பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிலிகுரியில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மேற்கு வங்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 09 MAR 2024 6:38PM by PIB Chennai

மேற்கு வங்க ஆளுநர் திரு. சி.வி. ஆனந்த போஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, நிசித் பிரமானிக் அவர்களே, ஜான் பர்லா அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்றத்தில் உள்ள எனது சகாக்களே, சுகந்தா மஜும்தார், குமாரி தேபஸ்ரீ சவுத்ரி அவர்களே, காகன் முர்மு அவர்களே, ராஜு பிஸ்தா அவர்களே, டாக்டர் ஜெயந்தகுமார் ராய் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களே

மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள இயற்கை அழகு மற்றும் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்த நிலத்திற்கு வருவது எனக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவம். இன்று, பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழா இங்கு நடந்துள்ளது.

இது 'வளர்ச்சியடைந்த மேற்கு வங்கம் ' நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகும். இந்த வளர்ச்சிக்கான முன்முயற்சிகளுக்காக வங்காள மக்களுக்கு, குறிப்பாக வடக்கு வங்காள மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே

மேற்கு வங்கத்தின் வடக்கில் உள்ள இந்த பகுதி நமது வடகிழக்கின் நுழைவாயிலாக செயல்படுகிறது, மேலும் இது அண்டை நாடுகளுடனான வர்த்தக பாதைகளையும் இணைக்கிறது. எனவே, கடந்த 10 ஆண்டுகளாக வங்காளத்தின் வளர்ச்சிக்கு, குறிப்பாக வடக்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு எங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. வடக்கு வங்காளத்தின் விரைவான வளர்ச்சியை வேகப்படுத்த, இந்த பிராந்தியத்தில் 21 ஆம் நூற்றாண்டின் ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்.

இந்த தொலைநோக்கை மனதில் கொண்டு, ஏக்லாக்கி முதல் பாலுர்காட், சிலிகுரி முதல் அலுபாரி, ராணிநகர் – ஜல்பைகுரி – ஹல்திபாரி இடையேயான ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளன.

இது உத்தர் தினாஜ்பூர், தெற்கு தினாஜ்பூர், கூச் பெஹார் மற்றும் ஜல்பைகுரி போன்ற மாவட்டங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும். சிலிகுரி-சமுக்தலா வழித்தடத்தின் மின்மயமாக்கல் சுற்றியுள்ள காடுகள் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களில் மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும்.

இன்று, பர்சோய் – ராதிகாபூர் பிரிவில் மின்மயமாக்கல் நிறைவடைந்துள்ளது. இது மேற்கு வங்கத்திற்கு மட்டுமின்றி, பீகார் மக்களுக்கும் பயனளிக்கும். ராதிகாபூர் - சிலிகுரி இடையே புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வங்காளத்தில் உள்ள இந்த வலுவான ரயில் உள்கட்டமைப்பு புதிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

நண்பர்களே

ஒரு காலத்தில் வடகிழக்கு நோக்கி செல்லும் ரயில்களின் வேகம் குறையும். ஆனால் நாடு முழுவதும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதைப் போலவே, வடக்கு வங்காளத்திலும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதே எங்கள் அரசின் முயற்சி. தற்போது, வடக்கு வங்காளத்திலிருந்து வங்காளதேசத்திற்கும் ரயில் இணைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மிதாலி எக்ஸ்பிரஸ் நியூ ஜல்பைகுரியிலிருந்து டாக்கா கன்டோன்மென்ட் வரை இயக்கப்படுகிறது. வங்கதேச அரசுடன் இணைந்து, ராதிகாபூர் ரயில் நிலையம் வரையிலான இணைப்பை மேம்படுத்தி வருகிறோம். இந்த இணைப்பை வலுப்படுத்துவதன் மூலம், இரு நாடுகளின் பொருளாதாரங்களும் பயனடையும், மேலும் பிராந்தியத்தில் சுற்றுலா குறிப்பிடத்தக்க ஊக்கத்தைப் பெறும்.

நண்பர்களே

சுதந்திரத்திற்குப் பிறகு, கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அதன் நலன்கள் நீண்ட காலத்திற்கு பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. இருப்பினும், நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கிழக்கு இந்தியாவை எங்கள் அரசு கருதுகிறது. எனவே, இந்தப் பிராந்தியத்தில் இணைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2014-ம் ஆண்டுக்கு முன்பு 4,000 கோடி ரூபாயாக இருந்த மேற்கு வங்கத்தின் சராசரி ரயில்வே பட்ஜெட் தற்போது 14,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று, அரை அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வடக்கு வங்காளத்திலிருந்து குவஹாத்தி மற்றும் ஹவுராவுக்கு இயக்கப்படுகிறது.

சிலிகுரி நிலையமும் அமிர்த பாரத நிலைய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது, இது 500 க்கும் மேற்பட்ட நிலையங்களை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த 10 ஆண்டுகளில், வங்காளம் மற்றும் வடகிழக்கின் ரயில் வளர்ச்சியை பயணிகள் ரயில் வேகத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்திற்கு கொண்டு வந்துள்ளோம். எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தில், இது அதிவேக வேகத்தில் முன்னேறும்.

நண்பர்களே

இன்று, வடக்கு வங்காளத்தில் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நான்கு வழி கோஷ்புகூர்-துப்குரி பிரிவு மற்றும் இஸ்லாம்பூர் புறவழிச்சாலை ஆகியவை தொடங்கப்படுவது பல மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும்.

ஜல்பைகுரி, சிலிகுரி, மைனாகுரி நகரம் போன்ற நகர்ப்புறங்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபடும். இது ஒட்டுமொத்த வடகிழக்கு உட்பட வடக்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி, ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்களுக்கு சிறந்த சாலை இணைப்பை வழங்கும்.

இது டூர்ஸ், டார்ஜிலிங், கேங்டாக் மற்றும் மிரிக் போன்ற சுற்றுலா தலங்களை எளிதாக அடைய உதவும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுற்றுலா செழிக்கும், தொழில்கள் மேம்படும், தேயிலை விவசாயிகளும் இந்த முழு பிராந்தியத்திலும் பயனடைவார்கள்.

நண்பர்களே

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒவ்வொருவரையும் நான் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். மிகவும் நன்றி. ஒரு நிகழ்ச்சி இங்கே முடிவடைந்தாலும், எனது உரை இன்னும் முழுமையடையவில்லை. எனது உரை தொடரும், எனவே, இங்கிருந்து, நாங்கள் திறந்த வெளி மைதானத்திற்கு செல்வோம். நான் உங்கள் அனைவரையும் அங்கு சந்திப்பேன், சுதந்திரமாக பேசுவேன்.

மிகவும் நன்றி.

***

ANU/AD/BS/DL


(Release ID: 2015221) Visitor Counter : 84