பிரதமர் அலுவலகம்

மத்திய பிரதேசத்தில் பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தில் 4.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் புதுமனை புகுவிழாவின்போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 22 OCT 2022 7:36PM by PIB Chennai

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்களே,  மாநில அமைச்சர்களே,  சட்டமன்ற உறுப்பினர்களே பஞ்சாயத்து உறுப்பினர்களே,  இதர பிரமுகர்களே,  மத்திய பிரதேசத்தின் அனைத்து சகோதர சகோதரிகளே

 

முதலாவதாக உங்கள் அனைவருக்கும் இனிய தந்தேராஸ்  மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்களை  நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  தந்தேராஸ் மற்றும் தீபாவளியின் போது நாம் புதிய தொடக்கத்தை உருவாக்குகிறோம்,  வீடுகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டுகிறோம்,  புதிய பொருட்களை வாங்குகிறோம்,  மேலும் சில புதியவற்றைப் பெறுகிறோம், நாம் புதிய உறுதிமொழிகளை ஏற்கிறோம், புதிய தொடக்கத்துடன் நமது வாழ்க்கையைப் புத்துணர்ச்சியுடன் தொடங்குகிறோம், மகிழ்ச்சிக்கும் வளத்திற்கும் புதிய கதவுகள் திறக்கின்றன. இன்று மத்திய பிரதேசத்தில்  4.5 லட்சம் ஏழை சகோதரிகளும் சகோதரர்களும் புதிய தொடக்கத்தைப் பெறுகிறார்கள்.   இந்த நண்பர்கள் தங்களின் புதிய வீடுகளுக்காகப் புதுமனை  புகுவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் லட்சக்கணக்கான சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இந்த இப்போது வீடுகளுக்கு உரிமையாளர்கள் ஆகவிருக்கின்ற நீங்கள் லட்சாதிபதிகள். ஏனென்றால் இந்த வீடுகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை.

 

சகோதர சகோதரிகளே,

 

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமரின்  வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 3.5 கோடி ஏழைக் குடும்பங்களின் மாபெரும் வாழ்க்கைக் கனவை நாங்கள் நனவாக்கியுள்ளோம். எங்களின் வாக்குறுதியை நிறைவேற்ற வெறுமனே நான்கு சுவர்களை அமைத்து அவற்றை நாங்கள் ஒப்படைக்கவில்லை. எங்களின் அரசு ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.  எனவே ஏழை எளிய மக்களின் தேவைகளை, விருப்பங்களை மிக நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது.  எங்களின் அரசு வீடுகளை வழங்கும்போது கழிப்பறைகள்,  மின்சாரம்,  குடிநீர், சமையல் எரிவாயு இணைப்பு போன்ற இதர வசதிகளையும் சேர்த்தே வழங்குகிறது. எனவே இந்த வசதிகளும் அரசின் பல்வேறு திட்டங்களும் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான வீடுகளைக் கட்டி முடிக்கின்றன.

 

சகோதர சகோதரிகளே,

 

ஒரு தலைமுறை அது சேர்த்து வைத்த சொத்துக்களை மற்றொரு தலைமுறைக்குப் பரிமாற்றம் செய்வதை நாம் காண்கிறோம். முந்தைய அரசுகளின் தவறான கொள்கைகள் காரணமாக மக்கள் அடுத்த தலைமுறைக்கு வீடுகள் இல்லாத நிலையை விட்டுச்செல்லும்  நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். பல தலைமுறைகளாக இருக்கும் இந்த விஷச்சக்கரத்தை முறியடித்த நபர்  மிகவும் மெச்சத்தக்கவரும் புகழத் தக்கவருமாவார். நாட்டின் சேவகனாக,  கோடிக்கணக்கான தாய்மார்களின் ஒரு மகனாக இந்த விஷச்சக்கரத்திலிருந்து கோடிக்கணக்கான ஏழைக்  குடும்பங்களை வெளிக்கொண்டுவரும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.  எங்கள் அரசு ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் வழங்க இரவு பகலாகப் பாடுபடுகிறது. இதனால்தான் இன்று இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது 9-10  லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

சகோதர சகோதரிகளே,

 

இந்த மாபெரும் பணியை அரசு செயல்படுத்த முடிகிறதென்றால் அதற்குக் காரணம் உங்களுக்கான சேவை உணர்வும் அர்ப்பணிப்பும் தான். சிலர் எங்களை விமர்சனம் செய்வது ஒரு விஷயமே அல்ல. உங்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்கான அரசியல் உறுதியுடன் நாங்கள் அர்ப்பணிப்போடு முன்னேறிச் செல்கிறோம். இந்த வீடுகளைப் பெற்றுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்.  நீங்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறீர்கள் என்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.  இது உங்களுடைய வீடு. கடந்த 3-4 தலைமுறைகள் தீபாவளியைத்  தங்களின் சொந்த வீடுகளில் கொண்டாடியிருக்கவில்லை. இன்று   உங்களின்சொந்த வீடுகளில் உங்களின் குழந்தைகளுடன் நீங்கள் தந்தேராஸ் மற்றும் தீபாவளியைக் கொண்டாடவிருக்கிறீர்கள்.  இந்த விளக்கின் ஒளி உங்களின் வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்யும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். கடவுளின் ஆசிகள் உங்களோடு இருக்கட்டும்.  இந்தப் புதிய வீடு உங்களின் புதிய முன்னேற்றத்திற்கு காரணமாக அமையட்டும். மிக்க நன்றி!

 

*****



(Release ID: 1870606) Visitor Counter : 138