பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
"குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டங்கள் அதன் புகழ்பெற்ற பயணத்தில் ஒரு முக்கிய தருணமாகும்"
"இந்தியாவின் கால்நடை பராமரிப்பு வலிமையின் அடையாளமாக அமுல் மாறியுள்ளது"
"தொலைநோக்கு சிந்தனையுடன் எடுக்கப்படும் முடிவுகள் சில நேரங்களில் எதிர்காலச் சந்ததியினரின் தலைவிதியை எவ்வாறு மாற்றும் என்பதற்கு அமுல் ஒரு எடுத்துக்காட்டு"
"இந்தியாவின் பால்வளத்துறையின் உண்மையான முதுகெலும்பு மகளிர் சக்தி"
"பெண்களின் பொருளாதார சக்தியை அதிகரிக்க இன்று எங்களுடைய அரசு பன்முகத் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது"
"2030-ம் ஆண்டுக்குள் கோமாரி நோயை ஒழிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்"
"விவசாயிகளை எரிசக்தி உற்பத்தியாளர்களாகவும், உர விநியோகஸ்தர்களாகவும் மாற்றுவதில் அரசு கவனம் செலுத்துகிறது"
"கிராமப்புற பொருளாதாரத்தில் ஒத்துழைப்பின் நோக்கத்தை அரசு கணிசமாக விரிவுபடுத்துகிறது"
"நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டதன் ம
Posted On:
22 FEB 2024 12:43PM by PIB Chennai
அகமதாபாத் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், பொன்விழா புத்தகத்தை வெளியிட்டார்.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு என்பது தொழில்முனைவோர், விவசாயிகளின் உத்வேகம், வலுவான உறுதிப்பாடு ஆகியவற்றின் சான்றாகும். இது அமுல் ரக பால் பொருட்களை உலகின் வலிமைமிக்க ஒன்றாக மாற்றியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்திற்காக அனைவரையும் பாராட்டியதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் விவசாயிகளால் நடப்பட்ட ஒரு மரக்கன்று உலகம் முழுவதும் கிளைகளுடன் கூடிய ஒரு மாபெரும் மரமாக மாறியுள்ளது என்று கூறினார். வெண்மைப் புரட்சியில் கால்நடைச் செல்வத்தின் பங்களிப்பை அங்கீகரிப்பதை மறக்காமல் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் தோன்றிய போதிலும், அமுல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் போன்று எதுவும் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். "இந்தியாவின் கால்நடை பராமரிப்பு வலிமையின் அடையாளமாக அமுல் மாறியுள்ளது" என்று கூறிய பிரதமர், "அமுல் என்றால் நம்பிக்கை, வளர்ச்சி, பொதுமக்கள் பங்கேற்பு, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், காலத்திற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்று பொருள்" என்று தெரிவித்தார். தற்சார்பு இந்தியாவின் உத்வேகம் அமுல் என்று திரு மோடி குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமுல் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டார். இந்த அமைப்பின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், 18,000-க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு குழுக்கள், 36,000 விவசாயிகள் கொண்ட கட்டமைப்பு, ஒரு நாளைக்கு 3.5 கோடி லிட்டருக்கும் அதிகமான பால் பதப்படுத்துதல், ரூ .200 கோடிக்கும் அதிகமான தொகையை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஆன்லைன் மூலம் செலுத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். சிறிய கால்நடை வளர்ப்பாளர்களைக் கொண்ட இந்த அமைப்பு ஆற்றி வரும் மகத்தான பணி அமுல் மற்றும் அதன் கூட்டுறவுகளின் பலத்தை உருவாக்குகிறது என்று திரு மோடி கூறினார்.
தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட முடிவுகளால் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு அமுல் நிறுவனம் ஒரு உதாரணம் என்று பிரதமர் கூறினார். சர்தார் படேலின் வழிகாட்டுதலின் கீழ் கேடா பால் சங்கத்தில் அமுல் நிறுவனம் உருவானது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். குஜராத்தில் கூட்டுறவுகளின் விரிவாக்கத்துடன், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நடைமுறைக்கு வந்தது என்று அவர் தெரிவித்தார். "கூட்டுறவுகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமநிலைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இதுபோன்ற முயற்சிகள் 8 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக நம்மை மாற்றியுள்ளன" என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், தனிநபருக்கு பால் கிடைப்பது சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். உலக சராசரியான 2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இந்திய பால்வளத் துறை ஆண்டுக்கு 6 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அவர் கூறினார்.
ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள பால்வளத் துறையில் பெண்களின் முக்கியத்துவத்தைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். கோதுமை, அரிசி, கரும்பு ஆகியவற்றின் மொத்த விற்பனையை விட 70 சதவீதம் வரை மகளிரால் வழிநடத்தப்படும் பால்வளத் துறையின் வருவாய் அதிகமாக உள்ளது என்று அவர் கூறினார். "இந்த மகளிர் சக்திதான் பால்வளத் துறையின் உண்மையான முதுகெலும்பு என்று அவர் குறிப்பிட்டார். தற்போது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், அதன் பால்வளத் துறையின் வெற்றி மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது" என்று அவர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் பயணத்தில் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட பிரதமர், 30 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியில் 70 சதவீத முத்ரா திட்டத்தை பெண் தொழில்முனைவோர் பெற்றுள்ளனர் என்று கூறினார். மேலும், சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது என்றும், மேலும் அவர்கள் 6 லட்சம் கோடி மதிப்புள்ள நிதி உதவியைப் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார். 4 கோடி எண்ணிக்கையிலான பிரதமரின் நகர்ப்புற வீடுகளில் பெரும்பாலானவை அந்த வீட்டின் பெண்களின் பெயரில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். நமோ ட்ரோன் மகளிர் திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இதில் 15,000 சுய உதவிக் குழுக்களுக்கு ஆளில்லா விமானங்கள் வழங்கப்படுவதாகவும், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
குஜராத்தில் பால் கூட்டுறவு குழுக்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் திரு மோடி, பால் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்துவது குறித்தும் குறிப்பிட்டார். அமுல் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், கிராமங்களில் மைக்ரோ ஏடிஎம்களை அமைத்து, கால்நடை வளர்ப்போருக்கு அப்பகுதியில் பணம் எடுக்க உதவுவதையும் குறிப்பிட்டார். கால்நடை வளர்ப்போருக்கு ரூபே வேளாண் கடன் அட்டைகளை வழங்கும் திட்டங்கள் குறித்தும் அவர் விவரித்தார், பஞ்சபிப்லா, பனஸ்கந்தாவில் நடந்து வரும் பைலட் திட்டம் குறித்தும் தெரிவித்தார்.
இந்தியா தனது கிராமங்களில் வாழ்கிறது என்ற காந்தியடிகளின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த பிரதமர், ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். முந்தைய அரசு கிராமிய பொருளாதாரம் தொடர்பில் முன்னுரிமை அளிக்காமல் இருந்ததாகவும், தற்போதைய அரசு கிராமத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் முன்னுரிமை அளித்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். "சிறு விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்குதல், கால்நடை வளர்ப்பின் நோக்கத்தை விரிவுபடுத்துதல், கால்நடைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குதல், கிராமங்களில் மீன்வளம் மற்றும் தேனீ வளர்ப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது" என்று கூறிய பிரதமர், கால்நடை வளர்ப்போர், மீன் வளர்ப்போருக்கு வேளாண் கடன் அட்டைகளின் பலன்களை வழங்குவதாகக் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையில் நவீன விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது குறித்தும் அவர் பேசினார். கறவை மாடு இனங்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட தேசிய கோகுல் இயக்கம் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். கோமாரி நோயால் கால்நடைகள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கால்நடை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்புகளையும் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைச் சுட்டிக் காட்டிய பிரதமர், இதுவரை 7 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.15,000 கோடி மதிப்பிலான இலவசத் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 2030-ம் ஆண்டுக்குள் கோமாரி நோயை ஒழிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் பிரதமர் கூறினார்.
நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான முடிவையும் பிரதமர் குறிப்பிட்டார். உள்நாட்டு இனங்களை ஊக்குவிக்க தேசிய கால்நடை இயக்கத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை முடிவு செய்தது. விளை நிலங்களை தீவனத்திற்குப் பயன்படுத்த நிதி உதவி வழங்கப்படும். கால்நடை பாதுகாப்புக்கான காப்பீட்டு பிரீமியம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், "சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியின் போது தண்ணீர் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான விலங்குகள் உயிரிழந்ததை அவர் நினைவுகூர்ந்தார். "நர்மதா நீர் வந்த பிறகு இதுபோன்ற பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் வேளாண் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். "எதிர்காலத்தில் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்று பிரதமர் திரு மோடி உறுதிப்படுத்தினார், தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் நாடு முழுவதும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுவரும் அரசின் நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டார். "60-க்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகளை அரசு நிர்மாணித்ததன் மூலம் நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் பெரிதும் பயனடைந்துள்ளது" என்று அவர் கூறினார்.
"கிராமங்களில் உள்ள சிறு விவசாயிகளை நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைப்பதே எங்கள் முயற்சி" என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். "குஜராத்தில், சமீபத்திய ஆண்டுகளில் நுண்ணீர்ப் பாசனத்தின் நோக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது" என்று குறிப்பிட்ட அவர், சொட்டு நீர்ப்பாசனம் போன்ற திறமையான நீர்ப்பாசன முறைகளை ஊக்குவிப்பதற்கான அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கு அறிவியல் பூர்வமான தீர்வுகளை வழங்குவதற்காக லட்சக்கணக்கான வேளாண் வளமையங்கள் அமைக்கப்பட்டிருப்பதை திரு மோடி குறிப்பிட்டார். இயற்கை உரங்களைத் தயாரிப்பதில் விவசாயிகளுக்கு உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவற்றின் உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் திரு மோடி கூறினார்.
"விவசாயிகளை எரிசக்தி உற்பத்தியாளர்கள் மற்றும் உர விநியோகஸ்தர்களாக மாற்றுவதில் எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது" என்று பிரதமர் திரு மோடி கூறினார். கிராமப்புற பொருளாதாரங்களை மேம்படுத்துவதில் அரசின் பன்முக அணுகுமுறையை எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்புகளை வழங்குவதற்கு மேலதிகமாக, பண்ணை வளாகங்களில் சிறிய அளவிலான சூரிய ஆலைகளை நிறுவ உதவி நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் திரு மோடி விவரித்தார் வேளாண்மையில் நீடித்த எரிசக்தி தீர்வுகளுக்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கரிம உயிர்-வேளாண் வளங்கள் திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பு விவசாயிகளிடமிருந்து மாட்டுச் சாணத்தை வாங்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக பிரதமர் திரு மோடி அறிவித்தார், இது மின்சார உற்பத்திக்கு உயிரி எரிவாயு உற்பத்தி செய்ய உதவும் என்று அவர் கூறினார். "பனஸ்கந்தாவில் அமுல் நிறுவனம் உயிரி எரிவாயு ஆலைகளை நிறுவியது இந்தத் திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என்று பிரதமர் திரு மோடி எடுத்துரைத்தார். பால்வளத் துறையில் வெற்றிகரமான முயற்சிகளின் உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டினார்.
"கிராமப்புறப் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பின் நோக்கத்தை எங்கள் அரசு கணிசமாக விரிவுபடுத்துகிறது" என்று கூறிய பிரதமர் திரு மோடி, பொருளாதார வளர்ச்சியின் இயக்குபவர்களாக கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தார். "முதல் முறையாக, மத்திய அளவில் கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டுள்ளது" என்று பிரதமர் திரு மோடி சுட்டிக்காட்டினார். "நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டதன் மூலம், கூட்டுறவு இயக்கம் உத்வேகம் பெற்று வருகிறது" என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற துறைகளில், இந்தச் சங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. "எங்கள் அரசாங்கம் 'மேட் இன் இந்தியா' முன்முயற்சியின் மூலம் கூட்டுறவு சங்கங்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கிறது" என்று பிரதமர் திருமோடி உறுதிப்படுத்தினார் வரி சலுகைகள், நிதியுதவி மூலம் அரசின் ஆதரவை அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டுறவு சங்கங்கள் வரிச் சலுகைகள் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உற்பத்தியின் ஒரு பகுதியாக இருக்க ஊக்குவிக்கப்படுகின்றன. 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் 8 ஆயிரம் அமைப்புகள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும், அவை சிறு விவசாயிகளின் பெரிய அமைப்புகள் என்றும், "சிறு விவசாயிகளை உற்பத்தியாளர்கள் என்ற நிலையிலிருந்து வேளாண் தொழில்முனைவோராக மாற்றும் நோக்கம்" கொண்டவை என்றும் அவர் கூறினார். தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் பிற கூட்டுறவு அமைப்புகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவிகளைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வேளாண் உள்கட்டமைப்புக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மூலம் கால்நடை உள்கட்டமைப்புக்கு சாதனை முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து பிரதமர் பேசினார். பால் கூட்டுறவு சங்கங்கள் இப்போது வட்டியில் அதிக தள்ளுபடி பெறுகின்றன, என்று தெரிவித்தார். பால் உற்பத்தி ஆலைகளை நவீனப்படுத்த அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டு வருகிறது என்று அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ், சபர்கந்தா பால் ஒன்றியத்தின் இரண்டு பெரிய திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 800 டன் கால்நடை தீவனத்தை உற்பத்தி செய்யும் நவீன ஆலையும் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
"நான் அனைவரும் இணைவோம்" என்று கூறிய பிரதமர், "நான் அனைவரும் உயர்வோம் என்ற நம்பிக்கையுடன் இணைவோம்" என்று குறிப்பிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்று 100-வது ஆண்டை எட்டும் போது அமுல் நிறுவனம் தனது 75-வது ஆண்டை நிறைவு செய்யும் என்று குறிப்பிட்ட பிரதமர், வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்த அமைப்பின் பங்கை எடுத்துரைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் அமுல் நிறுவனம் தனது ஆலைகளின் பதப்படுத்தும் திறனை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இன்று அமுல் நிறுவனம் உலகின் எட்டாவது பெரிய பால் நிறுவனமாக உள்ளது. வெகுவிரைவில் அதை உலகின் மிகப்பெரிய பால் நிறுவனமாக மாற்ற வேண்டும். அரசு எல்லா வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இது மோடியின் உத்தரவாதம் என்று 50 ஆண்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர், தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனத்தின் தலைவர் திரு ஷமல் பி படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
***
ANU/PKV/IR/AG/KV
(Release ID: 2008064)
Visitor Counter : 127
Read this release in:
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam