உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், சிறைச்சாலையிலிருந்து நிர்வாகம் செய்வது நாட்டின் ஜனநாயக மாண்புகளை அவமதிக்கும் செயலாகும் – உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 25 AUG 2025 3:32PM by PIB Chennai

நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் சிறைச்சாலையிலிருந்து நிர்வாகம் செய்ய முடியாது என்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெளிவான நம்பிக்கைக் கொண்டுள்ளார்.  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா அளித்துள்ள பேட்டியில் அரசியலமைப்புச் சட்ட 130-வது திருத்த மசோதா, 2025 உட்பட பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தச் சட்டத்திருத்த மசோதாவின்படி, தீவிர குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், 30 நாட்களுக்குள் பிணை பெறாவிட்டால் அவர்களது பதவியிலிருந்து தன்னிச்சையாக விடுவிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று திரு அமித் ஷா தெளிவுபட கூறினார். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா குறித்து அனைத்து அரசியல் கட்சியின் உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.  அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா அல்லது எந்தவொரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் தடுப்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சரியான ஜனநாயக நடைமுறை அல்ல என்று அவர் தெரிவித்தார்.  நாட்டின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடைபெறும் விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமே இன்றி கூச்சல் மற்றும் அமளியில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.  நாடாளுமன்றத்தில் மசோதாக்களை தாக்கல் செய்யவிடாமல் தடுக்கும் செயல்கள் ஜனநாயக நடைமுறை அல்ல என்றும் தங்களின் நடவடிக்கைகளுக்காக ஏதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த மசோதா எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் எதிரானதல்ல என்றும் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பவர்களையும் சட்ட வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  அரசு பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என்று மக்களிடையே எதிர்க்கட்சிகள் தவறாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இந்த மசோதாவின்படி 30 நாட்களுக்குள் பிணை பெறுவோர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்று அவர் தெரிவித்தார்.  பிணை வழங்கும் உரிமை உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்றும் பிணை வழங்கப்படாத நிலையில், அவரது பதவியிலிருந்து விலக நேரிடும் என்றும் திரு அமித் ஷா தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்ற அவை செயல்படுவது குறித்து ஆளும் கட்சி மட்டுமே முடிவு செய்ய முடியாது என்றும், எந்தவொரு மசோதா அல்லது அரசியல் சட்ட திருத்த மசோதா அவையில் ஆக்கப்பூர்வ விவாதங்களுக்கான சூழலை உருவாக்காத நிலையை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறும் என்று நம்பிக்கைத் தெரிவித்த திரு அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் அறத்தின் அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160539

 

***

AD/SV/KPG/RJ/DL


(Release ID: 2160703)