நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் : 2024-25

Posted On: 31 JAN 2025 2:20PM by PIB Chennai

நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2025-26-ம் நிதியாண்டின் 6.4 சதவீதமாக இருக்கும் (முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகள்)

2025-26-ம் நிதியாண்டின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக இருக்கும்.

நடுத்தர கால வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், தட்டுப்பாடுகளைக் குறைப்பது, சர்வதேச அளவிலான போட்டிகள் மற்றும் வாய்ப்புகளை அதிகரிக்க உதவிடுவதுடன் அடிப்படை நிலையில் கட்டமைப்பு விதிகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது, வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

புவிசார் பொருளாதார இடைவெளிக்கு மாற்றாக சர்வதேச அளவில் பொருளாதார நடவடிக்கைகளை சீரமைப்பது மற்றும் மறுவரையறை செய்வது.

சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல் மற்றும் வர்த்தகம் புரிதலை எளிதாக்குவது 2.0 போன்றவை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திடும்.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தனியார் துறையின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

2021 முதல் 2024-ம் நிதியாண்டு வரை  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு செலவினங்களுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் காரணமாக தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சிக்கு மூலதனச் செலவினங்களின் விகிதம், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 2020 முதல் 2024-ம் நிதியாண்டு வரை 38.8 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் திட்டங்கள் காரணமாக இந்தியாவில் நுகர்வோர் விலை பணவீக்க விகிதம், 2026-ம் நிதியாண்டில் 4 சதவீதம் என்ற இலக்குடன் வரையறை செய்யப்படும்.

2024-ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்க விகிதம் 2024-ம் ஆண்டு இறுதியில் 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.

கடனுக்கான நிலையான வட்டி விகிதத்துடன் வைப்புத் தொகையின் அதிகரிப்பு காரணமாக வங்கிக் கடன் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

வர்த்தக வ ங்கிகளில் உள்ள மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த 12 ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவாக 2.6 சதவீதத்தை எட்டியுள்ளது.

திவால் நடைமுறைச் சட்டத்தின் கீழ், 2024 செப்டம்பர் மாதம் வரை 1,068 தீர்வு முறைத் திட்டங்கள் மூலம் 3.6 லட்சம் கோடி ரூபாய்  வசூல் செய்யப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பங்குகள் மற்றும்  கடன் பத்திரங்கள் மூலம் 11.1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டுள்ளது.  இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 சதவீதம் கூடுதலாகும்.

பங்குச் சந்தை முதலீடுகளில்  மும்பை பங்குச் சந்தை 136 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்துடன் சீனா (65%) மற்றும் பிரேசில் (35%) நாடுகளைக் காட்டிலும் உயர் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 

2025-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி விகிதம் 6% வளர்ச்சியடைந்துள்ளது. சேவைகளுக்கான ஏற்றுமதி 11.6% வளர்ச்சியடைந்துள்ளது.

வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐநா மாநாட்டின் தீர்மானத்தின்படி, தொலைத் தொடர்பு, கணினி, தகவல் சேவைகள் ஆகியவற்றில் இந்தியா உலக அளவில் 2-வது பெரிய ஏற்றுமதி நாடாக உருவெடுத்துள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி 640.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது 10.9% ஏற்றுமதியுடன் 90% வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்கு போதிய அளவில் உள்ளது.

2047-ம் ஆண்டின் தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசு ககன்யான், சந்திரயான்-4, நிலவுக்கு மாதிரி விண்கலம் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

99% உள்நாட்டு உற்பத்திக் காரணமாக நவீன மொபைல் சாதனங்களின் இறக்குமதி பெருமளவு சரிந்துள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை.

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் வெளியிட்டுள்ள 2022-ம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, சர்வதேச அளவில் உள்ள அறிவுசார் சொத்துரிமை நிறுவனங்களின் காப்புரிமைக்காக பதிவு செய்யப்பட்ட முதல் பத்து நாடுகளில் ஆறாவது நாடாக இந்தியா உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பங்குத் தொகை வழங்கும் வகையில் 50,000 கோடி ரூபாய் நிதியுடன் தற்சார்பு இந்தியா நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2024-ம் நிதியாண்டின் 5.7 சதவீதமாக இருந்த சேவை ஏற்றுமதி 2025-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 12.8 சதவீதமாக  உயரும்.

சுற்றுலாத்துறையின் பங்களிப்பு காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொவிட்-19 பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய நிலையான 5 சதவீதத்தை 2023-ம் நிதியாண்டில் எட்டியுள்ளது.

வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் பங்களிப்பு 2024-ம் நிதியாண்டின் தற்போதைய விலைகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதமாகும்.

காரீஃப் பருவத்தில் உணவு தானியங்களின் உற்பத்தி 1,647.05 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 89.37 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாகும்.

மீன்வளத்துறையின் வளர்ச்சி விகிதம் உயர் அளவாக  ஒட்டுமொத்த வருடாந்தர வளர்ச்சி விகிதம் 8.7 சதவீதமாக உள்ளது.   கால்நடைத் துறையின் ஒட்டுமொத்த வருடாந்தர வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாகும்.

புதைபடிமற்ற எரிபொருள் ஆதாரங்களிலிருந்து மின்சார உற்பத்திக்கான நிறுவப்பட்ட உற்பத்தித் திறன் 46.8 சதவீதமாகும்.

2005ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை கரியமில வாயுக்களின் வெளியேற்றம் 2.29 டன் அளவிற்கும் கூடுதலாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டின் சர்வதேச அளவில் 440 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் நுகர்வோர் பாதுகாப்பிற்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  

சமூக சேவைக்கான செலவினங்களின் ஆண்டு வளர்ச்சி வகிதம் 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் நிதியாண்டு வரை 15 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மத்திய அரசின் சுகாதாரச் செலவினங்கள் 29 சதவீதத்திலிருந்து 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுகாதாரத்திற்காக மக்கள் செலவிடப்படும் தொகை 62.6 சதவீதத்திலிருந்து 39.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2017-18-ம் நிதியாண்டில் 6 சதவீதமாக இருந்து வேலைவாய்ப்பின்மை விகிதம் 2023-24-ம் நிதியாண்டில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தித்துறையின் வளர்ச்சிக் காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை எட்டுவதற்கு முக்கிய கருவியாகவும் திகழ்கிறது.

பிரதமரின் தொழில்நிறுவனப் பயிற்சித் திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான மாற்று முறையாக உருவெடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதில் உள்ள பெருமளவிலான தடைகளைக் கடந்து தற்போது கொள்கை வகுப்பாளர்கள் சட்டவிதிகளை வகுக்கப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசு – தனியார் துறை இணைந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் காரணமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் சார்ந்த மாற்றங்களால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைக் குறைப்பதற்கு உதவிடும்.

நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024-25-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை  நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

பொருளாதார நிலை : விரைவான வளர்ச்சிக்கு திரும்புதல்

  1. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2025-ம் நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. (முதலாவது முன்கூட்டிய தேசிய  வருமான அடிப்படையிலான மதிப்பீடுகளின்படி) இது கடந்த 10 ஆண்டுகள் சமஅளவில் உள்ள வளர்ச்சி விகிதமாகும்.
  2. மொத்த மதிப்புக்கூட்டு வளர்ச்சி விகிதம் 2025-26-ம் நிதியாண்டில் 6.4  சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  3. உலக அளவில் சராசரி பொருளாதார வளர்ச்சி 2023-ம் நிதியாண்டில் 3.3 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி விகிதம் 3.2 இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பீடு செய்துள்ளது.
  4. மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 2026-ம் நிதியாண்டில் 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது.
  5. அடிப்படை விலையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் போன்றவை காரணமாக நடுத்தரகால வளர்ச்சி விகிதத்தில் இந்தியப் பொருளாதார சர்வதேச போட்டிகளுடன் உத்வேகம் பெறும்.
  6. புவிசார் அரசியலில் உள்ள பதற்றமான சூழல்,  நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் மோதல்கள், சர்வதேச வர்த்தகக் கொள்கைகளில் உள்ள இடையூறுகள், தொடர்ந்து உலக அளவிலான பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க  அளவில் சவால்களை உருவாக்கியுள்ளது.
  7. 2024-ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்க விகிதம், 2024-ம் நிதியாண்டின் இறுதியில் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  8. 2021 நிதியாண்டு 2024-ம் நிதியாண்டு வரை தொடர்ந்து மூலதன செலவினங்கள் மேம்பட்டு வருகிறது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் மூலதன செலவினங்களின் வளர்ச்சி விகிதம்  2024-ம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை ஆண்டுதோறும் 8.2 சதவீதமாக உள்ளது.
  9. உலக அளவில் சேவைகள் ஏற்றுமதியில் அத்துறையில் உள்ள சர்வதேச போட்டிகளை எதிர்கொண்டு 7-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  10. 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் பெட்ரோலியம் மற்றும் செயற்கைக் கற்கள், நகைகள் அல்லாத  பொருள்களின் விகிதம் 9.1 சதவீதமாக உள்ளது. இது நாட்டின் வணிகப் பொருள்களுக்கான ஏற்றுமதியில் உலகளாவிய சூழலைக் கடந்து ஏற்பட்டுள்ள மீள் திறனின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.

