பிரதமர் அலுவலகம்
முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டமான 'சங்கல்ப் சப்தா' திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
30 SEP 2023 6:29PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், நித்தி ஆயோக்கின் அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு வட்டாரங்களிலிருந்து இணைந்துள்ள லட்சக்கணக்கான நண்பர்கள் மற்றும் இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள பிரதிநிதிகளை நான் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக நித்தி ஆயோக்கை நான் குறிப்பாக பாராட்டுகிறேன். மேலும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பாரத் மண்டபத்தில் இப்போது தொலைதூரப் பகுதிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மக்கள் உள்ளீர்கள். ஒரு மாதத்திற்கு முன்பு உலக விவகாரங்களைத் தீர்மானிக்க கூடிய ஜி 20 உச்சிமாநாடு நடைபெற்ற இடத்தில் இதுபோன்ற கூட்டம் நடைபெறுகிறது. இது அரசின் வளர்ச்சியை நோக்கிய சிந்தனையின் அறிகுறியாகும். அடிமட்டத்தில் மாற்றத்தை உருவாக்குபவர்களைப் பாராட்டுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்த கூட்டம் ஜி 20 க்கு சற்றும் சளைத்ததல்ல.
இந்த நிகழ்ச்சி இந்திய மக்களின் கூட்டு மனப்பான்மைக்கான வெற்றி. அனைவரின் முயற்சி என்ற உணர்வின் அடையாளமாகும். இந்தத் திட்டம் இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. அர்ப்பணிப்பின் மூலம் வெற்றியடைதல் என்ற தத்துவம் இதில் உள்ளார்ந்துள்ளது.
நண்பர்களே,
சுதந்திர இந்தியாவின் சிறந்த 10 திட்டங்களின் பட்டியலில், ஆர்வமுள்ள மாவட்டத் திட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். 112 மாவட்டங்களில் உள்ள சுமார் 25 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற விரும்பும் லட்சிய மாவட்டத் திட்டம் மாற்றியுள்ளது. இந்த திட்டத்தின் வெற்றி, ஆர்வமுள்ள வட்டாரத் திட்டத்தின் அடிப்படையாக அமைந்தது. இந்த திட்டத்திற்கு உலகளாவிய பாராட்டுகள் கிடைத்தன. இத்திட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருப்பதாலும், அதில் செயலாற்றும் மக்கள் மகத்தானவர்கள் என்பதாலும் இத்திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
சிறிது நேரத்திற்கு முன்பு 3 வட்டார அளவிலான அதிகாரிகளுடன் உரையாடினேன். அடிமட்டத்தில் பணியாற்றுபவர்களின் மன உறுதியைப் பார்த்த பிறகு எனது தன்னம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தங்கள் குழுவில் ஒரு உறுப்பினராக கள அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புகிறேன். திட்டத்தின் குறிக்கோள்கள் குறித்த காலத்திற்கு முன்பே அடையப்படும் என்று நம்புகிறேன். அவர்களின் திறமைகளை சோதிப்பதாக அல்லாமல் அடிமட்டத்தில் கிடைக்கும் வெற்றிகள் அவர்களுக்கு அயராது உழைக்க அதிக ஆற்றலையும் உற்சாகத்தையும் கொடுப்பதால் இந்த திட்டம் தன்னால் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். முன்னேற விரும்பும் லட்சிய மாவட்டத் திட்டத்தின் முன்னேற்றத் தகவல்கள் நமக்கு ஒரு உத்வேகமாக மாறியது.
முன்னேற விரும்பும் லட்சிய மாவட்டத் திட்டம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பீடு மகிழ்ச்சி அளிக்கிறது. திட்டம் எளிய உத்தியைக் கொண்டுள்ளது. நிர்வாகத்தின் சவாலான பணிகளைச் சந்திப்பதற்கான படிப்பினைகள் இவை. முழுமையான வளர்ச்சியின் முக்கியத்துவம் அவசியம். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் கவனிக்கப்பட வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது இல்லாவிட்டால் எண்களின் மூலமாக மட்டுமே வளர்ச்சியைக் காட்ட முடியும். அதில் அடிப்படை வளர்ச்சி நடைபெறாது. அதனால் ஒவ்வொரு அடிமட்ட அம்சத்தையும் உள்ளடக்கிய வகையில் நாம் பயணிக்க வேண்டியது முக்கியம்.
ஒவ்வொரு மாநிலத்தின் விரைவான வளர்ச்சியையும் அங்குள்ள பின்தங்கிய மாவட்டங்களையும் கணக்கில் கொண்டு இரண்டு புதிய கோணங்களில் துறைச் செயலாளர்கள் பணியாற்ற வேண்டும். நாட்டில் அந்தந்த துறைகளில் பின்தங்கியுள்ள 100 வட்டாரங்களை கண்டறிந்து நிலைமையை மேம்படுத்த பாடுபட வேண்டும். அடையாளம் காணப்பட்ட 100 வட்டாரங்கள் நாட்டின் சராசரியை விட அதிகமான வளர்ச்சியை எட்டும்போது அனைத்து அளவுருக்களும் மாறும். மத்திய அரசின் அனைத்து துறைகளும் மேம்பாட்டிற்கு இடமளிக்கும் வட்டாரங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதில் மாநில அரசுகளின் பங்கு முக்கியமானது. மிகவும் பின்தங்கிய 100 கிராமங்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்துவதற்கான மாதிரியை உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு உள்ளது. நகரங்கள் வளர்ச்சி அடைந்தவை என்றும் கிராமங்கள் பின்தங்கியவை என்றும் அர்த்தமல்ல. அரசு 140 கோடி மக்களுடன் இணைந்து செல்ல விரும்புகிறது. ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தின் போது மாவட்டங்களுக்கு இடையிலான ஆரோக்கியமான போட்டி இருந்தது. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த மாவட்டம் ஒரு காலத்தில் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான பணி மாற்ற இடமாகக் கருதப்பட்டது. ஆனால் பூகம்பத்திற்குப் பிறகு அங்கு பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் இப்போது மிகவும் மரியாதைக்குரிய இடமாக அது மாறியுள்ளது. நாட்டின் ஆர்வமுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றப் பணிகளுக்காக இளம் அதிகாரிகளைப் பாராட்டுகிறேன். முன்னேற விரும்பும் ஆர்முள்ள வட்டாரங்கள் திட்டத்திற்காக, வட்டார அளவில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவித்து அதன் மூலம் இளம் அதிகாரிகளை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்.
நண்பர்களே,
அரசின் வரவுசெலவுத் திட்டத்தைப் பொறுத்தவரை உற்பத்தி நோக்குநிலையில் இருந்து விளைவுக்கு மாறுவது முக்கியம். இது ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. எனது பரந்த நிர்வாக அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது பட்ஜெட் மட்டுமே மாற்றத்திற்கான காரணி அல்ல என்று தெரிகிறது. வளர்ச்சிக்கு வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவை முக்கியம். திட்டங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் உரிய முறையில் செயல்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பான செயல்பாட்டு அம்சங்கள் குறித்தும் இங்கு குறிப்பிட வேண்டும். வளங்களை மிகுதியாகப் பயன்படுத்துவது அவை வீணாவதற்கு வழிவகுக்கிறது. அதே நேரத்தில் அதைத் தேவைப்படும் பகுதிகளுக்கு வழங்கினால், பயன்பாடு மிகவும் சிறந்தததாக மாறும். தேவைப்படும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வளங்கள் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தை நம்பும் மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டியது அவசியம். மகத்தான பணிகளை நிறைவேற்றுவதில் சமூகத்தின் வலிமை முக்கியமானது. மக்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். ஒவ்வொரு துறைக்கும் ஒரு தலைமை தேவை. 'சங்கல்ப் சப்தா' திட்டத்தில் குழு மனப்பான்மையின் அம்சம் புகுத்தப்படுகிறது. இது தலைவர்களின் தோற்றத்திற்கும் மக்கள் பங்களிப்பின் மூலமான புதிய யோசனைகளுக்கும் வழிவகுக்கும். இயற்கைப் பேரிடரின்போது சமூகம் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பது பாராட்டுக்குரியது. மக்களின் பங்கேற்பு உணர்வைத் தூண்டுவதற்காக வட்டார அளவில் கூட்டாகச் செயல்பட வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவது தொடர்பான விழாக்கள் நடத்தப்படுவது போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மக்களின் பங்கேற்பு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.
அதேபோன்று, அரசாங்கத்தின் ராஜதந்திர முயற்சிகளுக்கு மக்களின் செயல்பாடுகள் ஆதரவாக உள்ளது. சமூக பங்கேற்பு சக்தி வாய்ந்தது. சங்கல்ப் சப்தாவை சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வளங்களைத் திரட்டி, அதிகபட்ச தாக்கத்திற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் சிக்கல்கள் நீங்கி, அரசின் சிறந்த அணுகுமுறை முழுவதையும் புகுத்த முடியும். தகவல் பரிமாற்றத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. சில இடங்களில் நேரடியாக நாம் பங்கேற்பது சிறப்பானது. 'சங்கல்ப் சப்தா'வின் போது சக ஊழியர்களுடன் ஒரு வாரம் செயல்படுவது குழு உணர்வை மேம்படுத்தும்.
இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், 5 அளவுகோல்களில் கவனம் செலுத்தி நல்ல விளைவுகளைப் பெற வேண்டும். இது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காண்பதன் மூலம், அந்த வட்டாரம் மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கான ஆதாரமாக மாறும். முன்னேற விரும்பும் ஆர்முள்ள மாவட்டங்களாக இருந்த 112 மாவட்டங்கள் இப்போது ஊக்கமளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன. ஒரு வருடத்திற்குள் குறைந்தது 100 ஆர்வமுள்ள வட்டாரங்கள் ஊக்கமளிக்கும் வட்டாரங்களாக மாறும் என்று நம்புகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் இணையதளம் மூலம் இணைந்து என் பேச்சை கேட்பவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரமாகச் செயல்படுவோம். நாடு முழுவதிலுமிருந்து 100 வட்டாரங்களைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேசிய சராசரிக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு துறையும் இவ்வாறு செயல்பட வேண்டும். அடிமட்டத்தில் எந்த வேலையும் கவனிக்கப்படாமல் விடப்படும் என்று நான் நினைக்கவில்லை. அனைத்து பணிகளும் 1 அல்லது 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். நண்பர்களே, 2024 ஆம் ஆண்டில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நாம் நேரடியாகச் சந்திப்போம். முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வோம் என்பதை நான் இப்போது உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அப்போது, உங்களில் 10 பேரின் வெற்றிகளைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை, நான் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ள மாட்டேன். ஏனெனில் நீங்கள் உங்கள் வட்டாரங்களை விரைவாக முன்னேற்ற வேண்டும். எனவே, நான் இப்போது நேரத்தை அதிகம் செலவிட விரும்பவில்லை. வாழ்த்துகள்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
ANU/PKV/PLM/DL
(Release ID: 1965380)
Visitor Counter : 126