பிரதமர் அலுவலகம்

தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு


ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர்களின் நிலுவைத் தொகைக்கான காசோலை ஒப்படைப்பு

கார்கோன் மாவட்டத்தில் 60 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

"தொழிலாளர்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் அன்பின் தாக்கத்தை நான் அறிவேன்"

"ஏழைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு கண்ணியம் மற்றும் மரியாதையை வழங்குவது இந்த அரசின் முன்னுரிமை. வளமான இந்தியாவுக்குப் பங்களிக்கும் திறன் கொண்ட, அதிகாரமளிக்கப்பட்ட தொழிலாளர்களை உருவாக்குவது எங்கள் குறிக்கோள்”

"தூய்மையிலும் உணவுத் தொழில் போன்ற துறைகளிலும் இந்தூர் முன்னணியில் உள்ளது"

"அண்மையில் நடைபெற்ற தேர்தலின் போது வழங்கப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்றும் நோக்கில் மத்தியப் பிரதேச மாநில அரசு செயல்பட்டு வருகிறது"

“மத்தியப் பிரதேச மாநில மக்கள், மோடியின் உத்தரவாத வாகனத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்”

Posted On: 25 DEC 2023 12:51PM by PIB Chennai

தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம்  நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25-12-2023) காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ. 224 கோடிக்கான காசோலையை இந்தூரில் உள்ள ஹுக்கும்சந்த் ஆலையின் அதிகாரப்பூர்வ அதிகாரி மற்றும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களிடம் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சி  ஹுக்கும்சந்த் ஆலைத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்தது. கார்கோன் மாவட்டத்தில் 60 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்றைய நிகழ்வு தொழிலாளர் சகோதர சகோதரிகளின் பல ஆண்டுகால தவம், கனவுகள் மற்றும் உறுதியின்  விளைவாகும் என்று கூறினார். அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் இந்த நிகழ்வு நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் தாம் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ஏழைகள் மற்றும் பின்தங்கிய தொழிலாளர்களின் நலனில் கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மத்தியப்  பிரதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரட்டை இன்ஜின் அரசுக்கு தொழிலாளர்கள் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்ஆசீர்வாதங்கள் மற்றும் தொழிலாளர்களின் அன்பின் தாக்கத்தை தாம் நன்கு அறிந்திருப்பதாகக் கூறிய பிரதமர், மாநிலத்தில் பதவியேற்றுள்ள புதிய அரசு வரும் ஆண்டுகளில் இதுபோன்ற பல சாதனைகளைச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக பண்டிகைக் காலத்தில் கூடுதல் உற்சாகம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்மத்தியப் பிரதேசத்துடன் அடல் பிகாரி வாஜ்பாயின் தொடர்பையும் பிரதமர் எடுத்துரைத்தார். அவரது பிறந்த நாள் நல்லாட்சி தினமாகவும் கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் கூறினார். தொழிலாளர்களுக்கு ரூ. 224 கோடியை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு பொன்னான எதிர்காலம் காத்திருக்கிறது என்றும், இன்றைய நாள் தொழிலாளர்களின் நீதிக்கான நாளாக நினைவுகூரப்படும் என்றும் பிரதமர் கூறினார். தொழிலாளர்களின் பொறுமை மற்றும் கடின உழைப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள்  என நான்கு பிரிவினரைக் குறிப்பிட்ட பிரதமர், சமூகத்தில் ஏழைகளை மேம்படுத்துவதற்காக மத்தியப் பிரதேச அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டினார். ஏழைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு கண்ணியம் மற்றும் மரியாதையை வழங்குவது இந்த அரசின் முன்னுரிமை என்று அவர் கூறினார். வளமான இந்தியாவுக்குப் பங்களிக்கும் திறன் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட தொழிலாளர் சக்தியை உருவாக்குவதே மத்திய அரசின் குறிக்கோள்  என்று அவர் கூறினார்.

தூய்மையிலும் உணவு வகைகள் போன்ற தொழில் துறைகளிலும் இந்தூர் முதன்மையான இடத்தை வகிக்கிறது என்று  குறிப்பிட்ட பிரதமர், இந்தூரின் தொழில்துறையில்  ஜவுளித் துறையும் முக்கியப் பங்கு வகிப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் மகாராஜா துகோஜி ராவ் துணி சந்தை, ஹோல்கர் வம்சத்தினர் நிறுவிய பருத்தி ஆலை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் மால்வா பருத்தியின் பிரபலத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். இவை இந்தூரின் ஜவுளிப் பொற்காலம் என்றும் முந்தைய அரசுகள் இவற்றைப் புறக்கணித்ததாகவும் பிரதமர் கூறினார். இரட்டை இன்ஜின் அரசு இந்தூரின் பழைய பெருமையை மீட்டெடுக்க முயற்சிக்கிறது என்று அவர் கூறினார். போபால் - இந்தூர் இடையே முதலீட்டுத் தொழில் வழித்தடக் கட்டுமானம், இந்தூர் - பிதாம்பூர் பொருளாதார வழித்தடம், பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா, விக்ரம் உத்யோக்புரியில் மருத்துவ சாதன பூங்கா, தாரில் பிரதமரின் மித்ரா ஜவுளிப் பூங்கா, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் இந்தூர் பகுதிக்கான பிற பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

