பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்

வளரும் இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் வளர்ச்சியின் மாதிரியாக தில்லியை நாங்கள் மாற்றுகிறோம்: பிரதமர்

மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே எங்களது தொடர்ச்சியான நடவடிக்கை - அதுவே ஒவ்வொரு கொள்கையையும் ஒவ்வொரு முடிவையும் வழிநடத்தும் குறிக்கோளாக உள்ளது: பிரதமர்

எங்களைப் பொறுத்தவரை, சீர்திருத்தம் என்பது நல்லாட்சியின் விரிவாக்கம்: பிரதமர்

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் மக்களுக்கு இரட்டை நன்மைகளைக் கொண்டுவரும்: பிரதமர்

இந்தியாவை வலிமையாக்க ஸ்ரீ கிருஷ்ணரிடம் உத்வேகம் பெற வேண்டும் - இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்ற மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்

உள்ளூர் மக்களுக்கு ஆதரவு அளித்து இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவோம்: பிரதமர்

Posted On: 17 AUG 2025 3:29PM by PIB Chennai

தில்லியின் ரோஹிணியில் சுமார் 11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.08.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விரைவுச் சாலையின் பெயர் "துவாரகா" என்றும், நிகழ்ச்சி "ரோஹிணி"யில் நடைபெறுவதாகவும் கூறி, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜென்மாஷ்டமிப் பண்டிகையின் உணர்வை எடுத்துரைத்த அவர், துவாரகாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது தற்செயல் நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டார். முழு நிகழ்வும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியால் நிரம்பி இருப்பதாகப் பிரதமர் கூறினார்.

ஆகஸ்ட் மாதம் சுதந்திர உணர்விலும் புரட்சியின் வண்ணங்களாலும் நிறைந்துள்ளது என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தேசிய தலைநகர் தில்லி இன்று ஒரு வளர்ச்சிப் புரட்சியைக் காண்கிறது என்று குறிப்பிட்டார்துவாரகா விரைவுச் சாலை, நகர்ப்புற விரிவாக்கச் சாலை ஆகியவை மூலம் தில்லி மேம்பட்ட போக்குவரத்து இணைப்பைப் பெற்றுள்ளது என அவர் கூறினார். இது தில்லி, குருகிராம்முழு தேசிய தலைநகர்ப் பகுதி மக்களின் வசதியை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்குச் செல்வது எளிதாகிவிடும் எனவும் இதனால் அனைவருக்கும் நேரம் மிச்சமாகும் என்றும் அவர் கூறினார். இந்த இணைப்பினால் வர்த்தகர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த நவீன சாலை உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக தில்லி மக்களுக்கு அனைவருக்கும் அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டின் பொருளாதாரம், தன்னம்பிக்கை பற்றி விரிவாகப் பேசியதைக் குறிப்பிட்ட பிரதமர், இன்றைய இந்தியா அதன் விருப்பங்கள், கனவுகள் தீர்மானங்களால் வரையறுக்கப்படுகிறது என்றார். இவை முழு உலகமும் இப்போது அனுபவிக்கும் அம்சங்கள் என்று அவர் கூறினார். உலகம் இந்தியாவைப் பார்த்து அதன் முன்னேற்றத்தை மதிப்பிடும்போது, அதன் முதல் பார்வை தேசிய தலைநகரான தில்லியின் மீது விழுகிறது என்று அவர் கூறினார். தில்லியை ஒரு வளர்ச்சி மாதிரியாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தைத் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். இது வளரும் இந்தியாவின் நவீன தலைநகரம் என்று அவர் கூறினார்.

