குடியரசுத் தலைவர் செயலகம்

நாடாளுமன்ற இரு அவைகளில் குடியரசுத் தலைவர் மாண்புமிகு திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய உரை

Posted On: 31 JAN 2023 12:23PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே,

1.    இணைந்து இருக்கக்கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நமது நாடு விடுதலையின் 75-வது ஆண்டை நிறைவு செய்து ‘அமிர்த காலத்திற்குள்' நுழைந்தது. இந்த ‘விடுதலையின் அமிர்த காலம்' நமது புகழ்பெற்ற கடந்த காலங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டு பெருமையையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உத்வேகத்தையும், பொன்னான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டையும் ஒருங்கிணைக்கிறது.

2.    இந்த 25 ஆண்டுகளான ‘அமிர்த காலம்’, சுதந்திரத்தின் பொன்னான நூற்றாண்டு மற்றும் வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் காலகட்டம். நாமும் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நமது கடமைகளை அனைத்து நிலைகளிலும் மிகச் சிறப்பாக செய்வதற்கான காலகட்டம் தான் இந்த 25 ஆண்டு. ஒரு யுகத்தை கட்டமைப்பதற்கான வாய்ப்பு நம் முன்னே உள்ளது. அதற்காக நமது முழு திறனையும் வெளிப்படுத்தி தொடர்ந்து அயராது நாம் பணியாற்ற வேண்டும்.

•     போற்றத்தக்க கடந்த காலத்தை நினைவுகூர்வதுடன், நவீனத்துவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கிய தேசத்தை 2047-ஆம் ஆண்டிற்குள் நாம் உருவாக்க வேண்டும்.

•     தன்னிறைவான, அதே வேளையில் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும்‌.

 

•     வறுமை அல்லாத, நடுத்தர வகுப்பினரும் செழிப்பாக இருக்கும் வகையிலான இந்தியா.

•     சமூகத்தையும் நாட்டையும் சரியான வழியில் கொண்டு செல்வதில் இளைஞர்களும் பெண்களும் முன்னிலை வகிப்பதோடு, காலத்திற்கு ஏற்ப துடிப்புடன் இருக்கும் இளைஞர்கள் அடங்கிய இந்தியா.

•     மேலும் வலுவான பன்முகத்தன்மை மற்றும் அசைக்க முடியாத ஒற்றுமையுடனான இந்தியா.

3.    2047-ஆம் ஆண்டில் இதனை நாடு நிறைவேற்றும்போது அதன் பிரம்மாண்டமான கட்டமைப்பின் அடித்தளத்தை மதிப்பிடவும் காணவும் முடியும். அப்போது விடுதலையின் அமிர்த காலத்தின் இது போன்ற ஆரம்பத் தருணங்கள் மாறுபட்ட கோணத்தில் நோக்கப்படும். எனவே இந்த தருணம் ‘அமிர்த காலத்தின்’ இந்தத் காலகட்டம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

4.    நாட்டு மக்கள் எனது அரசுக்கு முதன்முறையாக வாய்ப்பு தந்த போது ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரத்தோடு நாங்கள் தொடங்கினோம். நாளடைவில் ‘அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி' என்பது அதனுடன் சேர்க்கப்பட்டது. இந்த தாரக மந்திரம் தான் வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கு தற்போது ஊக்குவிக்கிறது. இன்னும் சில மாதங்களில் வளர்ச்சியின் இந்த கடமைப் பாதையில் எனது அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்யும்.

5.    எனது அரசின் சுமார் 9 ஆண்டு காலங்களில் முதன் முறையாக ஏராளமான நேர்மறை மாற்றங்களை இந்திய மக்கள் சந்தித்துள்ளனர். ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கையும் இன்று உச்சத்தில் இருப்பதோடு, இந்தியா குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டம் மாறியிருப்பது மிகப்பெரிய மாற்றங்கள் ஆகும்.

•     ஒரு காலத்தில் தீர்வுகளுக்காக பிறரை எதிர்நோக்கி இருந்த இந்தியா, இன்று உலகம் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

•     பல தசாப்தங்களாக காத்துக் கொண்டிருந்த மக்கள் தொகையின் பெரும்பாலான பிரிவினருக்கு அடிப்படை வசதிகள் இந்த கட்டத்தில் செய்து தரப்பட்டன.

•     பல ஆண்டு காலங்கள் நாம் ஆவலோடு எதிர்பார்த்து வந்த நவீன உள்கட்டமைப்பு தற்போது நாட்டில் வளர தொடங்கியுள்ளது.

•     இந்தியா உருவாக்கியுள்ள டிஜிட்டல் இணைப்பு, வளர்ந்த நாடுகளுக்கு கூட ஊக்க சக்தியாக திகழ்கிறது.

•     மிகப்பெரிய ஊழல்கள் மற்றும் லஞ்சம் முதலியவற்றை அரசு திட்டங்களில் இருந்து களைய வேண்டும் என்ற நீண்ட கால எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறி வருகிறது.

•     பலவீனமான கொள்கை பற்றி தற்போது விவாதிக்கப்படுவதில்லை, மாறாக தனது விரைவான வளர்ச்சிக்காகவும் தொலைநோக்கு முடிவுகளுக்காகவும் இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது.

•     அதனால்தான் பத்தாவது இடத்திலிருந்து உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக நாம் வளர்ந்துள்ளோம்.

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் அடித்தளம் தான், இது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

6.    ‘காயகாவே கைலாசா’ அதாவது கர்மம் என்பது வழிபாடு, அதில் இருப்பவர் சிவன் என்று பகவான் பசவேஸ்வரா கூறியுள்ளார். அவரது வழியைப் பின்பற்றி தேச கட்டமைப்பில் எனது அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

•     நிலையான, துணிச்சலான முடிவு எடுக்கும் திறன் வாய்ந்த மிகப்பெரிய லட்சியங்கள் கொண்ட அரசு இன்று இந்தியாவில் உள்ளது.

•     நேர்மையை மதிக்கும் அரசை இந்தியா தற்போது பெற்றுள்ளது.

•     ஏழைகளின் பிரச்சினைகளுக்கும் அவர்களது நீண்ட கால அதிகாரமளித்தலுக்கும் நிலையான தீர்வுக்காக உழைக்கும் அரசு இன்று இந்தியாவில் உள்ளது.

•     முன் எப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாகவும் அதிகமாகவும் பணியாற்றும் அரசு தற்போது இந்தியாவில் உள்ளது.

•     புதுமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசை இந்தியா இன்று பெற்றுள்ளது.

•     பெண்கள் எதிர் கொள்ளும் தடைகள் ஒவ்வொன்றையும் களையும் உறுதிப்பாட்டோடு இயங்கும் அரசு இந்தியாவில் தற்போது செயல்படுகிறது.

•     வளர்ச்சி மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் உறுதி பூண்டிருக்கும் அரசு தற்போது இந்தியாவில் உள்ளது.

•     பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் நவீனத்துவத்தைத் தழுவிய அரசு இந்தியாவில் இன்று இயங்குகிறது.

•     சர்வதேச அரங்கில் தனது நேர்மையான பங்களிப்பை வழங்குவதற்கு நம்பிக்கையுடன் முன்னேறும் அரசு இந்தியாவில் இன்று ஆட்சியில் உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

7.    நிலையான ஆட்சி அமைவதற்காக தொடர்ந்து இரண்டு முறைகள் வாக்களித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தீர்க்கமான அரசு, நாட்டின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதோடு, தேவை ஏற்படும் போது கொள்கைகள் மற்றும் உத்திகளை முற்றிலும் மாற்றி அமைக்கும் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளது. சர்ஜிகல் ஸ்டிரைக் முதல் தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான ஒடுக்குமுறை வரை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முதல் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரையில் ஒவ்வொரு தவறான செயல்களுக்கும் சரியான பதிலடி, பிரிவு 370 முதல் முத்தலாக் வரையிலான தடை என்று, எனது அரசு தீர்க்கமான அரசு என்று போற்றப்படுகிறது.

8.    நூறாண்டுகளில் மிகவும் மோசமான பேரிடரை எதிர்கொள்ளவும் அதற்கு பிறகு ஏற்பட்ட நிலையை சமாளிக்கவும் நிலையான மற்றும் தீர்க்கமான அரசு வழிவகை செய்துள்ளது. உலகம் முழுவதும் அரசியல்  நிலைத்தன்மை இல்லாத நாடுகள் மோசமான நெருக்கடிகளை இன்று சந்தித்து வருகின்றன. எனினும் தேச நலன் கருதி எனது அரசு எடுத்த முடிவுகளின் அடிப்படையில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேம்பட்ட நிலையிலே உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

9.    ஊழல் தான் ஜனநாயகம் மற்றும் சமூக நீதியின் மிகப்பெரிய எதிரி என்பதில் எனது அரசு ஸ்திரமான நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே கடந்த சில ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. நேர்மையானவர்கள்,  அமைப்புமுறையில் கௌரவிக்கப்படுவதை நாம் உறுதி செய்துள்ளோம். ஊழல் செய்பவர்கள் மீது அனுதாபம் காட்டக் கூடாது என்ற சமூக உணர்வு நாட்டில் அதிகரித்து வருகிறது.

10.   ஊழலற்ற சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு கடந்த சில ஆண்டுகளில் பினாமி சொத்து சட்டம் அறிவிக்கப்பட்டது. பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளிடமிருந்து பொருட்களை பறிமுதல் செய்வதற்காக தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசு இயந்திரத்தில் உள்ள பாரபட்சம் மற்றும் ஊழல் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சிறந்த அமைப்புமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் அரசு கொள்முதலுக்காக தற்போது அரசு மின்னணு சந்தை தளம் என்ற அமைப்புமுறை நடைமுறையில் உள்ளது. இதில் இதுவரை ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

11.   தேச கட்டமைப்பில் நேர்மையான பங்களிப்பை வழங்குவோர் தற்போது கௌரவிக்கப்படுகிறார்கள். சிக்கலான வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு நமது நாட்டு மக்கள் பயனடைந்துள்ளனர். தடையில்லாத மதிப்பீட்டை ஊக்குவிப்பதன் வாயிலாக வெளிப்படைத் தன்மையும் பொறுப்புடைமையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பு வரிகளை திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. இன்று வருமான வரித் தாக்கல் செய்த ஒரு சில நாட்களிலேயே குறிப்பிட்ட தொகை திரும்பப் பெறப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி தற்போது வெளிப்படை தன்மையைக் கொண்டு வந்திருப்பதோடு, வரி செலுத்துவோரின் கண்ணியத்தையும் உறுதி செய்கிறது.

12.   போலியான பயனாளிகளையும் மக்கள் நிதி- ஆதார்- செல்பேசி திட்டம் முதல் ஒரு தேசம், ஒரு குடும்ப அட்டை திட்டத்தின் அறிமுகம் வரை ஏராளமான முக்கிய சீர்திருத்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம். நேரடி பயன் பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகிய வழிகளில் நிலையான மற்றும் வெளிப்படைத் தன்மை வாய்ந்த ஆட்சியை நாடு ஏற்படுத்தியுள்ளது. இன்று சுமார் 300 திட்டங்களின் பணம் சார்ந்த பயன்கள், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதுவரை பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ. 27 லட்சம் கோடி,  வெளிப்படையாக செலுத்தப்பட்டுள்ளன. கொவிட் பெருந்தொற்றின் போது கோடிக்கணக்கான மக்கள் வறுமை நிலைக்கு கீழ் தள்ளப்படாததற்கு இது போன்ற திட்டங்களும் செயல்பாடுகளுமே காரணம் என்று உலக வங்கியின் அறிக்கை பாராட்டியுள்ளது.

13.   ஊழல் ஒழிக்கப்பட்டு, செலுத்தப்படும் வரியின் ஒவ்வொரு காசும் முறையாக பயன்படுத்தப்படும்போது வரி செலுத்துவோர் ஒவ்வொருவரும் பெருமை அடைகிறார்கள்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

14.   குறுக்கு வழி அரசியலை அரசுகள் தவிர்க்க வேண்டும் என்று நேர்மையாக வரி செலுத்துவோர் இன்று விரும்புகிறார்கள். சாமானிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் நிரந்தர தீர்வுகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே தற்போதைய சவால்களை எதிர்கொள்வதுடன் நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நீண்ட கால திட்டங்களிலும் எனது அரசு கவனம் செலுத்தி வருகிறது.

