உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
14 SEP 2023 9:31AM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது என்று உள்துறை அமைச்சர் தமது செய்தியில் கூறியுள்ளார். இம்மொழி, பல்வேறு இந்திய மொழிகளும், உள்ளூர் பேச்சு மொழிகளும், உலகளாவிய பல மொழிகளை கௌரவித்துள்ளதுடன், அவற்றின் சொற்களஞ்சியங்கள், வாக்கியங்கள் மற்றும் இலக்கண விதிகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின் கடினமான நாட்களில் நாட்டை ஒன்றிணைப்பதில் இந்தி மொழி முன்னெப்போதும் இல்லாத பங்கு வகித்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பல மொழிகளாகவும், பேச்சுவழக்குகளாகவும் பிளவுபட்ட ஒரு நாட்டில் ஒற்றுமை உணர்வை அது விதைத்தது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கிலிருந்து தெற்காகவும் முன்னெடுத்துச் சென்றதில் தகவல் தொடர்பு மொழியாக இந்தி முக்கியப் பங்காற்றியது. 'சுயராஜ்யம்' மற்றும் சுயமொழி அடைவதற்கான இயக்கங்கள் நாட்டில் ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன என்று திரு ஷா கூறினார். சுதந்திரப் போராட்டத்திலும் சுதந்திரத்திற்குப் பின்னரும் இந்தியின் முக்கியப் பங்களிப்பை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் செப்டம்பர் 14, 1949 அன்று இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டனர்.
எந்தவொரு நாட்டின் அசல் மற்றும் ஆக்கபூர்வமான வெளிப்பாடு அதன் சொந்த மொழியின் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்று உள்துறை அமைச்சர் கூறினார். புகழ்பெற்ற இலக்கியவாதி பரதேந்து ஹரிச்சந்திராவின் புகழ்பெற்ற கவிதையான "மொழியின் முன்னேற்றம்தான் அனைத்துத் தரப்பு வளர்ச்சிக்கும் அடிப்படை" என்பதை அவர் வலியுறுத்தினார். நமது கலாச்சார பாரம்பரியமான அனைத்து இந்திய மொழிகள், பேச்சுவழக்குகள் முதலியவற்றை நாம் நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று திரு ஷா கூறினார். இந்தி, வேறு எந்த இந்திய மொழியுடனும் போட்டியிட்டது அல்ல, இனியும் போட்டியிடாது என்றும் அவர் கூறினார். அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமே வலுவான தேசம் உருவாகும். அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரமளிக்கும் ஊடகமாக இந்தி மாறும் என்று உள்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், தேசிய மற்றும் உலகளாவிய மன்றங்களில் இந்திய மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைத்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய மொழிகளை வளப்படுத்தவும், அவற்றைப் பொது நிர்வாகம், கல்வி மற்றும் அறிவியல் பயன்பாட்டின் மொழியாக நிறுவவும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார். பிரதமரின் வழிகாட்டுதல்படி, அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே இந்திய மொழிகளில் தொடர்பை ஏற்படுத்தி, மக்கள் நலத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் அலுவல் மொழியில் செய்யப்படும் பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்வதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் அரசுப் பணிகளில் இந்தியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையைத் தயாரித்து குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கையின் 12 வது தொகுதி குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக திரு ஷா மேலும் கூறினார். 2014-ஆம் ஆண்டு வரை 9 தொகுதிகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 3 தொகுதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு முதல், 59 அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் கூட்டங்களுக்கும் தவறாமல் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி மொழி பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், இதுவரை மொத்தம் 528 நகரங்களில் ஆட்சி மொழி செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கூட, லண்டன், சிங்கப்பூர், ஃபிஜி, துபாய், போர்ட் லூயிஸ் ஆகிய இடங்களில் நகர அலுவல் மொழி செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.
'அகில இந்திய அலுவல் மொழி மாநாடு' நடத்தும் புதிய மரபும் அலுவல் மொழித் துறையால் தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். முதல் அகில இந்திய அலுவல் மொழி மாநாடு 2021 நவம்பர் 13-14 தேதிகளில் பனாரஸிலும், இரண்டாவது மாநாடு 2022 செப்டம்பர் 14, அன்று சூரத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு மூன்றாவது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு புனேயில் நடைபெறுகிறது. தொழிநுட்பத்திற்கு ஏற்ப அலுவல் மொழியை வளர்ப்பதற்காக அலுவல் மொழித் துறை, 'கந்தஸ்தா' என்ற நினைவக அடிப்படையிலான மொழிபெயர்ப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. புதிய முயற்சியாக, அலுவல் மொழித் துறை 'இந்தி ஷப்த் சிந்து' என்ற அகராதியை உருவாக்கியுள்ளது. அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய மொழிகளின் சொற்களைச் சேர்ப்பதன் மூலம் இந்த அகராதி தொடர்ந்து வளமாக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 90,000 சொற்களைக் கொண்ட 'இ-மகாசப்த்கோஷ்' செல்பேசி செயலியையும், சுமார் 9,000 வாக்கியங்களைக் கொண்ட 'இ-சரல்' அகராதியையும் இத்துறை உருவாக்கியுள்ளது.
மொழி மாற்றத்தின் கோட்பாடு, "மொழி, சிக்கலிலிருந்து எளிமைக்கு மாறுகிறது " என்று கூறுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். அலுவலகப் பணிகளில் இந்தியின் எளிமையான மற்றும் தெளிவான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது தனது கருத்து என்று திரு ஷா கூறினார். அலுவல் மொழித் துறையின் இந்த முயற்சிகளாலும், அனைத்து தாய்மொழிகளிலிருந்தும் உள்வாங்குவதன் மூலமும், மக்களின் ஒப்புதலுடனும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அங்கீகாரத்தைப் பெற்று வளமான ஆட்சி மொழியாக இந்தி உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
ANU/SRI/BR/AG
(Release ID: 1957254)
Visitor Counter : 198
Read this release in:
Urdu
,
Khasi
,
English
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada