பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஃபிஜி கூட்டு அறிக்கை: நட்புறவின் அடையாளமான கூட்டணி

Posted On: 25 AUG 2025 1:52PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஃபிஜி குடியரசின் பிரதமர் திரு. சிதிவேனி ரபுகா, 2025 ஆகஸ்ட் 24 முதல் 26 வரை இந்தியாவுக்கு  அரசுமுறைப் பயணம்  மேற்கொண்டார். இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ள பிரதமர் ரபுகா,  அவரது துணைவியார், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சர்  திரு. அன்டோனியோ லாலபலவு மற்றும் ஃபிஜி அரசின் மூத்த அதிகாரிகள் குழுவுடன் அவர் புதுதில்லி வந்துள்ளார்.

 

பிரதமர் ரபுகாவையும் அவரது குழுவையும் பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார். தலைவர்கள் இருதரப்பு விவகாரங்களின் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவான மற்றும் எதிர்கால நோக்குடைய விவாதங்களை நடத்தினர். இரு தலைவர்களும் இருதரப்பு உறவின் வளர்ச்சியில் திருப்தி தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு, சுகாதாரம், விவசாயம், வேளாண் பதப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீடு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாடு, கூட்டுறவு, கலாச்சாரம், விளையாட்டு, கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் பரந்த அடிப்படையிலான, உள்ளடக்கிய மற்றும் எதிர்கால நோக்குடைய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான தங்கள் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

 

குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு ஆகஸ்ட் 2024-ல் ஃபிஜிக்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க முதல் பயணம் உட்பட, சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட உத்வேகத்தைத் தலைவர்கள் திருப்தியுடன் குறிப்பிட்டனர். இந்தியாவிற்கும் ஃபிஜிக்கும் இடையிலான பகிரப்பட்ட மொழியியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், பிப்ரவரி 2023-ல் ஃபிஜியின் நாடியில் 12-வது உலக இந்தி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

 

இந்தியாவிற்கும் ஃபிஜிக்கும் இடையிலான ஆழமான மற்றும் நீண்டகால உறவையும் மக்களுக்கிடையேயான வலுவான உறவுகளையும் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். 1879 மற்றும் 1916- க்கு இடையில் ஃபிஜிக்கு வந்த 60,000 க்கும் மேற்பட்ட இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களான கிர்மிடியாக்களின் பங்களிப்பை அவர்கள் அங்கீகரித்தனர். மே 2025-ல் 146- வது கிர்மிட் தினத்தில்  கலந்து கொள்ள ஃபிஜி குடியரசி, வெளியுறவு மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா வருகை தந்ததை பிரதமர் ரபுகா பாராட்டினார்.

 

ஜூலை 2025-ல் வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின் 6- வது சுற்று கூட்டம் வெற்றிகரமாக நடந்ததை தலைவர்கள் குறிப்பிட்டனர். இது முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கும் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் ஒரு முக்கியமான தளத்தை வழங்கியது.

 

பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கண்டித்தனர். 26 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை இரு தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர்; பயங்கரவாதத்தின் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை மீண்டும் வலியுறுத்தினர். மேலும் பயங்கரவாதம் குறித்த இரட்டை நிலைகளை நிராகரித்தனர். தீவிரமயமாக்கலை எதிர்ப்பதற்கான தேவையை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன; பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுதல், பயங்கரவாத நோக்கங்களுக்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது, கூட்டு முயற்சிகள் மற்றும் திறன் மேம்பாடு மூலம் பயங்கரவாத ஆட்சேர்ப்பு மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் சமாளிப்பது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ஐ.நா மற்றும் பிற பலதரப்பு மன்றங்களில் இணைந்து பணியாற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

 

இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் மற்றும் நீல பசிபிக் கண்டத்திற்கான 2050 உத்தி ஆகியவற்றின் அடிப்படையில் பருவநிலை நடவடிக்கை, மீள்தன்மை கட்டமைத்தல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். சர்வதேச சூரிய கூட்டணி (ஐஎஸ்ஏ), பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணி (சிடிஆர்ஐ) மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (ஜிபிஏ) ஆகியவற்றில் ஃபிஜியின் உறுப்பினர் பதவியைப் பிரதமர் மோடி பாராட்டினார். ஐஎஸ்ஏவுடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஃபிஜி தேசிய பல்கலைக்கழகத்தில் ஒரு ஸ்டார்-மையத்தை நிறுவுவது மற்றும் ஃபிஜியில் முன்னுரிமைத் துறைகளில் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை அளவிடுவதற்கான  கூட்டாண்மை கட்டமைப்பில் கையெழுத்திடுவது உள்ளிட்ட ஐஎஸ்ஏவுக்குள் வளர்ந்து வரும் ஒத்துழைப்பைத் தலைவர்கள் வரவேற்றனர். தொழில்நுட்ப உதவி, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய தளங்களில் வாதிடுதல் மூலம் சிடிஆர்ஐ கட்டமைப்பிற்குள் ஃபிஜியின் தேசிய மீள்தன்மை இலக்குகளை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