15.   ‘வறுமை ஒழிப்பு’ என்பது தற்போது வெறும் முழக்கமாக மட்டும் இருப்பதில்லை. ஏழைகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கி அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக எனது அரசு பாடுபடுகிறது.

16.   உதாரணமாக, வறுமைக்கு முக்கிய காரணம், நோய். தீவிர உடல் உபாதை, ஒரு ஏழை குடும்பத்தை முற்றிலும் பாதிப்பதோடு, பல தலைமுறையினரை கடனாளிகளாக ஆக்குகிறது. இத்தகைய பிரச்சினையிலிருந்து ஏழைகளை விடுவிப்பதற்காக நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றுள்ளனர். ஏழைகள் மேலும் ஏழைகளாவதைத்  தடுத்து ரூ. 80 ஆயிரம் கோடியை அவர்கள் செலவு செய்வதை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தடுத்துள்ளது. இன்று நாடு முழுவதும் சுமார் 9000 மக்கள் மருந்தக மையங்களில் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் ஏழை மக்களின் ரூ. 20000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தக திட்டங்களின் வாயிலாக மட்டுமே ரூபாய் ஒரு லட்சம் கோடி அளவிலான உதவியை நாட்டு மக்கள் பெற்றுள்ளனர்.

17.   மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தண்ணீர் பற்றிய உதாரணத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ‘ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்' வழங்குவதற்காக ‘ஜல் ஜீவன் இயக்கத்தை' எனது அரசு தொடங்கியது. இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்பு 7 தசாப்தங்களில் நாடு முழுவதும் 3.25 கோடி வீடுகளில் மட்டும் தான் தண்ணீர் இணைப்புகள் இருந்தன. எனினும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் இந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பங்களுக்கு தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தினால் ஏழை குடும்பங்கள் பெருமளவு பயனடைந்து வருவதோடு அவர்களது பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

18.   கடந்த சில ஆண்டுகளில் மூன்றரை கோடிக்கும் அதிகமான ஏழை குடும்பங்களுக்கு உறுதியான வீடுகளை அரசு கட்டித் தந்துள்ளது. வீட்டுடன், புதிய தன்னம்பிக்கை வளர்கிறது. இதன் மூலம் குடும்பத்தின் தற்போதைய நிலை மேன்மை அடைவது மட்டுமல்லாமல், அந்த வீட்டில் வளரும் குழந்தையின் தன்னம்பிக்கையும் வளர்கிறது. கழிவறை, மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி ஏழைகளின் துயரை நீக்க அரசு முயற்சித்து வருகிறது. இதன் விளைவாக அரசின் திட்டங்களும் பயன்களும் ஏழை எளியோரை சென்றடையும் என்றும், இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டிலும் 100% பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்றம் நாட்டு மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

19.   இது என்னுடையது, இது உங்களுடையது என்ற அணுகுமுறை சரியானது அல்ல என்று நமது நூல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளில் எனது அரசு எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லாமல் அனைத்து பிரிவினருக்காகவும் பணியாற்றி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் எனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் அடிப்படை வசதிகள், அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது அல்லது இலக்கை அடையும் தருவாயில் உள்ளது.

20.   அனைத்து திட்டங்களும் ஏழைகளையும் 100 சதவீத பயனாளிகளையும் சென்றடைய வேண்டும் என்பதில் எனது அரசு உறுதிப்பூண்டுள்ளது. தகுதி வாய்ந்த அனைவரும் அரசின் திட்டங்களால் பயனடைய வேண்டும், ஒருவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் திண்ணமாக உள்ளோம்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

21.   கொவிட் பெருந்தொற்றின் போது உலகம் முழுவதும் ஏழை மக்களின் இன்னல்களை நாம் கண்டோம். எனினும் ஏழை மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதில் முன்னுரிமை அளித்து ,உணவு இல்லாமல் ஏழைகள் வருந்தக்கூடாது என்பதை உறுதி செய்த நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தை எனது அரசு அமல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உணர்வுப்பூர்வமான மற்றும் ஏழைகளை மையமாகக் கொண்ட அரசிற்கு இது ஓர் உதாரணம். பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 3.5 லட்சம் கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிக்கும் உணவு தானியங்கள் முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த அமைப்புமுறை இந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

22.   நம் நாட்டின் பல்வேறு வகுப்பினர் மற்றும் பகுதிவுகளின் நம்பிக்கை மற்றும் விருப்பங்களில் உரிய கவனம் செலுத்தினால் மட்டுமே முழுமையான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை  அடைய முடியும். தற்போது இது போன்ற வகுப்பினர் மற்றும் பிரிவுகளுக்கு எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது.

23.   பல நூற்றாண்டுகளாக சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் விருப்பங்களையும் எனது அரசு பூர்த்தி செய்துள்ளது. ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூகத்தினரின் எண்ணங்களை நாம் நிறைவேற்றி, அவர்கள் கனவு காண ஊக்குவித்துள்ளோம். எந்தவித பணியும், எந்தவித முயற்சியும் சாதாரணமானது அல்ல. அவை ஒவ்வொன்றும் வளர்ச்சியில் தனது பங்களிப்பை கொண்டுள்ளன. இந்த உணர்வோடு நலிவடைந்த பிரிவினர் மற்றும் பின் தங்கிய பகுதிகளின் வளர்ச்சயில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

24.   ஏராளமான சிறிய வர்த்தகர்கள் தங்களது வணிக செயல்பாடுகளை நடைபாதைகளிலும், தள்ளுவண்டிகளிலும், சாலைகளிலும் மேற்கொள்கின்றனர். வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பையும் எனது அரசு அங்கீகரிக்கிறது. எனவே முதன் முறையாக முறைசார் வங்கிகளுடன் அவர்கள் இணைக்கப்பட்டு இருப்பதோடு பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் வாயிலாக மலிவான மற்றும் பிணையில்லா கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 40 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.

