குடியரசுத் தலைவர் செயலகம்
79-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை
Posted On:
14 AUG 2025 7:40PM by PIB Chennai
எனதருமை நாட்டு மக்களே,
சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கம் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் அனைவருக்கும் பெருமிதம் அளிக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு இந்தியனும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடக் கூடிய தினங்களாக நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் நாம் அனைவரும் இந்தியர் என்ற பெருமையை நினைவு கூரும் வகையில் உள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி நம் அனவைராலும் ஒருசேர நினைவு கூரும் தினமாகும். பல ஆண்டுகளாக காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது அந்த தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்கள் சுதந்திர தினம் குறித்து கனவைக் கொண்டிருந்தனர். நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஆண், பெண், முதியோர், இளையோர் என அனைவரும் அந்நிய ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டிருந்தனர். நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டவர்களின் வலுவான நம்பிக்கையைக் குறிக்கும் வகையில் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தொடர்ந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. தேசியக்கொடிக்கு நாளை வணக்கம் செலுத்தும் அதே வேளையில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தும் வகையிலும், நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் நிறைவடைந்தததைக் குறிக்கும் வகையிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உலக அளவில் ஏராளமான வாக்காளர்களைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ளோம். இந்திய மக்களாகிய அனைவரும் நாம் ஒன்றிணைந்து வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்கச் செய்வது நம் அனைவரின் கடமையாகும். பிற ஜனநாயக நாடுகளில் வாக்களிக்கும் மக்களைப் போல் அல்லாமல் பாலினம், மதம் மற்றும் பிற காரணிகளின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சகிப்புத்தன்மையைக் கொண்ட நாடாக உள்ளது. முந்தைய கால ஜனநாயக நடைமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில், இயற்கையாகவே நம் நாட்டின் ஜனநாயக அடிப்படையிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியா மிகப் பழமையான குடியரசு நாடாக உள்ளது. ஜனநாயகத்தை தாயாக மதித்து நடப்பதே சரியான வழிமுறையாகும். நமது அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. நாம் பல்வேறு ஜனநாயக அமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளதன் மூலம் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தியுள்ளோம். இவை அனைத்துக்கும் மேலாக நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் மிகவும் பெருமை அளிக்கக் கூடியதாகும்.
நாம் கடந்த காலங்களை உற்று நோக்கும் போது நாட்டின் பிரிவினை நமக்கு மிகப் பெரிய மனவேதனையை அளித்துள்ளதை நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது. இன்று பிரிவினை கொடூரங்களின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாடு பிரிக்கப்பட்ட போது, கடும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதுடன் லட்சக்கணக்கான மக்கள் கட்டாயமாக வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். இன்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்.
எனது அருமை நாட்டு மக்களே,
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாட்டின் ஜனநாயக மாண்புகளை உயர்த்தும் வகையில், நான்கு தூண்களாக, நான்கு முக்கிய அமைப்புகள் அமைந்தள்ளன. அவை நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை ஆகும். நமது இந்த நாகரீக கொள்கைகள் நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது மீட்கப்பட்டுள்ளது. நம் அனைவரின் மனதிலும், மனிதகுல கண்ணியத்தின் மீதான நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு மனிதனும், சமமானவர்கள் மற்றும் நம் அனைவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். நம் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை சமஅளவில் கிடைக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பாரம்பரியமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
இத்தகைய கொள்கைகளைக் கருத்தில் கொண்டு 1947-ம் ஆண்டு முதல் நாம் புதிய பயணத்தைத் தொடங்கினோம். பல நீண்ட ஆண்டுகளாக இருந்த அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு அதாவது சுதந்திரம் அடைந்தபோது இந்தியா மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது. ஆனால் 78 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்துத் துறைகளிலும் நாம் மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறோம். இந்தியா தற்போது தற்சார்பு நிலையை நோக்கி பயணிப்பதுடன் அதற்கான இலக்கை எட்டுவதற்கான நம்பிக்கையுடன் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
பொருளாதாரத்துறையைப் பொறுத்தவரை இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்து வருகிறது. கடந்த ஆண்டு நாட்டின் உள்நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருந்ததுடன் உலக அளவில் உள்ள மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா விரைவான வளர்ச்சிக் கண்டு வருகிறது. உலக அளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போது நாட்டின் உள்நாட்டின் தேவைகள், அதிகரித்து வந்தது. பணவீக்க விகிதம் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது. நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்திற்கான அனைத்து முக்கிய குறியீடுகளும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளன. இது மிகக் கவனமாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சிறந்த பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகளால் சாத்தியமாகியுள்ளதுடன், நமது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
சிறந்த நிர்வாக நடைமுறைகள் மூலம் ஏராளமான மக்கள் வறுமை நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஏழ்மை நிலையிலிருந்து விடுபடும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், அவர்கள் அனைவரும் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னமும் சிலர் விளிம்பு நிலையில் உள்ளனர். எனவே அவர்கள் மேலும் வறிய நிலைக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக சமூக சேவைகளுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதனைப் பிரதிபலிப்பதாக உள்ளது. வருவாய் சமத்துவமின்மை குறைக்கப்பட்டுள்ளது. பிராந்திய அளவிலான வேறுபாடுகள் களையப்பட்டுள்ளன. முன்னதாக பொருளாதார செயல்பாடுகளில் பின்தங்கிய பகுதிகளாக அறியப்பட்ட மாநிலங்கள் மற்றும் மண்டலங்கள் தற்போது ஏராளமான வாய்ப்புகளுடன் முன்னேற்றம் கண்டு, வளர்ச்சியின் பாதையில் முன்னிலை பெற்று வருகின்றன.
நமது வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், வியாபாரிகள், முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்குடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வளத்தை உருவாக்குவதில் உள்ள தடைகளை அவர்கள் அகற்றி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சி இதனை தெளிவாக உணர்த்துகிறது. பாரத் மாலா திட்டத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையிலும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய வகையான ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டிகள் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ரயில் போக்குவரத்துக்கான வழித்தடம் அமைக்கப்பட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது இத்துறையின் வளர்ச்சியை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது. இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து சேவைகள் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு வித்திடுவதுடன் புதிய பொருளாதார வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். இங்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதைகள் நாட்டின் பொறியியல் திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது.
நாடு தற்போது விரைவான நகர்மயமாக்கல் நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி நகர்ப்புறங்களின் நிலைகளை மேம்படுத்தி வருகிறது. நகர்ப்புற போக்குவரத்து மிக முக்கிய அம்சமாக உருவெடுத்து வருவதால் மத்திய அரசு மெட்ரோ ரயில் சேவைகளை உருவாக்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. நகர்ப்புற மாற்றங்கள் மற்றும் புனரமைப்புக்கான அடல் இயக்கம் அல்லது அம்ருத் திட்டத்தின் கீழ், எண்ணற்ற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது மற்றும் கழிவுநீர் பாதைகளை உருவாக்குவது போன்ற வசதிகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள் அவர்களின் உரிமையாகக் கருதி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கிராமப்புங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் வழங்கும் வகையில், ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முன்முயற்சியால் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ள துறையாக உருவெடுத்துள்ளது. உலக அளவில், மிகப் பெரிய அளவிலான சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தி வரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 55 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டம் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் அவர்களது வருவாயைக் கருத்தில் கொள்ளாமல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சுகாதாரச் சேவைகளைப் பெறுவதில் உள்ள சமத்துவமின்மை களையப்பட்டு ஏழைகள், கீழ் நிலையில் உள்ள நடுத்தர பிரிவினர் பயனடையும் வகையில், சிறப்பான மருத்துவ சேவைகளுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த டிஜிட்டல் யுகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அதிவேக வளர்ச்சிக் கண்டு வரும் துறையாக உருவெடுத்துள்ளது. ஏறத்தாழ நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் 4ஜி மொபைல் சேவைகளுக்கான இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ன. எஞ்சியுள்ள சில ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு விரைவில் மொபைல் சேவைகளுக்கான இணைப்புகள் ஏற்படுத்தப்படவு ள்ளது. டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வகை செய்கிறது. இதன் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப பரிவர்த்தனைகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது. மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நேரடி பணப்பரிமாற்றத்திற்கு ஆதரவு அளிப்பதுடன் அரசின் நலத்திட்ட உதவிகள் எவ்வித இடையூருமின்றி பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்கிறது. உலக அளவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகிறது. இத்தகைய வளர்ச்சி டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளதுடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் சீரான வளர்ச்சிபெறுவதற்கும் பங்களிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது. இத்துறையில் நாடு ஏற்கனவே பல நிலைகளை எட்டியுள்ளது. நாட்டின் செயற்கை தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்தும் வகையில் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் குறிப்பிட்ட தேவைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான மாதிரிகள் அத்துறையின் முன்னேற்றத்துக்கு உதவுகிறது. 2047-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் சாமானிய மக்களும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பயன்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கு இது உதாரணமாக அமைந்துள்ளது.
சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு, எளிதாக வர்த்தகம் செய்வதிலும், எளிதான வாழ்க்கையை மேம்படுத்துவதிலும், சமமான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். வளர்ச்சி என்பது விளிம்புநிலை மக்களுக்கு உதவும் போதும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்போது மட்டுமே சாத்தியமாகும். மேலும் அனைத்து துறைகளிலும் முடிந்தவரை நாம் தற்சார்பை அதிகரித்து வருகிறோம். இது நமது தன்னம்பிக்கையை அதிகரித்து வளர்ச்சியடைந்த பாரதம் என்பதையொட்டிய நமது பயணத்தை அதிகரிக்கிறது.
கடந்த வாரம் ஆகஸ்ட் 7 அன்று நமது நெசவாளர்களையும், அவர்களது தயாரிப்புகளையும் கௌரவிக்கும் வகையில் நாடு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடியது. 1905-ம் ஆண்டில் நமது சுதந்திரப் போராட்டத்தின் போது தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூறும் வகையில் இந்நாளை 2015-ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம். இந்திய கைவினைஞர்களின் வியர்வையாலும், உழைப்பாலும், அவர்களுடைய இணையற்ற திறன்களாலும் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிக்க மகாத்மா காந்தியால் சுதேசி குறித்த உத்வேகம் வலுப்படுத்தப்பட்டது. மேக் இன் இந்தியா முன் முயற்சி, தற்சார்பு இந்தியா இயக்கம் போன்ற நமது தேசிய முயற்சிகளுக்கு சுதேசி சிந்தனை உத்வேகம் அளித்துள்ளது. நாம் இந்திய தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த உறுதிகொள்வோம்.
அன்பார்ந்த குடிமக்களே,
சமூகத்துறை முன்முயற்சிகளால் நிறைவேற்றப்பட்ட விரிவான பொருளாதார வளர்ச்சி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற்றும் பாதையை அமைத்துள்ளது. அமிர்த காலத்தின் போது நாடு முன்னேறிச் செல்வதற்கு, நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை பங்களிப்பதை நான் காண்கிறேன். இளைஞர்கள், மகளிர் மற்றும் நீண்ட காலமாக விளிம்பு நிலையில் இருந்த சமூகங்கள் ஆகிய சமூகத்தின் மூன்று பிரிவுகள் நம்மை இந்தப் பாதையில் வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன்.
நமது இளைஞர்கள் தங்களது கனவுகளை நனவாக்குவதற்கான சரியான சூழலை இறுதியாகக் கண்டறிந்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கை, கற்றலை மதிப்புகளுடன் இணைத்து, திறன்களை பாரம்பரியத்துடன் இணைத்து, தொலைநோக்கு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆர்வமுடைய தொழில்முனைவோர்களுக்கு அரசு மிகவும் உகந்த சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது. இளையோர்களின் மனதால் உந்தப்பட்டு, நமது விண்வெளித் திட்டம் இதுவரையில்லாத விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட விண்வெளிப் பயணம், ஒரு தலைமுறையினரை பெரிய கனவுகளை காண தூண்டியுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது இந்தியாவின் வரவிருக்கும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யானுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமது இளைஞர்கள் புதிய நம்பிக்கையுடன் விளையாட்டுகளில் முத்திரை பதிக்கின்றனர். உதாரணமாக, சதுரங்க விளையாட்டில் தற்போது இந்திய இளைஞர்களால் முன்பு இல்லாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-ல் உள்ள தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியாவை உலகளாவிய விளையாட்டு கேந்திரமாக திகழச்செய்யும் வகையிலான மாற்றங்களை நாம் அறிவித்துள்ளோம்.
நமது மகள்கள் நமது பெருமை. அவர்கள் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் உட்பட அனைத்து துறையிலும் தடைகளைக் கடந்து சாதிக்கிறார்கள். விளையாட்டு என்பது திறன், அதிகாரமளித்தல் மற்றும் வலிமையின் முக்கிய குறியீடுகளில் ஒன்றாகும். இந்தியாவைச் சேர்ந்த பத்தொன்பது வயது பெண்ணும், முப்பத்தெட்டு வயதுடைய பெண்ணும் சதுரங்க சாம்பியன்ஷிப்பிற்கான ஃபிடே மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இது நமது பெண்களிடையே தலைமுறையாக மற்றும் உலகளவில் ஒப்பிடக்கூடிய திறனை சுட்டிட்டுக் காட்டுகிறது. வேலைவாய்ப்பில் உள்ள பாலின இடைவெளியும் குறைகிறது. மகளிருக்கு சாதாமன்றம், நாடாளுமன்றங்களில் இடஒதுக்கீடு சட்டத்தால் மகளிருக்கு அதிகாரமளித்தல் என்பது வெற்று முழக்கமாக மட்டுமில்லாமல், நடைமுறையாகியுள்ளது.
நமது சமூகத்தைச் சேர்ந்த பெரும்பகுதி மக்களான பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஆகியோர் விளிம்புநிலை மக்கள் என்ற அடையாளத்திலிருந்து மீள்கின்றனர். பல்வேறு முன் முயற்சிகள் மூலம் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார விருப்பங்களை நனவாக்க அரசு விரைவாக உதவுகிறது.
இந்தியா தனது உண்மையான திறனை உணர்வதை நோக்கி விரைவாக முன்னேறுகிறது. நமது சீர்திருத்தங்களும் கொள்கைகளும் ஒரு திறன்மிக்கத் தளத்தை உருவாக்கியுள்ளதால், நம் ஒவ்வொருவரின் வளமைக்கும், மகிழ்ச்சிக்கும் நாம் ஒவ்வொருவரும் உற்சாகமாக பங்களிக்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நான் காண முடிகிறது. நீடித்த நல்லாட்சியுடனும், ஊழலின்றியும் நாம் எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறோம். மகாத்மா காந்தியின் ஒரு முக்கியமான கூற்று எனக்கு இங்கே நினைவில் வருகிறது. அவர் குறிப்பிட்டதை நான் கூறுகிறேன்: ஊழலும், பாசாங்கும் ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத அம்சங்களாக இருக்கக்கூடாது.
காந்தியின் சிந்தனையை நனவாக்க நாம் உறுதியேற்போம், ஊழலை ஒழிப்போம்.
அன்பார்ந்த குடிமக்களே,
இந்தாண்டு நாம் பயங்கரவாதத்தின் கொடுமையை எதிர்கொண்டோம். காஷ்மீரில் விடுமுறை நாளில் அப்பாவி மக்களை கொன்றது கோழைத்தனமானது. முற்றிலும் மனிதநேயமற்றது. இந்தியா அதற்கு உறுதியுடன் தக்க பதிலடி கொடுத்தது. நம் நாட்டை காப்பதற்கு எந்த சூழலிலும் நமது பாதுகாப்பு படையினர் தயாராக உள்ளனர் என்பதை ஆபரேஷன் சிந்தூர் எடுத்துக்காட்டியது. உத்திசார்ந்த தெளிவுடனும், தொழில்நுட்ப திறனுடனும், அவர்கள் எல்லையில் பயங்கரவாத முகாம்களை அழித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதசமூகத்தின் போரில் ஆபரேஷன் சிந்தூர் வரலாற்று உதாரணமாக திகழும் என்று நான் நம்புகிறேன்.
நமது ஒற்றுமை நமது பதிலடியில், மிகவும் கவனிக்கத்தக்கதாகும். இது நம்மைப் பிரிக்க விரும்பியவர்களுக்கு உரிய பதிலடியாகும். இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல கட்சி பிரதிநிதிகளில் நமது ஒற்றுமை வெளிப்பட்டது. நாம் ஆக்கிரமிப்பாளராக இருக்க மாட்டோம் என்றும், ஆனால் நம் மக்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்க நாம் தயங்க மாட்டோம் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை உலகநாடுகள் கண்டுள்ளன.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு சோதனை களமாகவும் ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது. நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை அதன் விளைவு நிரூபித்துள்ளது. நமது உள்நாட்டு உற்பத்தி நமது பல்வேறு பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்வதில் நம்மை தன்னிறைவு அடையச் செய்யும் முக்கியமான நிலையை எட்டியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் இது மகத்துவமிக்க சாதனையாகும்.
அன்பார்ந்த குடிமக்களே,
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உங்களால் இயன்றதை செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். பருவநிலை மாற்றத்தின் சவாலை எதிர்கொள்ள, நாமும் மாற வேண்டும். நமது பழக்கவழக்கங்களையும் நமது உலகக் கண்ணோட்டத்தையும் அவசியம் மாற்றவேண்டும். நமது நிலம், ஆறுகள், மலைகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடனான நமது உறவை மாற்றிக்கொள்ள வேண்டும். நமது அனைவரின் பங்களிப்புடன், இயற்கையான முறையில் வாழ்க்கை செழித்து வளரக் கூடிய ஒரு பூமியை விட்டுச் செல்லமுடியும்.
அன்பார்ந்த குடிமக்களே,
நமது எல்லைகளைக் காக்கும் வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினரை குறிப்பான நான் மனதில் கொண்டுள்ளேன். நீதித்துறை மற்றும் குடிமைப்பணியைச் சேர்ந்தவர்களுக்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாட்டு தூதரகங்களில் உள்ள இந்திய அலுவலர்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்!
மீண்டும் ஒருமுறை சுதந்திர தின வாழ்த்துகள்
நன்றி.
ஜெய் ஹிந்த்!
ஜெய் பாரத்!
***
(Release ID: 2156539)
AD/SS/SV/IR/KPG/AG/RJ/DL
(Release ID: 2156621)
Read this release in:
Marathi
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Odia
,
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Punjabi
,
Gujarati