 

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் கட்டமைப்பிற்குள் நிலையான எரிசக்தி தீர்வாக உயிரி எரிபொருட்களை ஊக்குவிப்பதற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். கூட்டணியின் நிறுவனர் மற்றும் செயலில் உள்ள உறுப்பினர்களாக, இரு தரப்பினரும் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், பசுமைக் குடில்  வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சியை வளர்ப்பதில் உயிரி எரிபொருட்களின் முக்கிய பங்கை ஒப்புக் கொண்டனர்.  ஃபிஜியில் நிலையான உயிரி எரிபொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதை ஆதரிக்க திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கை கட்டமைப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் இசைவு தெரிவித்தனர்.

 

இருதரப்பு வர்த்தகத்தில் நிலையான வளர்ச்சியை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவிற்கும் ஃபிஜிக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான கணிசமான பயன்படுத்தப்படாத ஆற்றலை அவர்கள் அங்கீகரித்தனர். பொருளாதாரக் கூட்டாண்மையை மேலும் ஒருங்கிணைப்பதற்கும், வர்த்தக துறைகளை பன்முகப்படுத்துவதற்கும், விநியோகச் சங்கிலிகளின் மீள்தன்மையை மேம்படுத்துவதற்கும் பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் துறைசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். ஃபிஜி அரசு, இந்திய நெய்க்கு சந்தை அணுகலை வழங்கியதை பிரதமர் மோடி வரவேற்றார்.

 

வலுவான, உள்ளடக்கிய மற்றும் நிலையான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பிற்கான தொலைநோக்குப் பார்வையுடன், பரஸ்பர செழிப்பை மேம்படுத்துவதற்கு நெருக்கமாக பணியாற்ற இரு தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான செயல்படுத்தும் மன்றம்  மூலம், கிழக்குச் செயல்பாட்டுக் கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஃபிஜி உள்ளிட்ட பசிபிக் தீவு நாடுகளுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் ஈடுபாட்டையும், பசிபிக் தீவுகள் மன்றத்தில்  உரையாடல் கூட்டாளியாக இந்தியாவின் பங்கேற்பையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மே 2023-ல் நடைபெற்ற 3வது இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு  உச்சிமாநாட்டின் முடிவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, ஃபிஜியின் முன்னுரிமைகளை மையமாகக் கொண்டு பரந்த அளவிலான முயற்சிகள் மூலம் பிராந்தியத்தில் வளர்ச்சி கூட்டாண்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். சுகாதாரப் பராமரிப்பை ஒரு முக்கிய முன்னுரிமைப் பகுதியாக மீண்டும் உறுதிப்படுத்திய இரு தலைவர்களும், பசிபிக் பிராந்தியத்தில் அதன் மானிய உதவித் திட்டத்தின் கீழ் இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய திட்டமான சுவாவில் உள்ள 100 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் வடிவமைப்பு, கட்டுமானம்,  செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை வரவேற்றனர்.

ஃபிஜி குடியரசில் மருந்துத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தரமான மற்றும் மலிவு விலையில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மேம்பட்ட அணுகலை உறுதி செய்யவும், இந்திய மருந்தகத் துறையின் நூல்களை அங்கீகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மே 2025-ல் கையெழுத்தானதை பிரதமர் மோடி வரவேற்றார். குறைந்த விலையில் பொதுவான மருந்துகளை வழங்குவதற்காக ஃபிஜியில் மக்கள் மருந்தகங்களை நிறுவுவதற்கு இந்தியாவின் ஆதரவையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆகஸ்ட் 13, 2025 அன்று இந்திய குடியரசுக்கும் ஃபிஜி குடியரசுக்கும் இடையே சுகாதாரம் குறித்த 3-வது கூட்டுப் பணிக்குழுவை நடத்தியதைத் தலைவர்கள் வரவேற்றனர். அப்போது, தொலைதூர சுகாதார சேவைகளை எளிதாக்குவதற்கும், இந்தியாவிற்கும் ஃபிஜிக்கும் இடையே டிஜிட்டல் சுகாதார இணைப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் முதன்மையான தொலை மருத்துவ முயற்சியான இ-சஞ்சீவனியின் கீழ் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், ஃபிஜியில் ஏற்பாடு செய்யப்படும் 2-வது ஜெய்ப்பூர்  முகாமை பிரதமர் மோடி அறிவித்தார். ஃபிஜியின் வெளிநாட்டு மருத்துவ பரிந்துரைத் திட்டத்திற்கு துணையாக, 'இந்தியாவில் குணமடையுங்கள்' திட்டத்தின் கீழ்  ஃஃபிஜி நாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு  இந்திய மருத்துவமனைகளில் சிறப்பு/மூன்றாம் நிலை மருத்துவ பராமரிப்பு சேவைகளையும் இந்தியா விரிவுபடுத்தும்.

