பிரதமர் அலுவலகம்

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்


'அமிர்த காலப் பார்வை 2047' - இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான செயல்திட்டம் வெளியீடு

ரூ.23,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

குஜராத்தின் தீன் தயாள் துறைமுக ஆணையத்தில் டுனா டெக்ரா ஆழ வரைவு முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்

கடல்சார் துறையில் உலகளாவிய மற்றும் தேசிய ஒத்துழைப்புப்புக்கான 300-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தொடங்கிவைத்தார்

"மாறிவரும் உலக ஒழுங்கில், உலகம் இந்தியாவை புதிய எதிர்பார்ப்புகளுடன் பார்க்கிறது"

'செழிப்புக்குத் துறைமுகங்கள் - முன்னேற்றத்திற்குத் துறைமுகங்கள்' என்ற அரசின் தொலைநோக்குப் பார்வை, அடித்தளத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது

‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம் – உலகுக்காக உற்பத்தி செய்வோம்' என்பதே நமது தாரக மந்திரம்

" பசுமைப் பூமியை உருவாக்குவதற்கான ஊடகமாக நீலப் பொருளாதாரம் இருக்கும் வகையில் எதிர்காலத்தை நோக்கி நாம் நகர்கிறோம்"

"இந்தியா அதன் அதிநவீன உள்கட்டமைப்பு மூலம் உலகளாவிய கப்பல் மையமாக மாறுவத

Posted On: 17 OCT 2023 11:54AM by PIB Chennai

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பதிப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.10.2023) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047 என்ற செயல்திட்ட வரைவையும் பிரதமர் வெளியிட்டார். இந்த எதிர்காலத் திட்டத்திற்கு இணங்க, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047-உடன் இணைந்த ரூ. 23,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து பல்வேறு  திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் 3-வது பதிப்பிற்கு அனைவரையும் வரவேற்றார். 2021-ம் ஆண்டில் உச்சிமாநாடு நடைபெற்றபோது கொவிட் தொற்றுநோயின் நிச்சயமற்ற தன்மையால் முழு உலகமும் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை நினைவுகூர்ந்தார். இன்று ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது என்று அவர் கூறினார். மாறிவரும் உலக ஒழுங்கில், உலகம் புதிய விருப்பங்களுடன் இந்தியாவை நோக்குவதாகப் பிரதமர் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை உலகம் எதிர்கொள்ளும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் கூறினார். உலகளாவிய வர்த்தகத்தில் கடல் வழித்தடத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், கொவிடுக்குப் பிந்தைய உலகில் நம்பகமான உலகளாவிய விநியோகத் தொடரின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்தியாவின் கடல்சார் திறன்கள் எப்போதும் உலகிற்குப் பயனளித்துள்ளன என்பதற்கு வரலாறு சான்றாக உள்ளது என்று பிரதமர் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் இத்துறையை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முறையான நடவடிக்கைகளைப் பிரதமர் பட்டியலிட்டார். அண்மையில் முன்மொழியப்பட்டுள்ள இந்தியா-மத்திய கிழக்கு -ஐரோப்பா பொருளாதார வழித்தடம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும் ஜி 20 கருத்தொற்றுமையால் இது ஏற்பட்டது என்றும், பிரதமர் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் பட்டுவழிப்பாதை எனும் ஆசிய - ஐரோப்பிய வர்த்தகப் பாதை பல நாடுகளின் பொருளாதாரத்தை மாற்றியதைப் போல, இந்த வழித்தடமும் உலகளாவிய வர்த்தகத்தை மாற்றும் என்று அவர் கூறினார்.  அடுத்தத் தலைமுறை பெரிய  துறைமுகங்கள், சர்வதேச கொள்கலன் மாற்ற துறைமுகங்கள், தீவு மேம்பாடு, உள்நாட்டு நீர்வழிகள், பல-மாதிரி மையம் ஆகியவை இதன் கீழ் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். இது வணிகச் செலவைக் குறைப்பதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுத்து சரக்குப் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதோடு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் கூறினார். முதலீட்டாளர்கள் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறவும், இந்தியாவுடன் இணையவும் சிறந்த வாய்ப்பு உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற உறுதியை நிறைவேற்ற இன்றைய இந்தியா செயல்பட்டு வருகிறது என்பதைப் பிரதமர் மோடி மீண்டும் எடுத்துரைத்தார். ஒவ்வொரு துறையிலும் அரசு புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் கடல்சார் துறையை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி குறிப்பிட்டார். கடந்தப் பத்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள முக்கியத் துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகியுள்ளது என்றும், பெரிய கப்பல்களுக்கான போக்குவரத்து நேரம் 2014 ஆம் ஆண்டில் 42 மணி நேரமாக இருந்தது என்றும் தற்போது அது  24 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். துறைமுக இணைப்பை அதிகரிக்க புதிய சாலைகள் அமைக்கப்படுவது பற்றி கூறிய அவர், கடலோர உள்கட்டமைப்பை வலுப்படுத்த சாகர் மாலா திட்டம் செயல்படுத்தப்படுவது பற்றியும் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள் வேலை வாய்ப்புகளைப் பன்மடங்கு அதிகரிப்பதுடன் வாழ்க்கையை எளிதாக்குகின்றன என்று பிரதமர் கூறினார்.

செழிப்புக்குத் துறைமுகங்கள் மற்றும் முன்னேற்றத்திற்குத் துறைமுகங்கள் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வை, அடித்தளத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், "உற்பத்தித்திறனுக்குத் துறைமுகங்கள்" என்ற மந்திரமும் ஊக்குவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். சரக்குப் போக்குவரத்துத் துறையை மிகவும் திறன் வாய்ந்த்தாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதன் மூலம் பொருளாதாரத் திறனை அதிகரிக்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவில் கடலோரக் கப்பல் போக்குவரத்து முறைகள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் கடலோர சரக்குப் போக்குவரத்து இரட்டிப்பாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் செலவு குறைந்த சரக்குப் போக்குவரத்து நடைமுறைகள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் மேம்பாடு குறித்துப் பேசிய பிரதமர், தேசிய நீர்வழிப் பாதைகளில் சரக்குக் கையாளும் திறன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் சரக்குப்போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்க்கும் துறையிலும் அரசு கவனம் செலுத்துவதாகப் பிரதமர் கூறினார். உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரந்த் இந்தியாவின் திறனுக்கு சான்றாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வரும் பத்தாண்டுகளில் கப்பல் கட்டும் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று அவர் கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் உலகுக்காக உற்பத்தி செய்வோம் என்பதே நமது தாரக மந்திரம் என்று பிரதமர் கூறினார். கடல்சார் குழுமங்கள் மூலம் இத்துறையில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க அரசு முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்தார். பல இடங்களில் கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் மையங்கள் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். கப்பல் மறுசுழற்சி துறையில் இந்தியா ஏற்கனவே இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தத் துறைக்கான நிகர பூஜ்ய உத்தியின் மூலம் இந்தியாவில் உள்ள முக்கியத் துறைமுகங்களைக் கரியமிலவாயு அற்றதாக மாற்றும்  முயற்சி குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  பசுமையான பூமியை உருவாக்குவதற்கான ஊடகமாக நீலப் பொருளாதாரம் இருக்கும் வகையிலான எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடல்சார் துறையில் உள்ள பெரிய நிறுவனங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான பணிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அகமதாபாதில் உள்ள குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரமான கிஃப்ட் சிட்டி, ஒரு நிதி சேவையாகக் கப்பல் குத்தகை நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது என்றார். அதே நேரத்தில் தள்ளுபடிகளையும் அது வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகளாவிய 4 கப்பல் குத்தகை நிறுவனங்கள் குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தின்  சர்வதேச நிதி சேவைகள் மையமான  கிஃப்ட்- ஐ.எஃப்.எஸ்.சி-யில் பதிவு செய்திருப்பது குறித்து பிரதமர்  மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிற கப்பல் குத்தகை நிறுவனங்களையும் கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி.யில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தியா, பரந்த கடற்கரை, வலுவான நதிக்கரைச் சூழல் அமைப்பு, வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இது கடல்சார் சுற்றுலாவுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த லோத்தல் கப்பல் கட்டும் தளம் உலகப் பாரம்பரியம் வாய்ந்தது என்றும், அதைக் 'கப்பலின்  தொட்டில்' என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த உலகப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க மும்பைக்கு அருகிலுள்ள லோத்தலில் ஒரு தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், கட்டி முடிக்கப்பட்டவுடன் இதனை மக்கள் பார்வையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் உலகின்  மிக நீளமான நதி கப்பல் சேவை பற்றி பிரதமர் குறிப்பிட்டார். மும்பையில் அமைக்கப்படும் சர்வதேசக் கப்பல் முனையம்,  விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் உள்ள நவீன கப்பல் முனையங்கள் குறித்தும் அவர் பேசினார். இந்தியா அதன் அதிநவீன உள்கட்டமைப்பு மூலம் உலகளாவிய கப்பல் மையமாக மாறுவதை நோக்கிச் செல்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

