பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் அடலாஜில் உள்ள த்ரிமந்திரில் மிகச்சிறந்த பள்ளிகள் இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
ரூ.4260 கோடி மதிப்புள்ள திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்
“அமிர்த காலத்திற்கான அமிர்த தலைமுறையின் உருவாக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கை”
“கடந்த இரு தசாப்தங்களில் கல்வி முறையில் குஜராத் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது”
“குஜராத் எப்போதுமே கல்வித் துறையில் சில தனித்துவ மற்றும் பெரும் சோதனைகளின் பகுதியாக இருந்துள்ளது”
“தேசிய கல்விக்கொள்கையின் அமலாக்கத்திற்கு பிஎம் –ஸ்ரீ பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக இருக்கும்”
“புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது அடிமை மனோபாவத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கும், திறமை மற்றும் புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிப்பதற்குமான முயற்சியாகும்”
“அறிவுடைமையின் அளவாக ஆங்கில மொழி எடுத்துக் கொள்ளப்பட்டதால் ஊரக திறமையை வெளிப்படுத்துவதில் தடங்கலை ஏற்படுத்திவிட்டது”
“பழங்காலத்திலிருந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியமானதாக இருந்துள்ளது”
“21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பெரும்பாலான கண்டுபிடிப்புகள் இந்தியாவில் இருக்கும்”
“புதிய கண்டுபிடிப்பின் குவிமையமாக குஜராத் இருப்பதால், நாட்டின் அறிவு மையமாக அது உருவாகி வருகிறது”
Posted On:
19 OCT 2022 2:10PM by PIB Chennai
குஜராத்தின் அடலாஜில் உள்ள த்ரிமந்திரில் மிகச்சிறந்த பள்ளிகள் இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. த்ரிமந்திரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.4260 கோடி மதிப்புள்ள திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இம்மாநிலத்தில் புதிய வகுப்பறைகள், நவீன வசதி கொண்ட வகுப்பறைகள், கணினி சோதனைக் கூடங்கள், அடிப்படை கட்டமைப்பின் ஒட்டுமொத்த மேம்பாடு ஆகியவை கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்.
இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே பேசிய பிரதமர், அமிர்த காலத்திற்கான அமிர்த தலைமுறையின் உருவாக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கையை குஜராத் மேற்கொண்டிருப்பதாக கூறினார். இந்த நிகழ்வு வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கும், வளர்ச்சி அடைந்த குஜராத்திற்கும் ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது என்று அவர் குறிப்பிட்டார். மிகச்சிறந்த பள்ளிகள் திட்டத்திற்காக குஜராத்தில் வரவிருக்கும் தலைமுறைகளுக்கும், அனைத்து குடிமக்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இளைஞர்களுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை எடுத்துரைத்த பிரதமர், நவீன வசதிகள், நவீன வகுப்பறைகள், நவீன பயிற்றுமுறைகள் அனைத்துக்கும் அப்பால் கல்வி முறையை அடுத்த நிலைக்கு இது எடுத்துச் செல்லும் என்றார். நமது இளம் பருவ மாணவர்கள் மெய்நிகர் தன்மையின் ஆற்றலையும் பள்ளிகளில் உள்ள இணைய வசதிகளையும் இப்போது உணர்வார்கள் என்று அவர் கூறினார். மிகச்சிறந்த பள்ளிகள் இயக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த நாட்டில் முதன்மையானதாக குஜராத்தை மாற்றியிருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த வரலாற்று சாதனைக்காக முதலமைச்சர் திரு பூபேந்திர படேலின் அணியினருக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.
கடந்த இரு தசாப்தங்களில் கல்வி முறையில் குஜராத் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை பிரதமர் திரு மோடி சுட்டிக்காட்டினார். இந்த இரு தசாப்தங்களில் குஜராத்தில் 1.25 லட்சத்திற்கும் அதிகமான புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்று 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கல்வியின் தரத்தை நோக்கமாக கொண்ட குணோத்சவ் விழாவை பிரதமர் நினைவுகூர்ந்தார். இத்தகைய அணுகுமுறையால் மாணவர்களின் திறன்களும், திறமைகளும் மதிப்பீடு செய்யப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். குஜராத் எப்போதுமே கல்வித் துறையில் சில தனித்துவ மற்றும் பெரும் சோதனைகளின் பகுதியாக இருந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தை நாங்கள் உருவாக்கினோம், குஜராத்தின் முதலாவது ஆசிரியர் பயிற்சி பல்கலைக் கழகம் இது என்று அவர் மேலும் கூறினார்.
14.5 ஆயிரம் பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் தொடங்கவிருப்பது பற்றி பேசிய பிரதமர், தேசிய கல்விக்கொள்கையின் அமலாக்கத்திற்கு பிஎம் –ஸ்ரீ பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக இருக்கும் என்றார். இந்த திட்டத்திற்கு 27,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது அடிமை மனோபாவத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கும், திறமை மற்றும் புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிப்பதற்குமான முயற்சியாகும் என்று அவர் குறிப்பிட்டார். அறிவுடைமையின் அளவாக ஆங்கில மொழி எடுத்துக் கொள்ளப்பட்டதால் ஊரக திறமையை வெளிப்படுத்துவதில் தடங்கலை ஏற்படுத்திவிட்டது என்று கூறிய பிரதமர், தற்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றை இந்திய மொழிகளிலும் படிப்பதற்கான தெரிவை மாணவர்கள் மேற்கொள்வது தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்தார். குஜராத்தி உட்பட பல இந்திய மொழிகளில் இந்த பாடங்களை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் கூறினார்.
பழங்காலத்திலிருந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியமானதாக இருந்துள்ளதை பிரதமர் நினைவுகூர்ந்தார். இயற்கையாகவே அறிவின் ஆதரவாளராக இந்தியா இருந்துள்ளது என்பதையும், நமது மூதாதையர்கள் உலகின் மிகச்சிறந்த பல்கலைக் கழகங்களை கட்டி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நூலகங்களை நிறுவியுள்ளனர் என்பதையும் அவர் விவரித்தார்.
பிரதமர் தமது உரையை நிறைவு செய்தபோது, 21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பெரும்பாலான கண்டுபிடிப்புகள் இந்தியாவில் இருக்கும் என்று குறிப்பிட்டார். குஜராத் இதுவரை வர்த்தகத்திற்கும், வணிகத்திற்கும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் புதிய கண்டுபிடிப்பின் குவிமையமாக குஜராத் இருப்பதால், நாட்டின் அறிவு மையமாக அது உருவாகி வருகிறது என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்வ்ரத் மற்றும் மாநில அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
**************
(Release ID: 1869253)
Visitor Counter : 198
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam