பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் வளர்ச்சிப்பணிகளை தொடங்கிவைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
17 SEP 2025 4:18PM by PIB Chennai
பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே!
நர்மதா நதிக்கு ஜே! நர்மதா நதிக்கு ஜே! நர்மதா நதிக்கு ஜே!
மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, மக்கள் செல்வாக்கு மிக்க மாநில முதலமைச்சர் திரு மோகன் யாதவ் அவர்களே, மத்திய அரசில் என்னுடன் பணியாற்றும் சகோதரி சாவித்திரி தாக்கூர் அவர்களே, நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர்களே, மாநில ஆளுநர்களே, முதலமைச்சர்களே, மேடையில் வீற்றிருக்கும் முக்கிய பிரமுகர்களே, நாட்டின் எனதருமை சகோதர, சகோதரிகளே!
அறிவின் கடவுளும், தார் போஜ்சாலாவின் அன்னையுமான வாக்தேவியின் பாதங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இன்றைய தினம் திறன் மற்றும் கட்டுமானத்தின் கடவுளான பகவான் விஸ்வகர்மாவின் பிறந்த தினமாகும். பகவான் விஸ்வகர்மாவுக்கு நான் தலைவணங்குகிறேன். விஸ்வகர்மா ஜெயந்தி விழாவான இன்று தங்களின் திறன்கள் மூலம் தேசக் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளை மிகுந்த மதிப்புடன் நான் வணங்குகிறேன்.
நண்பர்களே,
இந்த தார் பூமி எப்போதும் துணிச்சலின் பூமியாகும். ஊக்கமளிக்கும் பூமியாகவும் இருந்துள்ளது. போஜ் மகராஜாவின் துணிச்சல்… ஒருவேளை அதுபற்றி நாம் கேள்விப்படாமல் இருக்கலாம் அல்லது பார்க்காமல் இருக்கலாம். நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிவேன். எவ்வாறாயினும் தொழில்நுட்பாளர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். இங்குள்ள மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மிகவும் கட்டுப்பாடுள்ளவர்கள். வசதிக் குறைபாடுகள் இருந்தாலும் மத்தியப் பிரதேச மக்கள் எப்போதும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். அதனை இங்கேயும் நான் காண்கிறேன்.
நண்பர்களே,
தேசத்தின் பெருமையை பாதுகாக்க உறுதியாக நிற்க வேண்டும் என்பதை போஜ் மகராஜாவின் வீரம் நமக்கு கற்பிக்கிறது. மகரிஷி டாடிச்சியின் தியாகம் மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனஉறுதியை நமக்கு வழங்குகிறது. இந்த மரபிலிருந்து ஊக்கம்பெற்று அன்னை இந்தியாவின் பாதுகாப்புக்கு நாடு இன்று உயர் முன்னுரிமை அளிக்கிறது. பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் செந்தூரத்தை அழித்தார்கள். ஆபரேஷன் சிந்தூரை நடத்தி பயங்கரவாத முகாம்களை நாம் அழித்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் நமது வீரம் செறிந்த ராணுவத்தினர் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தனர். பாகிஸ்தானின் மற்றொரு பயங்கரவாதி தனக்கு ஏற்பட்ட சோகத்தை கண்ணீர் மல்க கூறியதை நேற்று இந்த தேசமும், உலகமும் பார்த்தது.
நண்பர்களே,
இது புதிய இந்தியா, எவரின் அணுஆயுத அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது. இது புதிய இந்தியா, இது வீட்டுக்குள் நுழைந்து அழிக்கும்.
