளோம். இது நம் கடல் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரித்துள்ளது. இன்று, இத்துறை கிட்டத்தட்ட 3 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. கடல்சார் பொருட்களின் பதப்படுத்துதலையும் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக, நவீன பதப்படுத்தும் ஆலைகள், குளிர் பதன கிடங்குகள் மற்றும் நவீன துறைமுகங்களில் முதலீடுகள் செய்யப்படுகின்றன.

நண்பர்களே,

பயிர்களைப் பாதுகாப்பதற்காக நவீன தொழில்நுட்பத்திலும் நாங்கள் முதலீடு செய்து வருகிறோம். விவசாயிகள் உணவுப் பதப்படுத்தும் கதிர்வீச்சுத் தொழில்நுட்பத்துடன் (Food Irradiation Technology) இணைக்கப்படுகிறார்கள். இது நம் விவசாயப் பொருட்களின் சேமிப்புக் காலத்தை அதிகரித்துள்ளதுடன், உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்தியுள்ளது. இந்த வேலையில் ஈடுபட்டுள்ள அலகுகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

நண்பர்களே,

இன்றைய இந்தியா புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சீர்திருத்தங்களின் பாதையில் முன்னேறி வருகிறது. தற்போது, நம் நாட்டில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) சீர்திருத்தங்களைப் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. விவசாயிகளைப் பொறுத்தவரை, இந்தச் சீர்திருத்தங்கள் குறைந்த செலவுகள் மற்றும் அதிக நன்மைகள் பற்றிய உறுதியை அளிக்கின்றன.

வெண்ணெய் மற்றும் நெய்க்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அதிகம் பயனடைவார்கள். பால் பாத்திரங்களுக்கும் வரி 5% மட்டுமே உள்ளது. இது விவசாயிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் சிறந்த விலை கிடைப்பதை உறுதி செய்யும். மேலும், இது ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்து கிடைப்பதையும் உறுதி செய்யும்.

உணவு பதப்படுத்தும் துறையும் இந்தச் சீர்திருத்தங்களால் குறிப்பிடத்தக்க அளவில் பயனடைய உள்ளது.  உண்ணுவதற்கு தயார் நிலையில் உள்ள மற்றும் பாதுகாக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகளுக்கு  5% மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இன்று, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் 90% க்கும் அதிகமானவை பூஜ்ஜியம் அல்லது 5% வரி அடுக்குகளில் உள்ளன. உயிரி பூச்சிக்கொல்லிகள் (bio-pesticides) மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால், உயிரி உள்ளீடுகளின் விலை குறைந்து, சிறிய இயற்கை விவசாயிகளுக்கும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் நேரடியாகப் பலன் கிடைக்கிறது.

 

நண்பர்களே,

இன்றைய காலத்தின் தேவை மட்கும் தன்மையுடைய பேக்கேஜிங் ஆகும். நம் தயாரிப்புகள் புதியதாகவும், உயர்தரமாகவும் இருப்பது முக்கியம். ஆனால், அதனுடன் சேர்த்து, இயற்கையின் மீதான பொறுப்பும் நமக்கு உள்ளது. எனவே, அரசு மட்கும் தன்மையுடைய பேக்கேஜிங் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளது. மேலும், அனைத்துத் தொழில் துறைப் பங்குதாரர்களுக்கும் நான் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்: நீங்கள் மட்கும் தன்மையுடைய பேக்கேஜிங் தொடர்பான புதுமையான தாயரிப்புகளில் முதலீடு செய்து, நம் தயாரிப்பு பேக்கேஜிங் அனைத்தையும் விரைவில் மட்கும் தன்மையுள்ள பொருட்களுக்கு மாற்றுங்கள்.

நண்பர்களே,

இந்தியா தாராள மனப்பான்மையுடன் உலகத்திற்காகத் தன் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. உணவுச் சங்கிலியுடன் தொடர்புடைய அனைத்து முதலீட்டாளர்களையும் நாங்கள் திறந்த மனதுடன் வரவேற்கிறோம். நாங்கள் திறந்த இதயத்துடன் ஒத்துழைப்புகளுக்குத் தயாராக இருக்கிறோம். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவரையும் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய நான் அழைக்கிறேன். இந்தத் துறையில் எல்லையில்லா சாத்தியக்கூறுகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நிகழ்வில் தொடர்புடைய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

-----

(Release ID: 2171484

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2204021) வருகையாளர் எண்ணிக்கை : 23