நிதி அமைச்சகம்
இந்தியாவில் கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது: பொருளாதார ஆய்வறிக்கை
Posted On:
22 JUL 2024 3:22PM by PIB Chennai
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அரசு முதலீடு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, நேரடி மற்றும் டிஜிட்டல் இணைப்பு வசதிகள், குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் வகையில், துப்புரவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட சமூக கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சாலைக் கட்டுமானம்
நீண்ட காலத் திட்டமிடல் மற்றும் அரசு முதலீடு அதிகரிக்கப்பட்டதால் சாலைக்கட்டமைப்பு வசதிகள், மறுமலர்ச்சி அடைந்து திறன்மிகு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சாலைப்பணிகளில் அரசு மற்றும் தனியார் முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.0% (ரூ.3.01 லட்சம் கோடி) அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் 2014-ல் ஒரு நாளைக்கு 11.7 கிலோ மீட்டராக இருந்த நிலையில் 2024-ல் ஒரு நாளைக்கு 34 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவுச் சாலைகள் 12 மடங்கும், நான்கு வழிச்சாலைகள் 2.6 மடங்கும் அதிகரித்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டதால், உலக வங்கியின் ‘சரக்குப் போக்குவரத்து செயல்திறன் பட்டியலில்’ கடந்த 2014-ல் 54-வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ல் 38-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2024-ம் ஆண்டில் 6 பல்வகை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, பிரத்யேக பல்வகை சரக்குப் போக்குவரத்து பூங்காக்களுக்காக ரூ.2,505 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் 7 பல்வகை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
ரயில்வே கட்டுமானம்
ரயில்வே துறைக்கான மூலதனச் செலவு கடந்த 5 ஆண்டுகளில் 77% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் என்ஜின்கள் மற்றும் சரக்கு ரயில் பெட்டிகளின் உற்பத்தி இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2024 மார்ச் 31 நிலவரப்படி, இந்திய ரயில்வே, 68,584 வழித்தட கிலோ மீட்டர் இருப்புப் பாதைகளையும், 12.54 லட்சம் (2024 ஏப்ரல் 1 நிலவரப்படி) தொழிலாளர்களையும் கொண்டதாக உள்ளது.
இத்துறைக்கான மூலதனச் செலவு கடந்த 5 ஆண்டுகளில் 77% (2024-ல் ரூ.2.62 லட்சம் கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய ரயில் பாதை அமைத்தல், அகலப் பாதையாக மாற்றுதல், இரட்டை வழித்தடம் அமைத்தல் போன்ற பணிகளில் கணிசமான முதலீடு செய்யப்பட்டுள்ளததாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இது தவிர பிரத்யேக சரக்கு ரயில் பாதை, அதிவேக ரயில்பாதை, வந்தே பாரத், அமிர்த பாரத், ஆஸ்தா சிறப்பு ரயில் போன்ற பயணிகளுக்கான நவீன சேவைகளுக்கான முதலீடு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034955
***
SMB/MM/KPG/DL
(Release ID: 2035369)
Visitor Counter : 72