தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

கடந்த 8 மக்களவைத் தேர்தல்களிலேயே அதிகமாக பாரமுல்லாவில் மாலை 5 மணி நிலவரப்படி 54.21% வாக்குகள் பதிவு

Posted On: 20 MAY 2024 8:12PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் 38.49% வாக்குகள் பதிவானதை அடுத்து, பாரமுல்லா நாடாளுமன்றத் தொகுதி இப்போது கடந்த 8 மக்களவைத் தேர்தல்களிலேயே அதிகமான வாக்குப்பதிவை நோக்கிச் செல்கிறது. மாலை 5 மணி நிலவரப்படி பாரமுல்லா, குப்வாரா, பந்திபூரா, பட்காம் ஆகிய மாவட்டங்களில் 54.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் சேர்ந்து, தேர்தல்களை சுமூகமாகவும் அமைதியாகவும் நடத்துவதில் சிவில் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் முயற்சிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் பாராட்டியதுடன், ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களின் உற்சாகமான பங்கேற்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர், ஜனநாயக ஆட்சி முறையில் தங்கள் பங்குகளை செலுத்துகிறார்கள் என்ற தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பாரமுல்லா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 2103 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது, ஆர்வமுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நடப்பு மக்களவைத் தேர்தல் 2024-ல் பாரமுல்லா நாடாளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அமைதியும், கொண்டாட்டமும் நிறைந்த சூழல் நிலவுவதை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட வாக்குச்சாவடிப் பணியாளர்கள் அயராது உழைத்தனர். தில்லி, ஜம்மு மற்றும் உதம்பூரில் உள்ள பல்வேறு நிவாரண முகாம்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த காஷ்மீர் வாக்காளர்களும் நியமிக்கப்பட்ட சிறப்பு வாக்குச் சாவடிகளில் நேரில் வாக்களிக்கலாம் அல்லது அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஜம்முவில் 21 வாக்குச்சாவடிகளும், உதம்பூரில் 1 வாக்குச்சாவடியும், தில்லியில் 4 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டன.

முன்னதாக, நான்காவது கட்ட தேர்தலில், ஸ்ரீநகர், கந்தர்பால், புல்வாமா, பட்காம், சோபியன் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதியில் 38.49% வாக்குகள் பதிவாகின. 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இயற்றப்பட்ட பின்னர் இங்கு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

***

(Release ID: 2021152)

SMB/BR/RR


(Release ID: 2021182) Visitor Counter : 76