பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பூடானின் 4-வது மன்னரது 70-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

Posted On: 11 NOV 2025 1:13PM by PIB Chennai

பூடான் தலைநகர் திம்புவில் உள்ள சாங்லிமெதாங் திடலில் இன்று நடைபெற்ற பூடான் 4-வது மன்னரின் 70-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பூடான் மன்னர் திரு ஜிக்மே கேசர் நாம்கியால், 4-வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோருக்கு பிரதமர் தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேன்மை தங்கிய மன்னர் குடும்பத்தினர், பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே மற்றும் பிரமுகர்களின் மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

உலகம் ஒரு குடும்பம் என்பதை எடுத்துரைக்கும் வசுதைவ குடும்பகம் என்ற தொன்மை சிந்தனையில் இந்தியா ஊக்கம் பெற்றுள்ளது என்றும், அனைவரும் இன்புற்றிருக்க நினைக்கும் இந்தியாவின் மந்திரம் உலக மகிழ்ச்சியை வலியுறுத்துவதாக பிரதமர் கூறினார்.  சொர்க்கத்திலும், விண்வெளியிலும், பூமியிலும், நீர், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் அமைதியை விரும்பும் வேத மந்திரங்கள் இவற்றை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த உணர்வுகளுடன் பூடானின் உலகளாவிய அமைதி வழிபாட்டுத் திருவிழாவில் இந்தியா பங்கேற்கிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகம் முழுவதிலும் இருந்து உலகளாவிய அமைதிக்காக வழிபாடு செய்ய துறவிகள் வந்துள்ள நிலையில், இந்த கூட்டான உணர்வின் பகுதியாக இந்தியாவின் 140 கோடி மக்களும் உள்ளனர் என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவும் பூடானும் எல்லைகளால் மட்டும் இணைந்திருக்கவில்லை, கலாச்சாரத்தாலும் இணைந்துள்ளன. நமது உறவு, மாண்புகள், உணர்ச்சிகள், சமாதானம், முன்னேற்றம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
2014-ல் தாம் பிரதமராக பொறுப்பேற்றவுடன்  முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை பூடானில் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த பிரதமர், அந்தப் பயணத்தின் நினைவுகள் இன்றும் தமது உணர்வில் கலந்திருப்பதாகக் கூறினார்.

இந்தியா – பூடான் நாடுகளின் முன்னேற்றமும் வளமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று தெரிவித்த பிரதமர், பூடானின் 5 ஆண்டுத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு இந்தியா ரூ.10,000 கோடி நிதியுதவி செய்ததை சுட்டிக்காட்டினார். சாலைகள் முதல் வேளாண்மை வரையும், நிதியுதவி முதல் சுகாதார சிகிச்சை வரை பூடான் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார். யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை என்பது பூடானில் விரிவடைந்து வருகிறது என்றும் இதன் காரணமாக பூடான் மக்கள் இந்தியாவிற்கு வருகை தரும் போது அவர்கள் யுபிஐ சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் ராஜ்கிர் நகரில் பூடான் கோவில் அண்மையில், திறக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, இந்த முன்முயற்சி தற்போது நாட்டின் பிறபகுதிகளுக்கும் விரிவடைந்து வருகிறது என்றார். பூடான் மக்களின் விருப்பங்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர், வாரணாசியில், பூடான் கோவிலும், விருந்தினர் மாளிகையும் கட்டுவதற்குத் தேவைப்படும் நிலத்தை இந்திய அரசு வழங்கியுள்ளது என்று கூறினார். இந்தக் கோவில்கள் இந்தியா –பூடான் இடையேயான மதிப்புமிகு வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார உறவுகளை வெளிப்படுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188682

***

SS/SMB/KPG/RK


(Release ID: 2188827) Visitor Counter : 14