பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திரின் 200-வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 11 NOV 2024 2:53PM by PIB Chennai

ஜெய் சுவாமிநாராயண்!

பகவான் ஸ்ரீ சுவாமிநாராயணனின் மலர் பாதங்களை வணங்குகிறேன். பகவான் ஸ்ரீ சுவாமிநாராயணனின் அருளால், வட்டல் தாமில்  ஒரு அற்புதமான 200-வது ஆண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதிலிருந்தும்  பக்தர்கள் திரண்டிருக்கின்றனர். மேலும் சேவை இல்லாமல் எந்த முயற்சியும் நடக்காது என்பது சுவாமிநாராயண் சமூகத்தில் எப்போதும் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இன்று, மக்கள் பல்வேறு சேவை சார்ந்த செயல்பாடுகளில் உற்சாகமாக பங்களித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொலிக் காட்சிகளிலும் நான் கண்ட இந்தக் கொண்டாட்டத்தின் படங்கள் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

நண்பர்களே,

வட்டல் தாம் நிறுவப்பட்டதன் 200-வது ஆண்டு விழா சாதாரண நிகழ்விற்கு அப்பாற்பட்டது. வட்டல் தாம் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு முக்கியமான தருணமாகும். எங்களைப் பொறுத்தவரை, இந்தக் கொண்டாட்டம் இந்திய கலாச்சாரத்தின் நீடித்த இயக்கத்திற்கு சான்றாக செயல்படுகிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு பகவான் ஸ்ரீ சுவாமிநாராயணனால் நிறுவப்பட்ட வட்டல் தாம்மின் ஆன்மீக உணர்வை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். இன்றும் கூட, பகவான் ஸ்ரீ சுவாமிநாராயணனின் போதனைகள் மற்றும் தெய்வீக ஆற்றலை இங்கே உணர முடியும். இந்த மகத்தான இருநூறாவது ஆண்டு விழாவில், துறவிகளின் திருவடிகளை வணங்குகிறேன், உங்களுக்கும் நம் சக நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்திய அரசு 200 ரூபாய்  வெள்ளி நாணயத்தையும், நினைவு தபால் தலையையும் வெளியிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற சின்னங்கள் இந்த முக்கியமான நிகழ்வின் நினைவுகளை வருங்கால தலைமுறைகளுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.

நண்பர்களே,

பகவான் சுவாமிநாராயணனுடன் தொடர்புடைய அனைவரும் இந்த பாரம்பரியத்துடனான எனது பிணைப்பின் ஆழத்தை புரிந்துகொள்கிறார்கள். அவருடனான எனது உறவு எவ்வளவு பழமையானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அங்கு இருக்கும் ராகேஷ் அவர்களால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த பிணைப்பு ஆன்மீகம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகம் சார்ந்ததும் கூட. நான் குஜராத்தில் இருந்த காலத்தில், துறவிகளுடன் நேரத்தைச் செலவழித்து சத்சங்கங்களில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்தகைய தருணங்களைப் பெற்றதை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். அவை ஒவ்வொன்றையும் நான் மிகவும் ரசித்தேன். பகவான் சுவாமிநாராயணனின் அருளால், இன்றும் கூட, ஏதோ ஒரு வகையில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அந்த தொடர்பு தொடர்கிறது. பல சந்தர்ப்பங்களில், முனிவர்களின் ஆசிகளைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை ஆழமாகச் சிந்திக்க என்னைத் தூண்டியுள்ளது.

இன்று வட்டல் தாம்மில் நடைபெறும் இந்தப் புனித விழாவில் நான் நேரடியாகக்  கலந்து கொள்ள வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். உங்கள் அனைவருடனும் அமர்ந்து, பல மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூர்ந்து, இந்த சந்தர்ப்பத்தின் மகிழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இயல்பாகவே, அத்தகைய தருணத்தை நாம்  ரசித்திருப்போம். இருப்பினும், எனது பொறுப்புகள் மற்றும் உறுதிமொழிகள் காரணமாக, அது சாத்தியமாகவில்லை. ஆனாலும், நான் உங்கள் அனைவருடனும் உணர்வுப் பூர்வமாக இணைத்துள்ளேன். இந்த நிமிடம்  என் இதயம் முழுமையாக வட்டல் தாம் மீது உள்ளது.

நண்பர்களே,

மதிப்பிற்குரிய முனிவர்களே, துயரங்களின்போது, துறவிகள், மகரிஷிகள், சாதுக்கள் மற்றும் மகாத்மாக்கள் எப்போதும் சமூகத்தை வழிநடத்தவும் உயர்த்தவும் தோன்றியுள்ளனர் என்பது இந்தியாவின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட பிறகு, நம்பிக்கையை இழந்து, சுயவிமர்சனத்தில் மூழ்கி நமது நாடு பலவீனமடைந்த ஒரு தருணத்தில் பகவான் சுவாமிநாராயணன் தோன்றினார். அத்தகைய ஒரு முக்கியமான நேரத்தில், பகவான் சுவாமிநாராயணனும் அந்தக் காலத்து ஞானிகளும் நமக்குப் புதுப்பிக்கப்பட்ட ஆன்மீக சக்தியை ஊட்டினர். அவர்கள் நமது சுயமரியாதையை எழுப்பி, நமது அடையாள உணர்வைப் புதுப்பித்தனர். ஷிக்ஷாபத்ரி மற்றும் வசனாம்மிர்தத்தின் போதனைகள் இந்த விஷயத்தில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளன. மேலும் இந்தப் போதனைகளை உள்வாங்கி முன்னெடுத்துச் செல்வது  நமது கடமையாகும்.

இந்தத் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, வட்டல் தாம் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கும் சகாப்தத்தை வடிவமைப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறந்த நிறுவனமாக மாறியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் புனித இடம் சாகரம்ஜி போன்ற பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த தலைசிறந்த பக்தர்களை உருவாக்கியுள்ளது. இன்று, எண்ணற்ற குழந்தைகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் கல்வி வழங்கும் திட்டங்கள் உட்பட ஏராளமான முன்முயற்சிகள் உங்களால் நடத்தப்படுகின்றன. மேலும், தொலைதூர வனப்பகுதிகளில் சேவை தொடர்பான ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பழங்குடிப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவது போன்ற குறிப்பிடத்தக்க பணிகளை நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள். ஏழைகளுக்கு சேவை செய்வதாக இருந்தாலும் சரி, புதிய தலைமுறையை வளர்ப்பதாக இருந்தாலும் சரி, அல்லது ஆன்மீகத்துடன் நவீனத்துவத்தை கலப்பதன் மூலம் இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாக இருந்தாலும் சரி, பிரகாசமான எதிர்காலத்திற்கான தொடர்ச்சியான பிரச்சாரம் உங்கள் அர்ப்பணிப்புக்கு சான்றாக விளங்குகிறது. நான் விடுத்த ஒவ்வொரு வேண்டுகோளும், அது தூய்மை தொடர்பானதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கானதாக இருந்தாலும், அவற்றுக்கு நீங்கள் எப்பொழுதும் உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தி வருகிறீர்கள். உங்களைப் போன்ற முனிவர்களும் பக்தர்களும் என்னை ஒருபோதும் ஏமாற்றவில்லை. நீங்கள் எனது ஒவ்வொரு கோரிக்கையையும் உங்கள் சொந்தப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, அவற்றை நிறைவேற்ற முழு மனதுடன் பாடுபடுகிறீர்கள்.

சமீபத்தில் நான் முன்மொழிந்த ஒரு பிரச்சாரத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல் என்பதுதான் அது. சுவாமிநாராயண் குடும்பத்தினர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு இந்த முன்முயற்சியில் உற்சாகமாகப் பங்கேற்றுள்ளனர்.

நண்பர்களே,

ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையில் ஒரு நோக்கம் உள்ளது, மேலும் இந்த நோக்கம் நமது இருப்பை வடிவமைக்கிறது. அது நமது எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறியும்போது, ​​அனைத்தும் மாறுகின்றன. வரலாறு முழுவதும், நமது துறவிகளும் முனிவர்களும் மக்கள் தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள உதவியுள்ளனர். சமூகத்திற்கு இந்த ஆன்மீக வழிகாட்டிகளின் பங்களிப்புகள் மகத்தானவை. ஒரு முழு சமூகமோ அல்லது ஒரு தேசமோ ஒரு பொதுவான நோக்கத்தை அடைய ஒன்றுபடும்போது, ​​வெற்றி தவிர்க்க முடியாததாகிறது. இது ஏராளமான எடுத்துக்காட்டுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் அதை முன்பே சாதித்துள்ளோம் - நமது துறவிகள் அதை சாதித்துள்ளனர், நமது சமூகம் அதை சாதித்துள்ளது, மேலும் நமது மத நிறுவனங்கள் அதை சாதித்துள்ளன.