மத்தியப் பிரதேசத்தின் இயற்கை அழகு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்தூர் உட்பட மாநிலத்தின் பல நகரங்கள் வளர்ச்சிக்கும் இயற்கைச் சூழல் பாதுகாப்பிற்கும் இடையே  சமநிலையைக் கடைப்பிடிப்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டுகளாக மாறியுள்ளன என்றார். ஆசியாவின் மிகப் பெரிய வேளாண் உயிரி எரிவாயு  (கோபர்தன்) ஆலை மற்றும் நகரத்தில் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை பிரதமர் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார். கார்கோன் மாவட்டத்தில் 60 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டியதன் மூலம் ரூ. 4 கோடி மின் கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். ஆலைக்கான நிதியை ஏற்பாடு செய்யும் முயற்சியில் பசுமை பத்திரங்கள் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்ட பிரதமர், இயற்கையைப் பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பை இது உறுதி செய்யும் என்றார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலின் போது வழங்கப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்றும் நோக்கில் மாநில அரசு செயல்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார். அரசுத் திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய யாத்திரை நடத்தப்படுவதை எடுத்துரைத்த அவர் மத்தியப் பிரதேசத்தின் ஒவ்வொரு மூலையையும் இது சென்றடைகிறது என்றார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்த மாநிலத்தில் இந்த யாத்திரையின் தொடக்கத்தில் தாமதம் ஏற்பட்ட போதிலும், தற்போது 600 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இது லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கிறது என்றும் அவர் கூறினார். மோடியின் உத்தரவாத வாகனத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்தியப் பிரதேச மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர்களின் மகிழ்ச்சியான முகங்களும், தொழிலாளர்கள் அணிவிக்கும் மாலைகளின் நறுமணமும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுதில் அரசை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று கூறிப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் காணொலி காட்சி  மூலம் கலந்து கொண்டார்.

பின்னணி

1992-ம் ஆண்டில் இந்தூரில் உள்ள ஹுக்கும்சந்த் ஆலை மூடப்பட்ட பின்னர் ஹு க்கும்சந்த் ஆலையின் தொழிலாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெற நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தினர். இது தொடர்பாக அண்மையில், மத்தியப் பிரதேச அரசு ஒரு சிறந்த முயற்சியை எடுத்ததுநீதிமன்றம், தொழிலாளர் சங்கங்கள், ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அங்கீகரிக்கும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் வெற்றிகரமாக ஒரு தீர்வு எட்டப்பட்டது. மத்தியப் பிரதேச அரசு அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்துவது, ஆலை நிலத்தை கையகப்படுத்துவது, அதனைக்  குடியிருப்பு மற்றும் வணிக இடமாக மேம்படுத்துவது ஆகியவை தீர்வுத் திட்டத்தில் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்தூர் மாநகராட்சியால் கார்கோன் மாவட்டத்தின் சாம்ராஜ் மற்றும் அசுகேடி கிராமங்களில் நிறுவப்படவுள்ள 60 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ. 308 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய சூரிய மின் நிலையத்தை நிறுவுவதன் மூலம் இந்தூர் மாநகராட்சி மாதத்திற்கு சுமார் ரூ. 4 கோடி மின் கட்டணத்தை மிச்சப்படுத்தும். சூரிய சக்தி ஆலைக் கட்டுமானத்திற்கு நிதி திரட்டுவதற்காக, இந்தூர் மாநகராட்சி ரூ. 244 கோடி மதிப்புள்ள பசுமை பத்திரங்களை வெளியிட்டது. பசுமை பத்திரங்களை வெளியிட்ட நாட்டின் முதல் நகர்ப்புற அமைப்பு இந்தூர் ஆகும். 29 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் ரூ. 720 கோடி மதிப்பபுக்கு  இதில் சந்தா செலுத்தியதால் இது அமோக வரவேற்பைப் பெற்றது, இது பத்திரம் வெளியிடப்பட்ட தொடக்க மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாகும். *

*****

ANU/SMB/PLM/KPG



(Release ID: 1990249) Visitor Counter : 89