பிரதமர் அலுவலகம்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பொது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
" இந்தியாவின் புத்தொழில் துவக்க உணர்வின் பிரதிநிதித்துவமாக பெங்களூரு உள்ளது. இந்த உணர்வுதான் உலகின் பிற பகுதிகளிலிருந்து நாட்டை தனித்து நிற்க வைக்கிறது"
"வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்தியா இப்போது தேக்க உணர்வை விட்டு மீண்டதற்கான அடையாளம்"
"விமான நிலையங்கள் தொழில்களை விரிவுபடுத்துவதற்கு ஒரு புதிய தளத்தை உருவாக்குகின்றன, அதே நேரத்தில் நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன"
"டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் இந்தியா மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களை உலகம் போற்றுகிறது"
"நாட்டிற்கு அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் கர்நாடகா முன்னணியில் உள்ளது"
" நிர்வாகமாக இருந்தாலும் சரி, உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, இந்தியா முற்றிலும் மாறுபட்ட நிலையில் செயல்படுகிறது"
"முன்பு வேகமான பயணம் ஆடம்பரமாகவும், அபாயம் மிகுந்ததாகவும் கருதப்பட்டது"
"நமது பாரம்பரியம் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தது"
"பெங்களூருவின் வளர்ச்சி நடபிரபு கெம்பேகவுடாவின் தொலைநோக்குப்படி இருக்க வேண்டும்"
प्रविष्टि तिथि:
11 NOV 2022 2:39PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக விதான சவுதாவில் உள்ள துறவி கவிஞர் ஸ்ரீ கனகதாசர் மற்றும் வால்மீகி மகரிஷி சிலைகளுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2ஐ பிரதமர் திறந்து வைத்தார் மற்றும் ஸ்ரீ நடபிரபு கெம்பேகவுடாவின் 108 மீட்டர் உயர வெண்கலச் சிலையை அவர் திறந்து வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கர்நாடகாவின் இருபெரும் ஆளுமைகளின் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் துறவி கனக தாஸ் மற்றும் ஒனகே ஓபவ்வா ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். சென்னை, பெங்களூரு மற்றும் பாரம்பரிய நகரமான மைசூருவை இணைக்கும் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ முதல் வந்தே பாரத் ரயிலை கர்நாடகா இன்று பெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். கர்நாடக மக்களுக்கு அயோத்தி, காசி மற்றும் பிரயாக்ராஜ் தரிசனத்தை வழங்கும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் இன்று தொடங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 குறித்து பேசிய பிரதமர், நேற்று பகிரப்பட்ட படங்களை விட உள்கட்டமைப்பு மிகவும் அழகாகவும், பிரமாண்டமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், நடபிரபு கெம்பேகவுடாவின் சிலை குறித்து விளக்கமளித்த பிரதமர், பெங்களூரு மற்றும் இந்தியாவை எதிர்காலத்தில் கட்டமைக்க இது உத்வேகமாக செயல்படும் என்று கூறினார். ஸ்டார்ட்அப் உலகில் இந்தியாவின் அடையாளத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த அடையாளத்தை வரையறுப்பதில் பெங்களூரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். "பெங்களூரு இந்தியாவின் புத்தொழில் துவக்க உணர்வின் பிரதிநிதித்துவம் ஆகும், மேலும் இந்த உணர்வுதான் நாட்டை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனித்து நிற்கச் செய்கிறது" என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி பெங்களூருவின் இளைஞர்களின் உணர்வை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
வந்தே பாரத் ஒரு ரயில் மட்டுமல்ல, அது புதிய இந்தியாவின் புதிய அடையாளம். “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்தியா இப்போது தேக்கத்தின் நாட்களிலிருந்து மீண்டதற்கான அடையாளமாகும். இந்திய ரயில்வேயின் மொத்த மாற்றத்திற்கான இலக்குடன் நாம் நகர்கிறோம். 400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மற்றும் விஸ்டா டோம் பெட்டிகள் இந்திய ரயில்வேயின் புதிய அடையாளமாக மாறி வருகின்றன. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் சரக்கு போக்குவரத்தின் வேகத்தை அதிகரித்து நேரத்தை மிச்சப்படுத்தும். அதிவிரைவு அகலப்பாதை மாற்றம் ரயில்வேயின் வரைபடத்தில் புதிய பகுதிகளைக் கொண்டுவருகிறது. ரயில் நிலையங்களின் நவீனமயமாக்கல் குறித்துப் பேசிய பிரதமர், பெங்களூரு ரயில் நிலையம் சர்.எம். விஸ்வேஸ்வரய்யா முனையம் பயணிகளுக்கு மிகவும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது என்றார். கர்நாடகா உள்ளிட்ட மற்ற ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை விளக்கிய பிரதமர், நகரங்களுக்கிடையேயான இணைப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அது காலத்தின் தேவை என்றும் கூறினார். கெம்பேகவுடா விமான நிலையத்தின் புதிய முனையம்-2 இணைப்புகளை அதிகரிக்க புதிய வசதிகளையும் சேவைகளையும் சேர்க்கும் என்று பிரதமர் கூறினார். விமானப் பயணத்தைப் பொறுத்தவரை உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்றும், விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் 70 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன, ஆனால் இன்று இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 140 ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். “விமான நிலையங்கள் தொழில்களை விரிவுபடுத்துவதற்கான புதிய களத்தை உருவாக்குகின்றன, அதே நேரத்தில் இளைஞர்களுக்கு நாட்டில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன” என்று திரு மோடி குறிப்பிட்டார்.