 

இந்தியா-ஃபிஜி ஒத்துழைப்பின் ஒரு மூலக்கல்லாக மேம்பாட்டு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்திய தலைவர்கள், 2024-ம் ஆண்டு டோங்காவில் நடைபெற்ற 53-வது பசிபிக் தீவுகள் மன்றத் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா அறிவித்தபடி, ஃபிஜி குடியரசில் முதல் விரைவு தாக்கத் திட்டத்திற்கான  துபலேவு கிராம நிலத்தடி நீர் வழங்கல் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை வரவேற்றனர். இது உள்ளூர் சமூகங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க உதவும்.

 

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் வளர்ந்து வரும் விதத்தை இரு தலைவர்களும் பாராட்டினார். பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் தங்கள் பகிரப்பட்ட நலன்களின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். 2017-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட ஒத்துழைப்பின் முன்னுரிமைப் பகுதிகளை முன்னேற்றுவதற்கும், இந்தப் பகுதிகளில் ஃபிஜியின் முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகள், ராணுவ மருத்துவம்,  கப்பல் போக்குவரத்து தகவல் பரிமாற்றம், ஃபிஜி குடியரசு ராணுவப் படைகளுக்கான திறன் மேம்பாடு போன்ற துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்பு உட்பட, பாதுகாப்பு தொடர்பான தொடக்க கூட்டுப் பணிக்குழுவின்  முடிவுகளைத் தலைவர்கள் வரவேற்றனர்.

 

தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பில் தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர், மேலும் இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர், பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். ஃபிஜியின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின்  பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் ரபுகா வலியுறுத்தினார், மேலும் ஃபிஜி குடியரசின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வரவேற்றார். கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இயங்குநிலையை மேம்படுத்தும் வகையில், ஃபிஜிக்கு இந்திய கடற்படைக் கப்பல் திட்டமிட்ட துறைமுக அழைப்பை பிரதமர் ரபுகா வரவேற்றார்.

 

இருதரப்பு பாதுகாப்பு முயற்சிகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய முயற்சிகள் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். ஃபிஜி குடியரசு ராணுவப் படைகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ்கள் பரிசளிப்பதாகவும், சுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில்  பாதுகாப்புப் பிரிவை நிறுவுவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். சைபர் பாதுகாப்பு இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பின் வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால், ஃபிஜியில் சைபர் பாதுகாப்பு பயிற்சி பிரிவு  நிறுவப்படுவதை தலைவர்கள் வரவேற்றனர். குறிப்பாக கடல்சார், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், தொழில்நுட்பத் துறைகளில் தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்புக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலை அவர்கள் வலியுறுத்தினர்.

 

சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர். பிராந்திய கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பதில் ஒத்துழைக்க தங்கள் விருப்பத்தை அவர்கள் அறிவித்தனர்.

 

இந்தியா-ஃபிஜி உறவை வலுப்படுத்துவதற்கான இயற்கையான அடித்தளமாகவும் உந்து சக்தயாகவும் மக்களுக்கிடையிலான உறவுகள் உள்ளன. குறிப்பாக பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகள். இந்தியாவிற்கும் ஃபிஜிக்கும் இடையிலான இடம்பெயர்வு மற்றும் இயக்கம் குறித்த நோக்கப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர். இது இரு நாடுகளுக்கும் இடையில் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களின் இயக்கத்தை எளிதாக்கும்.

