பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் செய்தியாளர்களிடையே உரையாற்றினார்
"குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் வழிகாட்டுதல், திருமதி நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் ஆகியவை மகளிர் சக்தியின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது"
"ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், சீர்குலைக்கும் நடத்தை தெளிவின்மைக்குள் ஆழ்த்திவிடும்"
"நம்மால் இயன்றதை சிறப்பாக செயல்படுத்தவும், நமது சிந்தனைகளால் அவையை வளப்படுத்தவும், நாட்டை உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் எடுத்துச்செல்லவும் பாடுபடுவோம்"
"தேர்தல் நேரம் நெருங்கும்போது, முழு பட்ஜெட் சமர்ப்பிக்கப்படாது, நாங்களும் அதே பாரம்பரியத்தைப் பின்பற்றி, புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் முழு பட்ஜெட் அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்போம்"
Posted On:
31 JAN 2024 12:04PM by PIB Chennai
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர்
திரு நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசினார்.
புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை நினைவுகூர்ந்து, முதல் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துரைத்தார். "மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது நம் நாட்டிற்கான ஒரு முக்கிய தருணம்" என்று திரு மோடி கூறினார். ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மகளிர் சக்தியின் வலிமை, வீரம், உறுதிப்பாடு ஆகியவற்றை நாடு ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் உரை, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இது மகளிருக்கு அதிகாரமளித்தலின் கொண்டாட்டம் என்று விவரித்தார்.
கடந்த பத்தாண்டுகளை நினைவுகூர்ந்த பிரதமர் திரு மோடி, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பையும் அங்கீகரித்தார். எனினும், ஜனநாயக அம்சங்களிலிருந்து விலகி, குழப்பம், இடையூறுகளில் ஈடுபடுபவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "ஜனநாயகத்தில் விமர்சனமும் எதிர்ப்பும் அவசியம். ஆனால் ஆக்கபூர்வமான கருத்துகளால் அவையை வளப்படுத்தியவர்கள்தான் பெரிய அளவிலான நினைவில் கொள்ளப்படுகிறார்கள்" என்று பிரதமர் கூறினார். “இடையூறு ஏற்படுத்தியவர்களை யாரும் நினைவில் கொள்வதில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளின் நிகழ்வு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்தும் விவரித்தார். "இங்கு பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் வரலாற்றின் ஏடுகளில் எதிரொலிக்கும்" என்று அவர் கூறினார். "ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், சீர்குலைக்கும் நடத்தை தெளிவின்மைக்குள் ஆழ்த்திவிடும்" என்று கூறி, உறுப்பினர்கள் முறையாக செயல்படுமாறு அழைப்பு விடுத்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நேர்மறையான முத்திரையைப் பதிக்க இந்த வாய்ப்பை மதிப்புமிக்க அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு மோடி கேட்டுக் கொண்டார். நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், "நம்மால் இயன்றதை சிறப்பாக செயல்படுத்தவும், நமது சிந்தனைகளால் அவையை வளப்படுத்தவும், நாட்டை உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் எடுத்துச்செல்லவும் பாடுபடுவோம்" என்று கூறினார்.
எதிர்வரும் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, "வழக்கமாக, தேர்தல் நேரம் நெருங்கும்போது, முழு பட்ஜெட் சமர்ப்பிக்கப்படாது. நாங்களும் அதே பாரம்பரியத்தைப் பின்பற்றி, புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் முழு பட்ஜெட்டை உங்கள் முன் சமர்ப்பிப்போம்” என்று கூறினார். இந்த முறை, நாட்டின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், சில வழிகாட்டும் அம்சங்களுடன் நாளை தனது பட்ஜெட்டை நம் அனைவரது முன்னிலையில் தாக்கல் செய்ய உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
"மக்களின் ஆசீர்வாதத்தால் உந்தப்பட்டு, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வளர்ச்சிக்கான இந்தியாவின் பயணம் தொடரும்" என்று பிரதமர் திரு மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2000755)
ANU/SMB/IR/AG/RR
(Release ID: 2000795)
Visitor Counter : 113
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam