தேர்தல் ஆணையம்

மக்களவைக்கு நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன

Posted On: 19 MAY 2024 1:31PM by PIB Chennai

மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (20.05.2024) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசா சட்டப்பேரவையின் 35 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு சுமுகமாகவும் பாதுகாப்பான சூழலிலும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்குச் சாவடிகளில் போதுமான நிழல், குடிநீர் வசதிகள், சாய்வுதள வசதிகள், கழிப்பறைகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வெப்பமான வானிலை உள்ள பகுதிகளில் வெப்பத்தை சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்து, பொறுப்புடனும் பெருமையுடனும் செயல்படுமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் 2024-ல் இதுவரை நடைபெற்ற 4 கட்ட வாக்குப் பதிவில் சராசரியாக சுமார் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போதைய பொதுத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்களில் சுமார் 45 கோடியே 10 லட்சம் மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர்.

பீகார், ஜம்மு-காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சில தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் கிராமப் புறங்களை ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப் பதிவே காணப்பட்டது. தற்போது மும்பை, தானே, லக்னோ போன்ற நகரங்கள் இந்த 5-ம் கட்டத்தில் தேர்தலைச் சந்திக்கின்றன. இந்த நகரங்களின் மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் குறிப்பாக கேட்டுக்கொண்டுள்ளது.

5ம் கட்ட தேர்தல் தொடர்பான சில முக்கிய தகவல்கள்:

*2024 பொதுத் தேர்தலின் ஐந்தாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு 2024 மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

*இந்த 5-ம் கட்டத்தில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு (பொது தொகுதி-39; எஸ்டி தனி தொகுதி-03; எஸ்சி தனி தொகுதி -07) தேர்தல் நடைபெறுகிறது

*8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை (20.05.2024) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. சில தொகுதிகளில் மட்டும் நேரம் மாறுபடும்.

*ஒடிசாவில் 35 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் (பொது-21; எஸ்டி-08; எஸ்சி-06;) நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

*5-ம் கட்ட தேர்தலுக்காக 94,732 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

*இதில் சுமார் 9.47 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

*இந்த 5-ம் கட்டத்தில் சுமார் 8.95 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 4.69 கோடி பேர் ஆண்கள்; 4.26 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 5409 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள்ஆவார்கள்.

*7.81 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 24,792 வாக்காளர்கள் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். 7.03 லட்சம் பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள்.

*5-ம் கட்ட தேர்தலுக்கு மொத்தம் 153 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் பொது பார்வையாளர்கள், 30 பேர் காவல் பார்வையாளர்கள், 68 செலவின கண்ணாணிப்புப் பார்வையாளர்கள் ஆவார்கள்.

*சில மாநிலங்களில் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*2000 பறக்கும் படைகள், 2105 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 881 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், தேர்தல் பணிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றன.

*மொத்தம் 216 சர்வதேச எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும்  மாநிலங்களுக்கு இடையேயான 565 எல்லை சோதனைச் சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

*வாக்குச் சாவடிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொரு வாக்காளரும் எளிதாக வாக்களிக்க குடிநீர், கொட்டகை, கழிப்பறைகள், சாய்வுதளம், சக்கர நாற்காலிகள் போன்ற குறைந்தபட்ச வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

*பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களையும், வாக்குப்பதிவு தேதி விவரங்களையும் இந்த இணையதள இணைப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம். https://electoralsearch.eci.gov.in/

*வாக்குச் சாவடிகளில் அடையாள சரிபார்ப்புக்காக வாக்காளர் அடையாள அட்டை தவிர 12 மாற்று ஆவணங்களையும் பயன்படுத்தலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று அடையாள ஆவணங்கள் தொடர்பான தேர்தல் ஆணைய உத்தரவு தொடர்பான விவரங்களைக் கொண்ட இணையதள இணைப்பு:

https://www.eci.gov.in/eci-backend/public/api/download?

***

ANU/SRI/PLM/KV

 

 

 

 

 



(Release ID: 2021068) Visitor Counter : 101