தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய சினிமாவின் உச்சத்தை அடைய மிதுன் தாவின் நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கனவுத் தேடலின் பயணத்தைக் கொண்டாடுவோம்: அஸ்வினி வைணவ்

பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 30 SEP 2024 9:58AM by PIB Chennai

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இந்திய சினிமாவில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று இந்த விருதை அறிவித்தார். பலவகை நடிப்பு மற்றும் கவர்ச்சியான திரையுலகப் பங்களிப்புக்காக நன்கு  அறியப்பட்ட திரைப்படத் துறையில் மிகவும் நேசத்துக்குரியவராகவும்  சின்னமாகவும் விளங்கும் ஒருவரை கௌரவிப்பதில்  மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அமைச்சர் தெரிவித்தார்.

மிதுன் தாவின் குறிப்பிடத்தக்க பயணம்

மிதுன் தா என்றும் அழைக்கப்படும் மிதுன் சக்ரவர்த்தி, ஒரு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் தனது பலவகையான பாத்திரங்கள் மற்றும் தனித்துவ நடன பாணிக்காக  அங்கீகரிக்கப்பட்டார்.

எளிமையான தொடக்கத்தைக் கொண்ட ஓர் இளைஞனாக இருந்த மிதுன் சக்ரவர்த்தியின் பயணம், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் உணர்வை உள்ளடக்கியது. ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஒருவர் மிகவும் லட்சிய கனவுகளை அடைய முடியும் என்பதை அவரது பயணம் நிரூபிக்கிறது என்று அமைச்சர் கூறினார். அவரது அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் அவரை ஆர்வமுள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக ஆக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் 1950, ஜூன் 16 அன்று பிறந்த மிதுன் சக்ரவர்த்தி, தனது முதல் படமான "மிரிகயா" (1976) வில் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். மதிப்புமிக்க இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ)  முன்னாள் மாணவரான மிதுன் சக்ரவர்த்தி தனது கலைத்திறமையை மெருகேற்றி, சினிமாவில்  புகழ்பெற்ற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தார்.

மிருணாள் செனின் படத்தில் ஒரு சந்தால் கிளர்ச்சியாளராக அவர் நடித்தது அவருக்கு தேசிய பாராட்டைப் பெற்றுத் தந்தது. "டிஸ்கோ டான்சர்" (1982) படத்தில் மிதுன் ஏற்ற பாத்திரத்தின் மூலம் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றார், இந்த படம் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும்  பெரும் வெற்றியைப் பெற்றது, இது அவரை ஒரு நடன உணர்வாக நிலைநிறுத்தியது. அக்னிபத் படத்தில் இவரது நடிப்பு 1990-ம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.

தகதேர் கதா (1992) , சுவாமி விவேகானந்தா (1998) ஆகிய படங்களில் நடித்ததற்காக மேலும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றார். தனது விரிவான வாழ்க்கையில், மிதுன் இந்தி, பெங்காலி, ஒடியா, போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 350 க்கும் அதிகமான  படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான மூன்று தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

மிதுன் தா  தனது சினிமா சாதனைகளுக்காக மட்டுமின்றி ,சமூகப் பணிகளில்  அவரது அர்ப்பணிப்புக்காகவும் கொண்டாடப்படுகிறார். கல்வி, சுகாதாரம் மற்றும்பின்தங்கிய சமூகங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில்  அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், இது சமூகத்திற்கு திருப்பித் தருவதற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நாடாளுமன்றஉறுப்பினராகவும் பணியாற்றிய அவர், மக்கள் சேவை மற்றும் நிர்வாகத்திற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

 

ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக நீடித்த திரைப்பட  வாழ்க்கையில், மிதுன் சக்ரவர்த்தி ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இது இந்திய சினிமாவுக்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்துள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் செய்த சிறந்த பங்களிப்புகளுக்காக அண்மையில் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

2024 அக்டோபர் 8 செவ்வாயன்று  நடைபெறவுள்ள 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும். பின்வரும் உறுப்பினர்கள் தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தனர் :

திருமதி ஆஷா பரேக்

திருமதி குஷ்பு சுந்தர்

திரு விபுல் அம்ருத்லால் ஷா

மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது, மிதுன் சக்ரவர்த்தியின் கலை வலிமையை அங்கீகரிப்பது மட்டுமின்றி, பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய கருணையுள்ள,  அர்ப்பணிப்புள்ள தனிநபராக அவரது நீடித்த மரபையும் அங்கீகரிக்கிறது.

*****

(Release ID: 2060183)

SMB/RR



(Release ID: 2060187) Visitor Counter : 17