பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சி மாநாடு கூட்டறிக்கை: நமது அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் வளத்துக்கான கூட்டாண்மை

Posted On: 29 AUG 2025 7:06PM by PIB Chennai

ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக 2025, ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2025, ஆகஸ்ட் 29 அன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் (கான்டெய்) பிரதமர் மோடியை பிரதமர் இஷிபா வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பிரதமர்களும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  நாகரிக உறவுகள், பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் ஆர்வங்கள், பொதுவான உத்திசார் கண்ணோட்டம் ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியா- ஜப்பான் இடையேயான  நீண்டகால நட்பை அவர்கள் நினைவு கூர்ந்தனர். கடந்த தசாப்தத்தில் இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு பிரதமர்களும் பாராட்டினர். மேலும் வரும் தசாப்தங்களில் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் வளத்தை அடைவதற்கான உத்தி மற்றும் எதிர்கால கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கபூர்வக் கலந்துரையாடலை நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த உயர்நிலைப் பரிமாற்றங்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற நிலையிலான ஈடுபாடுகள் ஆகியவற்றை இரு பிரதமர்களும் வரவேற்றனர். இவை பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆழமான உறவைப் பிரதிபலிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் பாதுகாப்பு, பந்தோபஸ்து, வர்த்தகம், முதலீடு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் போக்குவரத்து, கலாச்சாரம் மற்றும் மக்களுடன் மக்கள் தொடர்புகள் போன்ற துறைகளில் இந்தக் கூட்டாண்மை கணிசமாக விரிவடைந்துள்ளது. எண்ணற்ற அமைச்சகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே தீவிர ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் பல்வேறு துறைகளில் இந்தியாவும் ஜப்பானும் எழுபதுக்கும் அதிகமான உரையாடல் வழிமுறைகள் மற்றும் பணிக்குழுக்களைக் கொண்டுள்ளன என்பதை இரு பிரதமர்களும் பாராட்டினர்.

இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், சாதனைகளைக்  கட்டியெழுப்புவதன் மூலம் பரஸ்பர உறவை வளர்ப்பது அவசியம் என்பதிலும், அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பு மற்றும் வளத்தைத் தொடர சிறந்த உறவுகளைப் பயன்படுத்துவது அவசியம் என்பதிலும் இரு பிரதமர்களும் பொதுவான புரிதலுக்கு வந்தனர். பகிரப்பட்ட நோக்கங்களை உணரவும், சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் முன்னேற்றவும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பணியாற்ற அவர்கள் தீர்மானித்தனர். இந்த நோக்கத்திற்காக, இரு பிரதமர்களும் மூன்று முன்னுரிமைப் பகுதிகளில் கவனம் செலுத்தும் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டனர்: பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்துதல் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களை ஆழப்படுத்துதல். சுத்தமான எரிசக்தி, முக்கியமான கனிமங்கள், டிஜிட்டல் கூட்டாண்மை, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சார பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடுவதை அவர்கள் வரவேற்றனர். தலைவர்கள் ஏற்றுக்கொண்டவை:

(i) பொருளாதாரம், பொருளாதாரப் பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு, சுகாதாரம், மக்களிடையேயான உறவுகள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான ஈடுபாடு போன்ற எட்டு அம்சங்களில் கூட்டாண்மையை வழிநடத்த ஒட்டுமொத்த தேசத்தின் முயற்சிகளையும் ஒருங்கிணைக்கும் அடுத்த தசாப்தத்திற்கான கூட்டுத் தொலைநோக்குப் பார்வை;

(ii) பிராந்தியத்தின் சமகால புவிசார் அரசியல் எதார்த்தங்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளமைவுகளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப்பிரகடனம்;

(iii) இந்தியா-ஜப்பான் இடையே மனிதவளப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான செயல்திட்டம், இது ஐந்து ஆண்டுகளில் 5,00,000-க்கும் அதிகமான பணியாளர்களின் பரிமாற்றம் மூலம் திறமை பரிமாற்றம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குகிறது. இதில் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு செல்லும் 50,000 திறமையான பணியாளர்களும் அடங்குவர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவங்களிலும், வெளிப்படும் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் இரு பிரதமர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையாகக் கண்டித்தனர். 2025, ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். மேலும் ஜூலை 29 அன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கண்காணிப்புக் குழு அறிக்கையில்  தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு பற்றி குறிப்பிட்டதையும் கவனத்தில் கொண்டனர். இந்தத் தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று பிரதமர் மோடி விளக்கினார். பிரதமர் இஷிபா இதை கவலையுடன் குறிப்பிட்டார். இந்த கண்டிக்கத்தக்க செயலைச் செய்தவர்கள், அமைப்பினர் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் எந்த தாமதமும் இல்லாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், லஷ்கர்--தொய்பா, ஜெய்ஷ்--முகமது மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட .நா. பட்டியலிடப்பட்ட அனைத்து பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களை வேரறுக்கவும், பயங்கரவாத நிதியுதவி வழிகள் மற்றும் நாடுகடந்த குற்றங்களுடனான அவற்றின் தொடர்பை அகற்றவும், பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய செயல்பாட்டை நிறுத்தவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

பல்வேறு துறைகளில் இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான வருடாந்தர உச்சிமாநாட்டு வழிமுறையின் முக்கியத்துவத்தை இரு பிரதமர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். 2014 முதல் இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும், அடுத்த தலைமுறை மற்றும் அதற்கு அப்பால் பயனளிக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கவும் 15வது வருடாந்தர உச்சிமாநாடு உதவியது. 2027-ம் ஆண்டில் இந்தியா-ஜப்பான் தூதரக உறவின் 75-வது ஆண்டு நிறைவு என்பதை  நோக்கி இரு நாடுகளும் ஒன்றிணைந்து முன்னேறி வருவதாகவும், இது ஒரு பொருத்தமான முறையில் கொண்டாடப்படும் என்றும் இரு பிரதமர்களும் அறிவித்தனர். இந்தச் சூழலில், இரு தலைவர்களும் துடிப்பான கருத்துப் பரிமாற்றம், வணிகம்அறிவியல், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் அனைத்து பங்குதாரர்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு நிலவுவதை அவர்கள் வரவேற்றனர். ஜப்பான் பயணத்தின் போது தனக்கும் தனது தூதுக்குழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு பிரதமர் இஷிபாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் இஷிபாவுக்கு அழைப்பு விடுத்தார். இதனை பிரதமர் இஷிபா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இந்தப் பயணம்  இந்தியா-ஜப்பான் இடையிலான நீண்டகால நட்பின் அடித்தளமாக விளங்கும் ஆழமான, வேரூன்றிய நாகரிக உறவுகள், துடிப்பான  மக்களுக்குமான இணைப்புகள் மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை மீண்டும் உறுதிப்படுத்தியது.

*******

(Release ID: 2161985)

AD/SMB/RJ


(Release ID: 2162305) Visitor Counter : 16