25.   11 கோடி சிறிய விவசாயிகளுக்கும் எனது அரசு அதிக முன்னுரிமை வழங்குகிறது. இந்த சிறிய விவசாயிகள் பல தசாப்தங்களாக அரசின் கவனத்தை பெறாமல் இருந்தனர். தற்போது அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்கள் வாழ்வு சிறக்கவும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 2.25 லட்சம் கோடி நிதி உதவியை இந்த சிறிய விவசாயிகள் பெற்று பயனடைந்துள்ளனர். இவர்களுள் மூன்று கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இத்திட்டத்தின் கீழ் பெண் விவசாயிகளுக்கு ரூ. 54 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பயிர் காப்பீட்டின் பயனை அதிகரிக்கும் வேளையில் மண்வள அட்டை மற்றும் கிசான் கடன் அட்டைகளை எனது அரசு முதன்முறையாக சிறிய விவசாயிகளுக்கு வழங்கி கால்நடை பராமரிப்போர் மற்றும் மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டையை வழங்கி உள்ளது. வேளாண் உற்பத்தி நிறுவனங்களை அமைப்பது முதல் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது வரை சிறிய விவசாயிகள் தங்கள் திறனை மேம்படுத்துவதற்கு எனது அரசு ஆதரவு கரம் நீட்டுகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

26.   பட்டியல் இன, பட்டியல் பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் லட்சியங்களை எனது அரசு தூண்டி எழச் செய்துள்ளது. இந்த வகுப்பினர் வளர்ச்சியின் பயனை பெறாமலே இருந்தனர். தற்போது அடிப்படை வசதிகள் இவர்களை சென்றடைவதால், இந்த மக்கள் தங்களது புதிய கனவுகளை நினைவாக்கும் திறனை பெற்றுள்ளனர். பட்டியல் இன மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக டாக்டர் அம்பேத்கர் உத்சவ் தாம், அம்ரித் ஜல்தாரா மற்றும் யுவ உத்யமி முதலிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்குடி சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக இதுவரை இல்லாத வகையிலான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்துள்ளது. பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை 'பழங்குடியினர் கௌரவ தினமாக’ முதன்முறையாக நாடு கொண்டாடத் துவங்கியது. அண்மையில் முதன்முறையாக தேசிய அளவிலான பழங்குடி புரட்சியாளர்களுக்கு மங்கர் தாமில் அரசு மரியாதை செலுத்தியது. பிரதமரின் ஆதி ஆதர்ஷ் கிராமத் திட்டத்தின் 36 ஆயிரத்திற்கும் அதிகமான பழங்குடி கிராமங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் பழங்குடி பகுதிகளில் சுமார் 400 ஏகலைவ மாதிரி பள்ளிகள் இயங்குகின்றன. 3000 வன் தன் விகாஸ் மையங்கள் புதிய வாழ்வாதாரமாக மாறி உள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கு அரசியல்சாசன அங்கீகாரம் வழங்கி மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலனில் தனது உறுதிப்பாட்டை எனது அரசு எடுத்துரைத்துள்ளது. பஞ்சாரா, நாடோடிகள் போன்ற சமூகத்தினருக்கு முதன் முறையாக மேம்பாட்டு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

27.   வளர்ச்சியின் பல்வேறு அளவுருக்களில் பின் தங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நாட்டில் இருந்து வந்தன. இவற்றின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு இது போன்ற மாவட்டங்களை முன்னேற விரும்பும் மாவட்டங்களாக அரசு அறிவித்தது. இன்று இந்த மாவட்டங்கள் நாட்டின் இதர மாவட்டங்களுக்கு இணையாக முன்னேறி வருகின்றன. முன்னேற விரும்பும் மாவட்டங்களில் வெற்றியை வட்டார அளவில் செயல்படுத்துவதற்காக 500 வட்டாரங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. சமூக நீதிக்காக நிறுவனமயமாக்கல் முறையில் இந்த முன்னேற விரும்பும் வட்டாரங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

28.   கடந்த சில தசாப்தங்களில் பழங்குடி, மலைவாழ் கடல்சார் மற்றும் எல்லைப் பகுதிகள் மட்டுமே வளர்ச்சியின் சில பயன்களை அடைய முடிந்தது. சவாலான பகுதி, தீவிரவாதம் போன்ற அச்சுறுத்தல்கள் வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தன. அமைதி நீடிக்கவும், புவியியல் சவால்களை எதிர்கொள்ளவும் எனது அரசு ஏராளமான முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மற்றும் நமது எல்லை பகுதிகள் வளர்ச்சியின் புதிய வேகத்தை சந்தித்து வருகின்றன.

29.   எல்லைப்புற கிராமங்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குவதற்காக துடிப்பான கிராமத் திட்டத்தை எனது அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்திலும் முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளில் எல்லைப்புற பகுதிகளுக்கு ஏராளமான உள்கட்டமைப்பு வளர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த பகுதிகள் விரைவாக முன்னேறி வருகின்றன. கடந்த சில தசாப்தங்களாக தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த இடதுசாரி தீவிரவாதம், தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

30.   மகளிர் மேம்பாடு என்பது எனது அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று. ஒடியா கவிஞரும், இந்திய இலக்கியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான 'உத்கல் பாரதி’, குந்தல குமாரி சாபத் எழுதிய ‘நாரி சக்தி’ என்ற கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘பிறருடன் ஒப்பிடுகையில் இந்திய பெண் எந்த விதத்திலும் குறைந்தவரோ அல்லது வலிமை குன்றியவரோ அல்ல. அவளது புகழ் என்றும் அழியாமல் பல காலம் உலகம் முழுவதும் தொடர்ந்து நீடிக்கும்' என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியிருந்தார்.

31. புதிய இந்தியாவின்  கனவுகளுக்கு ஏற்ப நமது சகோதரிகள் மற்றும் மகள்கள்,  உலக அளவில் விருதுகளைப் பெறுவதை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். எனது அரசாங்கத்தின் முயற்சிகள் இத்தகையை முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக திகழ்வதில் நான், மகிழ்ச்சியடைகிறேன்.

32. எனது அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும், மகளிரின் வாழ்க்கையை எளிதாக்குவது, பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவது மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதிசெய்வது ஆகிய தொலைநோக்குப் பார்வைகளை மையமாக கொண்டு அமைந்துள்ளன. மகளிர் மேம்பாட்டுக்காக பழைய நம்பிக்கைகள் பழைய மரபுகளை, உடைத்து எறிய வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அரசு பின்வாங்கவில்லை.

33. பெண் குழந்தையைக் காப்போம்,  பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற இயக்கம் பெரிய வெற்றியடைந்துள்ளதை நாம் பார்க்கிறோம். அரசின் முயற்சியால் சமூகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு பெண்குழந்தைகளின் எண்ணிக்கை சீராக அதிகரிக்க வழிவகுத்துள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகளிரின் ஆரோக்கியமும் கணிசமாக மேம்பட்டுள்ளது. பிரதமரின் சுரக்ஷித் மாத்ரித்வா அபியான் அல்லது பிரதமரின் மாத்துருவந்தனா திட்டம் என எதுவாக இருந்தாலும், அந்த திட்டங்களில் வெற்றிப்பெற்று தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிரையும் காப்பதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகள் 50 சதவீதம் பேர் பெண்களாகவே உள்ளனர்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

34. கல்வியில் இருந்து வாழ்க்கையின் முன்னேற்றம் வரை  எனது அரசாங்கம் மகள்களுக்கான தடைகள் அனைத்தையும் உடைக்க  முயற்சிகளை மேற்கொள்கிறது.  நாட்டில் உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு என தனி கழிப்பறைகள், சானிட்டரி பேட்கள் தொடர்பான திட்டம் போன்றவற்றால், பெண்குழந்தைகள் கல்வியிலிருந்து இடைநிற்றல் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கம் பெண்களின் கண்ணியத்தை அதிகரித்துள்ளதோடும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலையும் வழங்கியுள்ளது.  கோடிக்கணக்கான மகள்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக முதல் முறையாக  சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய தேசிய கல்விக்கொள்கை, பெண் குழுந்தைகளின் கல்விக்காக  பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

35. பெண்கள் எந்தப் பணியிலும் ஈடுபடுவதற்கோ அல்லது எந்த துறையிலும் பங்கேற்பதற்கோ தடை  ஏதுமில்லை என்பதை எனது அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இந்த நோக்கத்தில் ராணுவத்தில் சுரங்கம் முதல் முக்கியப் பதவிகள் வரை அனைத்து துறைகளிலும் மகளிருக்கு வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது நமது  மகள்கள் சைனிக் பள்ளிகள் மற்றும் ராணுவ அகாடமிகளில் படித்து பயிற்சி பெறுகிறார்கள். மகப்பேறு விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தியது எனது  அரசு தான்.

36. முத்ரா திட்டப் பயனாளிகளின் சுமார் 70 சதவீதம் பேர் பெண் தொழில் முனைவோர் ஆவார். இந்தத் திட்டம் மகளிரின் பொருளாதார ஆற்றலையும், அவர்களது சமூகப் பங்களிப்பையும் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.  மகளிரின் பெயரில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில்ஒதுக்கப்படும் வீடுகள் பதிவு செய்யப்படுவதன் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. ஜந்தன் யோஜனா முதன் முறையாக நாட்டில் வங்கிச் சேவைகளைப் பெறுவதில் ஆண் பெண்  இடையே சமத்துவத்துக்கு வழிவகுத்துள்ளது. நாட்டில் தற்போது 80 லட்சத்திற்கும் அதிகமான மகளிர் சுயஉதவிக்குழுக்கள்  செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 9 கோடி பெண்கள் இணைந்துள்ளனர். இந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அரசு சார்பில் பல லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

37. நமது பாரம்பரியம், நம்மை நமது வேர்களுடன் இணைப்பதுடன், நமது வளர்ச்சி உச்சத்தை அடைவதற்கான நம்பிக்கையும் வழங்குகிறது. அதனால் தான் எனது அரசு, பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.

38. இன்று ஒருபுறம் நாட்டில் அயோத்தியில் ஆலயம் கட்டப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நவீன நாடாளுமன்ற கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது.

39. ஒரு புறம் கேதார்நாத் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் சீரமைப்பு, மகா கால் மகா லோக் ஆகியவற்றை நாம் கட்டியுள்ள நிலையில், மறுபுறம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது.

40. ஒரு புறம் நாம் நமது புனித யாத்திரை தலங்களையும், வரலாற்று மரபு சின்னங்களையும் மேம்படுத்தி வருகிறோம். மறுபுறம் இந்தியா உலகின் முக்கிய விண்வெளி சக்தியாக மாறிவருகிறது. இந்தியா தனது முதலாவது தனியார் செயற்கை கோளையும் செலுத்தியுள்ளது.

41. ஒரு புறம் ஆதி சங்கராச்சாரியார், பகவான் பசவேஸ்வரர், திருவள்ளுவர், குருநானக் போன்ற மகான்கள் காட்டிய வழியை நாம் பின்பற்றுகிறோம். மற்றொரு புறம் இந்தியா  அதி நவீன அறிவு மையமாக மாறிவருகிறது.

42. ஒரு புறம் காசி தமிழ்ச்சங்கத்தின் மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை நாம்  வலுப்படுத்துகிறோம். மறுபுறம் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை போன்ற நவீன நடைமுறைகளையும் நாம் உருவாக்குகிறோம். டிஜிட்டல் இந்தியா மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில்  இந்தியாவின் வளம், இன்று உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

43. இந்தியா இன்று யோகா மற்றும் ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய முறைகளை உலகம் முழுவதும் எடுத்துச்செல்கிறது. அதே வேளையில், உலகின் மருந்தகம் என்ற புதிய அடையாளத்தையும் நாடு வலுப்படுத்துகிறது.

 

44. இந்தியா இன்று இயற்கை விவசாயம் மற்றும் அதன் பாரம்பரிய சிறு தானியப் பயிர்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், நானோ யூரியா போன்ற நவீன தொழில்நுட்பத்தையும் உருவாக்கி உள்ளது.

