பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகளிர் மேம்பாட்டை மையமாகக் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது – பிரதமர் திரு நரேந்திர மோடி

Posted On: 26 SEP 2025 1:00PM by PIB Chennai

மகளிரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். பீகாரில் முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றினார். நவராத்திரி பண்டிகையையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

இத்திட்டத்தில் ஏற்கனவே 75 லட்சம் பெண்கள் இணைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இவர்களது வங்கிக் கணக்குகளில் 10,000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணி புரியும் அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்களின் கனவுகள் நிறைவேறும் போது, சமூகத்தில் அவர்களுக்கு உரிய மரியாதையும் கிடைக்கும் என்று கூறினார். இரண்டாவதாக, 11 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாத நிலை இருந்ததாகவும், ஜன் வங்கி கணக்குத் திட்டத்தின் கீழ், அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அவர்களது மொபைல் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக நேரடி பணப்பரிவர்த்தனை  செய்வதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மகளிரின் சுகாதாரம் மற்றும் அவர்களது குடும்பத்தின் பொருளாதார வலிமையே மகிழ்ச்சியான வாழ்விற்கு வித்திடுகிறது என்று அவர் கூறினார். சகோதரிகளின் நலத்தைக் கருத்தில் கொண்டு சகோதரர்கள் உதவி செய்ய முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பீகார் மாநிலத்தில் உள்ள பெண்களின் கண்ணியம் மற்றும் வளமான வாழ்விற்காக அம்மாநில முதலமைச்சர் திரு நித்திஷ் குமார் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தொடக்கக் கால நிதியுதவியாக 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் வெற்றிகரமாக செயல்படும் தொழில் முனைவோருக்கு இத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.   இதன் மூலம் அம்மாநிலத்தில் உள்ள  பெண்கள், மளிகைக் கடைகள், வீட்டு உபயோகப்  பொருட்கள் விற்பனை, விளையாட்டுப் பொருட்கள், எழுது பொருட்கள் மற்றும் அழகுசானதப் பொருட்கள் ஆகியவற்றில் விற்பனையை மேற்கொள்ள முடியம் என்று கூறினார். மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் அது தொடர்பான வர்த்தகத்தையும் அவர்கள் மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். இதற்கான முறையான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். பீகாரில் ஏற்கனவே சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருவதாகவும் அதில், 11 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு இந்த மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் மேலும் வலு சேர்க்கும் என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் லட்சாதிபதி சகோதரித் திட்டத்தின் கீழ், 3 கோடி பெண்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 2 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த சாதனையை எட்டியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு இடர்பாடையும் களைவது அரசின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.  கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.  இது எண்ணற்ற மக்களுக்கு பயன் அளித்துள்ளதாகவும், இத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.  பிரதமரின் ஏழைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 8.5 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் இலவச உணவு தானியங்களை நியாய விலைக் கடைகள் மூலம் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171606  

***

SS/SV/KPG/SH

 


(Release ID: 2172003) Visitor Counter : 34