பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
20 OCT 2024 7:34PM by PIB Chennai
நம பார்வதி பதயே...
ஹர ஹர மஹாதேவ்!
மேடையில் அமர்ந்திருக்கும் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொழில்நுட்பம் மூலம் இணைந்துள்ள மதிப்பிற்குரிய ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு நாயுடு அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணைந்துள்ள மத்திய அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர்களே, கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, வாரணாசியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!
இன்று, மீண்டும் ஒருமுறை, வாரணாசிக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தந்தேராஸ், தீபாவளி மற்றும் சாத் பண்டிகைகள் நெருங்கி வருகின்றன... இந்தப் பண்டிகைகளுக்கு முன்பாக இன்று வாரணாசியில் வளர்ச்சி கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன. உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நண்பர்கள்,
இன்று வாரணாசிக்கு உகந்த நாள். நான் ஒரு பெரிய கண் மருத்துவமனையை திறந்து வைத்துள்ளேன். பின்னர் இங்கு வந்தேன், அதனால்தான் நான் சற்று தாமதமாக வந்தேன். சங்கரா கண் மருத்துவமனை முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பேருதவியாக இருக்கும். பாபா விஸ்வநாத்தின் ஆசியுடன், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் உ.பி.யின் வளர்ச்சியைப் போலவே நாட்டின் வளர்ச்சியையும், புதிய உயரங்களுக்கு உயர்த்தும். இன்று, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பாபத்பூர் விமான நிலையம் மட்டுமல்லாமல், ஆக்ரா, சஹரன்பூரில் உள்ள சர்சாவா விமான நிலையங்களும் அடங்கும். மொத்தத்தில், கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் திட்டங்கள் வாரணாசிக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் வசதிகளை கொண்டு வருவது மட்டுமல்லாமல், நமது இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். புத்த பகவான் தனது போதனைகளை வழங்கிய சாரநாத் இந்தப் பூமியில் அமைந்துள்ளது. அண்மையில் நடந்த அபிதம்ம மஹோத்சவத்தில் கலந்துகொண்டேன். இன்று, சாரநாத் தொடர்பான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. பாலி மற்றும் பிராகிருதம் உள்ளிட்ட சில மொழிகளை செம்மொழிகளாக சமீபத்தில் நாங்கள் அங்கீகரித்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாலி மற்றும் பிராகிருதம் இரண்டிற்கும் சாரநாத் மற்றும் காசியுடன் சிறப்பு தொடர்புகள் உள்ளன. செம்மொழிகளாக அவை அங்கீகரிக்கப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக காசியில் வசிக்கும் எனது சக குடிமக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
தொடர்ந்து மூன்றாவது முறையாக சேவை செய்யும் பொறுப்பை நீங்கள் என்னிடம் ஒப்படைத்தபோது, மூன்று மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக நான் உறுதியளித்தேன். அரசு அமைந்து 125 நாட்கள் கூட ஆகவில்லை, இத்தனை குறுகிய காலத்தில், நாடு முழுவதும் 15 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பட்ஜெட்டில் பெரும்பகுதி ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று, ஒவ்வொரு வீட்டிலும் 125 நாட்களுக்குள் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன. இதுதான் நாடு விரும்பும் மாற்றம். மக்களின் பணம் மக்களுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக செலவிடப்படுவதும், நேர்மையாக செலவிடப்படுவதும் எங்கள் முன்னுரிமை ஆகும்.
நண்பர்களே,
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த உள்கட்டமைப்பு பிரச்சாரம் இரண்டு முக்கிய இலக்குகளைக் கொண்டுள்ளது. முதலாவது, முதலீடுகள் மூலம் குடிமக்களின் வசதியை அதிகரிப்பது, இரண்டாவது, முதலீடுகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது. இன்று நாடு முழுவதும் நவீன நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன, புதிய பாதைகளில் புதிய ரயில் தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது செங்கல், கற்கள், இரும்பு மற்றும் இரும்பு கம்பிகளின் வேலையைப் பற்றியது மட்டுமல்லாமல், இது மக்களுக்கு வசதியை அதிகரித்து வருகிறது. மேலும் நாட்டின் இளைஞர்களுக்கு வேலைகளையும் வழங்குகிறது.
நாங்கள் கட்டிய பபத்பூர் விமான நிலைய நெடுஞ்சாலை மற்றும் விமான நிலையத்தில் சேர்க்கப்பட்ட நவீன வசதிகளைப் பாருங்கள். விமான நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் மட்டும்தான் இதனால் பயனடைந்தார்களா? இல்லை, அது வாரணாசியில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது. இது விவசாயம், தொழில் மற்றும் சுற்றுலாவை உயர்த்தியது. இன்று வாரணாசிக்கு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. சிலர் சுற்றுலாவுக்காக வருகிறார்கள், சிலர் வியாபாரத்திற்காக வருகிறார்கள், நீங்கள் அதனால் பயனடைகிறீர்கள். எனவே, இப்போது பாபத்பூர் விமான நிலையத்தின் விரிவாக்கம் நடந்து வருவதால், நீங்கள் இன்னும் அதிகமாக பயனடைவீர்கள். இந்த விமான நிலையத்தின் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. அது முடிந்ததும், மேலும் விமானங்கள் இங்கு தரையிறங்க முடியும்.
நண்பர்களே,
நவீன உள்கட்டமைப்பை உருவாக்கும் இந்த மஹா யாகத்தில், நமது விமான நிலையங்கள், அவற்றின் அற்புதமான கட்டிடங்கள், மிகவும் மேம்பட்ட வசதிகள் ஆகியவை உலகெங்கும் பேசப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டில், நம் நாட்டில் 70 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. நாயுடு விரிவாக விளக்கியதைப் போல, இன்று நம்மிடம் 150-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. பழைய விமான நிலையங்களையும் புதுப்பித்து வருகிறோம். கடந்த ஆண்டு, நாடு முழுவதும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் புதிய வசதிகள் கட்டப்பட்டன - சராசரியாக, மாதத்திற்கு ஒரு விமான நிலையம் என்ற கணக்கில் இது கட்டப்பட்டு வருகிறது. இதில் அலிகார், மொராதாபாத், ஷ்ராவஸ்தி மற்றும் சித்ரகூட் விமான நிலையங்கள் அடங்கும். அயோத்தியில் இப்போது ஒரு பிரம்மாண்டமான சர்வதேச விமான நிலையம் உள்ளது, ஒவ்வொரு நாளும் ராம பக்தர்களை வரவேற்கிறது. உத்தரப்பிரதேசம் அதன் மோசமான சாலைகளுக்காக கேலி செய்யப்பட்ட காலத்தை நினைவில் கொள்ளுங்கள். இன்று, உத்தரப்பிரதேசம் அதிவேக நெடுஞ்சாலைகளின் மாநிலமாக அறியப்படுகிறது. இன்று, உ.பி., அதிக சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நொய்டாவின் ஜோவரில் ஒரு பெரிய சர்வதேச விமான நிலையமும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. யோகி, கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகியோரின் குழுவினர் அனைவரையும் நான் உத்தரப்பிரதேசத்தின் இந்த முன்னேற்றத்திற்காக பாராட்டுகிறேன்.
வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், இங்குள்ள வளர்ச்சியைப் பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். பாரம்பரியம் பாதுகாக்கப்படும் அதே வேளையில், முன்னேற்றம் அடையும் நகர்ப்புற வளர்ச்சிக்கான முன்மாதிரி நகரமாக காசியை உருவாக்க வேண்டும் என்ற கனவு நம் அனைவருக்கும் உள்ளது. இன்று, காசி பிரம்மாண்டமான மற்றும் தெய்வீக காசி விஸ்வநாதர் தாம், ருத்ராக்ஷ் மாநாட்டு மையம், ரிங் ரோடு, கஞ்சரி ஸ்டேடியம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அறியப்படுகிறது. காசியில் நவீன ரோப்வே அமைப்பும் கட்டப்பட்டு வருகிறது. இந்த அகலமான சாலைகள், சந்துகள், கங்கையின் அழகிய படித்துறைகள் - அனைத்தும் வசீகரமானவை.
நண்பர்களே,
காசியையும், பூர்வாஞ்சல் பிராந்தியத்தையும் ஒரு பெரிய வர்த்தக மையமாக மாற்ற நாங்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சில நாட்களுக்கு முன்பு, கங்கை நதியின் மீது புதிய ரயில்-சாலை பாலம் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்தது. ராஜ்காட் பாலம் அருகில், பிரமாண்டமான புதிய பாலம் கட்டப்படும். கீழே ரயில்கள் இயக்கப்படும், மேலே ஆறு வழி நெடுஞ்சாலை அமைக்கப்படும். இதன் மூலம் வாரணாசி மற்றும் சந்தெளலியில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.
நண்பர்களே,
நமது காசி விளையாட்டுத் துறையின் முக்கிய மையமாகவும் மாறி வருகிறது. சிக்ரா ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டு இப்போது ஒரு புதிய வடிவத்தில் உங்கள் முன் உள்ளது. புதிய மைதானம் தேசிய போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இங்கு நவீன விளையாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சன்சத் கேல் பிரதியோகிதாவின் போது காசியின் இளம் விளையாட்டு வீரர்களின் திறனை நாம் கண்டோம். தற்போது, பூர்வாஞ்சலைச் சேர்ந்த நமது மகன்களும், மகள்களும் பெரிய விளையாட்டுத் தயாரிப்புகளுக்கான சிறந்த வசதிகளைப் பெற்றுள்ளனர்.
நண்பர்களே,
ஒரு சமூகம் அதன் பெண்களும் இளைஞர்களும் அதிகாரம் பெறும்போது உருவாகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அரசு 'பெண் சக்தி'க்கு புதிய பலத்தை அளித்துள்ளது. லட்சக்கணக்கான பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டு அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க உதவப்பட்டது. இப்போது நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 'லட்சாதிபதி சகோதரி'களை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இன்று, கிராமங்களைச் சேர்ந்த நமது சகோதரிகள் ட்ரோன் விமானிகளாக கூட ஆகி வருகிறார்கள். சிவபெருமான் கூட அன்னை அன்னபூர்ணாவிடம் பிச்சை கேட்கும் காசி இது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்போதுதான் சமூகம் செழிக்கும் என்பதை காசி நமக்குக் கற்பிக்கிறது. இந்த நம்பிக்கையுடன், வளர்ந்த இந்தியா என்ற ஒவ்வொரு இலக்கின் மையத்திலும் 'பெண் சக்தியை' நாங்கள் வைத்துள்ளோம். பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் லட்சக்கணக்கான பெண்களுக்கு சொந்த வீடுகளை பரிசாக அளித்துள்ளது. வாரணாசியில் உள்ள பல பெண்களும் இந்தத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர். அரசு இப்போது மேலும் 3 கோடி வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இதுவரை வீடுகளைப் பெறாத வாரணாசியில் உள்ள பெண்கள் விரைவில் அவற்றைப் பெறுவார்கள். நாங்கள் ஏற்கனவே வீடுகளுக்கு குழாய் நீர், உஜ்வாலா எரிவாயு ஆகியவற்றை வழங்கியுள்ளோம். தற்போது, இலவச மின்சாரம், மின்சாரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். பிரதமரின் சூர்யசக்தி இலவச மின்சார வீடு திட்டம் நமது சகோதரிகளின் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும்.
நண்பர்களே,
நமது காசி ஒரு துடிப்பான கலாச்சார நகரம். இது சிவபெருமானின் புனித ஜோதிர்லிங்கம், மோட்சத்தின் புனித தளமான மணிகர்ணிகா மற்றும் ஞானத்தின் இடமான சாரநாத் ஆகியவற்றின் தாயகமாகும். இத்தனை பத்தாண்டுகளுக்குப் பிறகு, வாரணாசியில் ஒரே நேரத்தில் பல வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இன்று, ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் குழந்தை ராமரை தரிசிக்க வருகை தருகிறார்கள். சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பல ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. இந்த வரலாற்றுப் பணியையும் எமது அரசு நிறைவேற்றியுள்ளது. முத்தலாக் என்ற தீய பழக்கத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து முஸ்லிம் பெண்களை விடுவிக்க எங்கள் அரசு பாடுபட்டது. இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது பாஜக அரசுதான், யாருடைய உரிமையையும் பறிக்காமல் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான்.
நண்பர்களே,
நாங்கள் எங்கள் வேலையை செய்துள்ளோம். நாங்கள் நல்ல நோக்கங்களுடன் கொள்கைகளை செயல்படுத்தினோம், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் மாற்றியமைக்க நேர்மையாக பணியாற்றினோம். அதனால்தான் தேசம் நம்மை தொடர்ந்து ஆசீர்வதித்து வருகிறது. ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிஜேபி அரசு எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை நாம் பார்த்தோம். ஜம்மு காஷ்மீரில் பிஜேபிக்கு வரலாறு காணாத வாக்குகள் கிடைத்துள்ளன.
நண்பர்களே,
நாடு முழுவதும் வளர்ச்சிக்கான புதிய தரநிலைகளுக்கான தொடக்கக் களமாக காசி மீண்டும் ஒருமுறை மாறியுள்ளது. காசி நாட்டில் மீண்டும் ஒரு புதிய எழுச்சியைக் கண்டுள்ளது. இன்றைய வளர்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து மாநிலங்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், காசியின் மக்கள் மற்றும் நாட்டின் குடிமக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம பார்வதி பதயே...
ஹர ஹர மஹாதேவ்!
***
(Release ID: 2066550)
PKV/AG/KR
(Release ID: 2067256)
Visitor Counter : 37