இன்று, நமது இளைஞர்களுக்கு முன்னால் ஒரு குறிப்பிடத்தக்க குறிக்கோள் இருப்பதுடன், ஒட்டுமொத்த தேசமும் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறி வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதாகும். இந்த உன்னதமான பணியில், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் இந்த மகத்தான தொலைநோக்குப் பார்வையில் சேர அனைவரையும் ஊக்குவிக்குமாறு வட்டலின் ஞானிகள் மற்றும் முனிவர்களையும், சுவாமிநாராயண் குடும்பத்தினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரப் போராட்டம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் தூண்டி சுதந்திரத்திற்கான ஒரு தளராத ஆர்வத்தைத் தூண்டியதைப் போல, தேசிய வளர்ச்சிக்கான அதே இடைவிடாத உந்துதலை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு நாள் அல்லது ஒரு கணம் கூட மக்களின் இதயங்களில் சுதந்திரத்திற்கான தேடல் உயிர்ப்புடன் இருக்காமல் கடந்து செல்லவில்லை,  அத்தகைய அர்ப்பணிப்புதான் இப்போது நமது 140 கோடி நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தேவை.

நாம் அனைவரும் ஒன்றாக, குறிப்பாக நமது இளம் நண்பர்கள், அடுத்த 25 ஆண்டுகளை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தின் இந்த தொலைநோக்குப் பார்வைக்கு அர்ப்பணிக்க ஊக்குவிக்க வேண்டும். நாம் இந்த நோக்கத்தை வாழ்க்கையாகக் கொண்டு சுவாசிக்க வேண்டும், ஒவ்வொரு கணமும் அதனுடன் இணைந்திருக்க வேண்டும். நாம் எங்கிருந்தாலும், அந்த இடத்திலிருந்தே பங்களிக்கத் தொடங்க வேண்டும். இந்த இலக்கை அடைய நாம் ஒவ்வொருவரும் பங்களிக்கும்போது, ​​நாம் கூட்டாக பயனடைவோம். வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு முக்கியமான முயற்சி, தன்னிறைவை அடைவது. ஒரு தற்சார்பு கொண்ட தேசத்தைக் கட்டியெழுப்ப, வெளிப்புற உதவியை எதிர்பார்க்காமல், நம்மை நாமே சார்ந்திருக்க வேண்டும். 140 கோடி குடிமக்களும் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும், இங்குள்ள பக்தர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் வணிகங்களை ஊக்குவிக்கும் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுக்கும் பிரச்சாரத்துடன் நாம் தொடங்கலாம்.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு, நமது ஒற்றுமையும் தேசிய ஒருமைப்பாடும் மிக முக்கியம். துரதிர்ஷ்டவசமாக, சுயநலன்களாலும், வரையறுக்கப்பட்ட புரிதலாலும் உந்தப்பட்ட சிலர், சாதி, மதம், மொழி, சமூக அந்தஸ்து, பாலினம் மற்றும் நகர்ப்புற-கிராமப்புற பிளவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தை துண்டு துண்டாகப் பிரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கான லட்சிய இலக்குகளை பலவீனப்படுத்துகின்றனர். நாட்டின் எதிரிகளால் ஏற்படும் இந்த அச்சுறுத்தல்களின் தீவிரத்தை நாம் உணர்ந்து, இந்த நெருக்கடியின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றாக, நாம் இந்த பிளவுபடுத்தும் செயல்களைத் தடுத்து, அவை வெற்றி பெறுவதைத் தடுக்க வேண்டும். நமது தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதில் நாம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும்.

நண்பர்களே,

பகவான் ஸ்ரீ சுவாமிநாராயணன், மகத்தான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் மகத்தான இலக்குகளை அடைய முடியும் என்று நமக்குக் கற்றுக் கொடுத்தார். இளைஞர்களின் மனம் நாட்டை தீர்க்கமாக வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார். இளைஞர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும், கட்டியெழுப்புவார்கள் என்ற நம்பிக்கையை அவர் விதைத்தார். இதை உணர, திறமையான மற்றும் நன்கு படித்த இளைஞர்களை வளர்க்க வேண்டும். ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு, நமது இளைஞர்களுக்கு  அதிகாரம் அளிப்பது அவசியம். திறமையான இளைஞர்கள் நமது மிகப்பெரிய சொத்தாக மாறுவார்கள். நமது இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து வளரும். இன்று, நான் சந்திக்கும் பெரும்பாலான உலகத் தலைவர்கள், இந்தியாவின் இளைஞர்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் தங்கள் நாடுகளில் பணியாற்ற வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். பாரதத்தின் இளைஞர்களின் சுறுசுறுப்பால் உலகம் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர்கள் நமது நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி உலகளாவிய தேவைகளுக்கும் சேவை செய்வார்கள். திறமையான இளைஞர்களை வளர்ப்பதற்கான நமது முயற்சிகள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு கணிசமாக பங்களிக்கும்.

உங்களிடம் இன்னொரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். போதைப் பொருட்களுக்கு  எதிரான போராட்டத்தில் சுவாமிநாராயண் பிரிவு எப்போதும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நமது இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து விலக்கி வைப்பதிலும், அத்தகைய பழக்கத்திலிருந்து அவர்களை விடுவிப்பதிலும் நமது துறவிகள், மகாத்மாக்கள் மற்றும் பக்தர்கள் முக்கிய பங்கு வகிக்கலாம். இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் வலையில் விழுவதைத் தடுப்பதற்கான பிரச்சாரங்களும் முன்முயற்சிகளும் மிக அவசியம். அவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட  வேண்டும். இந்த முயற்சிகள் அனைத்து சமூகங்களிலும், நமது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தேவைப்படுகின்றன, மேலும் இந்தப் பணியில் நாம் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்.

நண்பர்களே,

ஒரு நாடு தனது பாரம்பரியத்தைப் பெருமையாகக் கருதி, அதைப் பாதுகாத்து வந்தால் மட்டுமே அதனால் முன்னேற முடியும். எனவே, நமது வழிகாட்டும் கொள்கை பாரம்பரியத்தின் பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சி ஆகும். நமது பழங்கால பாரம்பரியத் தளங்களின்  மகிமை மீண்டும் எழுச்சி பெறுவதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது, அழிந்துபோனதாகக் கருதப்பட்ட பல தளங்கள் இப்போது மீட்டெடுக்கப்படுகின்றன. அயோத்தியின் மாற்றம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அங்கு 500 ஆண்டுகளாகக் கண்டஒரு கனவு இறுதியாக நிறைவேறியுள்ளது. தலைமுறைகள் இந்தக் கனவை நிலைநிறுத்தி, அதற்காகப் போராடி, அதை நனவாக்க தியாகங்களைச் செய்தன. இன்று, காசி மற்றும் கேதார்நாத் தலங்கள் புத்துயிர் பெறுவதை நாம் காண்கிறோம், அவை இந்த மறுமலர்ச்சிக்கு சான்றாக அமைகின்றன. பாவாகத்தில், 500 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது நம்பிக்கையின் கொடி இப்போது பெருமையுடன் பறக்கிறது. மோதேராவின் சூரியக் கோயிலும் சோம்நாத்தின் மகத்துவமும் மற்ற குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும். நாம் எங்கு பார்த்தாலும், ஒரு புதிய உணர்வும் கலாச்சாரப் புரட்சியும் நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படுகின்றன.

