பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாமின் தர்ராங்கில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 14 SEP 2025 1:57PM by PIB Chennai

அசாமின் தர்ராங்கில் சுமார் 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அஸ்ஸாமின் வளர்ச்சிப் பயணத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், தர்ராங் மக்களுக்கும், அனைத்து அஸ்ஸாம் குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். அதேபோல, அஸ்ஸாம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்அஸ்ஸாம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கியதாகவும், நாட்டின் பிற பகுதிகளுடன் வேகத்தை பராமரிக்க போராடியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், இன்று, அஸ்ஸாம் கிட்டத்தட்ட 13 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் முன்னேறி வருகிறது. இதை ஒரு பெரிய சாதனையாகக் குறிப்பிட்ட திரு மோடி, அஸ்ஸாம் மக்களின் கடின உழைப்பும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியும் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார். அஸ்ஸாம் மக்கள் இந்தக் கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அஸ்ஸாமை இந்தியாவின்  வளர்ச்சிக்கான ஒரு உந்துசக்தியாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் தங்கள் அரசு செயல்பட்டு வருவதை குறிப்பிட்ட பிரதமர், இன்றைய திட்டம் இந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முழு நாடும் ஒற்றுமையுடன் முன்னேறி வருகிறது; இளைஞர்களுக்கு, வளர்ச்சியடைந்த இந்தியா வெறும் கனவு மட்டுமல்ல, ஒரு தீர்மானமும் ஆகும். இந்தத் தேசிய உறுதியை நிறைவேற்றுவதில் வடகிழக்கின் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, முக்கிய நகரங்கள், பெரிய பொருளாதாரங்கள் மற்றும் தொழில்துறை மையங்கள் முதன்மையாக மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் வளர்ந்தன, அதே நேரத்தில் கிழக்கு இந்தியாவில் ஒரு பரந்த பிராந்தியமும் மக்கள்தொகையும் வளர்ச்சிக்கான போட்டியில் பின்தங்கியிருந்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமையை மாற்ற தமது அரசு இப்போது செயல்பட்டு வருவதாக திரு  மோடி தெரிவித்தார்.  21 ஆம் நூற்றாண்டின் இருபத்தைந்து ஆண்டுகள் ஏற்கனவே கடந்துவிட்ட நிலையில், இந்த நூற்றாண்டின் அடுத்த கட்டம் கிழக்கு மற்றும் வடகிழக்குக்கு சொந்தமானது என்று திரு மோடி தெரிவித்தார்

நாடு தழுவிய இணைப்பு பிரச்சாரத்தால் அஸ்ஸாம் பெரிதும் பயனடைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு. மோடி, டெல்லியில் ஆறு தசாப்த கால எதிர்க்கட்சி ஆட்சி மற்றும் அசாமில் பல தசாப்த கால ஆட்சி இருந்தபோதிலும், 60-65 ஆண்டுகளில் பிரம்மபுத்திரா நதியின் மீது மூன்று பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டன என்பதை சுட்டிக்காட்டினார். ஆனால், கடந்த ஒரு தசாப்தத்திற்குள், ஆறு பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டார்.

புதிய சுற்றுவட்டச் சாலை மக்களுக்கு அதிக  நன்மைகளைத் தரும் என்று கூறிய பிரதமர், மேல் அஸ்ஸாம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இனி நகரத்திற்குள் நுழையத் தேவையில்லை, நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று குறிப்பிட்டார்.

நாட்டின் வளங்கள் மற்றும் சொத்துக்களை ஊடுருவல்காரர்கள் கைப்பற்றுவதை தங்கள் அரசு அனுமதிக்காது என்று உறுதியளித்த பிரதமர், இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் உரிமைகள் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்யப்படாது என்று கூறினார். ஊடுருவல்காரர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும், இந்திய மண்ணிலிருந்து அவர்கள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதி செய்வதற்குமான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அஸ்ஸாமின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் கூட்டுப் பொறுப்பை வலியுறுத்திய பிரதமர், இதை அடைய, ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்று கூறினார்வடகிழக்கு பகுதியை வளர்ச்சியடைந்த இந்தியாவின் உந்து சக்தியாக அஸ்ஸாம் மாற்றும் என்று கூறி தமது உரையை அவர் நிறைவு செய்தார்.

அஸ்ஸாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2166486)

AD/PKV/RJ


(Release ID: 2166526) Visitor Counter : 2