45. ஒருபுறம் விவசாயத்திற்கான கிராமப்புற உள்கட்டமைப்புகளை நாம் மேம்படுத்தும் அதே வேளையில், மறுபுறம் ட்ரோன் தொழில் நுட்பம் மற்று சூரிய சக்தி மூலம் விவசாயிகளை மேம்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

46. நகரங்களில் நவீன வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் அதே வேளையில், முதன் முறையாக ஸ்வாமித்வா திட்டத்தின் மூலம், ட்ரோன் மூலமாக கிராமப்புற வீடுகளின்  வரைப்பட நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

47. 75-வது விடுதலைப் பெருவிழாவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர் நிலைகள் உருவாக்கப்படும் அதே வேளையில், நூற்றுக்கணக்கான வந்தே பாரத் ரயில்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன.

48. ஒரு புறம் நமது பாரம்பரிய வர்த்தகம் வலிமைப்படுத்தப்பட்டு, நதிநீர் வழியாகவும், துறைமுகங்கள் வழியாகவும் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், பன்னோக்கு மாதிரி இணைப்பு மற்றும் சரக்குப்போக்குவரத்து கட்டமைப்பும் உருவாக்கப்படுகின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

49. நாடு விடுதலைப் பெருவிழாவின் 75 வது  ஆண்டில் 5 உறுதி மொழிகளின் உத்வேகத்துடன் முன்னேறி வருகிறது. அடிமை மனப்பான்மையின் ஒவ்வொரு சின்னத்தையும் அகற்ற எனது அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளது.

50. ஒரு காலத்தில் ராஜபாதையாக இருந்தது, தற்போது கடமைப்பாதையாக மாறியுள்ளது.

51. கடமைப்பாதையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை இன்று ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது. மேலும்  நேதாஜியின் வீரத்தையும் அந்தமான் நிக்கோபாரில் உள்ள  ஆசாத் ஹிந்த் ஃபௌஜையும் கவுரவித்துள்ளோம். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரிடப்பட்ட தீவில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு எனது அரசாங்கம் அடிக்கல் நாட்டியுள்ளது.

52. அந்தமான் நிக்கோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு ராணுவத்தில் பரம்வீர் சக்ரா விருதுபெற்ற  வீரர்களின் பெயர்கள்  சூட்டப்பட்டுள்ளன.

53. ஒரு புறம் தேசிய போர்  நினைவுச்சின்னமாக மாறியுள்ளது. மறுபுறம் சத்ரபதி சிவாஜி மகராஜ் வழங்கிய முத்திரையை நமது கடற்படை பெற்றுள்ளது.

54. ஒரு புறம் பகவான் பிர்சா முண்டா உள்ளிட்ட அனைத்து பழங்குடியின விடுதலைப்போராட்ட வீரர்களின் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பாபாசாகேப் அம்பேத்கரின் பஞ்ச தீர்த்தமும் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு பிரதமரின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது.

55. நாடு முதலாவது வீர பாலகர் தினத்தை பெருமையுடனும், மரியாதையுடனும், கொண்டாடியுள்ளது. வரலாற்றின் வேதனையான  நிகழ்வுகளையும், அது வழங்கிய பாடத்தையும்  நினைவில் வைத்திருக்க எனது அரசாங்கம் நாட்டில் விபஜன்  விபிஷிக ஸ்மிருதி திவாஸ் என்ற நாளை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

56. தற்சார்பு இந்தியா இலக்கை நோக்கி செல்ல மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றிப்பாதையை நாடு துவக்கியிருக்கிறது. இன்று இந்தியாவின் உற்பத்தித் திறன் அதிகரித்திருப்பதுடன், உலக நாடுகளைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன.

57. குறை மின் கடத்தி  சிப் மற்றும் விமான உற்பத்திக்கு இந்தியா முனைப்பான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் பயனாக இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவிலான செல்போன்களை இறக்குமதி செய்து வந்தோம். ஆனால் தற்போது உலகிலேயே செல்போன்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாக இந்தியா உருமாறியிருக்கிறது. அதே நேரத்தில் நாட்டின் பொம்மைகள் இறக்குமதி 70 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு, ஏற்றுமதி 60 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருக்கிறது.

58. எனது அரசு மேற்கொண்டுள்ள புதிய முனைப்பான நடவடிக்கைகளின் காரணமாக நமது பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பல் சேர்க்கப்பட்டிருப்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உற்பத்தித் துறையில் புதிய முனைப்புகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் நமது பாரம்பரிய துறைகளான காதி மற்றும் கிராமப்புறத் தொழில்களின் மேம்பாட்டிலும் நமது சக்தி வல்லமைப் பெற்றதாக இருக்கிறது. காதி மற்றும் கிராமத் தொழில்களின் உற்பத்தி நாட்டின் அமிர்தப் பெருவிழா காலத்தில் 1 லட்சம் கோடி இலக்கை தாண்டியிருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும். எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பலனாக காதி விற்பனை 4 மடங்கு அதிகரித்திருக்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

59. புத்தாக்க முயற்சிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது எனது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் உலகின் இளைஞர்கள் மக்கள் தொகையில் இந்தியாவின் பங்களிப்பை பலப்படுத்துவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகின் புத்தாக்க சக்தியை இந்திய இளைஞர்கள் இன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு உலகளாவிய புத்தாக்க தரவரிசையில் 81-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 40-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சில நூறாக இருந்த இந்திய ஸ்டார்ட் – அப் நிறுவனங்களின் எண்ணிக்கை இன்று சுமார் 90,000-மாக உயர்ந்திருக்கிறது.

60. இன்றைய சகாப்தத்தில் தொழில்நுட்ப சக்தியின் திறனை பலப்படுத்த ஏதுவாக இளைஞர் சக்தியை நம் முப்படைகளில் அலங்கரிப்பது மிகவும் முக்கியமானது. இந்தக் கொள்கையை கருத்தில் கொண்டு அக்னி வீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இளைஞர்கள் ஆயுதப் படைகள் மூலம் நாட்டை பாதுகாக்கும் பணியில் சேவையாற்ற அதிகபட்ச வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

61. விளையாட்டு மூலம் இளைஞர் சக்தியை கவுரவிப்பதில் எனது அரசு பெருமை கொள்கிறது. காமன்வெல்த் விளையாட்டுகள், ஒலிம்பிக்ஸ் மற்றும் பாரா விளையாட்டுப் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் இரண்டாவது முறையாக தங்கள் திறமைகளை நிரூபித்துள்ளனர். நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒலிம்பிக் இலக்கு திட்டம், கேலோ இந்தியா விளையாட்டுக்கள் மற்றும் கேலோ இந்தியா மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

62. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு சமிக்ஞை மொழி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியவை மாற்றுத் திறனாளிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

63. இந்தியாவின் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கடந்த சில சகாப்தங்கள் நாம் இரண்டு முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. முதலாவதாக பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை குறித்த நேரத்தில் நிறைவு செய்ய இயலவில்லை. இரண்டாவதாக பல்வேறு அரசுகளும், துறைகளும் தங்களது வசதிக்கேற்ப பணியாற்றின. இதனால் அரசின் வளங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் பாமர மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழல் உருவானது. எனது அரசு இந்த சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக பிரதமரின் விரைவு சக்தி தேசிய திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்தத் திட்டத்தில் ஆர்வத்துடன் பணியாற்றின. இதே போல் பல்முனை இணைப்புச் சாலைத் திட்டங்களும் நாட்டில் விரிவுப்படுத்த வழிவகை உருவானது.

64. இந்தியாவை உலகின் முன்னணி சரக்குப் போக்குவரத்து கேந்திரமாக எனது அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சரக்குப் போக்குவரத்துக்கான செலவு கணிசமாக குறையும்.

65. நாட்டின் வளர்ச்சியை சாதனை அளவில் மேற்கொள்ள எனது அரசு பின்வரும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

  • எனது அரசு பதவியேற்ற பிறகு, வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்காக நாளொன்றுக்கு சராசரியாக 11,000 வீடுகள் கட்டப்படுகின்றன.
  • அதே காலகட்டத்தில் இரண்டரை லட்சம் மக்கள் நாள்தோறும் அகண்ட அலைவரிசை இணைப்பை பெறுகிறார்கள்.
  • நாள்தோறும் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்பு அளிக்கப்படுகிறது.
  • முத்ரா கடன் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 700 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் விடுவிக்கப்படுகின்றன.
  • கடந்த 8 – 9 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவக் கல்லூரி இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.
  • இந்த காலகட்டத்தில் நாளொன்றுக்கு இரண்டு கல்லூரிகளும், ஒரு வாரத்திற்கு ஒரு பல்கலைக்கழகமும் உருவாக்கப்படுகிறது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 220 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

66. சமூக உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்த வரை கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 145 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எனது ஆட்சியில் 260-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 725 ஆக இருந்தது. கடந்த 8 ஆண்டுகளில் புதிதாக 300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

67. சாலை உள்கட்டமைப்பு வசதியைப் பொறுத்தவரை எனது அரசு காலத்தில் புதிய சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 2013-14 ஆம் ஆண்டு வரை 3.81 லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் 2021-22 காலகட்டத்தில் கிராம சாலை இணைப்பு வசதி 7 லட்சம் கிலோ மீட்டர் தூரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டின் 99 சதவீத பகுதிகள் சாலை வசதி மூலம் இணைக்கப்பட்டுள்ளன. உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆய்வில், கிராமங்களில் வேலைவாய்ப்பு, வேளாண்மை. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் இந்த கிராமப்புற சாலை வசதி முக்கியப் பங்காற்றி இருக்கிறது.

68. கடந்த 8 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு 55 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது. பாரத் மாலா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 550-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நெடுஞ்சாலைகள் மூலம் விரைவில் இணைக்கப்பட உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் தொழில் வழித்தடங்களின் எண்ணிக்கை 6-லிருந்து 50 ஆக அதிகரித்துள்ளது.

69. அதே நேரத்தில் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையும் அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு வரை 74 ஆக இருந்த நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 147 ஆக அதிகரித்துள்ளது. உலகில் மூன்றாவது மிகப் பெரிய சிவில் போக்குவரத்துச் சந்தையாக இந்தியா இன்று உருமாறியிருக்கிறது. இதற்கு உடான் திட்டம் முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்திய ரயில்வே நவீன நிறுவனமாக வளர்ந்திருப்பதுடன் நாட்டின் ரயில் போக்குவரத்து வசதி இல்லாத பல இடங்களும் ரயில் வரைபடத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. நவீன மற்றும் அதிவேக ரயில்களை இந்திய ரயில்வேயில் இணைக்கும் விதமாக வந்தே பாரத் விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய மின் ரயில்வே வழித்தடமாக இந்தியன் ரயில்வே வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய ரயில்வே பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கவச் தொழில்நுட்பம் அனைத்து ரயில்களிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

70. இயற்கையை பாதுகாப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஆரோக்கிய வாழ்க்கை இயக்கத்தின் மூலம் பசுமை வளர்ச்சியை உலக நாடுகளுக்கும் கொண்டு செல்ல எனது அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் சூரிய மின்சக்தி திறன் 20 மடங்கு அதிகரித்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா உலகளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. புதைப் படிவ கரிம வளங்கள் மூலம் மின்உற்பத்தித் திறனை 40 சதவீதமாக அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்து சாதனைப் படைத்துள்ளது. அதே போல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு சதவீதத்தை 20 சதவீதமாக அதிகப்படுத்த இலக்கு நிர்ணயித்து நாடு முன்னேறி வருகிறது.

71. ஹைட்ரஜன் இயக்கம் திட்டத்திற்கு அண்மையில் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பசுமை எரிசக்தித் துறையில் கோடிக்கணக்கிலான முதலீட்டை ஈர்க்க முடியும். இதன் மூலம் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் தூய்மை எரிசக்தி விவகாரத்தில் வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருப்பது கணிசமாக குறைந்துள்ளது. நகரங்களில் வாகனங்கள் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதுவே நமது முதன்மைக் குறிக்கோளாகும். இதற்காக மின்சார வாகனங்களுக்கான திட்டங்கள் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மின்சார வாகன அதிவிரைவு திட்டத்தின் மூலம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் பொதுப் போக்குவரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி தில்லி உள்ளிட்ட பல நகரங்களில் மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் பல பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவை 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போல் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நீர்வழிச்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய நீர்வழிச்சாலைகள் நாட்டை போக்குவரத்துத் துறையில் தன்னிறைவு பெற்றதாக மாற்றும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

72. இன்றைய உலகம் பல சவால்களை சந்தித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களின் திறன் தற்போது கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் இந்தியா வேறுபட்ட உலக நாடுகள் மத்தியில் வளர்ந்து வரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியிருக்கிறது. இதனால் இந்தியா மீதான உலக நாடுகளின் எதிர்பார்ப்புகள் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளன.

73. இந்த ஆண்டு இந்தியா ஜி20 நாடுகள் அமைப்பிற்கு தலைமையேற்று இருக்கிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தாரக மந்திரத்துடன் சர்வதேச சவால்களை முறியடிப்பதற்கான தீர்வுகளை ஜி20 உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்போடு உருவாக்க இந்தியா தயாராகி இருக்கிறது. இதனை வெறும் ராஜாங்கம் சார்ந்த நிகழ்ச்சியாக வரையறுக்க எனது அரசு விரும்பவில்லை. இந்தியாவின் கலாச்சாரம், திறன் ஆகியவற்றை நாடு முழுவதும் வெளிப்படுத்த கிடைத்த அரிய வாய்ப்பாகவே கருதுகிறது. எனவே ஜி20 கூட்டங்கள் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட உள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

74. இன்றைய காலகட்டம் உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவுக்கு சிறப்பான காலகட்டமாகத் திகழ்கிறது. உலகின் பல்வேறு நாடுகளுடனான நட்புறவையும், ஒத்துழைப்பையும் நாம் பலப்படுத்தி வருகிறோம். ஒருபுறம் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் தலைமைத்துவத்தையும் இந்த ஆண்டு ஏற்க உள்ளோம். மறுபுறம் இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு இடையே அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை உருவாக்கும் பணிக்குழுவிலும் இடம் பெறுகிறோம்.

75. அண்டை நாடுகளுக்கு உதவும் வகையில், பணியாற்றுவதில் எனது அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அது ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களாக இருந்தாலோ அல்லது இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களானாலோ நம்மை பொறுத்தவரையில் மனிதாபிமான உதவிகளை செய்வதே முதல் பணியாகும்.

76. ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் பிரச்சனைகளுக்கு அமைதியான வழியில்  தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் குறிக்கோள். இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதன் மூலம் உலக நாடுகள் மத்தியில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

77. தீவிரவாதம் விவகாரத்தில் இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலகம் இன்று அடையாளம் கண்டு வருகிறது. உலகில் எங்கு தீவிரவாதம் அரங்கேறினாலும் அதற்கு எதிரான இந்தியாவின் கண்டன குரல் ஒலிக்கத்தான் செய்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீவிரவாத தடுப்பு கமிட்டியின் சிறப்புக் கூட்டம் இந்தியாவில் முதன் முறையாக நடைபெற்றது. இதன் மூலம் இந்தியா தீவிரவாதத்திற்கு எதிரான தன்னுடைய தெளிவான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு உறுதி செய்திருக்கிறது. அதே போல் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களிலும் எனது அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உலக நாடுகளுக்கு அறிவுறுத்துகிறது.

78. அரசியல் மற்றும் செயலாக்கம் மூலம் நாம் வலிமையானவர்களாக இருக்கும்போதுதான் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை எனது அரசு ஆழமாக நம்புகிறது. இதனைக் கருத்தில் கொண்டே நமது ராணுவத்தை நவீனமயமாக்கல் மூலம் பலப்படுத்தி வருகிறோம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

79. எல்லையில்லா பெருமிதம் மூலம் ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை நிலைநிறுத்தி வருகிறோம். மனிதநேய வழியில் நமது ஜனநாயகத்தின் தொன்மையை மேம்படுத்தியிருக்கிறோம். கடந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மகிமை வாய்ந்ததாக திகழ்ந்த இந்தியாவின் தனிமனித  நாகரீகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

  • இந்திய ஜனநாயகத்தின் செழுமை, வலிமை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் கூடுதல் பலத்துடன் எடுத்துச் செல்லப்படும்.
  • இந்தியாவின் உணர்வு அழியாதது. அது தொடர்ந்து அழியாததாகவே இருக்கும்.
  •  இந்தியாவின் அறிவாற்றல், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகியவை உலகிற்கு அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு வழிகாட்டும்.
  • அடிமைப்பட்டிருந்த காலத்தில் இந்தியா கொண்டிருந்த உயரிய கொள்கைகள் மற்றும் விழுமியங்கள் இனி வரும் காலங்களுக்கும் அப்படியே எடுத்துச் செல்லப்படும்.
  • கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் அடையாளம் அதன் அழியாத்தன்மையாகவே இருந்தது. இது இனிவரும் காலங்களுக்கும் கொண்டு செல்லப்படும்.

80. இந்த நாடாளுமன்றம்தான் நமது ஜனநாயகத்தின் இதயம். இந்த இதயம் அடுத்த இலக்குகளை நிர்ணயித்திருப்பதுடன் எந்த கஷ்டத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெற திட்டமிட்டுள்ளது. நாளை செய்ய எண்ணுவதை இன்றைக்கே செய்து முடிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். மற்றவர்கள் செய்ய எண்ணுவதை, அவர்களுக்கு முன்பாகவே இந்தியர்களாகிய நாம் செய்து முடிப்போம்.

81. வேதத்தின் சாராசம்சங்களை அடிப்படையாக கொண்டு வாழ்வதன் மூலம் நமது ஜனநாயகத்தை நாம் அனைவரும் இணைந்து வலிமைப்படுத்துவோம்.  நம்முடைய எண்ணங்களை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நம்முடைய உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்.

82. தேசத்தை கட்டியமைப்பதில் கடமைப் பாதையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு சென்று அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவோம்.

நன்றி!

ஜெய்ஹிந்த்!

ஜெய் பாரத்!

***
 

AP/RB/PLM/ES/RR/RS/GK

 



(Release ID: 1895016) Visitor Counter : 336