அது மட்டுமின்றி, பல நூற்றாண்டுகளாக, நம் நாட்டிலிருந்து நம் தெய்வங்களின் சிலைகள் திருடப்பட்டன, அவை காணாமல் போனது குறித்து யாரும் கவலைப்படவில்லை. இன்று, கணிசமான முயற்சிகளுக்குப் பிறகு, நம் தெய்வங்களின் இந்த திருடப்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, நம் கோயில்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன. குஜராத் மக்களாகிய நாம், நமது பண்டைய நாகரிகத்தின் சின்னங்களான தோலாவிரா மற்றும் லோதலின் பாரம்பரியத்தில் மிகுந்த பெருமை கொள்கிறோம். இந்த இடங்களை மீட்டெடுத்து புத்துயிரூட்டுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. பாரதத்தின் கலாச்சார உணர்வை எழுப்புவதற்கான இந்தப் பிரச்சாரம் வெறும் அரசின் முயற்சி அல்ல. இந்த நிலத்தை, இந்த நாட்டை நேசிக்கும், அதன் மரபுகளைப் போற்றும், அதன் கலாச்சாரத்தில் பெருமை கொள்ளும், மற்றும் அதன் பாரம்பரியத்தைப் போற்றும் அனைவரின் கூட்டுப் பொறுப்பு இது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு, இந்த விஷயத்தில் நீங்கள் பெரும் உத்வேகத்தை வழங்க முடியும். பகவான் சுவாமிநாராயணனுடன் தொடர்புடைய பல பொருட்களைக் கொண்ட வட்டல் தாமில் உள்ள அக்ஷர் புவன் அருங்காட்சியகம் இந்த கலாச்சார மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாகும். இந்த சாதனைக்காக நான் உங்களை வாழ்த்துகிறேன். இந்த அருங்காட்சியகம் புதிய தலைமுறையினருக்கு மிகக் குறுகிய காலத்தில் நமது பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. பாரதத்தின் நித்திய ஆன்மீக மரபின் ஒரு அற்புதமான ஆலயமாக அக்ஷர் புவன் மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை இத்தகைய முயற்சிகள் மூலம் மட்டுமே நனவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 140 கோடி இந்தியர்கள் ஒரு பொதுவான நோக்கத்துடன் ஒன்று சேரும்போது, ​​வெற்றி இயல்பாகவே வரும். இந்தப் பயணத்தில் நமது துறவிகளின் வழிகாட்டுதல் மிக முக்கியமானது, மேலும் நாடு முழுவதிலுமிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான துறவிகள் மற்றும் பக்தர்கள் இங்கு கூடியிருப்பதால், நான் இந்தக் குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்கிறேன். இது உங்களை மேலும் ஒரு பணியில் ஈடுபடுத்தும் வாய்ப்பை எனக்கு வழங்குகிறது. இந்த ஆண்டு, பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகும். இது இப்போது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13 முதல், 45 நாட்களுக்கு, கும்பமேளாவிற்கு சுமார் 40 முதல் 50 கோடி மக்கள் கூடுவார்கள். நான்  ஒரு பணிவான வேண்டுகோளை முன் வைக்கிறேன்: இந்த முயற்சியை நீங்கள் மேற்கொள்ள முடியுமா? பல நாடுகளில் கோயில்கள் இருப்பதால், உங்களுக்கு உலகளாவிய பிரசன்னம் உள்ளது. கும்பமேளாவின் முக்கியத்துவம், அது ஏன் கொண்டாடப்படுகிறது, அதன் பின்னணியில் உள்ள கலாச்சார தத்துவம் பற்றி வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு உங்களால் கற்பிக்க முடியுமா? இந்தியர் அல்லாத சமூகங்களுடன் இணைந்து, உங்கள் வெளிநாட்டு கிளைகள் ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தது 100 வெளிநாட்டினரையாவது பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவிற்கு மரியாதையுடனும் பயபக்தியுடனும் அழைத்து வர முயற்சிக்க முடியுமா? இது உலகம் முழுவதும் கலாச்சார விழிப்புணர்வைப் பரப்புவதற்கான ஒரு சக்திவாய்ந்த செயலாக இருக்கும், மேலும் உங்களால் அதை எளிதாக நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.

மீண்டும் ஒருமுறை, உங்களுடன் நேரில் இருக்க முடியாததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், ஆனால் காணொலிக் காட்சி மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவ்வளவு பரிச்சயமான முகங்களைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தூரத்திலிருந்தாலும், இந்த தருணம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் இந்த 200-வது ஆண்டு விழாவில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நல்வாழ்த்துகள்! அனைவருக்கும் நன்றி!!

ஜெய் சுவாமிநாராயண்.

***

(Release ID: 2072370)

SS/BR/SH


(Release ID: 2174669) Visitor Counter : 6