 

மொழியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் ஊக்குவிக்கும் இந்தி ஆய்வு மையத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக ஃபிஜி பல்கலைக்கழகத்திற்கு இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியரை நியமித்ததை தலைவர்கள் வரவேற்றனர். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் 'சர்வதேச கீதா மஹோத்சவத்தில்'  பங்கேற்கும் இந்தியாவில் உள்ள ஃபிஜியைச் சேர்ந்த பண்டிதர்களின் குழுவிற்கு பயிற்சிக்கான இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மேலும் வழங்கினார். இந்தியாவில் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களுடன் இணைந்து ஃபிஜியில் ஒரு சர்வதேச கீதா மஹோத்சவ நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படும்.

 

ஃபிஜி குடியரசுடன் இந்தியாவின் கூட்டாண்மையின் முக்கிய தூணாக திறன் மேம்பாட்டை தலைவர்கள் அங்கீகரித்தனர். இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம் ஃபிஜி அரசு நிபுணர்களுக்கு திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

 

இருதரப்பு ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதிகளாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை தலைவர்கள் அங்கீகரித்தனர். ஃபிஜியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாய மீள்தன்மையை ஆதரிப்பதற்காக ஜூலை 2025-ல் இந்தியா அனுப்பிய 5 மெட்ரிக் டன் உயர்தர கௌபரி விதைகளின் உதவிக்கு ஃபிஜி பிரதமர் ரபுகா, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

 

ஃபிஜியின் சர்க்கரைத் துறையில் புதுமைகளை ஊக்குவிக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் இந்தியாவின் மானிய உதவித் திட்டத்தின் கீழ் 12 விவசாய ட்ரோன்கள் மற்றும் 2 மொபைல் மண் பரிசோதனை ஆய்வகங்களை பரிசாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தத் துறையை மேலும் ஆதரிக்க, ஃபிஜி சர்க்கரைத் துறை நிபுணர்களுக்கான சிறப்பு பயிற்சித் திட்டங்களை வகுப்பதோடு, ஃபிஜி சர்க்கரை நிறுவனத்திற்கு ஒரு நிபுணரை அனுப்பும் நோக்கத்தையும் பிரதமர் மோடி அறிவித்தார்.

 

இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் விளையாட்டு தொடர்புகள், குறிப்பாக ஃபிஜியில் கிரிக்கெட் மற்றும் இந்தியாவில் ரக்பி மீதான அதிகரித்து வரும் உற்சாகம் குறித்து தலைவர்கள் வலியுறுத்தினர். ஃபிஜியின் வேண்டுகோளின் பேரில், ஒரு இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் உள்ளூர் திறமை மேம்பாடு மூலம் ஃபிஜி கிரிக்கெட் அணிகளை ஆதரிப்பார். இதனால் விளையாட்டுகளில் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பார்.

 

சுவாவில் இந்திய தூதரகத்திற்கான சான்சரி மற்றும் கலாச்சார மையத்தை நிர்மாணிப்பதற்காக ஃபிஜி அரசால் நிலம் ஒதுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும் குத்தகை உரிமையை ஒப்படைத்ததை வரவேற்றார். ஃபிஜி  அரசிற்கு அதன் தூதரகத்தை  நிர்மாணிப்பதற்காக 2015-ம் ஆண்டில் புதுதில்லியில் ஏற்கனவே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பின்வருவனவற்றில் கையெழுத்திட்டதை தலைவர்கள் வரவேற்றனர்: (i) கிராமப்புற மேம்பாடு, விவசாய நிதி மற்றும் நிதி உள்ளடக்கத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஃபிஜி மேம்பாட்டு வங்கி  மற்றும் இந்தியாவின் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (NABARD) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்; (ii) இந்திய தரநிலைகள் அமைவனம்  (BIS) மற்றும் ஃபிஜி குடியரசின் தேசிய வர்த்தக அளவீடு மற்றும் தரநிலைகள் துறை  இடையே தரப்படுத்தல் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்; (iii) இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  கீழ் உள்ள தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்  மற்றும் ஃபிஜியில் உள்ள பசிபிக் பாலிடெக்னிக் இடையே மனிதவள திறன் மேம்பாடு, திறன் மேம்பாடு துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்; (iv) பொருளாதாரம் மற்றும் வணிக உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் ஃபிஜி வர்த்தகம் மற்றும் முதலாளிகள் கூட்டமைப்பு  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்; (v) மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் மருந்துகளை வழங்குவது தொடர்பாக  HLL Lifecare Ltd. மற்றும் ஃபிஜி குடியரசின் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சகம் இடையேயான ஒப்பந்தம்.

