நிதி அமைச்சகம்

2-வது நிதி மற்றும் மத்திய வங்கிப் பிரதிநிதிகள் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் உரையாற்றினார்

Posted On: 22 FEB 2023 2:05PM by PIB Chennai

ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிப்ரவரி 24 மற்றும் 25-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இரண்டாவது ஜி-20 நிதி மற்றும் மத்திய வங்கிப் பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இதில் தொடக்க உரையாற்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் மற்றும் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை முன்னிறுத்தும் கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.  உலகையே ஒரே குடும்பமாக பாவித்து, எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

அதே நேரத்தில், சர்வதேச சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீர்வு காண்பதை இந்த ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்னும் கருப்பொருள் உணர்த்துகிறது. கொரோனா பெருந்தொற்றால், உணவு, எரிசக்திப் பாதுகாப்பு, பணவீக்கம், கடன் பாதிப்புகள், பருவமாறுபாடு, அரசியல் ஸ்திரமற்றத் தன்மை  ஆகியவற்றால் சர்வதேச பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதை சுட்டிக்காட்டினார். இதனால் உலக நாடுகளின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த சவால்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஜி20 நாடுகள் முக்கியப் பங்காற்றும் எனவும், அதற்கு இந்த ஆலோசனைக் கூட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் திரு அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.

ஜி20 நாடுகளின் நிதிக்கொள்கை சார்ந்த விவாதங்கள், பல்நோக்கு வளர்ச்சி வங்கிகளை பலப்படுத்துவதுடன் 21-ம் நூற்றாண்டின் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு உதவும் என்றும் குறிப்பிட்டார். 

***

(Release ID: 1901331)

SRI/ES/AG/KRS



(Release ID: 1901367) Visitor Counter : 142