பிரதமர் அலுவலகம்

விளிம்பு நிலை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது : பிரதமர்

“வளர்ந்த இந்தியாவுக்கான எண்ணங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் அமிர்த காலத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் பட்ஜெட் இது”
“விளிம்பு நிலை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது : பிரதமர்”
“கோடிக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் பிரதமரின் விஷ்வகர்மா கவுஷல் சம்மான் செயல்படுத்தப்படுகிறது”
“கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவு சங்கங்களை ஒரு மையமாக இந்த பட்ஜெட் உருவாக்கும்”

“டிஜிட்டல் கட்டண முறைகளின் வெற்றியை வேளாண் துறையில் செயல்படுத்த வேண்டும்”
“நீடித்த எதிர்காலத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பசுமை பொருளாதாரம், பசுமை உள்கட்டமைப்பு, பசுமை வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான பட்ஜெட் இது”

“நாட்டின் விரைவான முன்னேற்றம், புதிய ஆற்றலை வழங்கும் வகையில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு”

“2047 ஆம் ஆண்டுக்கான கனவுகளை நனவாக்குவதில் நடுத்தரப் பிரிவு மக்கள் ஒரு மாபெரும் சக்தியாக உள்ளனர். நமது அரசு என்றும் நடுத்தரப் பிரிவு மக்களோடு நிற்கிறது”

Posted On: 01 FEB 2023 3:15PM by PIB Chennai

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பட்ஜெட் இது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்கள் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சருக்கும், அவரது குழுவினருக்கும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டமைப்பதில் பாரம்பரியமிக்க கலை வல்லுனர்களான கலைஞர்கள், தச்சர்கள், இரும்பு மற்றும் பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பக் கலைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். படைப்பாற்றலுடன் கடுமையாக பணியாற்றும் இத்தகைய கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதல் முறையாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்தக் கலைஞர்களுக்கான பயிற்சி, கடனுதவி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் பல்வேறு துறை சார்ந்த கோடிக்கணக்கான கலைஞர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள், பணியில் இருக்கும் மற்றும் இல்லத்தரசிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் வகையில் ஜல்ஜீவன் இயக்கம், உஜ்வாலா திட்டம், பிரதமரின் வீட்டுவசதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அளப்பரிய செயல்களை செய்யும் வகையில் அவை மேலும் வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். மகளிருக்கான, குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்க இந்த பட்ஜெட் வகை செய்கிறது.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்க இந்த பட்ஜெட் வகை செய்கிறது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கூட்டுறவு துறையில் உலகின் மிகப் பெரிய உணவு சேமிப்புத் திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று அவர் கூறினார். அரசின் முன்னோடி திட்டமான புதிய முதன்மை கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இத்தகைய கூட்டுறவு நிறுவனங்கள் பால் உற்பத்தி, மீன் வளர்ப்பு, வேளாண்மை, விவசாயிகள், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீனவர்கள் தங்களது பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வேளாண் துறையில் டிஜிட்டல் கட்டண முறையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இதற்கென டிஜிட்டல் வேளாண் கட்டமைப்புக்கான மிகப் பெரிய திட்டம் இந்தப் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

உலக நாடுகள் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாடி வரும் வேளையில் இந்தியாவில் பல்வேறு வகையான சிறுதானியங்கள் பல பெயர்களில் இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகெங்கிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சிறுதானியங்கள் சென்றடையும் வகையில் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். மிகச் சிறந்த உணவான சிறுதானிய உணவுகளுக்கு புதிய அடையாளத்தை அளிக்கும் வகையில் ஸ்ரீ-அன்ன திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் சிறு மற்றும் பழங்குடியின விவசாயிகள் பொருளாதார பயன்பாட்டை பெறும் வகையிலும், நாட்டில் உள்ள மக்களுக்கு சுகாதார வாழ்வை அளிக்கும் வகையிலும் இத்திட்டம் வகை செய்யும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நீடித்த எதிர்காலத்திற்கு தேவையான பசுமை வளர்ச்சி, பசுமை பொருளாதாரம். பசுமை உள்கட்டமைப்பு மற்றும் பசுமை பணிகள் ஆகியவற்றை முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து விரிவாக்கம் செய்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். புதிய பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எழுச்சிமிகு இந்தியாவை உருவாக்கும் வகையில் சாலை, ரயில், மெட்ரோ, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து போன்ற ஒவ்வொரு துறையிலும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முதலீடு 400 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களை துரிதப்படுத்தவும், புதிய ஆற்றலை அளிக்கவும் வல்ல உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய முதலீடுகள் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் ஏராளமான மக்களுக்கு புதிய வருவாய் வாய்ப்புகளையும் வழங்கிடும் என்று பிரதமர் தெரிவித்தார்.

வர்த்தகம் புரிதலை எளிதாக்கும் வகையில், தொழில்துறை மறுசீரமைப்பு மற்றும் கடனுதவி திட்டங்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடன் உத்தரவாதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுமானத்தின் அடிப்படையில் செலுத்தப்படும் வரிக்கான உச்சவரம்பை அதிகரிப்பது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் என்று பிரதமர் குறிப்பிட்டார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பெருநிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை குறித்த நேரத்தில் செலுத்துவதற்கான புதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047 ஆம் ஆண்டின் கனவுகளை நனவாக்கும் வகையில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வாய்ப்புகளை பிரதமர் எடுத்துக் காட்டியுள்ளார். நடுத்தரப் பிரிவு மக்களுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முடிவுகளை மேற்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கென வரிகுறைப்பு, வருமான அறிக்கையை தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளில் எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நடுத்தர பிரிவு மக்களுக்கு பெரிய அளவில் வரி நிவாரணம் வழங்குவது குறித்து மத்திய அரசு உணர்ந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***

 

LOK/SV/RR/GK



(Release ID: 1895464) Visitor Counter : 230