கடந்த 11 ஆண்டுகளில், இந்த முன்னேற்றத்தை அடைய அரசு பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் கூறிய பிரதமர், போக்குவரத்து இணைப்பின் அடிப்படையில், தில்லி கடந்த பத்து ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதை எடுத்துரைத்தார். இந்தப் பகுதியில் நவீனமான, அகலமான விரைவுச் சாலைகள் இருப்பதைக் குறிப்பிட்டார். தில்லி தற்போது மெட்ரோ கட்டமைப்பைப் பொறுத்தவரை உலகின் சிறந்தகுதிகளில் ஒன்றாகும் என்று திரு நரேந்திர மோடி கூறினார். இந்தப் பகுதியில் நமோ பாரத் விரைவு ரயில் போன்ற மேம்பட்ட அமைப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார். கடந்த 11 ஆண்டுகளில், தில்லியில் பயணம் செய்வது முந்தைய காலங்களை விட கணிசமாக எளிதாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

தில்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இன்று இந்த முன்னேற்றத்தை அனைவரும் நேரில் காண்பதாகக் கூறினார். துவாரகா விரைவுச் சாலையையும் நகர்ப்புற விரிவாக்கச் சாலையையும் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்த இரண்டு சாலைகளும் சிறந்த தரத்தில் கட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். புற விரைவுச் சாலையைத் தொடர்ந்து, நகர்ப்புற விரிவாக்கச் சாலை இப்போது தில்லியின் உள்கட்டமைப்புக்கும் போக்குவரத்துக்கும் இணைப்புக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நகர்ப்புற விரிவாக்கச் சாலையின் முக்கிய அம்சத்தை சுட்டிக் காட்டிய அவர், தில்லியை குப்பைகளிலிருந்து விடுவிக்க இது உதவியுள்ளது என்று கூறினார். நகர்ப்புற விரிவாக்கச் சாலையின் கட்டுமானத்தில் மில்லியன் கணக்கான டன்கள் கொண்டுள்ளன கழிவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குப்பை மேடுகளைக் குறைத்து அந்தக் குப்பைகள் மூலம், சாலை கட்டுமானத்திற்காக கழிவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். அருகிலுள்ள பால்ஸ்வா குப்பைக் கிடங்கைச் சுட்டிக்காட்டி, அதன் அருகே வசிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். தில்லி மக்களை இதுபோன்ற சவால்களிலிருந்து விடுவிக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

திருமதி ரேகா குப்தாவின் தலைமையில், தில்லி அரசு யமுனை நதியை சுத்தம் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்குப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். யமுனையில் இருந்து ஏற்கனவே 16 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறுகிய காலத்திற்குள், தில்லியில் 650 மின்சார பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் திரு நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டார். நகரில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை விரைவில் 2,000-த்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த முயற்சி "பசுமை தில்லி - தூய்மையான தில்லி" என்ற மந்திரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய தலைநகரான தில்லியில் தங்கள் கட்சி அரசு அமைத்ததைக் குறிப்பிட்ட பிரதமர், தில்லியின் வளர்ச்சியில் குறைவான வேகம் இருந்ததற்கு முந்தைய அரசுகளே காரணம் என விமர்சித்தார். முந்தைய அரசுகளின் தவறுகளில் இருந்து தில்லியை மேம்படுத்துவது ஒரு கடினமான பணி என்றாலும், தற்போதைய அரசு தில்லியின் பெருமையையும் வளர்ச்சியையும் மீட்டெடுக்க பாடுபடும் என்று அவர் கூறினார். தில்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் தற்போது உள்ள அரசுகளின் ஆட்சியில் தனித்துவமான சீரமைப்புப் பணிகளைத் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இது முழு பிராந்தியமும் தங்களது கட்சிக்கும் அதன் தலைமைக்கும் அளித்த மகத்தான ஆசீர்வாதங்களைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்தப் பொறுப்பை உணர்ந்து, தில்லி-தேசிய தலைநகர் பகுதியின் வளர்ச்சிக்கு அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். சில அரசியல் கட்சிகளால் இன்னும் பொதுமக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார். அந்தக் கட்சிகள் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து, அடிப்படை யதார்த்தங்களிலிருந்து தங்களை தூரமாக விலக்கிக் கொண்டதாக அவர் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு, தில்லி, ஹரியானா மக்களை ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டுவதற்கு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். ஹரியானா மக்கள் தில்லியின் நீர் விநியோகத்தை மாசுபடுத்துவதாகக் கூறி பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாக அவர் கூறினார். தில்லியும் முழு தேசிய தலைநகரப் பகுதியும் தற்போது இத்தகைய எதிர்மறை அரசியலிலிருந்து விடுபட்டுள்ளதாக அவர் கூறினார். தேசிய தலைநகரப் பகுதியைச் சிறப்பாக மாற்றுவதற்கான அரசின் உறுதியை மீண்டும் அவர் வலியுறுத்தினார். இந்த தொலைநோக்குப் பார்வை வெற்றிகரமாக நனவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நல்ல நிர்வாகம் என்பது நமது அரசுகளின் முத்திரை எனவும் நிர்வாகத்தில், மக்களே மிக முக்கியமானவர்கள் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே நமது கட்சியின் தொடர்ச்சியான முயற்சி என்று அவர் குறிப்பிட்டார். இந்த அர்ப்பணிப்பு, கட்சியின் கொள்கைகளிலும் முடிவுகளிலும் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஹரியானாவில் கடந்த கால அரசுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், செல்வாக்கு அல்லது பரிந்துரை இல்லாமல் ஒரு பணி நியமனம் கூட செய்ய முடியாது என்று இருந்த ஒரு காலம் இருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஹரியானாவில் தற்போதைய அரசின் கீழ், லட்சக்கணக்கான இளைஞர்கள் முழுமையான வெளிப்படையான செயல்முறை மூலம் அரசு வேலைகளைப் பெற்றுள்ளனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த முயற்சியை அர்ப்பணிப்புடன் தொடர்ந்ததற்காக திரு நயாப் சிங் சைனியைப் பிரதமர் பாராட்டினார்.