நண்பர்களே,
செப்டம்பர் 17-ம் நாளான இன்று மற்றொரு வரலாற்று சிறப்பை குறிக்கிறது. இந்நாளில் சர்தார் படேலின் எஃகு போன்ற உறுதியை நாடு கண்ணுற்றது. பல அட்டூழியங்களில் இருந்து ஐதராபாத்தை விடுவித்து அதன் உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் இந்தியாவின் பெருமையை இந்திய ராணுவம் மீட்டது. நாட்டின் இந்த மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டு பல பத்தாண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் இந்த சாதனையை, ராணுவத்தின் வீரத்தை நினைவுகூர யாரும் இருக்கவில்லை. ஆனால் நீங்கள் எனக்கு வாய்ப்பை வழங்கினீர்கள். எங்கள் அரசு செப்டம்பர் 17 ஐதராபாத் சம்பவத்தை, சர்தார் படேலை அழியாத சின்னமாக மாற்றியது. இந்த நாளை இந்திய ஒற்றுமையின் அடையாளமாக, ஐதராபாத் விடுதலை தினமாக நாம் கொண்டாடத் தொடங்கினோம். தற்போது இந்த விடுதலை தினம் ஐதராபாதில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஐதராபாத் விடுதலை தினம் நம்மை ஊக்கப்படுத்துகிறது. அன்னை இந்தியாவின் கௌரவத்திற்கும், புகழுக்கும் மேலானதாக எதுவுமில்லை. நாம் உயிர் வாழ்ந்தால் அது நாட்டுக்காக இருக்க வேண்டும். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கனமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
நண்பர்களே,
நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ய உறுதிபூண்டார்கள். அனைத்தையும் நாட்டுக்காக அர்ப்பணித்தார்கள். அவர்களின் கனவு வளர்ச்சியடைந்த இந்தியாவாக இருந்தது. அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு துரிதமாக முன்னேறும் தேசத்தை காண அவர்கள் கனவு கண்டார்கள். அந்த ஊக்கத்தோடு இந்தியாவின் 140 கோடி மக்களாகிய நாம் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க தீர்மானித்துள்ளோம். வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் மிகமுக்கியமான நான்கு தூண்களாக இந்தியாவின் மகளிர் சக்தி, இளைஞர் சக்தி, ஏழைகள் மற்றும் விவசாயிகள் இருக்கிறார்கள். இன்று இந்த நிகழ்ச்சியில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் இந்த நான்கு தூண்களுக்கு புதிய பலத்தை வழங்குவதற்கான பணி நடைபெறுகிறது. பெரும் எண்ணிக்கையில் எனது தாய்மார்களும், சகோதரிகளும், மகள்களும் இங்கே வந்துள்ளனர். மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கு இன்றைய நிகழ்ச்சி அதிக கவனம் செலுத்துகிறது. தார் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் இது ஒட்டுமொத்த தேசத்திற்கானது. தேசத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கானது. ஆரோக்கியமான பெண்கள் – வலுவான குடும்பம் என்ற மாபெரும் இயக்கம் இங்கிருந்து தொடங்குகிறது. அன்னை வாக் தேவி ஆசியுடன் இதைவிட எந்த மகத்தான பணியை நிறைவேற்ற முடியும்?
நண்பர்களே,
ஆதி சேவை திருவிழா நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஏற்கனவே எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. மத்தியப் பிரதேசத்தில் இன்று இது தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் தார் உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் பழங்குடி சமூகங்களை பல்வேறு திட்டங்களுடன் இணைக்கும் பாலமாக இருக்கும்.
நண்பர்களே,
மாபெரும் தொழில்துறை திட்டமும் கூட விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெறும் இன்று நடைமுறைக்கு வரவுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்காவிற்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா இந்தியாவின் ஜவுளி தொழில்துறைக்கு புதிய சக்தியை வழங்கும். விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையை பெறுவார்கள். தார் பகுதியில் மட்டுமின்றி நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்போது இந்த நிகழ்ச்சியில் இணைந்திருப்பதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
