பிரதமர் அலுவலகம்

பேரிடர் அபாயக் குறைப்பு சம்பந்தமான இந்திய- ஜப்பான் உயர்நிலைக் கூட்டம்

Posted On: 18 MAY 2023 11:30PM by PIB Chennai

இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், ஜப்பான் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு முகமையும் இணைந்து ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் பேரிடர் அபாயக்  குறைப்பு சம்பந்தமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் திட்டத்தின் இடைக்கால ஆய்வின்போது இந்த உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

 

‘நெகிழ்தன்மை மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி பேரிடர் அபாய குறைப்பில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் நாடுகளின் பங்கு’ பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான முதலீடுகளை ஊக்குவிப்பதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய சேதங்கள் மற்றும் தாக்கங்களைக் குறைப்பதற்கும், அதன் மூலம் நெகிழ்தன்மை வாய்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும்,  உறுப்பு நாடுகளின் முக்கிய பங்களிப்பை இந்த நிகழ்ச்சி எடுத்துரைத்தது.

 

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, இந்திய பிரதிநிதிக் குழுவிற்கு தலைமை வகித்தார். ஜி20 மற்றும் ஜி7 அமைப்புகள் பேரிடர் அபாயக் குறைப்பு சம்பந்தமான விசயங்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதால் உலகளவில் இந்தப் பிரச்சினை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளதாக தமது உரையின் போது டாக்டர் மிஸ்ரா கூறினார். சீரான முறையில் பேரிடர் அபாயக் குறைப்பு தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய நிதிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் திட்டத்திற்கு இணங்க, ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் அனைவருக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை, நெகிழ்தன்மை உள்கட்டமைப்பு, பேரிடர் அபாயக் குறைப்புக்கு மேம்பட்ட நிதி, எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைப்புமுறை மற்றும் திறன் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்புக்கு சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறை ஆகிய 5 முன்னுரிமைகளை பேரிடர் அபாயக் குறைப்புக்கான பணிக்குழு முன்மொழிந்துள்ளது. உலகளாவிய தெற்கு பகுதிகள் உட்பட ஜி7 மற்றும் ஜி20  உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பேரிடர் அபாய குறைப்புக்கு உடனடி தீர்வுகளை மேற்கொள்வதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

***

AD/RB/DL



(Release ID: 1925809) Visitor Counter : 154