பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

7-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

Posted On: 04 MAY 2025 8:02PM by PIB Chennai

7-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியாளர்களிடையே உரையாற்றிய அவர், விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை எடுத்துரைத்து, நாட்டின் விளையாட்டு உணர்விற்கு அவர்கள் அளித்த பங்களிப்பைப் பாராட்டுவதாகக் கூறினார். விளையாட்டு வீரர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துரைத்த பிரதமர், விளையாட்டு மீதான அவர்களின் ஆர்வமும், தொடர்ந்து சிறந்து விளங்குவதும் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகக் கூறினார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது பீகாரில் உள்ள பல நகரங்களிலும் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகள் குறித்து எடுத்துரைத்த திரு மோடி, வரும் நாட்களில், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் கனவுகளையும் விருப்பங்களையும் ஏந்திச் செல்வார்கள் என்று குறிப்பிட்டார். அனைத்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நாட்டில் விளையாட்டு தற்போது ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளமாகப் பரிணமித்து வருகிறது என்றும் கூறினார்.

அதிகப் போட்டிகளில் விளையாடுவதன் அவசியத்தையும், அவர்களின் திறன்களை மேம்படுத்த அதிக போட்டிகளில் பங்கேற்பதன் அவசியத்தையும் வலியுறுத்திய பிரதமர், தங்கள் அரசு தனது கொள்கைகளில் இந்த அம்சத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். கேலோ இந்தியாவின் கீழ் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் - பல்கலைக்கழக விளையாட்டுகள், இளையோர் விளையாட்டுகள், குளிர்கால விளையாட்டுகள் மற்றும் பாரா விளையாட்டுகள் ஆகியவை நாடு முழுவதும் பல நிலைகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றன என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த நிலையான போட்டிகள், விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன என்றும் தெரிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டிய பிரதமர், பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை இவ்வளவு இளம் வயதில் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டதற்காகப் பாராட்டினார். வைபவின் கடின உழைப்பு மிக முக்கியமானது என்றாலும், பல போட்டிகளில் பங்கேற்பதும் அவரது திறமையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது என்பதையும் அவர் தெரிவித்தார். ஒரு விளையாட்டு வீரர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் செழித்து வளர்கிறார்கள் என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

இந்தியாவில் ஒலிம்பிக்கை நடத்துவது ஒவ்வொரு குடிமகனின் நீண்டகாலக் கனவாக இருந்து வருகிறது என்பதை குறிப்பிட்ட திரு மோடி, 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக்கை நடத்துவதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளைச் சுட்டிக் காட்டினார். பள்ளி அளவில் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சியை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதை அவர் எடுத்துரைத்தார். கேலோ இந்தியா, ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டம் போன்ற முயற்சிகள் ஒரு வலுவான விளையாட்டு சூழல் அமைப்பை உருவாக்கப் பங்களித்துள்ளன என்றும் இது பீகார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு பயனளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் கட்கா, களரிபயட்டு, கோ-கோ, மல்லகம்பம் மற்றும் யோகாசனம் போன்ற பாரம்பரிய மற்றும் உள்நாட்டு விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் லான் பவுல்ஸில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்ற வரலாற்று தருணத்தை அவர் நினைவு கூர்ந்தார். 

நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் அரசும் கவனம் செலுத்துவதை பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த பத்தாண்டுகளில், விளையாட்டுத்துறைக்கு பட்ஜெட்டில் மூன்று மடங்கிற்கும் மேலாக நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு சுமார் ரூ 4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட கேலோ இந்தியா மையங்கள் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறை இளையோர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோருக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று திரு மோடி கூறினார். பிசியோதெரபி, தரவு பகுப்பாய்வு, விளையாட்டு தொழில்நுட்பம், ஒளிபரப்பு, மின் விளையாட்டு மற்றும் மேலாண்மை போன்ற பல்வேறு வளர்ந்து வரும் துறைகள் பல்வேறு தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். தேசிய விளையாட்டு பல்கலைக்கழகங்களை நிறுவுதல் மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் விளையாட்டுகளை முக்கிய கல்வியில் ஒருங்கிணைப்பது போன்ற முயற்சிகளுடன் விளையாட்டு தொழில்முனைவோரில் வளர்ந்து வரும் சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டினார். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் விளையாட்டுத் திறனின் முக்கியத்துவத்தை திரு மோடி வலியுறுத்தினார். விளையாட்டு எவ்வாறு குழுப்பணி, ஒத்துழைப்பு மற்றும் விடாமுயற்சியை வளர்க்கிறது என்பதை எடுத்துரைத்தார். விளையாட்டு வீரர்கள் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வின் தூதுவர்களாக சிறந்த முறையில் செயல்படவும், பிரதிநிதித்துவப்படுத்தவும்  அவர்களை பிரதமர் வலியுறுத்தினார். பீகாரின் இனிமையான நினைவுகளை விளையாட்டு வீரர்கள் ஏந்திச் செல்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மாநிலத்திற்கு வெளியே இருந்து வருபவர்கள் லிட்டி சோகா மற்றும் பீகாரின் புகழ்பெற்ற மக்கானாவின் சுவையை அனுபவிக்கவும் அவர் ஊக்குவித்தார்.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்பாளர்களிடையே விளையாட்டுத் திறன் மற்றும் தேசபக்தியை உயர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், ஏழாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் திரு மன்சுக் மண்டவியா, திரு ரக்ஷா காட்சே, திரு. ராம் நாத் தாக்கூர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2126850)

TS/IR/AG/KR

 


(Release ID: 2126974) Visitor Counter : 11