பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரமாண்டமான தீபோத்சவ் கொண்டாட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

Posted On: 23 OCT 2022 8:00PM by PIB Chennai

தீபாவளியை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட தீபோத்சவ விழாவைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். சரயு நதிக்கரையில் உள்ள ராமர் பாதத்தில்  3-டி (முப்பரிமாண)  வரைபடக்காட்சியையும், பிரமாண்ட இசையுடன் லேசர் காட்சியையும்  பிரதமர் பார்வையிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ராமரைப் பாராட்டி, அயோத்தி இன்று தீபங்களின் ஒளியால் தெய்வீகமாகவும், உணர்ச்சிகளால் பிரமாண்டமாகவும் உள்ளது என்றார். "அயோத்தி இன்று இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சியின் பொன்னான அத்தியாயத்தின் பிரதிபலிப்பாகும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். முன்னதாக ராஜ்யாபிஷேகத்திற்கு இங்கு வந்தபோது தமக்குள் உணர்ச்சிகளின் வேகத்தை உணர்ந்ததாகப்  பிரதமர் கூறினார். 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு பகவான் ஸ்ரீராமர் திரும்பும்போது அயோத்தி எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பதைப் பிரதமர் எண்ணிப்பார்த்து வியந்தார்.  "இன்று, இந்த அமிர்த காலத்தில், ராமரின் ஆசீர்வாதத்துடன், அயோத்தியின் தெய்வீகத்தன்மையையும் அழியாத தன்மையையும் நாம் காண்கிறோம்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உபநிடதத்தை மேற்கோள் காட்டிய  பிரதமர், வெற்றி வாய்மைக்கு உரியது, பொய்மைக்கு அல்ல என்றார். ராமனின் நன்னடத்தைக்கே எப்போதும் வெற்றி கிடைக்கும், ராவணனின் தவறான நடத்தைக்கு அல்ல என்ற நமது ஞானிகளின் வார்த்தைகளையும் பிரதமர் மேற்கோள் காட்டினார். உடல் எனும் விளக்கில் உள்ள உணர்வு சக்தி பற்றி குறிப்பிட்ட அவர், ஞானிகளை மேற்கோள் காட்டி, விளக்கின் ஒளியே பிரம்மாவின் வடிவம் என்றார். இந்த ஆன்மீக ஒளி இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கு வழிகாட்டும் என்ற தமது நம்பிக்கையைத்  திரு மோடி வலியுறுத்தினார்.

பல ஆண்டுகளுக்கு முன் குஜராத்தியில் தாம் எழுதிய  ‘தியா’ எனும் விளக்கைப் பற்றிய கவிதையிலிருந்து சில வரிகளைப்  பிரதமர் கூறினார். விளக்கு நம்பிக்கையையும் வெப்பத்தையும் நெருப்பையும் இளைப்பாறுதலையும் தரும் என்ற கவிதையின் பொருளை விளக்கிக் கூறினார். உதிக்கும் சூரியனை அனைவரும் வழிபட்டாலும், இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில் ஆதரவாக இருப்பது விளக்கு( தியா)தான். மக்கள் மனதில் அர்ப்பணிப்பு உணர்வைக் கொண்டுவரும் அதே வேளையில், இருளைப் போக்க விளக்கு தன்னைத் தானே எரித்துக்கொள்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இடைக்காலத்திலும், நவீன காலத்திலும் இருண்ட காலத்தின் மோசமான விளைவுகளை இந்தியா எதிர்கொண்டாலும், நாட்டு மக்கள் விளக்கு ஏற்றுவதை நிறுத்தவில்லை, நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதை நிறுத்தவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். கொரோனா நெருக்கடியின் போது ஒவ்வொரு இந்தியரும் ஒரே உணர்வில் விளக்கேற்றியதையும், பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு உலகமே சாட்சியாக இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். "கடந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு இருளிலிருந்தும் இந்தியா வெளிவந்ததுடன்  முன்னேற்றப் பாதையில் அதன் வலிமையின் ஒளியைப் பரப்பியது" என்று கூறி பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.

********


(Release ID: 1870645) Visitor Counter : 127