பிரதமர் அலுவலகம்

இந்தியா - பூடான் எரிசக்தி கூட்டாண்மை குறித்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை

Posted On: 22 MAR 2024 5:20PM by PIB Chennai

இந்தியாவும் பூடானும் அனைத்து மட்டங்களிலும் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல், வலுவான நட்புறவு மற்றும் மக்களுக்கு இடையேயான நெருங்கிய தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் முன்மாதிரியான இருதரப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் திரு. நரேந்திர மோடியும், பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கேயும் திம்புவில் பயனுள்ள மற்றும் விரிவான விவாதங்களை நடத்தினர். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த அசாதாரணமான இருதரப்பு கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

பூடானின் நீர்மின் துறை வளர்ச்சியிலும், இந்தப் பிராந்தியத்திற்கு எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதிலும் தூய்மையான எரிசக்தி பங்களிப்பை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். எரிசக்தித் திட்டங்களை அமல்படுத்துவதில் பூடான் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப முகமைகளின் உள்நாட்டு திறன் வளர்ந்து வருவதை பிரதமர் மோடி பாராட்டினார். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்காகவும், சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் போன்ற முன்முயற்சிகளை ஊக்குவிப்பதில் தலைமை தாங்கியதற்காகவும் பிரதமர் மோடிக்கு பிரதமர் டோப்கே பாராட்டு தெரிவித்தார்.

இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். கூட்டாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், சிறப்பான செயல் திறனுடன் பூடானின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதாக திருப்தி தெரிவித்தனர். 720 மெகாவாட் திறன் கொண்ட மங்தேச்சு நீர்மின் திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இரு தலைவர்களும் 1020 மெகாவாட் திறன் கொண்ட புனத்சங்கச்சு-2 நீர்மின் திட்டத்தை இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளனர். 1200 மெகாவாட் திறன்மிக்க புனத்சங்கச்சு – 1 ஹெச்.இ.பி. திட்டத்தை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப ரீதியாக வலுவான, செலவு குறித்த நேர்மறையான வல்லுநர்கள் அளவிலான விவாதங்களை இருதரப்பும் வரவேற்றன.

  1. எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், தொழில் மற்றும் நிதித் திறன்களை மேலும் மேம்படுத்த பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் திறனை இந்தியா-பூடான் எரிசக்தி கூட்டாண்மை கொண்டுள்ளது.
  1. புதிய எரிசக்தித் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் மின்சார வர்த்தகம் உள்ளிட்ட பரஸ்பரம் பயனளிக்கும் இந்த இருதரப்பு தூய்மையான எரிசக்தி கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகள் உள்ளன.
  1. நீர் மின்சாரம், சூரியசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகிய துறைகளில் புதிய எரிசக்தித் திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட ஒப்புதல்.
  1. நீர்த்தேக்கங்கள் நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கான குறிப்பிட்ட அமலாக்க வழிமுறைகளை இரு அரசுகளும் ஆய்வு செய்து இறுதி செய்யும்.

(v) இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து தேவையான நிதியுதவியைப் பெறுவதற்கும், பூடானில் வரவிருக்கும் புதிய நீர்மின் திட்டங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்வதற்கும் இந்திய அரசு வழிவகை செய்யும்.

(vi) இந்த மண்டலத்தில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இரு நாடுகளுக்கும் இடையேயான மின்சாரப் பரிமாற்றம் தொடர்ந்து முக்கிய பங்காற்றும்.

(vii) வளர்ந்து வரும் எரிசக்தி சந்தைகளைக் கருத்தில் கொண்டு, பூடானின் எரிசக்தித் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும், மின்சாரத்தில் எல்லை தாண்டிய தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்வது குறித்தும் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தப்படும்.

(viii) அனைத்து பங்குதாரர்களின் பரஸ்பர நலனுக்காக பொருளாதாரங்களுக்கு இடையேயான தொடர்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் துணை மண்டல எரிசக்தி ஒத்துழைப்பை நோக்கி பணியாற்றுதல் தொடரும்.

(ix) திறன் மேம்பாடு, கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல் பரிமாற்றம், எரிசக்தி திறன்மிக்க தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் எரிசக்தி சேமிப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு துறையில் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தப்படும்.

பரஸ்பரம் பயனடையும் வகையில், கூட்டுத் தொலைநோக்கு அறிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கான இயக்கத்தை விரைவுபடுத்த இரு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர்.

*********

PKV/RR/KV

 



(Release ID: 2016303) Visitor Counter : 57