பிரதமர் அலுவலகம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ரூ.2450 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்


வடக்கு கிழக்கின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள அனைத்து தடைகளுக்கும் அரசு தடை

"இந்தியா உலகக் கோப்பை போன்ற போட்டியை நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை, அப்போது ஒவ்வொரு இந்தியனும் நமது அணியை உற்சாகப்படுத்துவார்கள்"

"வளர்ச்சி என்பது வரவு செலவு திட்டம், டெண்டர்கள், அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழாக்களுடன் முடிந்து விடுவதில்லை"

"இன்று நாம் காணும் மாற்றம் நமது நோக்கங்கள், தீர்மானங்கள், முன்னுரிமைகள் மற்றும் நமது பணி கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகும்"

“மத்திய அரசு இந்த ஆண்டு ரூ.7 லட்சம் கோடியை உள்கட்டமைப்புக்காக மட்டுமே செலவிடுகிறது, 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த செலவு ரூ.2 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருந்தது”

"பிஎம்-டிவைன் திட்டத்தின் கீழ் அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு ரூ.6,000 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது"

"பழங்குடி சமூகத்தின் பாரம்பரியம், மொழி மற்றும் கலாச்சாரத்தை பராமரிக்கும் அதே வேளையில், பழங்குடியினர் பகுதிகளின் மேம்பாடு அரசின் முன்னுரிமையாக இருக்கும்"

"முந்தைய அரசு வடக்கு கிழக்கில் 'பிளவு

Posted On: 18 DEC 2022 2:50PM by PIB Chennai

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.2450 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முன்னதாகஷில்லாங்கில் உள்ள மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு அதன் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

இன்று தொடங்கப்பட்ட பல திட்டங்களில் 320 நிறைவடைந்த, 890 கட்டுமானத்தில் உள்ள 4ஜி மொபைல் கோபுரங்கள், உம்சவ்லியில் ஐஐஎம் ஷில்லாங்கின் புதிய வளாகம், ஷில்லாங் - டீங்பாசோ சாலை, புதிய ஷில்லாங் துணைநகரம் உள்ளிட்ட  திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர், காளான் மேம்பாட்டு மையத்தில் ஸ்பான் ஆய்வகம், மேகாலயாவில் ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு மேம்பாட்டு மையம், மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அஸ்ஸாமில் 21 இந்தி நூலகங்களையும் பிரதமர் திறந்து வைத்தார். அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆறு சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். துரா மற்றும் ஷில்லாங் டெக்னாலஜி பார்க் கட்டம் -II இல் ஒருங்கிணைந்த விருந்தோம்பல் மற்றும் மாநாட்டு மையத்தின் அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மேகாலயா இயற்கை மற்றும் கலாச்சாரத்தில் செழிப்பான மாநிலம் என்றும், மக்களின் அரவணைப்புவரவேற்கும் இயல்பு மூலம் இந்த செழுமை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மேகாலயா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்களுக்காக அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் வேளையில், இன்றைய இந்த விழா கால்பந்து மைதானத்தில் நடைபெறுவது தற்செயலான நிகழ்வாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  "ஒருபுறம், கால்பந்து போட்டி நடக்கிறது, அதே நேரத்தில் நாங்கள் கால்பந்து துறையில் வளர்ச்சிக்கான போட்டியை வழிநடத்துகிறோம். உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்தாலும், இங்குள்ள மக்களின் உற்சாகம் குறையவில்லை” என்று அவர் குறிப்பிட்டார். கால்பந்தாட்டத்தில் காட்டப்படும் சிவப்பு அட்டை பற்றி குறிப்பிட்ட பிரதமர், வடக்கு கிழக்கின் வளர்ச்சிக்கு இடையூறாக வரும் அனைத்துத் தடைகளுக்கும் அரசு சிவப்பு அட்டை காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். "ஊழல், பாரபட்சம், உறவுமுறை, வன்முறை அல்லது வாக்கு வங்கி அரசியல் ஆகியவை பிராந்தியத்தின் வளர்ச்சியை சீர்குலைக்கும், இந்த தீமைகளை அகற்ற அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார். இவ்வாறான தீமைகள் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், அவை ஒவ்வொன்றையும் இல்லாமல் ஒழிக்கும் நோக்கில் நாம் செயற்பட வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசின் முயற்சிகள் சாதகமான பலனைக் காட்டுவதாக அவர்  கூறினார்.