தில்லியில், ஒரு காலத்தில் நிரந்தர வீடுகள் இல்லாமல் குடிசைகளில் வாழ்ந்தவர்கள் இப்போது உறுதியான வீடுகளைப் பெறுகிறார்கள் என்று பிரதமர் கூறினார். மின்சாரம், தண்ணீர், எரிவாயு இணைப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகள் இப்போது இந்த அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். தேசிய முன்னேற்றம் குறித்து பேசிய திரு நரேந்திர மோடி, கடந்த 11 ஆண்டுகளில், நாடு முழுவதும் சாதனை எண்ணிக்கையிலான சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். ரயில் கட்டமைப்பின் தொடர்ச்சியான மாற்றத்தைக் குறிப்பிட்ட அவர், வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தில்லி தேசிய தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், இங்கு விமான நிலையங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து பல நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாகவும், நொய்டா விமான நிலையப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளில் நாடு பழைய ஒவ்வாத அணுகுமுறைகளை மாற்றியதால்தான் இத்தகைய முன்னேற்றம் சாத்தியமானது என்று திரு நரேந்திர மோடி கூறினார். தேசத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, அதை முடிக்க வேண்டிய வேகம் ஆகியவை தொடர்பான பணிகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறினார். கிழக்கு, மேற்கு புற விரைவுச் சாலைகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், தில்லி-தேசிய தலைநகர் பகுதி கடந்த பல ஆண்டுகளாக இந்தச் சாலைகளின் தேவையை உணர்ந்திருந்ததாகக் குறிப்பிட்டார். முந்தைய அரசுகளின் ஆட்சிகாலத்தில், இந்தத் திட்டங்கள் தொடர்பான கோப்புகள் மெதுவாக நகர்ந்தன என்றும் ஆனால் மக்கள் தங்கள் கட்சிக்கு வாய்ப்பளித்தபோதுதான் உண்மையிலேயே பணிகள் வேகம் பெற்றன என்றும் அவர் குறிப்பிட்டார். மத்தியிலும் ஹரியானாவிலும் ஒரே அரசுகள் அமைந்தபோது சாலைகள் சிறப்பாக மாறியதை அவர் எடுத்துரைத்தார். இப்போது, இந்த விரைவுச்சாலைகள் நாட்டிற்கு சிறப்புடன் சேவை செய்கின்றன என்று பிரதமர் பெருமையுடன் கூறினார்.

வளர்ச்சித் திட்டங்களின் மீதான அலட்சியம் தில்லி தேசிய தலைநகர் பகுதியில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பரவலாக இருந்தது என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, முன்னதாக, உள்கட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகக் குறைவாக இருந்தது என்றும், அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் கூட முடிக்க பல ஆண்டுகள் ஆனது என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த 11 ஆண்டுகளில், உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு ஆறு மடங்குக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். தற்போதைய கவனம் திட்டங்களை விரைவாக முடிப்பதில் உள்ளது என அவர் கூறினார். அதனால்தான் துவாரகா விரைவுச் சாலை போன்ற முயற்சிகள் இப்போது நிறைவேறி வருகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்களில் கணிசமான முதலீடு செய்யப்படுவது, புதிய வசதிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். பெரிய கட்டுமான நடவடிக்கைகள் லட்சக்கணக்கான தனிநபர்களுக்கு தொழிலாளர்கள் முதல் பொறியாளர்கள் வரை வேலைவாய்ப்பை வழங்குகின்றன என்பதை விளக்கிய திரு நரேந்திர மோடி, கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு தொடர்புடைய தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது என்று கூறினார். இந்த முன்னேற்றங்கள் காரணமாக போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்துத் துறைகள் அதிக வேலை வாய்ப்புகளைக் ஏற்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் நீண்ட காலமாக ஆட்சி செய்தவர்கள் மக்களை ஆள்வதையே தங்கள் முதன்மை நோக்கமாகக் கருதினர் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். மக்களின் வாழ்க்கையிலிருந்து அரசின் அழுத்தம், குறுக்கீடு இரண்டையும் நீக்குவதே தங்களது முயற்சி என்று அவர் கூறினார். கடந்த கால நிலைமைகளை விளக்குவதற்கு ஒரு உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். தில்லியில் தூய்மையைப் பராமரிப்பதில் பெரும் பொறுப்பை ஏற்கும் தூய்மைப் பணியாளர்கள் முன்பு அடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார். தில்லி மாநகராட்சியில், ஒரு தூய்மைப் பணியாளர் முன்னறிவிப்பு இல்லாமல் பணிக்கு வரத் தவறினால், அவர்களை ஒரு மாதம் சிறையில் அடைக்க முடியும் என்ற விதி உள்ளது என்றும் இது அதிர்ச்சியூட்டும் உண்மை எனவும் அவர் தெரிவித்தார். இத்தகைய விதிகளுக்குப் பின்னால் உள்ள ஆதிக்க மனநிலையைப் பற்றி பிரதமர் கேள்வி எழுப்பினார். தூய்மைப் பணியாளர்கள் ஒரு சிறிய தவறுக்காக எவ்வாறு சிறையில் அடைக்கப்பட முடியும் என்று கேள்வி எழுப்பினார். இப்போது சமூக நீதி பற்றிப் பேசுபவர்களை அவர் விமர்சித்தார். நாட்டில் இதுபோன்ற அநீதியான சட்டங்கள், விதிகளை முன்பு அதிகாரத்தில் இருந்தவர்கள் பராமரித்து வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பிற்போக்குத்தனமான சட்டங்களையும் விதிகளையும் தங்கள் அரசு கண்டறிந்து, அவற்றை ஒழித்து வருவதாக திரு நரேந்திர மோடி கூறினார். அரசு ஏற்கனவே இதுபோன்ற நூற்றுக்கணக்கான சட்டங்களை ரத்து செய்துள்ளதாகவும், இந்த இயக்கம் தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

எங்களைப் பொறுத்தவரை சீர்திருத்தம் என்பது நல்ஆளுகையை விரிவுபடுத்துவதாகும், என்று எடுத்துரைத்த பிரதமர் சீர்திருத்தங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரும் நாட்களில் வாழ்க்கை மற்றும் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் வகையில் பல முக்கியமான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஜி.எஸ்.டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது; இந்த தீபாவளியில் குடிமக்கள் ஜி.எஸ்.டி. சீதிருத்தங்கள் மூலம் இரட்டை போனஸ் பெறுவார்கள், என்று பிரதமர் திரு. மோடி கூறினார். முழுமையான சட்டகவரைவானது அனைத்து மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் திரு மோடி, இந்திய அரசின் இந்த முன்முயற்சிக்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு நல்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்நடைமுறையை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று தெரிவித்த அவர் அப்பொழுதுதான் தீபாவளி கூடுதல் சிறப்பானதாக அமையும் என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி-யை மேலும் எளிமைப்படுத்தவும் வரி விகிதங்களைத் திருத்தவும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மேலும் தெரிவித்த பிரதமர் இந்த சீர்திருத்தத்தின் பலன்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் அதிலும் குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சென்று சேர வேண்டுமென்று தெரிவித்தார். அனைத்துவிதமான தொழில்முனைவோரும் அதேபோன்று வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களும் இந்த மாற்றங்களால் பயனடைவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப்பெரும் வலிமைகளில் ஒன்றாக அதன் பண்டைய கலாச்சாரமும் பாரம்பரியமும் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி இந்த கலாச்சாரப் பாரம்பரியமானது வாழ்க்கையின் ஆழமான தத்துவத்தை உள்ளடக்கியதாக உள்ளது என்று வலியுறுத்தினார். இந்த தத்துவத்திற்குள்தான் சக்ரதாரி மோகன் மற்றும் சர்க்கதாரி மோகன் ஆகிய இருவரையும் நாம் எதிர்கொள்கின்றோம். இந்த இருவரின் சாராம்சத்தையும் தேசமானது அவ்வப்போது அனுபவித்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர் சக்ரதாரி மோகன் என்பது சுதர்சன சக்கரத்தின் ஆற்றலை வெளிப்படுத்திக்காட்டிய பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் குறிப்பிடும் என்றும் சர்க்கதாரி மோகன் என்பது கைராட்டையின் மூலம் சுதேசியத்தின் வலிமையை நாட்டில் எழுப்பிய மகாத்மா காந்தியை குறிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவை அதிகாரம் பெற்ற நாடாக ஆக்குவதற்கு நாம் சக்ரதாரி மோகனிடம் இருந்து உத்வேகம் பெற வேண்டும். இந்தியாவை சுயசார்பான நாடாக ஆக்குவதற்கு நாம் சர்க்கதாரி மோகனின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறிய பிரதமர் ஒவ்வொரு குடிமக்களின் வாழ்க்கை மந்திரமாக உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பது இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்இந்த இயக்கம் நாட்டிற்கு சிரமமானது இல்லை என்று தெரிவித்த அவர் இந்தியா ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்கும் பொழுதெல்லாம் அதை நிறைவேற்றியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்அழிவின் விளிம்பில் இருந்த காதியை உதாரணமாக எடுத்துக்காட்டிய திரு மோடி நாட்டிற்கு தான் விடுத்த வேண்டுகோளை மீண்டும் நினைவூட்டினார். இந்த வேண்டுகோள் கூட்டுத்தீர்மானத்திற்கு வழிவகுத்ததோடு வெளிப்படையான பலன்கள் ஏற்படவும் உதவியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் காதி விற்பனை ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற முழக்கத்தின் உணர்வோடு இந்திய மக்கள் காதியை அரவணைத்துக் கொண்டனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்களுக்கு குடிமக்கள் காட்டிய நம்பிக்கையை பிரதமர் மேலும் எடுத்துக்காட்டினார். பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தனக்கான மொபலை் போன்களில் பெரும்பான்மையானவற்றை இறக்குமதி செய்தது. இன்று பெரும்பான்மையான இந்தியர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களையே பயன்படுத்துகின்றனர். இந்தியா இப்பொழுது 30 முதல் 35 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்கிறது மற்றும் ஏற்றுமதி செய்கிறது என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட யுபிஐ என்பது இன்று உலகின் மிகப்பெரிய நிகழ்நேர டிஜிட்டல் பணம் செலுத்தும் தளமாக மாறியுள்ளது என்று தெரிவித்த பிரதமர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளுக்கும் ரயில் எஞ்சின்களுக்குமான தேவை தற்போது மற்ற நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சாலை உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஒட்டுமொத்தமான உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றைப் பொறுத்து இந்தியா விரைவு சக்தி தளத்தை உருவாக்கியுள்ளதாக பிரதமர் எடுத்துக்கூறினார். இந்த தளத்தில் 1600 தரவு அடுக்குகள் இருப்பதாக அவர் எடுத்துரைத்தார். எந்தவொரு செயல் திட்டத்திற்கும் இந்த தளம் அனைத்துவிதமான பொருந்தி வரும் நிபந்தனைகளையும் நெறிமுறைகளையும் உடனடியாக அணுகுவதற்கு உதவுகிறது வனவிலங்கு, வனப்பகுதிகள், நதிகள் அல்லது வடிகால்கள் என எதுவாக இருந்தாலும் அத்தகைய அனைத்து தகவல்களும் நிமிடங்களுக்குள் கிடைக்கின்றன, இது செயல்திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட உதவுகின்றன என்று பிரதமர் மேலும் தெரிவித்தார். விரைவு சக்திக்காக பிரத்யேக பல்கலைக்கழகம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த திரு மோடி நாட்டின் முன்னேற்றத்தில் விரைவு சக்தி என்பது ஆற்றல்மிக்க மற்றும் மாற்றத்துக்கான பாதையாக உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு பொம்மைகள்கூட இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன என்று நினைவுகூர்ந்த திரு மோடி உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் உள்நாட்டு பொம்மை உற்பத்தியை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா பொம்மைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது என்றார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைத்து குடிமக்களையும் வலியுறுத்திய பிரதமர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே தேர்ந்தெடுக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதாவது, நீங்கள் இந்தியர்கள் என்றால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். தற்போதைய பண்டிகைக்காலம் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர் ஒவ்வொருவரும் தங்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளூர் தயாரிப்புப் பொருட்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களால் வடிவமைக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பரிசாக வழங்க வேண்டும் என்ற முடிவை எடுக்குமாறு குடிமக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். நாடு முழுவதிலும் உள்ளடைக்காரர்களை குறிப்பிட்டு பேசிய பிரதமர் சற்றே கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வெளிநாட்டுப் பொருட்களை சிலர் விற்கின்றனர் என்று தெரிவித்த அவர், அவர்கள் தவறேதும் செய்யவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அதேசமயம், உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்க வேண்டுமென்ற முழக்கத்தை அவர்கள் இப்பொழுது கடைபிடிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இந்த ஒற்றை நடவடிக்கை தேசத்திற்கு பலன் அளிப்பதோடு விற்கப்படும் ஒவ்வொரு பொருளும் இந்திய தொழிலாளிக்கு அல்லது ஒரு ஏழை குடிமகனுக்கு உதவும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு விற்பனையில் இருந்து கிடைக்கும் பணமும் இந்தியாவிலேயே இருப்பதோடு சக இந்தியர்களுக்கு பலன் அளிக்கும் என்று வலியுறுத்திய திரு மோடி இந்திய குடிமக்களின் வாங்கும் சக்தியை இது மேம்படுத்தும் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பெருமிதத்துடன் விற்பனை செய்யுமாறு கடைக்காரர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கர்த்தவ்ய பவன் என்ற புதிய மத்திய செயலகம் மற்றும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் நிறைவு பெற்றது ஆகியவற்றை சுட்டிக்காட்டிய பிரதமர் தில்லி இப்பொழுது இந்தியாவின் கீர்த்திமிகுந்த கடந்தகாலத்தையும் அதன் நம்பிக்கைதரும் எதிர்காலத்தையும் இணைக்கின்ற ஒரு தலைநகராக உருமாறி வருகிறது என்றார். கடமை பாதை இப்பொழுது புதுப்பிக்கப்பட்ட வடிவத்துடன் நாட்டிற்கு தோற்றமளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர் பாரத் மண்டபம் மற்றும் யஷோ பூமி போன்ற நவீன கருத்தரங்க மையங்கள் தில்லியின் அந்தஸ்தை அதிகரித்து உள்ளன என்றும் தெரிவித்தார். இத்தகைய வளர்ச்சிகள் தில்லியை வர்த்தகம் மற்றும் வணிகத்திற்குமான முதன்மை இடமாக நிலைப்படுத்துகின்றன என்று தெரிவித்த பிரதமர் இத்தகைய முன்முயற்சிகளின் வலிமை மற்றும் உத்வேகத்தால் உலகின் மிகச்சிறந்த தலைநகரங்களில் ஒன்றாக தில்லி விளங்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, தில்லியின் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, மத்திய இணையமைச்சர்கள் திரு அஜய் தம்தா, திரு ஹர்ஷ் மல்கோத்ரா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

துவாரகா விரைவுச்சாலையின் தில்லி பிரிவு மற்றும் நகர விரிவாக்க சாலை-II ஆகிய செயல்திட்டங்கள் தலைநகரத்தின் நெருக்கடியை குறைக்கும் வகையில் அரசின் விரிவான திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இணைப்பை அதிகரித்தல், பயண நேரத்தை குறைத்தல், தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போக்குவரத்தை எளிதாக்குதல் ஆகிய குறிக்கோள்களுடன் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. வாழ்க்கையை எளிமைப்படுத்துதல் மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கான உலகத்தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த முன்முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.

துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கிலோ மீட்டர் நீளமுள்ள தில்லி பிரிவு ரூ.5360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவானது யஷோபூமி, டெல்லி மெட்ரோவின் நீலப் பாதை மற்றும் ஆரஞ்சுப் பாதை உருவாக்கப்பட்டு வரும் பிஷ்வாசன் ரயில் நிலையம் மற்றும் துவாரகா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு பல்வகை போக்குவரத்து இணைப்பை வழங்கும். இந்தப் பிரிவில் கீழ்வருவன அடங்கியுள்ளன.

•          தொகுப்பு I: துவாரகா பிரிவு -21ல் ஷிவ் மூர்த்தி சந்திப்பு முதல் பாலத்திற்கு கீழான சாலை வரை 5.9 கிலோமீட்டர் தூரம்

•          தொகுப்பு II: துவாரகா செக்டார்-21ல் பாலத்திற்கு கீழ் சாலையில் இருந்து தில்லி-ஹரியானா எல்லை வரை 4.2 கிலோமீட்டர் தூரம். இது நகர விரிவாக்கச் சாலை- II க்கு நேரடி இணைப்பைத் தருகிறது.

துவாரகா எக்ஸ்பிரஸ் பெருவழியில் 19 கிலோமீட்டர் தூரமுள்ள ஹரியானா பிரிவை ஏற்கனவே பிரதமர் மார்ச் 2024ல் தொடங்கி வைத்திருந்தார்.

ரூ.5580 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள நகர விரிவாக்க சாலை- II ல் அலிபூர் முதல் டிசாவோன் கலன் வரையிலான பிரிவை பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கு புதிய இணைப்புகளுடன் பிரதமர் தொடங்கி வைத்தார். தில்லியின் உட்புற மற்றும் வெளிப்புற சுற்றுச்சாலைகளில் இது போக்குவரத்தை எளிமைப்படுத்துவதோடு முகார்பா சௌக், தெளலாகுவான் மற்றும் தேசிய n-09 ஆகிய நெருக்கடியான இடங்களிலும் போக்குவரத்தைக் குறைக்கும்.

புதிய பாலங்கள் பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கு நேரடி அணுகுதலை வழங்குவதோடு தொழிற்சாலை இணைப்பை மேம்படுத்தும், நகர போக்குவரத்தை குறைக்கும் மற்றும் தேசிய தலைநகரில் சரக்குகளின் போக்குவரத்தை விரைவுபடுத்தும்.

***

(Release ID: 2157281)

AD/PLM/TS/RJ


(Release ID: 2157313)