வளர்ச்சி, மக்கள்தொகை, ஜனநாயகம், தேவை ஆகிய அனைத்தையும் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறி வரும் இந்த நேரத்தில், இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என்று கூறிய திரு நரேந்திர மோடி, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வந்து வளர்ச்சிப் பாதையில் இணையுமாறு அழைப்பு விடுத்துத் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்நிகழ்ச்சியின் போது, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான நீண்டகால வரைவுத் திட்டமான அமிர்த காலப் பார்வை 2047-ஐப் பிரதமர் வெளியிட்டார். துறைமுக வசதிகளை மேம்படுத்துதல், நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல், சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட உத்திசார்ந்த முன்முயற்சிகளை இந்தத் திட்டம் சுட்டிக் காட்டுகிறது. இந்த எதிர்காலத் திட்டத்திற்கு இணங்க, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகால தொலைநோக்குப் பார்வை 2047 உடன் இணைந்த ரூ. 23,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுக ஆணையத்தில் ரூ.4,500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள அனைத்துப் பருவநிலைக்கும் உகந்த ஆழமான துனா தெக்ரா முனையத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த அதிநவீன பசுமை முனையம் அரசு - தனியார் துறை கூட்டுச்செயல்பாட்டு முறையில் உருவாக்கப்படும். சர்வதேச வர்த்தக மையமாக உருவெடுக்கும் இந்த முனையம்,  இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்  வழியாக  இந்திய வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக செயல்படும். கடல்சார் துறையில் உலகளாவிய மற்றும் தேசியக் கூட்டு செயல்பாட்டுக்கான ரூ. 7 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள 300-க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பிரதமர் இந்தத் திட்டத்தின்போது தொடங்கிவைத்தார்.

இந்த உச்சிமாநாடு, நாட்டின் மிகப்பெரிய கடல்சார் நிகழ்வாகும். இதில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா (மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, பிம்ஸ்டெக் பிராந்தியம் உட்பட) நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உலகெங்கிலும் உள்ள அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில்  உலகளாவிய நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் இதரப் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், எதிர்காலத் துறைமுகங்கள் உட்பட, கடல்சார் துறையின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்தல்,  கடலோரக் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து,  கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி,  நிதி, காப்பீடு மற்றும் நடுவர் மன்றம், கடல்சார் குழுமங்கள், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம், கடல்சார் பாதுகாப்பு, மற்றும் கடல்சார் சுற்றுலா போன்றவை இந்த உச்சி மாநாட்டின் விவாதப் பொருள்களில் அடங்கும். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தையும் இந்த உச்சிமாநாடு வழங்கும்.

முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2016 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்றது. இரண்டாவது கடல்சார் உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

***

 

SMB/ANU/PLM/RS/KPG



(Release ID: 1968424) Visitor Counter : 268