பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு

Posted On: 31 AUG 2025 1:58PM by PIB Chennai

சீனாவின் தியான்ஜினில் இன்று (2026 ஆகஸ்ட் 31)  நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

அக்டோபரில் கசானில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இரு நாடுகளும் போட்டியாளர்கள் அல்ல எனவும் வளர்ச்சி கூட்டாளிகள் என்றும், வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் அவர்கள் கூறினர். பரஸ்பர மரியாதை, பரஸ்பர ஆர்வம், பரஸ்பர உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு நிலையான உறவும் ஒத்துழைப்பும் உள்ளது எனவும், இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும், 21-ம் நூற்றாண்டின் போக்குகளுக்கு ஏற்ப ஒட்டுமொத்த ஆசியாவிற்கும் அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு, எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். கடந்த ஆண்டு வெற்றிகரமாக படைகள் விலக்க நடவடிக்கை நடைபெற்றதையும், அதன் பின்னர் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவி வருவதையும் இரு தலைவர்களும் திருப்தியுடன் குறிப்பிட்டனர். இருதரப்பு உறவுகளும் இரு நாட்டு மக்களின் நீண்டகால நலன்களும் முக்கியம் என அவர்கள் கூறினர். அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண உறுதிபூண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளும் தங்கள் பேச்சுவார்த்தைகளில் எடுத்த முக்கியமான முடிவுகளை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். தொடர்ச்சியான முயற்சிகளை ஆதரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரையையும், சுற்றுலா விசா நடைமுறையையும் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நேரடி விமானங்கள், விசா வசதிகள் மூலம் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். பொருளாதார, வர்த்தக உறவுகளில், உலக வர்த்தகத்தை வலுப்படுத்துவதில் இரு நாடுகளின் பொருளாதாரங்களின் பங்கை அவர்கள் அங்கீகரித்தனர். இருதரப்பு வர்த்தக, முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் அரசியல் ரீதியாகவும், உத்திசார் முறையிலும் முயற்சிகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இந்தியாவும் சீனாவும் உத்திசார் சுயாட்சியைப் பின்பற்றுகின்றன என்றும், அவற்றின் உறவுகளை மூன்றாம் நாடுகளின் பார்வையில் பார்க்கக்கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாதம் எதிர்ப்பு, நியாயமான வர்த்தகம் போன்ற பலதரப்பு விஷயங்களிலும், இருதரப்பு, பிராந்திய, உலகளாவிய சவால்கள் தொடர்பாகவும் பொதுவான நிலையை விரிவுபடுத்துவது அவசியம் என்று இரு தலைவர்களும் கூறினா்.

சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைத்துவத்திற்கும் தியான்ஜின் உச்சிமாநாட்டிற்கும் பிரதமர் ஆதரவு தெரிவித்தார். 2026-ம் ஆண்டு இந்தியா நடத்தும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பிற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த சீன அதிபர் திரு ஜி ஜின்பிங், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு சீனாவின் ஆதரவை வழங்குவதாகக் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவின் நிலைக்குழு உறுப்பினர் திரு காய் குய்-அவர்களையும் பிரதமர் சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்த தமது தொலைநோக்குப் பார்வையை திரு காய் குய்-யுடன் பிரதமர் பகிர்ந்து கொண்டார். மேலும் தொலைநோக்குப் பார்வைகளை நனவாக்க அவரது ஆதரவைக் கோரினார். இரு தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்கு ஏற்ப இருதரப்பு பரிமாற்றங்களை விரிவுபடுத்தவும், உறவுகளை மேலும் மேம்படுத்தவும் சீனத் தரப்பு விரும்புவதாக திரு காய் கூறினார்.

***

 

(Release ID: 2162428)

AD/PLM/SG


(Release ID: 2162455) Visitor Counter : 2