 

ஜனநாயக மற்றும் சட்டமன்ற பரிமாற்றங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக நாடாளுமன்ற பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர். 2026-ம் ஆண்டில் ஃபிஜியில் இருந்து இந்தியாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வருகை தர முன்மொழியப்பட்டதை பிரதமர் மோடி வரவேற்றார். ஃபிஜியில் சமூக ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவிப்பதில் கிரேட் கவுன்சில் ஆஃப் சீஃப்ஸ்  ஆற்றிய முக்கிய பங்கை பிரதமர் ரபுகா வரவேற்றார்.  இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த, ஜி.சி.சி குழுவின் இந்தியா வருகையை பிரதமர் மோடி வரவேற்றார்.

 

பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் அமைதி, பருவநிலை நீதி, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய தெற்கின் குரலை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். உலகளாவிய தெற்கில் இந்தியாவின் தலைமைப் பங்கை பிரதமர் ரபுகா பாராட்டினர். பலதரப்பு மன்றங்களில் வழங்கப்படும் மதிப்புமிக்க பரஸ்பர ஆதரவிற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் விரிவான சீர்திருத்தங்களுக்கான அவசரத் தேவையை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர், இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் பிரிவுகள் இரண்டிலும் விரிவாக்கம் உட்பட. சமகால புவிசார் அரசியல் யதார்த்தங்களை சிறப்பாக பிரதிபலிக்கிறது. சீர்திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கான தனது ஆதரவையும், 2028-29 காலத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் வேட்புமனுவிற்கு தனது ஆதரவையும் ஃபிஜி மீண்டும் உறுதிப்படுத்தியது.

 

சமகால உலகளாவிய சவால்களை திறம்பட நிவர்த்தி செய்வதில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவது ஒரு தேவையான நடவடிக்கையாக  தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் உலகளாவிய நிர்வாக நிறுவனங்களில் மேம்படுத்தப்பட்ட, சமமான பிரதிநிதித்துவம் உட்பட உலகளாவிய தெற்கின் பொதுவான கவலைக்குரிய பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்பட அவர்கள்  ஒப்புக்கொண்டனர். வளரும் நாடுகளின் பகிரப்பட்ட கவலைகள், சவால்கள் மற்றும் வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்து ஆலோசிக்க ஒரு முக்கியமான தளமாக செயல்படும் வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்வதில் இந்தியாவின் முன்முயற்சி மற்றும் தலைமைத்துவத்தை பிரதமர் ரபுகா பாராட்டினார். வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாட்டில் ஃபிஜி தீவிரமாக பங்கேற்றதற்கு பிரதமர் மோடி பாராட்டினார், மேலும் உச்சிமாநாட்டின் தலைவர்கள் அமர்வில் பங்கேற்றதற்கு பிரதமர் ரபுகாவுக்கு நன்றி தெரிவித்தார். உலகளாவிய தெற்கு  நாடுகளின் பகிரப்பட்ட அனுபவத்தில் வேரூன்றிய தனித்துவமான வளர்ச்சி தீர்வுகளைக் கண்டறிவதில், தக்ஷின் என்ற உலகளாவிய தெற்கு சிறப்பு மையத்துடன் ஃபிஜி தொடர்ந்து ஈடுபடுவதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

 

இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்படும் திறந்த, உள்ளடக்கிய, நிலையான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதியை ஆதரிப்பதில் இரு பிரதமர்களும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினர். இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் இணைவதில் ஃபிஜியின் ஆர்வத்தை பிரதமர் ரபுகா தெரிவித்தார். கடல்சார் களத்தை நிர்வகிக்கவும், பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் முயற்சிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் இந்தக் கூட்டாண்மைக்கு ஃபிஜியை பிரதமர் மோடி வரவேற்றார். நமது பிராந்தியத்திற்கு அமைதியான, நிலையான, பாதுகாப்பான மற்றும் நிலையான எதிர்காலம் மற்றும் நல்வாழ்வை உருவாக்குவதை வலியுறுத்தும் 'அமைதிப் பெருங்கடல்' என்ற கருத்தை பிரதமர் ரபுகா எடுத்துரைத்தார். பசிபிக் பிராந்தியத்தில் 'அமைதிப் பெருங்கடலை' முன்னெடுப்பதில் பிரதமர் ரபுகாவின் தலைமைத்துவத்திற்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

 

பிரதமர் ரபுகா தமக்கும் தமது குழுவினருக்கும் அளித்த அன்பான விருந்தோம்பலுக்கு இந்திய அரசுக்கும் மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஃபிஜிக்கு வருகை தருமாறு  பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

***

(Release ID: 2160503)

AD/PKV/RJ/DL


(Release ID: 2160711)