விளையாட்டு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விளக்கிய பிரதமர், மத்திய அரசு புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருவதாகவும், அதன் பலன்களை வடகிழக்கு பகுதிகளிலும் தெளிவாகக் காணலாம் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தைத் தவிர, வடகிழக்கு மண்டலம் பல்நோக்கு அரங்கம், கால்பந்து மைதானம் மற்றும் தடகளப் பாதை போன்ற பல உள்கட்டமைப்புகளுடன் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது போன்ற தொண்ணூறு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் சர்வதேச அணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், இளைஞர்களின் சக்தியை உறுதியாக நம்புவதாகவும், இதுபோன்ற முக்கியமான போட்டியை இந்தியா நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் பிரதமர் உறுதியளித்தார். மேலும் ஒவ்வொரு இந்தியரும் அதில் பங்கேற்கும் நமது அணியை அப்போது உற்சாகப்படுத்துவார்கள் என்று அவர் கூறினார்.

"வளர்ச்சி என்பது பட்ஜெட், டெண்டர்கள், அடிக்கல் நாட்டுதல், திறப்பு விழாக்கள் ஆகியவற்றுடன் நின்றுவிடுவதில்லை" என்று கூறிய பிரதமர்2014 க்கு முன்பு இது வழக்கமாக இருந்தது என்றார். "இன்று நாம் காணும் மாற்றம் நமது நோக்கங்கள், தீர்மானங்கள், முன்னுரிமைகள் மற்றும் நமது பணி கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகும்" என்று கூறிய அவர், “நவீன உள்கட்டமைப்பு, நவீன இணைப்புடன் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே கொள்கை . அனைவரின் முயற்சிகள் மூலம் விரைவான வளர்ச்சியின் நோக்கத்துடன் இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்தையும் பிரிவையும் இணைப்பதே இதன் நோக்கம். பற்றாக்குறையை நீக்குதல், தூரங்களைக் குறைத்தல், திறன் மேம்பாட்டில் ஈடுபடுதல், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை நமது முன்னுரிமை. மேலும் பணி கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஒவ்வொரு திட்டமும்குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படுவதைக் குறிக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருந்த நிலையில், இந்த ஆண்டு உள்கட்டமைப்புக்காக மட்டும் ரூ.7 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விஷயத்தில் மாநிலங்கள் தங்களுக்குள் போட்டி போடுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளைப் பட்டியலிட்ட  பிரதமர், ஷில்லாங் உட்பட வடகிழக்கின் அனைத்து தலைநகரங்களையும் ரயில் சேவையுடன் இணைக்கும் வேகமான பணிகளையும், 2014க்கு முன் 900 ஆக இருந்த வாராந்திர விமானங்களின் எண்ணிக்கை இன்று 1900 ஆக அதிகரித்ததையும் சுட்டிக்காட்டினார். உடான் திட்டத்தின் கீழ், மேகாலயாவில் 16 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன என்றும், இதன் விளைவாக மேகாலயா மக்களுக்கு மலிவான விமானக் கட்டணம் கிடைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேகாலயா மற்றும் வடகிழக்கு விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்த பிரதமர், கிருஷி உதான் திட்டத்தின் மூலம் இங்கு விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் சந்தைகளுக்கு எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது என்று தெரிவித்தார்.

இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள இணைப்புத் திட்டங்கள் பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதமர், மேகாலயாவில் கடந்த 8 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க 5 ஆயிரம் கோடி ரூபாயும்கிராமப்புற சாலைகள் அமைக்க  5 ஆயிரம் கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேகாலயாவில் பிரதமர் கிராம சாலை  திட்டத்தின் கீழ் கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்டதை விட 8 ஆண்டுகளில் கட்டப்பட்டது ஏழு மடங்கு அதிகம் என்று அவர் கூறினார்.