முழு உலகமும் இந்தியா மீது காட்டும் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் பலனை கர்நாடகம் அறுவடை செய்து வருகிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். உலகமே கோவிட் தொற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கும் போது கர்நாடகாவில் நடந்த 4 லட்சம் கோடி ரூபாய் முதலீடு குறித்து பிரதமர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். "கடந்த ஆண்டு, நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் கர்நாடகா முன்னிலை வகித்தது" என்று அவர் மேலும் கூறினார். இந்த முதலீடு தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்ல, உயிரித் தொழில்நுட்பம் முதல் பாதுகாப்பு வரையிலும் உள்ளது என்று அவர் மேலும் விவரித்தார். இந்தியாவின் விமானம் மற்றும் விண்வெளிக் கலம் துறையில் கர்நாடகா 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்புக்காக தயாரிக்கப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் ஏறத்தாழ 70 சதவீதம் கர்நாடகாவில் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பார்ச்சூன் 500 பட்டியலில் இருந்து 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கர்நாடகாவில் செயல்பட்டு வருவதாக திரு மோடி மேலும் கூறினார். கர்நாடகாவின் இரட்டை இயந்திர அரசு இத்தகைய அபரிமிதமான வளர்ச்சிக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
" நிர்வாகமாக இருந்தாலும் சரி, உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, இந்தியா முற்றிலும் மாறுபட்ட நிலையில் செயல்படுகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். பிம்(BHIM), யுபிஐ, மேட் இன் இந்தியா, 5ஜி தொழில்நுட்பத்தின் உதாரணங்களை அளித்த பிரதமர், இந்த தொலைதூர கனவை நனவாக்கியவர்கள் பெங்களூருவின் தொழில் வல்லுநர்களும் அடங்குவர் என்று கூறினார். கடந்த அரசின் சிந்தனைச் செயற்பாடுகள் காலாவதியாகிவிட்டதால், 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் இவ்வாறான சாதகமான மாற்றங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை என பிரதமர் சுட்டிக்காட்டினார். "முந்தைய அரசுகள் வேகத்தை ஆடம்பரமாகவும், அபாயகரமானதாகவும் கருதின", என்ற பிரதமர் தொடர்ந்தார், "எங்கள் அரசு இந்த போக்கை மாற்றியுள்ளது. வேகத்தை அபிலாஷையாகவும், இந்தியாவின் சக்தியாகவும் கருதுகிறோம். பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் பற்றி விளக்கிய பிரதமர், அனைத்துத் துறைகள் மற்றும் முகமைகளை ஒரே தளத்தில் கொண்டு வர அரசு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், இதன் விளைவாக ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட அடுக்கு தரவுகள் பல்வேறு முகமைகளுக்கு கிடைத்து வருவதாகவும் குறிப்பிட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல அமைச்சகங்கள் மற்றும் டஜன் கணக்கான துறைகள் இந்த தளத்தின் உதவியுடன் ஒன்றிணைகின்றன என்று அவர் மேலும் கூறினார். "இன்று, இந்தியா உள்கட்டமைப்பு முதலீட்டுக் குழாய்த்திட்டத்தில் ரூ. 110 லட்சம் கோடிகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது", "ஒவ்வொரு போக்குவரத்து ஊடகமும் மற்றொன்றை ஆதரிக்கும் வகையில் பல்வகை உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கையைப் பற்றிப் பேசிய பிரதமர், நாட்டில் போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், புதுமைகளை உருவாக்கவும் இது உதவும் என்றார்.
நாட்டின் பாரம்பரியம் குறித்து செங்கோட்டையில் இருந்து ஆற்றிய தமது உரையை நினைவுகூர்ந்த பிரதமர், நமது பாரம்பரியம் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தது என்று கூறினார். பாரத் கௌரவ் ரயில் மூலம் நம்பிக்கை மற்றும் ஆன்மீக ஸ்தலங்கள் இணைக்கப்படுகின்றன என்றும் அதே நேரத்தில் ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ரயிலின் இதுவரை 9 பயணங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “ஷீரடி கோயில், ஸ்ரீ ராமாயண யாத்திரை, திவ்ய காசி யாத்திரை என எல்லாமே பயணிகளுக்கு மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது.” கர்நாடகாவில் இருந்து காசி, அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கு இன்று தொடங்கிய பயணம் கர்நாடக மக்கள் காசி மற்றும் அயோத்திக்கு செல்ல உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கனகதாஸ் அவர்கள் உருவாக்கிய பாரம்பரிய தானியங்களின் முக்கியத்துவம் குறித்து அனைவரின் கவனத்தையும் பிரதமர் ஈர்த்தார். அவரது இசையமைப்பான ராம்-தன்யா சரிதையை எடுத்துரைத்த பிரதமர், கர்நாடகாவில் அதிகம் விரும்பப்படும் தினையான ‘ராகி’யை எடுத்துக்காட்டி சமூக சமத்துவத்தின் செய்தியை இது தெரிவிக்கிறது என்றார்.
நடபிரபு கெம்பேகவுடா அவர்களை நினைத்தபடி பெங்களூருவின் வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். "இந்த நகரத்தின் குடியேற்றம் இங்குள்ள மக்களுக்கு கெம்பேகவுடா அவர்களின் பெரும் பங்களிப்பாகும்," என்று அவர் மேலும் கூறினார். பெங்களூரு மக்களின் வசதிக்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் என்று வரும்போது, இணையற்ற விவரங்களை பிரதமர் எடுத்துரைத்தார். அவரது தொலைநோக்கு பார்வையின் பலனை பெங்களூரு மக்கள் இன்னும் பெற்று வருகின்றனர்” என்று திரு மோடி மேலும் கூறினார். இன்று வணிகங்கள் மாறியிருந்தாலும், பெங்களூரின் வணிக உயிர்நாடியாக 'பெட்' (பெங்களூருவில் உள்ள ஒரு பகுதி) இன்னும் உள்ளது என்று அவர் மேலும் விவரித்தார். பெங்களூரின் கலாச்சாரத்தை செழுமைப்படுத்துவதில் நடபிரபு கெம்பேகவுடா அவர்களின் பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், புகழ்பெற்ற கவி கங்காதரேஷ்வர் கோவில் மற்றும் பசவனகுடி பகுதியில் உள்ள கோவிலுக்கு எடுத்துக்காட்டினார். இவற்றின் மூலம் பெங்களூரின் கலாச்சார உணர்வை கெம்பேகவுடா அவர்கள் என்றென்றும் உயிர்ப்புடன் வைத்திருந்தார் என்று பிரதமர் தெரிவித்தார்.
பெங்களூரு ஒரு சர்வதேச நகரம் என்றும், நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில் அதை நவீன உள்கட்டமைப்புகளுடன் வளப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர், “இதெல்லாம் அனைவரது முயற்சியாலும் மட்டுமே சாத்தியம்” என்று கூறி உரையை நிறுவு செய்தார்.
கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு பி எஸ் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் திரு பிரஹலாத் ஜோஷி, திரு அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர்கள் திருமதி ஷோபா கரந்த்லாஜே, திரு. ராஜீவ் சந்திரசேகர், திரு ஏ நாராயண்சுவாமி மற்றும் திரு பகவந்த் குபா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு பிஎன் பச்சே கவுடா, ஆதிசுஞ்சனகிர் மடத்தின் டாக்டர் நிரமல்நந்தநாத சுவாமிஜி மற்றும் கர்நாடக அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
**************
AP/PKV/IDS
(रिलीज़ आईडी: 1875319)
आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam