பிரதமர் அலுவலகம்
புதுதில்லி கடமைப்பாதையில் கடமை மாளிகை தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
06 AUG 2025 9:20PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையின் சகாக்களே, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே, அரசு ஊழியர்களே, சிறப்பு விருந்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!
புரட்சியின் மாதமான ஆகஸ்ட் மாதத்தில், ஆகஸ்ட் 15-க்கு முன் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெறுகிறது. நவீன இந்தியாவை கட்டமைப்பது தொடர்பான சாதனைகளை ஒன்றன்பின் ஒன்றாக நாம் பார்த்து வருகிறோம். தேசிய தலைநகர் தில்லியில் கடமைப்பாதை, புதிய நாடாளுமன்றம், புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம், பாரத் மண்டபம், யஷோபூமி, தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய போர் நினைவுச் சின்னம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை ஆகியவற்றை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். இப்போது கடமை மாளிகையை நாம் காண்கிறோம். இவையெல்லாம் வெறுமனே புதிய கட்டடங்களோ அல்லது சாதாரண உள்கட்டமைப்புகளோ அல்ல. இந்த கட்டடங்களுக்குள் அமிர்த காலத்தில் வடிவமைக்கப்படவிருக்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கொள்கைகள் உள்ளன. வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் முக்கிய முடிவுகள் உள்ளன. வரவிருக்கும் தசாப்தங்களை தீர்மானிக்கின்ற தேசத்தின் வழிகாட்டுதல்கள் உள்ளன. கடமை மாளிகை தொடக்க விழாவில் உங்கள் அனைவருக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த கட்டுமானத்தில் ஈடுபட்ட அனைத்து பொறியாளர்களுக்கும், அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த மேடையிலிருந்து நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
கடமைப்பாதை, கடமை மாளிகை போன்ற பெயர்கள் நமது ஜனநாயகத்தின், நமது அரசியல் சாசனத்தின் சாரத்தை அறிவிக்கின்றன. நாம் எதை சாதிக்க வேண்டியுள்ளது அல்லது எதை இன்னும் நாம் சாதிக்கவில்லை என்று சிந்திப்பதை விட, கடமை உணர்வோடு செயல்பட வேண்டும் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியிருக்கிறார். இந்திய கலாச்சாரத்தில் கடமை என்ற சொல் பொறுப்பு என்ற வரம்போடு நின்றுவிடவில்லை. கடமை என்பது நமது செயல் சார்ந்த தத்துவத்தின் முக்கிய உணர்வாக விளங்குகிறது. தான் என்பதற்கு அப்பால் அனைத்தையும் தழுவுகின்ற மகத்தான பார்வையை நமக்கு அளிக்கிறது. இதுதான் கடமை என்பதற்கு உண்மையான விளக்கமாகும். எனவே கடமை என்பது இந்த கட்டடத்தின் பெயர் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை நனவாக்குவதற்கான புனிதமான ஓர் இடமாகும். கருணையும், அர்ப்பணிப்பும் இணைந்ததுதான் கடமையாகும். கடமை என்பது லட்சக்கணக்கான மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அடித்தளமாகும்.
நண்பர்களே,
தில்லியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டடங்களிலிருந்து மத்திய அரசின் பல்வேறு துறைகள் செயல்படுகின்றன. 50-க்கும் அதிகமான இடங்களிலிந்து இவை செயல்படுவதாலும், பல அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இருப்பதாலும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு செலவாகிறது. மேலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெவ்வேறு அலுவலகங்களுக்கு பணி காரணமாக சென்று வரவேண்டியிருப்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் செலவு அதிகரிப்பதோடு, போக்குவரத்திலும் நெரிசல் ஏற்படுகிறது. நேரம் விரயமாகிறது. இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. முதலாவதாக கடமை மாளிகை கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கட்டடங்களின் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு ஊழியர்கள் மாறும் போது நல்ல பணி சூழல் ஏற்படுவதோடு வாடகையாக செலவிடப்படும் 1500 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும்.
நண்பர்களே,
புதிய இடத்திற்கு நாம் செல்லும்போது நமக்குள் உற்சாகம் ஏற்படுவதோடு, சக்தி அதிகரிக்கும். இத்தகைய ஆர்வத்துடன் புதிய கட்டடத்தில் உங்களின் கடமைகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் எந்தப்பதவியில் இருந்தாலும் உங்களின் பதவிக்காலத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் செயல்படுங்கள். நீங்கள் இங்கிருந்து செல்லும்போது நாட்டுக்கான சேவையை 100 சதவீதம் வழங்கிய உணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும்.
நண்பர்களே,
கோப்புகள் பற்றிய கண்ணோட்டம் மாறுவது அவசியம். ஒரு கோப்பு அல்லது ஒரு புகார், அல்லது ஒரு விண்ணப்பம் என்பது அன்றாடம் நடக்கின்ற தொடர்ச்சியான பணி போல தோன்றலாம். ஆனால் சிலருக்கு அந்த ஒற்றைக்காகிதம் அவர்களின் நம்பிக்கையாக இருக்கலாம். ஒரு கோப்பு பலரின் வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்கலாம். உதாரணமாக ஒரு கோப்பு ஒரு லட்சம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்து அது ஒரு நாள் உங்கள் மேசையில் தாமதம் செய்யப்பட்டால் அதன் பொருள் ஒரு லட்சம் மனித நாட்கள் வீணானது என்று ஆகிவிடும். உங்களின் வேலையை இந்தக் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்த்தால் சொந்த எண்ணங்களைத் தாண்டி சேவை செய்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக உங்கள் பணி இருப்பது தெரியும். ஒரு புதிய சிந்தனையை நீங்கள் உருவாக்கினால் மிகப்பெரும் மாற்றத்திற்கு அது அடித்தளமாக மாறும். இந்தக் கடமை உணர்வோடு நீங்கள் அனைவரும் தேசக் கட்டுமானத்திற்கு அர்ப்பணிப்போடு எப்போதும் செயல்பட வேண்டும்.
நண்பர்களே,
இன்றைய இந்தியா வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறி வருகிறது. புதிய கடமை மாளிகை கட்டப்பட்டபோதும் அமைச்சகங்கள் செயல்பட்டால் பழைய கட்டடங்கள் இந்தியாவில் பாரம்பரிய சின்னத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இவை நாட்டு மக்கள் பயன்படுத்தும் அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளன. இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தைக் காண இதனை மக்கள் பார்வையிடலாம். கடமை மாளிகை தொடக்க விழாவையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.
***
(Release ID: 2153371)
AD/SMB/AG/KR
(Release ID: 2153452)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada