பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ரூ.80,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்


சுமார் 550 மாவட்டங்களில் 63,000 பழங்குடி கிராமங்கள் பயனடையும் வகையில் பழங்குடியினர் கிராம நில மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டது

40 ஏகலைவா பள்ளிகளைத் தொடங்கி வைத்தார், 25 ஏகலைவா பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

பிரதமரின் ஜன்மான் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

"இன்றைய திட்டங்கள் பழங்குடி சமூகத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதற்கான சான்று"

Posted On: 02 OCT 2024 3:56PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ரூ.80,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டினார். பழங்குடியினர் கிராம நில மேம்பாட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்த திரு மோடி, 40 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் தொடங்கி வைத்தார். 25 ஏகலைவா பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமரின் ஜன்மான் எனப்படும்  பழங்குடியினர் நியாய பேரியக்கம் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பகுதியாக இணைந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, சில நாட்களுக்கு முன்பு ஜாம்ஷெட்பூருக்கு பயணம் மேற்கொண்டு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்ததை நினைவு கூர்ந்தார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஜார்க்கண்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உறுதியான வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டதை திரு மோடி குறிப்பிட்டார். ரூ.80,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் நலன் தொடர்பான இன்றைய திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பழங்குடியின சமூகத்தினருக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதற்கு இது சான்று என்றார். இன்றைய திட்டங்களுக்காக ஜார்க்கண்ட் மற்றும் இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், பழங்குடியினர் நலன் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும் இந்தியாவுக்கு வழிகாட்டியது என்று கூறினார். பழங்குடியின சமூகங்கள் வேகமாக முன்னேறினால் மட்டுமே இந்தியா முன்னேற முடியும் என்று மகாத்மா காந்தி நம்பினார் என்று பிரதமர் கூறினார். பழங்குடியினர் மேம்பாட்டில் தற்போதைய அரசு அதிகபட்ச கவனம் செலுத்தி வருவது குறித்து திருப்தி தெரிவித்த திரு மோடி, சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் சுமார் 550 மாவட்டங்களில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 63,000 கிராமங்களை மேம்படுத்தும் பழங்குடியினர் கிராம நில மேம்பாட்டு இயக்கத் திட்டத்தை இன்று தொடங்குவதாகவும் தெரிவித்தார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்தக் கிராமங்களில் சமூக-பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதன் பயன்கள் நாட்டின் 5 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியின சகோதர சகோதரிகளை சென்றடையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். "ஜார்க்கண்டில் உள்ள பழங்குடி சமூகமும் இதன் மூலம் பெரிதும் பயனடையும்" என்று அவர் மேலும் கூறினார்.

பகவான் பிர்சா முண்டா பூமியிலிருந்து தர்தி அபா ஜன்ஜதி கிராம உத்கர்ஷ் இயக்கம் தொடங்கப்படுவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தன்று ஜார்க்கண்டில் பிரதமரின் மக்கள் திட்டம் தொடங்கப்பட்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார். நவம்பர் 15, 2024 அன்று, பழங்குடியினர் கவுரவ தினத்தன்று, இந்தியா பிரதமர்-ஜன்மன் திட்டத்தின் முதலாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் என்று அவர் அறிவித்தார். பிரதமரின் மக்கள் திட்டம் மூலம், வளர்ச்சியின் பலன்கள் நாட்டில் பின்தங்கிய பழங்குடியினர் பகுதிகளைச் சென்றடைகின்றன என்றும் அவர் கூறினார். பிரதமரின் ஜன்மான் திட்டத்தின் கீழ், சுமார் 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதை திரு மோடி சுட்டிக்காட்டினார்.  இந்தத் திட்டத்தைப் பற்றி பேசிய அவர், மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் பகுதிகளில் சிறந்த வாழ்க்கைக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் சாலைகள் போன்ற வசதிகள் உருவாக்கப்படும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஜார்க்கண்டில் பிரதமரின் ஜன்மான்  திட்டத்தின் பல்வேறு சாதனைகளை கோடிட்டுக் காட்டிய திரு மோடி, மிகவும் பின்தங்கிய 950-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது என்றார். மாநிலத்தில் 35 வன்தன் விகாஸ் மையங்களும்  அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். தொலைதூரப் பழங்குடியினர் பகுதிகளை மொபைல் இணைப்பு மூலம் இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார். இது முன்னேற்றத்திற்கு சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பழங்குடியின சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.

பழங்குடியின இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும்போது பழங்குடியின சமூகம் முன்னேறும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக, பழங்குடியினர் பகுதிகளில் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளை உருவாக்கும் இயக்கத்தில் அரசு ஈடுபட்டுள்ளது என்று திரு மோடி கூறினார். இன்று 40 ஏகலைவா உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட்டதையும், 25 புதிய பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும் குறிப்பிட்ட பிரதமர், ஏகலைவா பள்ளிகள் அனைத்து நவீன வசதிகளுடன் இருக்க வேண்டும் என்றும், உயர்தரக் கல்வியை வழங்க வேண்டும் என்றும் உறுதியளித்தார். இதற்காக, ஒவ்வொரு பள்ளியின் பட்ஜெட்டையும் அரசு ஏறத்தாழ இரட்டிப்பாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

சரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் நேர்மறையான முடிவுகள் எட்டப்படுகின்றன என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பழங்குடியின இளைஞர்கள் முன்னேறிச் செல்வார்கள் என்றும், அவர்களின் திறன்களால் நாடு பயனடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. ஜூயல் ஓரம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களின் விரிவான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான அவரது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் ரூ .80,000 கோடிக்கும் அதிகமான மொத்த செலவில் தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம உத்கர்ஷ் அபியான் திட்டத்தை தொடங்கினார். 549 மாவட்டங்கள் மற்றும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2,740 வட்டாரங்களில் 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் சுமார் 63,000 கிராமங்களை இந்த இயக்கம் உள்ளடக்கும். மத்திய அரசின் பல்வேறு 17 அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் செயல்படுத்தப்படும் 25 இடையீடுகள் மூலம் சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தில் உள்ள முக்கிய இடைவெளிகளை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பழங்குடியின சமூகங்களுக்கான கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.2,800 கோடி மதிப்பிலான 40 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை திறந்து வைத்த பிரதமர், 25 பள்ளிகளுக்கு  அடிக்கல் நாட்டினார்.

பிரதம மந்திரி ஜன்ஜதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) திட்டத்தின் கீழ் ரூ .1360 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டினார். இதில் 1380 கி.மீ க்கும் அதிகமான சாலைகள், 120 அங்கன்வாடிகள், 250 பல்நோக்கு மையங்கள் மற்றும் 10 பள்ளி விடுதிகள் அடங்கும். மேலும், 3,000 கிராமங்களில் 75,800-க்கும் மேற்பட்ட குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கு  மின்சார வசதி, 275 நடமாடும் மருத்துவப் பிரிவுகளை இயக்குதல், 500 அங்கன்வாடி மையங்களை செயல்படுத்துதல், 250 வன் தன் வளர்ச்சி மையங்களை நிறுவுதல் மற்றும் 5,550-க்கும் மேற்பட்ட தனியார் இருப்பிட கிராமங்களை  மூலம் செறிவூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாதனைகளையும் அவர் வெளிப்படுத்தினார்.

 

---

PKV/DL



(Release ID: 2061236) Visitor Counter : 12