பிஎம் மித்ரா எனும் இந்த ஜவுளிப்பூங்கா மூலம் பெரும்பயன் ஏற்படும். அதிக எண்ணிக்கையில் இளைஞர்களும், பெண்களும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த இயக்கங்களுக்குகாகவும், திட்டங்களுக்காகவும் நாட்டு மக்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். மத்தியப் பிரதேசத்திற்கு எனது சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
நாட்டின் முன்னேற்றத்திற்கு முதன்மையான அடிப்படையாக நமது தாய்மார்களும், சகோதரிகளும் நமது மகளிர் சக்தியும் இருக்கின்றன. வீட்டில் தாய் நலமாக இருந்தால் ஒட்டுமொத்த வீடும் நலமாக இருப்பதை நாம் அனைவரும் காண்கிறோம். ஆனால் ஒரு தாய் நோய்வாய்பட்டால் ஒட்டுமொத்த குடும்ப அமைப்பும் சிதைகிறது. எனவே ஆரோக்கியமான பெண்கள் – வலுவான குடும்பம் என்ற இயக்கம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் நிதி ஆதார குறைபாடு காரணமாக கடுமையான நோயால் ஒரு பெண் கூட பாதிக்கப்படக் கூடாது என்பது நமது நோக்கமாகும். பல நோய்கள் வெளியே தெரியாமல் வருகின்றன. கண்டறியும் குறைபாடு காரணமாக அது படிப்படியாக கடுமையாகிறது. பின்னர் வாழ்வா, சாவா, என்ற போராட்டம் தொடங்குகிறது. பெண்களுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறுகின்ற இதுபோன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகவும் முக்கியமானது. எனவே, இந்த இயக்கத்தின் கீழ் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்த சோகை, காச நோய் அல்லது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்க்கான சாத்தியக்கூறு பற்றி பரிசோதனை செய்யப்படும். நாடு முழுவதும் உள்ள எனது தாய்மார்களும், சகோதரிகளும் வழங்கியுள்ள ஆசிர்வாதம் எனது மகத்தான கேடயமாக விளங்குகிறது. விஸ்வ கர்மா ஜெயந்தி தினமான இன்று எனது தாய்மார்களையும், சகோதரிகளையும் நான் ஒன்று கேட்கிறேன், எனக்கு பதில் சொல்லுங்கள், நீங்கள் எனக்கு அதை வழங்குவீர்களா, இல்லையா? உங்களின் கைகளை உயர்த்தி எனக்கு பதில் கூறுங்கள். ஆஹா, எல்லோரும் கைகளை உயர்த்தியிருக்கிறீர்கள். தயக்கமின்றி நீங்கள் அனைவரும் இந்த முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மகனாக, சகோதரனாக உங்களிடம் இதை நான் கேட்கிறேன், சரிதானே. இந்த முகாம்களில் பரிசோதனைகளுக்கான செலவு எவ்வளவாக இருந்தாலும் நீங்கள் ஒரு பைசா கூட செலுத்தவேண்டியதில்லை. இதற்கு கட்டணமில்லை. பரிசோதனைகள் மட்டுமல்ல, மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. உங்களின் நல்ல ஆரோக்கியத்தை விட மதிப்புமிக்க சொத்து அரசுக்கு வேறு எதுவும் இல்லை. இந்த கருவூலம் உங்களுக்கானது. உங்களின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கானது. உங்களின் மேல் சிகிச்சைக்கு பாதுகாப்பு கவசமாக ஆயுஷ்மான் அட்டை மிகவும் பயனுடையதாக இருக்கும்.
இன்று தொடங்கும் இந்த இயக்கம், அக்டோபர் 02 அன்று விஜயதசமி வரை 2 வாரங்களுக்கு நடைபெறும். நாடு முழுவதும் உள்ள தாய்மார்களும், சகோதரிகளும், மகள்களும் எப்போதும் உங்கள் குடும்பத்தை பற்றி கவலைப்படுகிறீர்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கும் கொஞ்ச நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்த அளவு அதிக எண்ணிக்கையில் இந்த முகாம்களுக்கு செல்லுங்கள். லட்சக்கணக்கான முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இன்றும் கூட, ஒருசில முகாம்களில் பரிசோதனை செய்துகொள்வது ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த தகவலை உங்கள் பகுதியின் மற்ற பெண்களுக்கு பகிர்வதை உறுதிசெய்யுங்கள். மோடி அவர்கள், நமது மகன், நமது சகோதரர் தார் பகுதிக்கு வந்திருந்தார், பரிசோதனை செய்துகொள்ளுமாறு நம்மை கேட்டுக் கொண்டார் என்று ஒவ்வொரு தாய்மாரிடமும், சகோதரியிடமும் கூறுங்கள். எந்த ஒரு தாய்மாரும், எந்த ஒரு மகளும் விடுபடக்கூடாது என நாம் உறுதியேற்போம்.
நண்பர்களே,
தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆரோக்கியம் எங்களின் முன்னுரிமையாகும். கருவுற்ற பெண்களுக்கும், மகள்களுக்கும் முறையான ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் பணியை எங்கள் அரசு இயக்க கதியில் செயல்படுத்துகிறது. 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தை இன்று நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வளர்ந்து வரும் இந்தியாவில் சாத்தியமான அளவுக்கு பேறுகால மரணம் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை நாங்கள் குறைத்திருக்கிறோம். இந்த நோக்கத்திற்காக 2017-ல் பிரதமரின் தாய்மைப் போற்றுவோம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முதல் குழந்தை பிறப்புக்கு 5,000 ரூபாயும், 2-வது மகள் பிறப்புக்கு 6,000 ரூபாயும் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரை இந்தத் திட்டத்தின் மூலம் 4.5 கோடி கருவுற்ற தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். மேலும், இதுவரை இந்தத் திட்டத்திற்கு 19,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்தத்தொகை எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சென்றுள்ளது. இன்றும் கூட ஒரே கிளிக்கில் 15 லட்சத்திற்கும் அதிகமான கருவுற்ற பெண்களுக்கு உதவித் தொகை அனுப்பப்பட்டுள்ளது. தார் பூமியிலிருந்து இப்போது 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
நண்பர்களே,
மத்தியப் பிரதேசத்திலிருந்து இன்னொரு இயக்கம் பற்றியும் இன்று நான் விவாதிக்க விரும்புகிறேன். நமது பழங்குடி மக்கள் பகுதிகளில் அரிவாள் செல் ரத்த சோகை என்பது மிகப்பெரிய பிரச்சனை என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நோயிலிருந்து நமது பழங்குடியின சகோதர, சகோதரிகளை பாதுகாக்க எங்கள் அரசு தேசிய இயக்கத்தை நடத்தி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் சாதோலில் இருந்து 2023-ல் இந்த இயக்கத்தை நாங்கள் தொடங்கினோம். இங்கிருந்துதான் அரிவாள் செல் நோய் கண்டறியும் முதலாவது அட்டை விநியோகிக்கப்பட்டது. இன்று மத்தியப் பிரதேசத்தில் ஒரு கோடியாவது அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சோதனைகள் மூலம் லட்சக்கணக்கான பழங்குடி சமூக மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டுள்ளது. பலருக்கு இதுபற்றி தெரியாதிருக்கலாம்.
நண்பர்களே,
நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் பணிகள் வருங்கால தலைமுறைக்கு பெரிதும் பயனளிப்பதாகும். இன்னும் பிறக்காதவர்களுக்கும் கூட நாங்கள் பணியாற்றுகிறோம். ஏனெனில் இன்றைய தலைமுறை ஆரோக்கியமானதாக மாறினால் எதிர்காலத்தில் அவர்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதை அது உத்தரவாதப்படுத்தும். பழங்குடி சமூக தாய்மார்களும், சகோதரிகளும் அரிவாள் செல் ரத்த சோகை நோய்க்காக பரிசோதனை செய்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதும், அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதும் எனது தொடர்ச்சியான முயற்சியாக உள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட லட்சக்கணக்கான கழிப்பறைகள், உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட லட்சக்கணக்கான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான ஜல்ஜீவன் இயக்கம், இலவச சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வழங்கும் ஆயுஷ்மான் திட்டம் போன்றவை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை சிரமங்களை போக்கி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இங்கு எனது சகோதரர்களும் ஏராளமாக இருக்கிறீர்கள். உங்கள் குடும்பங்களில் உங்களுக்கு தாய்மார்களும், சகோதரிகளும், மகள்களும் இருப்பார்கள். எனக்கு உதவிசெய்யுமாறு சகோதரர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். உங்களின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆரோக்கியம் பரிசோதிக்கப்படுவதை உறுதிசெய்யுங்கள்.
நண்பர்களே,
பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கேள்விப்படும் போது ஆச்சர்யத்தால் அவர்களின் கண்கள் விரிகின்றன. அவ்வளவு பெரிய எண்ணிக்கை. கொரனோ காலத்தின் போது விலையில்லா ரேஷன் திட்டம் ஏழைத்தாயின் அனைத்து வீட்டுக்கும் உணவை அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் இன்றும் கூட இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திலும் கோடிக்கணக்கான வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
எங்களின் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கவும் எங்கள் அரசு முக்கியத்துவம் தருகிறது. முத்ரா திட்டத்தின் மூலம் கடன் பெற்று எங்களின் கோடிக்கணக்கான சகோதரிகள் புதிய வணிகங்களை தொடங்குகிறார்கள். புதிய தொழிற்சாலைகளை நிறுவுகிறார்கள்.
நண்பர்களே,
கிராமங்களில் வாழும் 3 கோடி தாய்மார்கள், சகோதரிகள், மகள்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றும் இயக்கத்தில் எங்கள் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த இயக்கத்தின் வெற்றி காரணமாக குறுகிய காலத்திலேயே சுமார் 2 கோடி பேர் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர் என்பதை நான் பெருமிதத்துடன் கூறமுடியும். வங்கித்தோழிகள், ட்ரோன் சகோதரிகள் என அவர்களை மாற்றுவதன் மூலம் ஊரகப் பொருளாதாரத்தின் மையமாக பெண்களை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் புதிய புரட்சியை கொண்டுவந்துள்ளனர்.
சகோதர, சகோதரிகளே,
கடந்த 11 ஆண்டுகளாக ஏழைகளின் நலன், ஏழைகளுக்கு சேவை மற்றும் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது என்பவை எங்கள் அரசின் உயர்முன்னுரிமைகளாக இருந்துள்ளன. நாட்டின் ஏழைகள் வறுமையிலிருந்து வெளியேறி வேகமாக முன்னேறும் போதுமட்டுமே நாடு முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏழைகளுக்கு சேவை செய்வது ஒருபோதும் வீணாகாது என்பதை நாங்கள் காண்கிறோம். ஏழை நபர் ஒருவர் ஓரளவு ஆதரவையும், உதவியையும் பெறும்போது அவர் தனது கடுமையான உழைப்பால் கடலையும் கடக்கும் துணிவை பெறுகிறார். ஏழைகளின் இத்தகைய உணர்வுகளை நான் தனிப்பட்டமுறையில் அறிந்துள்ளேன். எனவே ஏழைகளின் துயரம் எனது துயரமாக தெரிகிறது. ஏழைகளுக்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய நோக்கமாகும். எனவே எங்கள் அரசு ஏழைகளை மையமாகக் கொண்டு தொடர்ந்து திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
நண்பர்களே,
இந்தப்பணியை தொடர்ச்சியாக, அர்ப்பணிப்போடும், தூய்மையான இதயத்தோடு செய்வதன் மூலம் எங்கள் கொள்கைகளின் பயன்கள் இன்று உலகத்திற்கு வெளிப்படையாக தெரிகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் தொடர்ச்சியான முயற்சிகளாலும், கடின உழைப்பாலும் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் என்பதற்காக இங்கு அமர்ந்துள்ள அனைவரும் பெருமிதம் கொள்ளலாம். ஒட்டுமொத்த சமூகமும் இதன் மூலம் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளது.
நண்பர்களே,
எங்கள் அரசின் அனைத்து முயற்சிகளும் வெறும் திட்டங்கள் அல்ல, ஏழைத் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மோடியின் உத்தரவாதமாகும். ஏழையின் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்துவதும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியத்தை பாதுகாப்பதும் எனது வழிபாடாகும். அதுவே எனது உறுதிப்பாடாகும்.
நண்பர்களே,
மகேஸ்வரி ஜவுளிகளின் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது மத்தியப் பிரதேசம். மகேஸ்வரி சேலைகளுக்கு தேவி அஹில்யாபாய் ஹோல்கர் புதிய பரிமாணத்தை வழங்கினார். அண்மையில் நாம் அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளை கொண்டாடினோம். தற்போது தார் பகுதியில் பிரதமரின் மித்ரா பூங்கா அமைக்கப்பட்டதன் மூலம் அஹில்யாபாயின் மரபை முன்னெடுத்து செல்கிறோம். பிரதமரின் மித்ரா பூங்கா, பருத்தி, பட்டு போன்ற நெசவுப் பொருட்களை கிடைக்கச்செய்யும். தரக்கட்டுப்பாடு எளிதாகும். சந்தை அணுகல் அதிகரிக்கும். நூல் நூற்றல், வடிவமைத்தல், பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் ஆகியவை இங்கிருந்து நடைபெறும். இதன் பொருள், எனது கிராமம், உலகளாவிய சந்தையிலும் ஒளிரும் என்பதாகும். ஜவுளி தொழில்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு தொடரும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதும் இதன் பொருளாகும். நிலம், நூல், தொழிற்சாலை, ஆடை வடிவமைப்பு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது என அனைத்தும் வேகமாகவும், எளிதாகவும் நிறைவடையும்.
நண்பர்களே,
தார் பகுதியில் அமையவிருக்கும் பிரதமரின் மித்ரா பூங்காவில் 80 அலகுகளுக்கு சுமார் 1300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் பொருள், தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளும், தொழிற்சாலைக்கான கட்டுமானமும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன என்பதாகும். இந்தப் பூங்காவில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பிரதமரின் மித்ரா பூங்கா சரக்குப் போக்குவரத்திற்கான செலவையும், உற்பத்தி செலவையும் குறைத்து நமது பொருட்களை மலிவானதாகவும், உலக அளவில் போட்டியிடுவதாகவும் மாற்றும். எனவே பிரதமரின் மித்ரா பூங்காவுக்காக மத்தியப் பிரதேச மக்களை குறிப்பாக எனது வேளாண் சகோதரர்களை, சகோதரிகளை, இளைஞர்களை, பெண்களை நான் வாழ்த்துகிறேன். நாடு முழுவதும் இதுபோன்று 6 பிரதமரின் மித்ரா பூங்காக்கள் கட்டப்படவுள்ளன.
நண்பர்களே,
இன்று நாடுமுழுவதும் விஸ்வகர்மா பூஜை நடைபெறுகிறது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் வெற்றியை கொண்டாடும் தருணமாகவும் இது உள்ளது. நாடு முழுவதும் உள்ள தச்சர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள், மண்பாண்டம் செய்வோர், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட விஸ்வகர்மா சகோதர, சகோதரிகளுக்கு நான் சிறப்பு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு நீங்கள் மாபெரும் பலமாக இருக்கிறீர்கள். கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி உங்களின் பொருட்கள் மூலம் அன்றாடத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் உதவியிருப்பதை குறித்து நான் திருப்தி அடைந்துள்ளேன். இந்தத் திட்டத்தின் மூலம் அவர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். டிஜிட்டல் சந்தையுடனும், நவீன கருவிகளுடனும் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் அதிகமான விஸ்வகர்மா நண்பர்களுக்கு புதிய சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போதுவரை 4,000 கோடி ரூபாய்க்கும் மேல் விஸ்வகர்மா சகோதர, சகோதரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
பல தசாப்தங்களாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சமூகத்தின் ஒரு பகுதி பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தால் பயனடைந்துள்ளது. நமது ஏழை விஸ்வகர்மா சகோதர, சகோதரிகளும் திறமைகளை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் திட்டமோ, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டமோ முந்தைய அரசுகளுக்கு இல்லை. அவர்களின் முன்னேற்றத்திற்கு திறமைகளை பயன்படுத்துவதற்கான வழிகளை நாம் திறந்துள்ளோம். எனவே தான் நான் கூறுகிறேன்- யார் பின்தங்கியிருக்கிறார்களோ அவர்களே எங்களின் முன்னுரிமை.
நண்பர்களே,
நமது தார் பகுதி மதிப்புக்குரிய குஷாபாவ் தாக்கரேயின் பிறந்த ஊராகும். தேசம் முதலில் என்ற உணர்வுடன் அவர் தனது வாழ்க்கை முழுவதையும் சமூகத்திற்கு அர்ப்பணித்தார். அவருக்கு எனது தாழ்மையான மரியாதையை இன்று உரித்தாக்குகிறேன். தேசம் முதலில் என்ற உணர்வு நாட்டை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வதற்கான உத்வேகமாக உள்ளது.
