தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

உலக ஒலி, காட்சி, பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாடு, 2024 நவம்பர் 20 முதல் 24-ம் தேதி வரை கோவாவில் நடைபெறும்: தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்


வேவ்ஸ் உச்சிமாநாடு திறமைசாலிகளை ஊக்குவிக்கும்: தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

Posted On: 13 JUL 2024 5:19PM by PIB Chennai

கோவாவில் 2024 நவம்பர் 20 முதல் 24-ம் தேதி வரை உலக ஒலி, காட்சி, பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை (World Audio Visual and Entertainment Summit-WAVES - வேவ்ஸ்) இந்தியா நடத்தவுள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.   புதுதில்லியில் இன்று (13.07.2024) நடைபெற்ற இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அஸ்வினி வைஷ்ணவ், ஊடகம், பொழுதுபோக்கு (M&E) உலகத்தில் ஒரு பெரிய  மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இதில் மகத்தான தொழில்நுட்பங்கள் வந்துள்ளதாகவும் கூறினார். இது ஒருபுறம், பல வாய்ப்புகளைத் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஊடகம், பொழுதுபோக்குத் துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், திறமைசாலிகளை அதிகரிப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். இந்த முயற்சிகள், உயர்தர உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் எனவும் நாட்டில் அறிவுசார் சொத்துரிமைகளை உருவாக்கிப் பாதுகாக்கும் ஒரு  அமைப்பை உருவாக்குவதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். வரும் மாதங்களில் அரசும் தொழில்துறையும் அந்த இலக்கை நோக்கி தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுவார்கள் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேவ்ஸ் எனப்படும் இந்த உச்சிமாநாடும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவான ஐஎஃப்எஃப்ஐ-யும் ஒரே அம்சத்தின் வெவ்வேறு பகுதிகளாக இருக்கும் என்று அவர் கூறினார். வேவ்ஸ் உச்சிமாநாடு முயற்சியின் உள்ளீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) முடிவின் வெளியீடு போன்றது என்றும் அமைச்சர் மேலும் கூறினார். உள்ளீடு, வெளியீட்டின் ஒருங்கிணைப்பு கோவாவை படைப்பாற்றல் திறனுக்கான ஒரு முக்கிய மையமாக நிறுவும் என்று அவர் குறிப்பிட்டார்புதுமையான கலை வெளிப்பாட்டிற்கான கலங்கரை விளக்கமாக கோவாவின் நிலையை இந்த நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார். சர்வதேச திரைப்பட நிதியத்துடன் இணைந்து வேவ்ஸ் 2024 நிகழ்வை நடத்துவதற்காக கோவா முதலமைச்சருக்குத் திரு அஸ்வினி வைஷ்ணவ் தமது நன்றியைத் தெரிவித்தார்.

கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் பேசுகையில், சர்வதேச திரைப்பட விழா நீண்ட காலமாக திரைப்படச் சிறப்பை விளக்கும் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது என்றார். இந்த நிலையில், வேவ்ஸ் நிகழ்வு வளர்ந்து வரும் ஊடக, பொழுபோக்குத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் என்று அவர் கூறினார். இரண்டு நிகழ்வுகளும் இணைந்து இணையற்ற வாய்ப்புகளைக் கொண்ட எதிர்காலத்திற்குள் அழைத்துச் செல்லும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் பேசுகையில், வேவ்ஸ் 2024 உச்சிமாநாடு, ஊடக, பொழுதுபோக்குத் தொழில்துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் என்றார். இந்தத் துறையில் நாட்டின் திறன்வாய்ந்த மனிதவளத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு தளத்தை இந்த உச்சிமாநாடு உருவாக்கும் என்றும் டாக்டர் எல் முருகன் கூறினார்.

தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு பேசுகையில், இந்த உச்சிமாநாடு படைப்பாற்றல், புதுமை ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை அமைக்கும் என்று கூறினார். தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவித்தல், இந்த பிரிவில் நமது தொழில்துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துதல், ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல், முதலீட்டை ஈர்த்தல், திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல், உள்ளடக்க பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களை அடைய இந்த உச்சிமாநாடு உதவும் என்று அவர் கூறினார்.

வளர்ந்து வரும் ஊடக, பொழுதுபோக்குத் தொழில்துறைச் சூழலில், உரையாடல், வர்த்தக ஒத்துழைப்பு, புதுமை ஆகியவற்றை ஊக்குவிப்பதில் வேவ்ஸ் (WAVES) உச்சிமாநாடு ஒரு முதன்மையான மன்றமாக அமையும். வாய்ப்புகளை ஆராயவும், சவால்களை சமாளிக்கவும், இத்துறையின் எதிர்காலத்தைச் சிறப்பாக வடிவமைக்கவும், சம்பந்தப்பட்ட தரப்பினரை இந்த உச்சி மாநாடு ஒருங்கிணைக்கும்.

இந்த நிகழ்ச்சியில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தலைவர் திரு அனில் குமார் லோஹத்தி, கோவா தலைமைச் செயலாளர் திரு புனீத் குமார் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வேவ்ஸ் உச்சிமாநாட்டின் இலச்சினை, இணையதளம், கையேடு ஆகியவை இந்நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வட்டமேசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஒளிபரப்பு, ஏவிஜிசி, டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன்னணி ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 80 உயர்மட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

வேவ்ஸ் 2024 மாநாடு தொடர்பான இணையதளம்: https://wavesindia.org/

***

PLM/KV

 



(Release ID: 2033003) Visitor Counter : 27