வெளியுறவுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியதன் தமிழாக்கம் (பிப்ரவரி 28, 2025)

Posted On: 28 FEB 2025 3:04PM by PIB Chennai

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அவர்களே,

பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரின் இந்திய வருகை  முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறை வருகையாகும்.

இது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் மட்டுமல்ல. ஒரு நாட்டில்  ஐரோப்பிய ஆணையம் விரிவான ஈடுபாடு காட்டுவதும் இதுவே முதலாவதாகும். இந்தத் தருணத்தில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரையும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள குழுவினரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான இந்த இருபது ஆண்டுக்கால ஒத்துழைப்பு இயற்கையானது மற்றும் ஆக்கபூர்வமானது. பற்று, ஜனநாயக மாண்புகள் மீதான பகிரப்பட்ட நம்பிக்கை, வளம், பகிரப்பட்ட முன்னேற்றத்திற்கான பரஸ்பர அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணர்வுடன், நேற்றிலிருந்து இன்று வரை பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் நிலையிலான கிட்டத்தட்ட 20 கூட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம். பல்வேறு பிராந்திய, உலகளாவிய விஷயங்கள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்கள் நடத்தப்பட்டன. நமது நட்புறவை மேம்படுத்தவும், விரைவுபடுத்தவும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புதுமைக் கண்டுபிடிப்பு, பசுமை வளர்ச்சி, பாதுகாப்பு, திறன், போக்குவரத்து ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் பரஸ்பரம் பயனளிக்கும் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு எங்கள் குழுக்களுக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.

நண்பர்களே,

முதலீட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முதலீட்டு பாதுகாப்பு- புவிசார் குறியீடு ஒப்பந்தம் குறித்து பேசப்படுகிறது. தொழில்நுட்பம், புத்தாக்கத் துறையில், நம்பகமான, பாதுகாப்பான மதிப்புச் சங்கிலியை உருவாக்குவது நமது பொதுவான முன்னுரிமையாகும்.

குறை கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, உயர் செயல்திறன் கணினி, 6-ஜி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். விண்வெளித்துறையில் ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும் இடையேயான சமநிலை என்பது நமது பகிரப்பட்ட உறுதிப்பாடாக உள்ளது. இந்தத் திசையில் நமது ஒத்துழைப்பு வலுவாக உள்ளது. பசுமை ஹைட்ரஜன் மன்ற கூட்டம், கடலோர காற்றாலை எரிசக்தி வர்த்தக உச்சி மாநாடு ஆகியவற்றை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். மின்சார வாகன பேட்டரிகள், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். நீடித்த நகர்ப்புற வளர்ச்சிக்கான கூட்டுத் திட்டத்தையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்.

போக்குவரத்து இணைப்புத் துறையில், இந்தியா-மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உலக வர்த்தகம், நீடித்த வளர்ச்சி, வளத்தை முன்னெடுத்துச் செல்லும் அம்சமாக இந்த வழித்தடம் செயல்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,

பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பு, நமது பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாகும். இணையதளப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வோம்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தோ பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் சேருவதற்கான ஐரோப்பிய யூனியனின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் ஆப்பிரிக்காவில் நீடித்த, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.

நண்பர்களே,

இரு நாட்டு மக்களுக்கு இடையேயான இணைப்பே நமது உறவின் வலுவான சொத்து. இன்று, நம்மிடையே கல்வி, ஆராய்ச்சி, தொழில்துறை கூட்டாண்மை ஆகியவற்றை அதிகரிக்க புதிய உடன்பாட்டை எட்டியுள்ளோம். இந்தியாவின் இளம் திறமைசாலிகளும், ஐரோப்பாவின் புதுமைப் படைப்புகளும் இணைந்து எல்லையற்ற வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

ஐரோப்பிய யூனியனின் புதிய விசா நடைமுறையை நாங்கள் வரவேற்கிறோம். இது இந்தியாவின் திறமையான இளைஞர்களின் திறன்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும்.

2025-ம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்புக்கான வலுவான பாதையை உருவாக்க இன்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது அடுத்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டின் போது அறிமுகப்படுத்தப்படும்.

ஐரோப்பிய யூனியன் தலைவர் அவர்களே,

உங்களது இந்திய வருகை நமது ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்தப் பயணம் நமது லட்சியத்தை செயலாக மாற்றும் மிகப்பெரிய கிரியா ஊக்கியாக அமைந்துள்ளது.

அடுத்த இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டிற்கு இந்தியாவுக்கு உங்களை மீண்டும் வரவேற்கும் வாய்ப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

மிக்க நன்றி.

***

TS/PLM/RJ/KV


(Release ID: 2106963) Visitor Counter : 20