நண்பர்களே,
இது திருவிழாக்களின் காலம். இந்த காலத்தில் நீங்கள் சுதேசி என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் கூற வேண்டும். இதனை உங்கள் வாழ்க்கையோடு இணைக்க வேண்டும். 140 கோடி மக்களுக்கு எனது வேண்டுகோள் என்பது நீங்கள் எந்தப் பொருளை வாங்கினாலும் அது நம்நாட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டும். நீங்கள் வாங்குவது எதுவாக இருந்தாலும் இந்தியர் ஒருவரின் வியர்வை அதில் இருக்க வேண்டும். இந்த மண்ணின் மணம் அதிலிருக்க வேண்டும். நாட்டுக்கு உதவி செய்ய நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனது வணிக சகோதரர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நான் உருவாக்க வேண்டும். தற்சார்பு இந்தியாவில் இதன் பாதை அமைந்துள்ளது. எனவே சிறிய அல்லது நடுத்தர வணிகங்களின் சகோதரர்களும், சகோதரிகளும் எதை விற்பனை செய்தாலும், அது நமது நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். மகாத்மா காந்தி சுதேசியத்தை சுதந்திரத்திற்கான வழியாக மாற்றினார். இப்போது சுதேசியை நாம் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளமாக மாற்ற வேண்டும். இது எவ்வாறு நடக்கும்? நமது நாட்டில் தயாரிக்கப்படும் ஒவ்வொன்றையும் நாம் பெருமையாக கருதினால் இது நடக்கும். குழந்தைகளுக்கான பொம்மைகள், தீபாவளி பொம்மைகள், நமது வீட்டுக்கான அலங்கார பொருட்கள், செல்பேசி, தொலைக்காட்சி, ஃப்ரிட்ஜ் போன்ற பெரிய பொருட்கள் எதுவாக இருந்தாலும் நமது நாட்டில் தயாரிக்கப்பட்டதா என்பதை முதலில் உறுதிசெய்துகொள்ள வேண்டும். எனது மக்களின் வியர்வை மணம் அதில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில் சுதேசிப் பொருட்களை வாங்கும் போது நமது பணம் இந்த நாட்டில் இருக்கும். வெளிநாட்டுக்கு செல்வதிலிருந்து நமது பணம் பாதுகாக்கப்படும். அந்த பணம் நாட்டின் வளர்ச்சிக்கு மீண்டும் பயன்படுத்தப்படும். அந்தப் பணத்தில் சாலைகள் அமைக்கப்படும். கிராமப்பள்ளிகள் கட்டப்படும். கணவரை இழந்த ஏழைத் தாய்மார்கள் உதவிபெறுவார்கள். ஆரம்ப சுகாதார மையங்கள் கட்டப்படும். அந்தப் பணம் ஏழைகளின் நலத்திட்டங்களுக்கு பயன்படும். அது உங்களையே சேரும். நடுத்தர வகுப்பு சகோதர, சகோதரிகள் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற ஏராளமான பணம் தேவைப்படுகிறது. இத்தகைய சிறிய பணிகளை செய்வதன் மூலம் அதை நாம் நிறைவேற்ற முடியும். நமக்குத் தேவைப்படும் பொருட்கள் நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் போது அதிலிருந்து வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அதுவும் நமது நாட்டு மக்களுக்கே செல்லும்.
நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வருகின்றன. உள்நாட்டு பொருட்களை வாங்குவதன் மூலம் நாம் லாபம் அடையலாம். ஒரு மந்திரத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனை ஒவ்வொரு கடையிலும் எழுதிவைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக மாநில அரசு ஓர் இயக்கத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு கடையிலும் பெருமிதத்தோடு ஒரு பலகை இருக்க வேண்டும்- இது சுதேசிப் பொருள்! நீங்கள் எல்லோரும் என்னுடன் கூறுவீர்களா? நான் கூறுகிறேன். அதனை நீங்களும் பெருமிதத்தோடு கூறுங்கள். “இது சுதேசிப் பொருள்” பெருமையோடு கூறுங்கள். “இது சுதேசிப் பொருள்,” பெருமையோடு கூறுங்கள். “இது சுதேசிப் பொருள்” பெருமையோடு கூறுங்கள். “இது சுதேசிப் பொருள்” பெருமையோடு கூறுங்கள். “இது சுதேசிப் பொருள்” பெருமையோடு கூறுங்கள் “இது சுதேசிப் பொருள்”
நண்பர்களே,
இந்த உணர்வோடு உங்களுக்கு நான் மீண்டும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கிறேன். என்னுடன் சேர்ந்து கூறுங்கள் பாரத் மாதா கி ஜே. பாரத் மாதா கி ஜே. பாரத் மாதா கி ஜே.
மிக்க நன்றி.
***
(Release ID: 2167595)
SS/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2170752)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam