பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் காந்திநகரின் மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் பாதுகாப்பு கண்காட்சி 2022-இன் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 19 OCT 2022 2:59PM by PIB Chennai

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, குஜராத் முதல்வர் திரு புபேந்திர பாய் பட்டேல் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர் திரு ஜெகதீஷ் பாய் அவர்களே, முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் அவர்களே, விமானப்படை தளபதி ஏர்சீஃப் மார்ஷல் வி. ஆர். சௌத்ரி அவர்களே, கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரிகுமார் அவர்களே, ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

அமிர்த காலத்தில் நாம் உறுதிமொழியேற்றுள்ள புதிய இந்தியாவின் பிரமாண்டமான உருவத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது. முன் காலத்திலும் நம் நாட்டில் பாதுகாப்பு கண்காட்சி நடைபெறும். இருந்தபோதும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தி, இந்திய நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதல் கண்காட்சியாக இந்த வருட நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்திய தொழில்துறை, இந்திய தொழில்துறையுடன் சம்பந்தப்பட்ட சில கூட்டு ஸ்தாபனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 1300 கண்காட்சியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். முதன் முறையாக 450-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் கையெழுத்தாகின்றன.

 

நண்பர்களே,

இந்த நிகழ்வை முன்னிட்டு இந்திய- ஆப்பிரிக்க இரண்டாவது பாதுகாப்பு பேச்சுவார்த்தையும் தொடங்க உள்ளது. காலப்போக்கில் மேலும் வலுப்பெற்று, புதிய பரிமாணங்களை அடைந்து வரும் இந்திய, ஆப்பிரிக்க உறவுமுறை, பழங்கால நம்பிக்கையை சார்ந்துள்ளது. மருந்துகள் முதல் அமைதி நிலை வரை ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு தேவைக்கும் துணை நிற்க நாங்கள் முயன்றுள்ளோம். தற்போது, பாதுகாப்புத் துறையில் நம்மிடையேயான ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் இந்த உறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.

இந்திய கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு அமைச்சர்களின் உச்சிமாநாடு, இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாகும். 46 நட்பு நாடுகள் இதில் கலந்து கொள்கின்றன. இன்று, சர்வதேச பாதுகாப்பு முதல் உலகளாவிய வர்த்தகம் வரை கடல்சார் பாதுகாப்பு உலகளாவிய முன்னுரிமையாக வளர்ச்சி பெற்றுள்ளது. தீசா விமான நிலையத்தின் கட்டமைப்பு, நாட்டின் பாதுகாப்பிற்கும், பகுதியின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

நோக்கம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் அமலாக்கம் என்ற மந்திரத்துடன் பாதுகாப்புத் துறையில் இந்தியா முன்னேறி வருகிறது. மேக் இன் இந்தியா என்பது இந்த துறையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது ராணுவ ஏற்றுமதிகள் 8 மடங்கு அதிகரித்துள்ளன. 68% நிதியை உள்நாட்டு ராணுவ பொருட்களுக்கு நாம் ஒதுக்கியுள்ளோம். தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 1 வீதம் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களை அமைத்திருப்பதன் வாயிலாக வளர்ச்சியின் பாதையில் நாம் விரைவாக முன்னேறுகிறோம்.

பாதுகாப்பு அமைச்சருக்கும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுகள். உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! குஜராத் மாநில மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

நன்றி

பொறுப்புத்துறப்பு: பிரதமர் உரையின் சில பகுதிகள் குஜராத்தி மொழியிலும் உள்ளன. அவை இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள

**************

BG/SM/IDS



(Release ID: 1869655) Visitor Counter : 109