நிதித்துறை மேம்பாடுகள்:

  1. வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்து வருவதன் காரணமாக கடன் வழங்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  2. வர்த்தக வங்கிகளின் லாப விகிதம் மேம்பட்டுள்ளது. இது வங்கிகளின் மொத்த வாராக்கடனில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் முதலீடுகள் ஆகியவை  காரணமாகும்.  தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக  உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்துடன் வங்கிக் கடன் விகிதமும் அதிகரித்து வருகிறது.
  3. மொத்த உள்நாட்டு உற்பத்தி – கடன்கள் இடையேயான இடைவெளி 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 10.3 சதவீதம் எதிர்மறை நிலையிலிருந்து 2025-ம் நிதியாண்டின் முதல் காலாண்டின் 0.3 சதவீதம் எதிர்மறை நிலையாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  4. வங்கித்துறையில் முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் வலுவான செயல்திறன் நடவடிக்கைகள் காரணமாக சொத்துக்களின் மதிப்பு மேம்பட்டுள்ளது.
  5. வர்த்தக வங்கிகளில் உள்ள மொத்த வாராக் கடன் விகிதம்  12 ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவான 2.6 சதவீதத்தை எட்டியுள்ளது. இது 2024-ம் ஆண்டு செப்டம்பர் இறுதி வரை வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும்.
  6. திவால் நடைமுறைச் சட்டம் விதிகளின் கீழ், 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை மேற்கொள்ளப்பட்ட 1,068 தீர்வுகளுக்கான நடைமுறைகளின் படி, 3.6 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 161 சதவீதம் மூடப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை விற்பதன் மூலமும், 86.1 சதவீதத் தொகை சொத்துக்களின் மதிப்புக்களின் அடிப்படையில் பெறப்பட்டதாகும். 
  7. இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக தேர்தல் சமயத்தில் ஏற்பட்டுள்ள சந்தை நிலைகளின் சவால்களை எதிர்கொண்டு  வளர்ச்சியடைந்து வருகிறது.
  8. பங்கு மற்றும் கடன் பத்திரகங்களுக்கான முதன்மை சந்தைகளிலிருந்து பெறப்படும் மொத்த முதலீடுகள் 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 11.1 சதவீதமாக இருந்தது. இது 2024-ம் நிதியாண்டில் பெறப்பட்ட முதலீடுகளைக் காட்டிலும் 5 சதவீதமாகும்.
  9. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தில் மும்பை பங்குச் சந்தை வாயிலாக பெறப்பட்ட முதலீடுகள் 136 சதவீதமாக இருந்தது. இது வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதார நாடுகளாக சீனா (65%) மற்றும் பிரேசில் (37%)  நாடுகளைக் காட்டிலும் கூடுதலாகும்.
  10. நாட்டின் காப்பீட்டுச் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. 2024-ம் நிதியாண்டில் மொத்த காப்பீட்டு பிரீமியத் தொகை 7.7 சதவீதமாக வளர்ச்சியடைந்து 11.2 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
  11. நாட்டின் ஓய்வூதியத் தொகை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை (வருடாந்தர அடிப்படையில்) மொத்த ஓய்வூதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை விகிதம் 16 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

வெளியுறவுத்துறை: 7 அந்நிய நேரடி முதலீடுகளுக்கான உரிமைகளை பெறுவது.

  1. உலகளாவிய நிச்சயமற்ற மற்றும் இடையூறுகள் நிறைந்த சூழலில் நாட்டின் வெளியுறவுத் துறை தொடர்ந்து தனது மீள் திறனை வெளிப்படுத்தி வருகிறது.
  2. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (சரக்குகள்  + சேவைகள்) 2024-25-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 6% வளர்ச்சியடைந்துள்ளது. (வருடாந்தர அடிப்படையில்). சேவைத் துறையில் இதே காலகடத்தில் 11.6% வளர்ச்சியடைந்துள்ளது.
  3. வர்த்தகம்  மற்றும் மேம்பாட்டிற்கான ஐ.நா. மாநாட்டின் அறிக்கையின்படி தொலைத்தொடர்பு சாதனங்கள், கணினிகள் மற்றும் தகவல் தொடர்பான சேவைகள் ஆகியவற்றில் உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் இந்தியா 10.2 சதவீதத்துடன் உலகின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக வலுவான நிலையில் உள்ளது.
  4. நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2024-25-ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 1.2 சதவீதமாக உள்ளது. இது சேவைகள் துறையில் அதிகரித்து வரும் வருவாய் இனங்கள் மற்றும் தனிநபர் பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களின் காரணமாக இந்த பற்றாக்குறை அளவு குறைந்துள்ளது.
  5. மொத்த அந்நிய நேரடி முதலீடுகள் 2023-24-ம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 47.2 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிலிருந்து  2024-25-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 55.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக  அதிகரித்துள்ளது. இது வருடாந்தர அடிப்படையில் 17.9 சதவீதமாக உள்ளது.
  6. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2023-24-ம் நிதியாண்டின் டிசம்பர் மாத இறுதியில் 640.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது இறக்குமதி மீதான செலுத்தப்பட வேண்டிய தொகையில் 10.9 சதவீதமாகவும் வெளிநாட்டுக் கடன்களின் 90 சதவீதத்தையும் கொண்டிருக்கும்.
  7. நாட்டின் வெளிநாட்டுக் கடன் கடந்த 5 ஆண்டுகளாக நிலையான நிலையில் உள்ளது. 2023-24-ம் நிதியாண்டின் செப்டம்பர் மாத இறுதியில் நாட்டின் வெளிநாட்டுக் கடன் தொகை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 19.4 சதவீதமாக உள்ளது.

விலைவாசி மற்றும் பணவீக்கம்: மாறிவரும் தன்மை குறித்து புரிந்துகொள்ளுதல்

  1. சர்வதேச செலாவணி நிதியத்தின் அறிக்கைபடி 2022-ம் நிதியாண்டில் 8.7 சதவீதமாக உச்சத்தில் இருந்த பணவீக்க விகிதம்  2024-ம் நிதியாண்டில் 5.7 சதவீதமாக மிதமான நிலையில் உள்ளது.
  2. நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம்  2023-24-ம் நிதியாண்டில் 5.4 சதவீதம் என்ற நிலையிலிருந்து  2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.
  3. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் செயல்திட்டங்கள் காரணமாக நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் 2025-26-ம் நிதியாண்டில்   4 சதவீதமாகக்குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  4. பருவநிலையைத் தாங்கி வளரக்கூடிய  பயிர் வகைகளை மேம்படுத்துவது, வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மோசமான வானிலை நிகழ்வுகளையும் தாங்கி வளர உதவிடும். இது வேளாண் விளைபொருட்களுக்கான விலையை நீண்டகால அடிப்படையில் நிலைத்து நிற்க உதவிடும்.

நடுத்தரக் கால கண்ணோட்டம் : வளர்ச்சிக்காக கட்டுப்பாடுகள் தளர்வு

  1. நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் மாற்றங்களைக் கொண்டுள்ளது. புவிசார் பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் வகையில் பொருளாதார செயல்பாடுகளை சீரமைக்கும் பணிகள் உலகளாவிய நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
  2. 2047-ம் ஆண்டின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில்,நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில்  8 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டியுள்ளது. இது 10 அல்லது 20 ஆண்டுகளின் சராசரி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது.
  3. நடுத்தர கால வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தின் அடிப்படையில்  சர்வதேச அளவிலான புதிய நடைமுறைகள் குறித்தும் நாடு பரிசீலித்து வருகிறது. சீனாவின் உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி மாற்றங்களுக்கான நடவடிக்கைகளை சார்ந்திராத நிலையை அடைய உதவிடும்.
  4. உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை விரும்புவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், முறைப்படியான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.  சட்டப்பூர்வமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
  5. தனிநபர்களுக்கான பொருளாதார சுதந்திரம் அளிக்கும் நடவடிக்கைகளின் மேம்பாடு அல்லது முறைப்படியான கட்டுப்பாடுகள் தளர்த்தும் நடவடிக்கைகள் சிறு வர்த்தகர்களுக்கான அதிமுக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமை வழங்கப்பட்டு நாட்டின் நடுத்தரக்கால பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கப்படும்.
  6. வர்த்தகம் புரிதலை எளிதாக்குவது 2.0 திட்டத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் முறைப்படியான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நிலையான வளர்ச்சியை அடைவது. நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்கு இது உதவிடும்.
  7. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாநிலங்கள் தொழில்துறைக்கான நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அதனை அமல்படுத்துவதில் சட்டப்பாதுகாப்பை ஏற்படுத்துவது, கட்டணக் குறைப்பு, இடையூறு அடிப்படையிலான கட்டுப்பாடுகளுக்கான நடைமுறைகளைத் தளர்த்துவது ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு:

  1. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பொதுச் செலவினங்களை அதிகரிப்பதிலும், ஆதார வளங்களை கொண்டு சேர்ப்பதிலும், அனுமதி வழங்குவதை விரைவுபடுத்துவதிலும் மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக  கவனம் செலுத்தி வருகிறது.
  2. மத்திய அரசின் முக்கிய துறைகளில் உள்கட்டமைப்புக்கான செலவினங்கள் வளர்ச்சி விகிதம் 2019-20-ம் நிதியாண்டிலிருந்து 2023-24-ம் நிதியாண்டு வரை 38.8 சதவீதமாக உள்ளது. 
  3. ரயில் போக்குவரத்துக்கான இணைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 2031 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் கட்டமைப்புகள், 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே 17 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  4. சாலைக்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) 5,853 கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  5. தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக பல்வேறு துறைகளுக்கான பயன்பாடுகளுக்கென மொத்தம் 383 நிலங்களில் 3,788 ஏக்கர் பரப்பளவு நிலங்கள்  தொழில்துறை பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  6. முக்கிய துறைமுகங்கள் சரக்குப் பெட்டகங்களைக் கையாள்வதற்கான சராசரி நேரத்தை செயல்பாடுகளுக்கான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் 2023-24-ம் நிதியாண்டில் இருந்த 48.1 மணி நேரத்திலிருந்து 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல் – நவம்பர்)  30.4 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது துறைமுகங்களின் இணைப்புகள் காரணமாக குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளது.
  7. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் ஆண்டுதோறும் 15.8 சதவீதம் அதிகரித்து வருகிறது.
  8. நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிறுவுதிறனின் மொத்த பங்களிப்பு தற்போது 47 சதவீதமாக உள்ளது.
  9. மத்திய அரசின் திட்டங்களான, தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற மின் விநியோகத் திட்டம், சௌபாக்கியா திட்டம் போன்றவை கிராமப்புறங்களில் மின்சார வசதியை மேம்படுத்தியுள்ளன. மொத்தம் 18,374 கிராமங்களில் உள்ள 2.9 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  10. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மத்திய அரசின் டிஜிட்டல் நடைமுறைகளுக்கான முன்முயற்சிகள் முன்னேற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக 5-ம் தலைமுறை சேவைகளுக்கான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
  11. ஒருங்கிணைந்த சேவை நடைமுறை நிதியத்தின் (தற்போது டிஜிட்டல் பாரத் நிதியம்) கீழ், தொலைதூரப் பகுதிகளில் நான்காம் தலைமுறை மொபைல் சேவையை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 10,700-க்கும் அதிகமான கிராமங்களில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
  12. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 12 கோடிக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  13. கிராமப்புறத் தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளின் கீழ், 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 1.92 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாதிரி கிராமங்கள் வரிசையில், மொத்தம் 3.64 லட்சம் கிராமங்களுக்கு திறந்தவெளிக் கழிப்பிட வசதி இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  14. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் நகர்ப்புற பகுதிகளில் 89 லட்சத்துக்கும் கூடுதலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  15. நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்க நடவடிக்கைகளை விரைவுப்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியுடன் அதிவிரைவு ரயில் சேவைகள்  செயல்பாட்டில் உள்ளது  அல்லது 29 நகரங்களில் கட்டுமான நிலையில் உள்ளது. இது மொத்தம் 1000 கிலோமீட்டருக்கும் கூடுதலான தொலைவிற்கு அமைக்கப்பட்டு வருகிறது.
  16. வீட்டுவசதி (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016-ன் படி கட்டுமானத் துறையில் ஒழுங்குமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1.38 லட்சத்துக்கும் கூடுதலான பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் திட்டங்களுக்கான இணக்க நடைமுறைகள் குறித்த சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.
  17. இந்தியாவில் தற்போது 56 விண்வெளி சொத்துக்கள் செயல்பாட்டில் உள்ளன. இது மத்திய அரசின் விண்வெளித்துறை தொடர்பான 2047-க்கான தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கிய வகையில் லட்சியத் திட்டங்களான ககன்யான் மற்றும் சந்திரயான்-4 நிலவுக்குச் சென்று  திரும்பும் மாதிரி  விண்கலத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
  18. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில், பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகள், போதுமான அளவில் இல்லாத நிலையில் தனியார் துறையின் பங்களிப்புடன் அதற்கான இடைவெளியைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  19. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் துறையை பங்கேற்கச் செய்யும் வகையில், தேசிய உள்கட்டமைப்பு மற்றும் தேசிய பணக்கொள்கைகளுக்கான  நடைமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

தொழில்துறை : அனைத்து வர்த்தக சீரமைப்பு நடவடிக்கைகள்

  1. 2024-25-ம் நிதியாண்டில் (முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி) தொழில்துறையின் வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரம் மற்றும் கட்டுமானத்துறையின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதன் மூலம் இந்த இலக்கை எட்ட முடியும். 
  2. ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கு சமர்த் உத்யோக் மையங்கள் நிறுவப்பட்டு நவீன உற்பத்தி மற்றும் தொழில்துறை 4.0 திட்டத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 
  3. 2024-ம் நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு வாகன விற்பனை 12.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
  4. மின்சாதனங்களுக்கான உள்நாட்டு உற்பத்தியில் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 2015 முதல் 2024-ம் நிதியாண்டு வரை 17.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
  5. 99 சதவீத நவீன கைப்பேசி சாதனங்கள், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் இறக்குமதி சார்ந்த நிலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 
  6. 2024-ம் ஆண்டு மொத்த மருந்துகள் விற்பனை  4.17 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 10.1 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
  7. உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் வெளியிட்டுள்ள 2022-ம் ஆண்டின் அறிக்கையின்படி, காப்புரிமை  தொடர்பாக விண்ணப்பித்த முதல் 10 அலுவலகங்களில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
  8. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் அதிகரித்து வரும் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
  9. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூலதனப் பங்கு நிதி வழங்குவதற்காக மத்திய அரசு தற்சார்பு இந்தியா நிதியத்தை 50,000 கோடி முதலீட்டுடன் தொடங்கியுள்ளது.
  10. நாடு முழுவதும் குறு,சிறு தொழில் நிறுவனங்களின் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

சேவைகள் துறை: புதிய சவால்கள்

  1. மொத்த கூட்டு மதிப்பில் சேவைகள் துறையின் பங்களிப்பு 2014-ம் நிதியாண்டில் 50.6 சதவீதத்திலிருந்து 2025-ம் நிதியாண்டில் (முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகள்) 55.3 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
  2. சேவைகள் துறை சராசரி வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக உள்ளது. இது பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளில் (2013 முதல் 2020-ம் நிதியாண்டு வரை) இருந்த வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. பெருந்தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் ( 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் நிதியாண்டு வரை) வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதமாக உள்ளது.
  3. 2023-ம் நிதியாண்டில் உலக அளவில் சேவைகளின் ஏற்றுமதி 4.3 சதவீத பங்களிப்புடன் இந்தியா சர்வதேச அளவில் 7-வது இடத்தில் உள்ளது.
  4. நாட்டின் சேவைகள் ஏற்றுமதி விகிதம் 2024-ம் நிதியாண்டில் 5.7 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை 12.8 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
  5. கடந்த 10 ஆண்டுகளில் (2013 முதல் 2023-ம் நிதியாண்டு வரை) நாட்டின் தகவல் மற்றும் கணினி தொடர்பான சேவைகளின் வளர்ச்சி விகிதம் 12.8 சதவீதத்திற்கும் கூடுதலாக இருந்தது. இது மொத்த மதிப்புக்கூட்டு விகிதமான 6.3 சதவீதத்திலிருந்து 10.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  6. 2024-ம் நிதியாண்டில்  இந்திய ரயில்வே பயணியர் போக்குவரத்தில் 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024-ம் நிதியாண்டில் சரக்குப் போக்குவரத்து மூலம் ஈட்டப்பட்ட வருவாய் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  7. சுற்றுலாத்துறையின் பங்களிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையான 5 சதவீத வளர்ச்சி 2023-ம் நிதியாண்டில் பதிவாகியுள்ளது.

வேளாண்மை மற்றும் உணவு மேலாண்மை : துறையின் எதிர்கால செயல்பாடுகள்

  1. வேளாண் மற்றும் அது சார்ந்த துறையின் பங்களிப்பு 2024-ம் நிதியாண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் தற்போதைய விலைகளின் அடிப்படையில் தோராயமாக 16 சதவீதமாக உள்ளது.
  2. நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சிக்கு உயர் மதிப்பு வாய்ந்த துறைகளான தோட்டக்கலை கால்நடை, மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய முக்கிய ஊக்கியாக உள்ளது.
  3. 2024-ம் ஆண்டிற்கான காரீப் பருவத்தில் உணவு தானியங்களின் உற்பத்தி 1,647.05 லட்சம் மெட்ரிக் டன் அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 89.37 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாகும்.
  4. 2024-ம் நிதியாண்டுக்கான துவரம் பருப்பு மற்றும் சோளத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முறையே 59 சதவீதம் மற்றும் 77 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது உற்பத்திக்கான கூட்டுச் சராசரி செலவினத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
  5. மீன்வளத்துறையின் வளர்ச்சி உயர் அளவாக ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் 8.7 சதவீதமாக உள்ளது.  கால்நடைகளின் ஒட்டுமொத்த வருடாந்தர வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக உள்ளது.
  6. தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவுத் திட்டம் ஆகியவற்றின் கீழ், உணவுப் பாதுகாப்புத் தொடர்பான அணுகுமுறையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
  7. பிரதமரின் ஏழைகள் நலனுக்கான உணவு தானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் இலவச உணவு தானியங்களுக்கான ஒதுக்கீடு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு தொடர்பான நீண்டகால உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது.
  8. அக்டோபர் மாதம் 31-ம் தேதி அன்று வரை 11 கோடிக்கும் கூடுதலான பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், பயனடைந்துள்ளனர்.  பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 23.61 லட்சம்  விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

பருவநிலை, சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்கள்:

  1. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியம், அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையில் அமைந்துள்ளது.
  2. இந்தியா, புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து 2,13,701 மெகாவாட் மின்சார உற்பத்தி திறனை நிறுவியுள்ளது. இது 2024 நவம்பர் நவம்பர் 30 நிலவரப்படி மொத்த திறனில் 46.8 சதவீதமாகும்.
  3. இந்திய வன கணக்கெடுப்பு 2024-ன் படி, 2005-2024-ம் ஆண்டுகளுக்கு இடையில் 2.29 பில்லியன் டன் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.
  4. இந்தியா தலைமையிலான உலகளாவிய இயக்கமான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை (LiFE) இயக்கம், நிலைத்தன்மை முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  5. 2030-ம் ஆண்டு அளவில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கைமுறை நடவடிக்கைகளால் நுகர்வு குறைந்து உலகளவில் நுகர்வோர் சுமார் 440 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத் துறை - அதிகாரமளித்தலை விரிவுபடுத்துதல் : 

  1. அரசின் சமூக சேவைகள் செலவினம் (மத்திய, மாநிலங்கள் இணைந்து) 2021-ம் நிதியாண்டு முதல் 2025-ம் நிதியாண்டு வரை 15 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது.
  2. நுகர்வு செலவினங்களில் சமத்துவமின்மையின் அளவீடு குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் இது 2022-23-ல் 0.266 ஆக இருந்த நிலையில், 2023-24-ல் 0.237 ஆகவும், நகர்ப்புறங்களில் 2022-23-ல் 0.314 ஆக இருந்த நிலையில், 2023-24-ல் 0.284 ஆகவும் குறைந்துள்ளது.
  3. அரசின் பல்வேறு நிதிக் கொள்கைகள் மக்களின் வருமானத்தை அதிகரிக்க உதவுகின்றன.
  4. அரசின் சுகாதாரச் செலவு 29.0 சதவீதத்திலிருந்து 48.0 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த சுகாதார செலவினங்களில் மக்களின் சொந்த செலவு 62.6 சதவீதத்திலிருந்து 39.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. குடும்பங்களின் நிதி சிக்கல்களை குறைத்துள்ளது.
  5. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் , சுகாதார செலவினங்களில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழி வகுத்துள்ளது. இதன் மூலம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் சேமிக்கப்பட்டுள்ளது.
  6. கிராம பஞ்சாயத்து மட்டங்களில் வரவு செலவுத் திட்டங்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளை உறுதி செய்கின்றன. நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல் என்ற உத்தி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு: தற்போதுள்ள முன்னுரிமைகள்

  1. இந்திய தொழிலாளர் சந்தை குறியீடுகள், 2017-18 (ஜூலை – ஜூன்) 6 சதவீதத்திலிருந்து 2023-24 (ஜூலை – ஜூன்) காலகட்டத்தில் 3.2 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை குறைந்து இந்திய தொழிலாளர் சந்தை குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  2. 10 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 26 சதவீத மக்கள்தொகையுடன் இந்தியா தனித்துவமான மக்கள்தொகை வாய்ப்புடன் திகழ்கிறது. அந்த வகையில் உலகளவில் இளம் நாடுகளின் ஒன்றாக திகழ்கிறது.
  3. மகளிர் தொழில் முனைவை பூர்த்தி செய்யும் வகையில், கடனுதவி, சந்தை ஆதரவு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு எளிதான அணுகல் மற்றும் மகளிர் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு உட்பட பல்வேறு முன்முயற்சிகளை அரசு தொடங்கியுள்ளது.
  4. வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் தொலைநோக்கை எட்டுவதற்கு ஏற்ற வகையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகள் வேலை உருவாக்கத்திற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
  5. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான உருவாக்கம், டிஜிட்டல்மயமாக்கம், தானியங்கி தொழில்நுட்பம் போன்ற உலகளாவிய போக்குகளுடன் திறன் மிகுந்த சூழல் அமைப்பை வேகமாக அரசு உருவாக்கி வருகிறது.
  6. வேலைவாய்ப்பை ஊக்குவித்தல், சுயவேலைவாய்ப்பை அதிகரித்தல், தொழிலாளர் நலனை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி உள்ளது.
  7. அண்மையில் தொடங்கப்பட்ட பிரதமரின் உள்ளக பயிற்சித் திட்டம், வேலை உருவாக்கத்திற்கான உருமாற்றும் உந்துசக்தியாக உருவெடுத்து வருகிறது.
  8. ஈபிஎஃப்ஓ அமைப்பின் கீழ், நிகர உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இது முறைப்படியான வேலைவாய்ப்பில் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அறிகுறியாகும்.

செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில்  தொழிலாளர்கள்: நெருக்கடியா, கிரியா ஊக்கியா?

  1. பொருளாதார ரீதியில் மதிப்புமிக்க பணி தானியங்கியாக இருப்பது பற்றி புதிய சகாப்தத்தில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவோர்   உறுதி அளித்துள்ளனர்.
  2. சுகாதார கவனிப்பு, ஆராய்ச்சி, குற்றவியல் நீதி, கல்வி, வணிகம், நிதிச்சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கியமான முடிவெடுப்பதில் செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் செயல்பாட்டை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  3. நம்பத்தன்மை, ஆதார வளத்தில் திறனின்மை, அடிப்படை கட்டமைப்பு குறைபாடுகள் உள்ளிட்வற்றில் காணப்படும் குறைகள் பெரும் எண்ணிக்கையிலான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு தடைகளாக இருக்கின்றன. இந்த சவால்கள் செயற்கை நுண்ணறிவின் பரிசோதனை தன்மையோடு கொள்கை உருவாக்குவோர் செயல்படுவதற்கான சாளரத்தை திறக்கிறது.
  4. நல்வாய்ப்பாக, செயற்கை நுண்ணறிவு அதன் தொடக்க நிலையில் இருப்பதால் அதன் அடிப்படைகளை வலுப்படுத்தவும், தேசிய அளவில் நிறுவனப் பொறுப்பை திரட்டவும் போதிய அளவு நேரத்தை இந்தியா பெற்றுள்ளது.
  5. இளைய, செயலூக்கமிக்க, தொழில்நுட்ப திறன் உள்ள மக்கள் தொகையை இந்தியா கொண்டிருப்பதால் அவர்களின் பணி மற்றும் உற்பத்தி திறனுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் அளவுக்கு தொழிலாளர் சக்தியை உருவாக்க முடியும்.
  6. அதிகரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு என்பதை மையப்படுத்தியதாக எதிர்காலம் இருக்கும் என்பதால் மனிதர்கள் மற்றும் எந்திர திறன்கள் பணியில் ஒருங்கிணைக்கப்படும். இந்த அணுகுமுறை மனித ஆற்றலை விரிவுபடுத்துவதையும் பணி செயல்பாட்டில் ஒட்டுமொத்த திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டிருக்கும். இறுதியில் இது ஓட்டுமொத்த சமூகத்திற்கும் பயனளிக்கும்.
  7. அரசு, தனியார் துறை, கல்வியாளர்கள் இடையேயான கூட்டுமுயற்சி செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சமூக முயற்சிகளில் எதிர்மறை விளைவுகளை குறைப்பதற்கு முக்கியமானதாகும்.

*****

TS/SV/SMB/PKV/PLM/KPG/RR/RJ/AG/DL


(Release ID: 2098291) Visitor Counter : 10