உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் பயிலரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 26 AUG 2025 1:40PM by PIB Chennai

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டு நாள் பயிலரங்கின்  தொடக்க அமர்வில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தப் பயிலரங்குக்கு புதுதில்லியில் உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மைப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் லோகோவையும் மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டார். உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், உள்துறைச் செயலாளர், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், எல்லை மேலாண்மைச் செயலாளர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், துடிப்பான கிராமங்கள் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். பிரதமர் திரு  நரேந்திர மோடி துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் யோசனையை முன்வைத்தபோது, அது படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஒவ்வொரு எல்லை கிராமமும் அனைத்து வசதிகளுடன் கூடியதாக இருப்பது மட்டுமல்லாமல், இந்த எல்லை கிராமங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களும் வழங்கப்படும். கூடுதலாக, இந்த கிராமங்கள் நாட்டின் மற்றும் அதன் எல்லைகளின் பாதுகாப்பிற்கான வலுவான கருவிகளாக உருவாக்கப்படும். நாட்டின் கடைசி கிராமத்தை முதல் கிராமமாக நியமிப்பதன் மூலம், எல்லை கிராமங்கள் குறித்த நமது பார்வையை பிரதமர் மாற்றியுள்ளார் என்று அவர்  கூறினார்.

 

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட கிராமங்கள், சில ஆண்டுகளில் நமது நாட்டின் மற்றும் அதன் எல்லைகளின் பாதுகாப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க கருவிகளாக நிரூபிக்கப்படும் என்று திரு அமித் ஷா கூறினார். இந்தத் திட்டத்தின் மூலம், உள்கட்டமைப்பை  மேம்படுத்தவும், கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுலா மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், கிராம வாழ்க்கையை எல்லா வகையிலும் துடிப்பானதாக மாற்றவும், பல பரிமாண மற்றும் பல துறை வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையை உணர, அரசுத் திட்டங்களின் 100 சதவீத நிறைவு நிலையை அடைவது, சுற்றுலாவிற்கான அத்தியாவசிய பொது வசதிகளை மேம்படுத்துவது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க கூட்டுறவு நிறுவனங்களை ஊக்குவிப்பது அவசியம் என்று திரு அமித் ஷா கூறினார். எல்லைப்புற கிராமங்களுக்கு ஹோம்ஸ்டேக்கள் போன்ற முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டு, மாநில சுற்றுலாத் துறைகள் முன்பதிவுகளுக்கு முறையான ஏற்பாடுகளைச் செய்தால், இந்த எல்லைப்புற கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார். இந்தக் கிராமங்களின் பெருமையை நிலைநாட்ட மாநிலங்களின் கிராமப்புற மேம்பாட்டுத் துறைகள் பாடுபட வேண்டும் என்றும், இந்த முயற்சியில் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் திரு ஷா வலியுறுத்தினார். கிராமங்களில் அனைத்து வசதிகளும் வேலைவாய்ப்புகளும் இருந்தால், உள்ளூர்வாசிகள் இடம்பெயர விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். சவாலான புவியியல் நிலைமைகள் இருந்தபோதிலும், குடிமக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறாமல் இருப்பதையும், இடம்பெயர்வு தடுக்கப்படுவதையும், கிராம மக்கள்தொகை அதிகரிப்பதையும் இளம் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை செயல்படுத்திய பிறகு, பல எல்லைப்புற கிராமங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்த கிராமங்களுக்கு தலைகீழ் இடம்பெயர்வு போக்கு சரியான திசையில் நகர்கிறது என்பதற்கான செய்தி இது.

சுதந்திர தினத்தன்று, மக்கள்தொகை மாற்றங்கள் கவலைக்குரிய விஷயம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து கூறியதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். துடிப்பான கிராமங்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்கள் இந்தப் பிரச்சினையை தீவிரமாகவும், விரிவாகவும் கவனிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

அரசுத் திட்டங்களை 100% நிறைவுறச் செய்வதற்கு, மாவட்ட ஆட்சியர்கள் மத்திய ஆயுதக் காவல் படைகளுடன்  ஒருங்கிணைக்க முடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கேட்டுக் கொண்டார். மத்திய காவல் படைகள்சுகாதாரம், விளையாட்டு மற்றும் கல்வித் துறைகளில் உதவி வழங்க முடியும் என்று அவர் கூறினார். அருணாச்சலப் பிரதேசத்தில், இந்திய திபெத் எல்லாப்படை துடிப்பான கிராமங்களிலிருந்து பால், காய்கறிகள், முட்டை மற்றும் தானியங்கள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது என்று திரு ஷா கூறினார். ஒவ்வொரு எல்லை கிராமத்திலும்  இந்தப் பரிசோதனையை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து துடிப்பான கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் பொறுப்பை எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவம் ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எல்லை கிராமங்களில் தொலைத்தொடர்பு, சாலை இணைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகள் இருக்க வேண்டும் என்றும் திரு. அமித் ஷா கூறினார். துடிப்பான கிராமங்கள் திட்டம்  வெறும் அரசுத் திட்டமாக மட்டும் இருக்கக்கூடாது, மாறாக நிர்வாகத்தின் உணர்வாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிர்வாக நெறிமுறைகளில் அது வேரூன்றும்போதுதான் திட்டத்தின் நோக்கத்தை அடைய முடியும் என்று அவர்  கூறினார். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின்  கீழ் புதிய குளங்களை கட்டுதல், தீவிர காடு வளர்ப்பு மற்றும் நிரந்தர உள்கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

சட்டவிரோத மத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எல்லை மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், இந்த ஆக்கிரமிப்புகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். எல்லையிலிருந்து குறைந்தது 30 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடல் மற்றும் நில எல்லைகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகளை அகற்றி, குஜராத் இந்த விஷயத்தில் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளது என்பதை திரு ஷா சுட்டிக்காட்டினார்.  .

***

(Release ID: 2160827)

AD/PKV/DL


(Release ID: 2160985)