பிரதமர் அலுவலகம்

குடிசை மறுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கல்காஜியில் புதிதாக கட்டப்பட்ட 3,024 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் திறந்து வைத்தார்


பூமிஹீன் முகாமில் தகுதி உடைய குடியிருப்பாளர்களுக்கு வீட்டு சாவிகளை வழங்கினார்

“அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற வழியில் நாடு செல்கிறது”

“நமது ஏழை மக்களைச் சார்ந்துள்ள கொள்கை உருவாக்கம் மற்றும் முடிவெடுத்தலில் ஏழை மக்கள் பிரதானமாக உள்ளனர்”

"வாழ்க்கையில் இந்த பாதுகாப்பு இருக்கும் போது, ஏழைகள் தங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க கடினமாக உழைக்கிறார்கள்”

“உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த நாங்கள் இருக்கிறோம்”

“பிரதமர் உதய் திட்டத்தின் மூலம் தில்லியில் கட்டப்பட்டுள்ள அங்கீகாரமற்ற வீடுகளை ஒழுங்குப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது”

“நாட்டின் தலைநகர் என்ற நிலையுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறந்த நகரமாக தில்லியை மாற்றுவது மத்திய அரசின் நோக்கமாகும்”

“தில்லியைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் முன்னோடிகளாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர்”

Posted On: 02 NOV 2022 6:13PM by PIB Chennai

குடிசை மறுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கல்காஜியில் குடிசைவாழ் மக்களின் மறுவாழ்விற்காக புதிதாக கட்டப்பட்ட 3,024 அடுக்குமாடி குடியிருப்புகளை  பிரதமர் திரு நரேந்திர  மோடி திறந்து வைத்தார். புதுதில்லி விக்யாபவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பூமிஹீன் முகாமில்  தகுதி உடைய குடியிருப்பாளர்களுக்கு வீட்டு சாவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தில்லியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இந்நாள் மிகப் பெரிய நாள் என்றும், ஏழை குடிசைவாழ் குடும்பத்தினருக்கு இது புதிய தொடக்கம் என்றும் கூறினார்.  கல்காஜி விரிவாக்கத் திட்டத்தில் மட்டும் முதல் கட்டமாக 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மிக விரைவில் மற்ற குடும்பங்களும் புதிய வீடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார். தில்லியை சிறந்த நகரமாக்கும் பணிகளில் மத்திய அரசு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்தார். தில்லி போன்ற பெரிய நகரங்களில் வளர்ச்சிக்கான கனவுகள் நனவாக்கப்படுவதாக கூறிய பிரதமர், ஏழை மக்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளால் அது போன்ற வளர்ச்சிகள்  ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்தார். முரண்பாடாக ஏழை மக்களின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறினார்.

ஒரு நகரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்போது, ​​முழுமையான வளர்ச்சியை யாரால் எண்ணிப்பார்க்க முடியும் என்று கூறிய அவர்,  விடுதலைப் பெருவிழாக் காலத்தில் இந்தப் பெரிய இடைவெளியை நாம் நிரப்ப வேண்டும் என்று கூறினார்.  அதனால் தான் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற வழியில் நாடு செல்வதாக  தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக நாட்டின் ஆட்சி முறையானது வறுமை என்பது ஏழைகளின் பிரச்சினை என்ற மனநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்றைய அரசு ஏழைகளுக்கானது என்று அவர் சுட்டிக்காட்டினார். கொள்கை உருவாக்கம் மற்றும் முடிவெடுக்கும் முறைகளில் ஏழைகள் பிரதானமாக இருக்கிறார்கள் என்றும், நகர்ப்புற ஏழைகளின் பிரச்சினைகளை அரசு சமமான முக்கியத்துவத்துடன் நடத்துகிறது என்றும் திரு மோடி எடுத்துரைத்தார்.

தில்லியில் வங்கி கணக்கு கூட இல்லாத 50 லட்சம் பேர் இருப்பதாக பிரதமர் கூறினார். அது அவர்களுக்கு வங்கி முறையின் எந்தப் பலனையும் இல்லாமல் செய்தது என்று கூறிய அவர்,  அவர்கள் தில்லியில் இருந்தனர் என்ற போதிலும் அவர்களிடமிருந்து தில்லி வெகு தொலைவில் இருந்தது என்று கூறினார். இந்த நிலைமை அரசால் மாற்றப்பட்டது மற்றும் கணக்குகளைத் தொடங்குவதன்  மூலம் நிதி உள்ளடக்கத்திற்கான இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று  கூறினார். இதன் மூலம் தில்லியில் உள்ள சாலையோர வியாபாரிகள் உட்பட ஏழை மக்களுக்கு நேரடி பலன் கிடைத்தது என்று குறிப்பிட்டார். யுபிஐ மூலமான நிதி பரிவர்த்தனை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 50,000-க்கும்  மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் நிதியுதவி பெற்றதாகவும் அவர் கூறினார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை' மூலம் தில்லியில் உள்ள ஏழைகளுக்கு எளிதாக வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்து வருவதாக பிரதமர் கூறினார். பெருந்தொற்று நோய் பரவலின் போது ஏழை மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தகுதியுடைய லட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள் மத்திய அரசிடமிருந்து இலவச ரேஷன் பொருட்கள் பெற்று வருவதாக கூறினார். தில்லியில் மட்டும் ரூ.2.5 ஆயிரம் கோடிக்கு மேல் இதற்காக செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், தில்லியில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் மருந்துச் செலவுகள் குறைக்கப்பட்டதாக அவர் கூறினார். ​​வாழ்க்கையில் இந்த பாதுகாப்பு இருக்கும் போது, ஏழைகள் தங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க கடினமாகவும். ஓய்வில்லாமலும் தங்கள் முழு திறமையுடன் கடினமாக உழைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.  இவை அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில்  விரிவான விளம்பரங்களுடன் செய்யப்படுவதாக பிரதமர் கூறினார். ஏனென்றால், உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்த விரும்புகிறோம்  என்று அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு என்ற தலைப்பில் பேசிய பிரதமர், மக்கள் தங்கள் வீடுகளின் நிலை குறித்து தொடர்ந்து கவலைப்படுவதாக அவர் கூறினார்.. தில்லி மக்களின் இந்த கவலையை குறைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டதாக தெரிவித்தார். தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத  குடியிருப்புகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பிரதமரின் உதய்  திட்டத்தின் மூலம் முறைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்ட வட்டி மானியம் வழங்க 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தமது அரசு தவறாது என்று அவர் கூறினார். நாட்டின் தலைநகர் என்ற நிலையுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறந்த நகரமாக தில்லியை மாற்றுவது மத்திய அரசின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார். செங்கோட்டையிலிருந்து ‘எதிர்பார்ப்புடைய சமூகம்’ பற்றிய தமது பேச்சைக் குறிப்பிட்ட பிரதமர், தில்லியைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் முன்னோடிகளாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

தில்லி பிராந்தியத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, 2014-ம் ஆண்டுக்குப் பிறகு 190 கிலோமீட்டர் முதல் 400 கிலோமீட்டர் வரை மெட்ரோ ரயில் வழித்தடங்களை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளில், 135 புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் நேரமும், பணமும் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  தில்லி போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபடுவதற்காக மத்திய அரசு ரூ.50,000 கோடி செலவில் சாலைகளை விரிவுபடுத்துவதாகவும்,  துவாரகா விரைவுச்சாலை, நகர்ப்புற விரிவாக்க சாலை, அக்க்ஷர்தாம் முதல் பாக்பத் 6-வழி நுழைவு நெடுஞ்சாலை மற்றும் குருகிராம்-சோஹ்னா சாலை வடிவில் உயர்த்தப்பட்ட நடைபாதை போன்றவற்றை உதாரணமாக பிரதமர் எடுத்துரைத்தார்.

தில்லியில் அதிவிரைவு ரயில் சேவைகள் எதிர்காலத்தில் தொடங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். புதுதில்லி ரயில் நிலையத்தின் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளைக் குறிப்பிட்ட அவர், துவாரகாவில் 80 ஹெக்டேர் நிலப்பரப்பில் பாரத் வந்தனா பூங்காவைக் கட்டுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். தில்லியில் 700-க்கும் மேற்பட்ட பெரிய பூங்காக்கள் தில்லி மேலாண்மை ஆணையத்தால் பராமரிக்கப்படுவதாக தன்னிடம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  வஜிராபாத் தடுப்பணை முதல் ஓக்லா தடுப்பணை வரையிலான 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல்வேறு பூங்காக்கள் தில்லி மேலாண்மை ஆணையத்தால் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

புதிய வீடுகளின் பயனாளிகள் எல்இடி பல்புகளை மட்டும் உபயோகித்து  மின்சாரத்தை சேமிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். தண்ணீர் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும், குடியிருப்பு முழுவதையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று அவர் கூறினார். தற்போது மத்திய அரசு கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டித் தருவதாகவும் குழாய் மூலம்  குடிநீர் விநியோகம் செய்வதாகவும், மின் இணைப்பு அளிப்பதாகவும், இலவச எரிவாயு சிலிண்டர் வழங்குவதாகவும்   தெரிவித்த அவர், இதன் மூலம் குடிசைகள் தூய்மையற்றது என்ற பழங்கால கருத்துக்களை நாம் தகர்த்துள்ளோம் என்று கூறினார். நாடு மற்றும் தில்லியின் வளர்ச்சிக்கு  அனைவரும் தங்களது பங்களிப்பை தொடர்வார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்புடன் தில்லி மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணம் புதிய உச்சத்தை அடையும் என்று கூறி தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தில்லி துணை நிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இணை அமைச்சர் திரு கவுசல் கிஷோர், வெளியுறவு இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

**************

SM/IR/KPG/SNE



(Release ID: 1873227) Visitor Counter : 191