வடகிழக்கு இளைஞர்களுக்கு அதிகரித்து வரும் டிஜிட்டல் இணைப்பு குறித்து பேசிய பிரதமர், 2014ஆம் ஆண்டை விட வடகிழக்கில் 4 மடங்கும், மேகாலயாவில் 5 மடங்கும் ஆப்டிகல் ஃபைபர் கவரேஜ் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிராந்தியத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் மொபைல் இணைப்பை எடுத்துச் செல்ல உதவும் இந்த உள்கட்டமைப்பு மேகாலயா இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று பிரதமர் கூறினார்.  கல்வி உள்கட்டமைப்பு தொடர்பாக, ஐஐஎம் மற்றும் தொழில்நுட்ப பூங்கா கல்வி மூலம், இப்பகுதியில் வருவாய் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பிரதமர் கருத்து தெரிவித்தார். வடகிழக்கில் 150க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா பள்ளிகள் கட்டப்பட்டு வருவதாகவும் அதில் 39 மேகாலயாவில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

கம்பிவடப் பாதை வலையமைப்பை உருவாக்கும் பர்வத்மாலா திட்டம் மற்றும் பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு எளிதான அனுமதியை உறுதி செய்வதன் மூலம் வடக்கு கிழக்கின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் பிஎம்-டிவைன் திட்டத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், “பிஎம்-டிவைன் திட்டத்தின் கீழ் அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு ரூ.6,000 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்கில் முந்தைய ஆளும் அரசுகளின் ‘பிரிவினை’ அணுகுமுறையை சுட்டிக்காட்டிய  பிரதமர், எமது அரசு ‘தெய்வீக’ நோக்கங்களுடன் வந்துள்ளதாக குறிப்பிட்டார். “வெவ்வேறு சமூகங்களாக இருந்தாலும் சரி, வெவ்வேறு பிராந்தியங்களாக இருந்தாலும் சரி, நாங்கள் எல்லாவிதமான பிளவுகளையும் நீக்குகிறோம். இன்று, வடக்கு கிழக்கில், வளர்ச்சியின் கட்டமைப்பை உருவாக்க  நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் ”என்று அவர் கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் பல அமைப்புகள் வன்முறைப் பாதையைத் தவிர்த்துவிட்டு நிரந்தர அமைதியில் தஞ்சம் புகுந்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  வடகிழக்கில் சிறப்பு பாதுகாப்பு படை  தேவையற்றது என்று கூறிய  பிரதமர், பல தசாப்தங்களாக மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வரும் நிலையில், மாநில அரசுகளின் உதவியுடன் நிலைமைகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

வடகிழக்கு மண்டலத்தை எல்லை எனக்கருதாமல்பாதுகாப்பு மற்றும் செழுமைக்கான நுழைவாயில் என்று பிரதமர் கூறினார். எல்லையோர கிராமங்களுக்கு சிறந்த வசதிகளை அளிக்கும்  துடிப்பான கிராமத் திட்டம் குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். "இன்று நாங்கள் தைரியமாக புதிய சாலைகள், புதிய சுரங்கங்கள், புதிய பாலங்கள், புதிய ரயில் பாதைகள் மற்றும் எல்லையில் விமான ஓடுபாதைகளை உருவாக்குகிறோம். வெறிச்சோடிய எல்லையோர கிராமங்கள் துடிப்பாக மாறி வருகின்றன. நமது நகரங்களுக்குத் தேவையான வேகம் நமது எல்லைக்கும் தேவைப்படுகிறது. பிரதமர் கூறினார்.

புனித திருத்தந்தை போப் உடனான தமது சந்திப்பை நினைவுகூர்ந்த பிரதமர், இரு தலைவர்களும் இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்ததாகவும், அவற்றைச் சந்திப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிக்கு ஒருமித்த கருத்துக்கு வந்ததாகவும் கூறினார். இந்த உணர்வை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றும்  பிரதமர் வலியுறுத்தினார்.

அரசு ஏற்றுக்கொண்டுள்ள அமைதி மற்றும் வளர்ச்சி அரசியலை விளக்கிய  பிரதமர், இதன் மூலம் மிகப்பெரிய பயனடைவது நமது பழங்குடியின சமூகம் என்று கூறினார். பழங்குடி சமூகத்தின் பாரம்பரியம், மொழி மற்றும் கலாச்சாரத்தை பராமரிக்கும் அதே வேளையில், பழங்குடியினர் பகுதிகளை வளர்ப்பது அரசின் முன்னுரிமையாகும். மூங்கில் அறுவடைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை உதாரணம் கூறிய பிரதமர், மூங்கிலுடன் தொடர்புடைய பழங்குடியினப் பொருட்களின் உற்பத்திக்கு இது உத்வேகம் அளித்ததாகத் தெரிவித்தார். “காடுகளில் இருந்து பெறப்படும் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டுவதற்காக வடகிழக்கில் 850 வன் தன் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. பல சுயஉதவி குழுக்கள் அவர்களுடன் தொடர்புடையவை, அவற்றில் பல நமது சகோதரிகளை சேர்ந்தவை”, என்று அவர் தெரிவித்தார்.

வீடுகள், தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற சமூக உள்கட்டமைப்புகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு பெருமளவில் பயனளித்துள்ளன என்று திரு மோடி கூறினார். கடந்த சில ஆண்டுகளில் புதிதாக 2 லட்சம் வீடுகள் மின் இணைப்பு பெற்றுள்ளன. ஏழைகளுக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 3 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. "இந்த திட்டங்களில் நமது  பழங்குடியின குடும்பங்கள் தான் அதிக பயனாளிகள்" என்று அவர் கூறினார்.

 

 இப்பகுதியின் வளர்ச்சி தொடர விரும்புவதாகவும், வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அளிக்கப்படும் அனைத்து ஆற்றலின் அடித்தளமாகவும் மக்களின் ஆசீர்வாதத்தை கருதுவதாகவும் கூறிய பிரதமர், வரவிருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே சங்மா, மேகாலயா ஆளுநர் பிரிகேடியர்  பி டி மிஸ்ரா, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் திரு ஜி கிஷன் ரெட்டி, திரு கிரண் ரிஜிஜு, திரு  சர்பானந்த சோனோவால், மத்திய இணை அமைச்சர் திரு பி எல் வர்மா, மணிப்பூர் முதலமைச்சர் திரு என் பைரேன் சிங், மிசோரம் முதலமைச்சர் திரு ஜோரம்தங்கா, அஸ்ஸாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங், அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டுதிரிபுரா முதலமைச்சர் திரு  மாணிக் சாஹா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

பிராந்தியத்தில் தொலைத்தொடர்பு இணைப்பை மேலும் அதிகரிக்கும் ஒரு படியாக, பிரதமர் 4ஜி மொபைல் கோபுரங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், அவற்றில் 320 க்கும் மேற்பட்டவை முடிக்கப்பட்டுள்ளன மற்றும் சுமார் 890 கட்டுமானத்தில் உள்ளன. உம்சாவ்லியில் ஐஐஎம் ஷில்லாங்கின் புதிய வளாகத்தை அவர் திறந்து வைத்தார். புதிய ஷில்லாங் துணை நகரத்துக்கு  சிறந்த இணைப்பை வழங்கும்ஷில்லாங்கின் நெரிசலைக் குறைக்கும் ஷில்லாங் - டீங்பாசோ சாலையையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும் மேகாலயா, மணிப்பூர் அருணாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நான்கு சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

காளான் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு திறன் பயிற்சி அளிக்கவும் மேகாலயாவில் உள்ள காளான் மேம்பாட்டு மையத்தில் ஸ்பான் ஆய்வகத்தை பிரதமர் திறந்து வைத்தார். திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மூலம் தேனீ வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேகாலயாவில் ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு மேம்பாட்டு மையத்தையும் அவர் திறந்து வைத்தார். மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் 21 இந்தி நூலகங்களை அவர்  திறந்து வைத்தார்.

அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆறு சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். துரா மற்றும் ஷில்லாங் டெக்னாலஜி பார்க் கட்டம் -II இல் ஒருங்கிணைந்த விருந்தோம்பல் மற்றும் மாநாட்டு மையத்தின் அடிக்கல்லையும் அவர் நாட்டினார். டெக்னாலஜி பார்க் கட்டம் -II சுமார் 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டதாகும். இது தொழில் வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன் 3000 க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த விருந்தோம்பல் மற்றும் மாநாட்டு மையம், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் பிராந்தியத்தில் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கும் தேவையான உள்கட்டமைப்பை வழங்கும்.

**************

SM/PKV/DL



(Release ID: 1884590) Visitor Counter : 185