பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 10 OCT 2022 11:58PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சர் திரு புபேந்திர பாய் பட்டேல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, ஜாம்நகரின் சகோதர சகோதரிகளே,

பரூச் முதல் ஜாம்நகர் வரை குஜராத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சிப் பயணத்தை விரிவுபடுத்தும் அனுபவம் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று 8 திட்டங்கள் தொடங்கப்பட்டு, அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இதே போன்ற காலகட்டத்தில் ஜாம்நகர், சவுராஷ்டிரா கட்ச் உட்பட குஜராத் முழுவதும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும் குஜராத் மக்களின் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் விரக்தி நிலை விரட்டியடிக்கப்பட்டு, இந்த மாநிலம் மீண்டும் எழுந்தது மட்டுமல்லாமல், முன்னேறவும் செய்தது.

திரு புபேந்திர பாய் குறிப்பிட்டதைப் போல, வளர்ச்சியின் ஐந்து உறுதிப்பாடுகளோடு குஜராத் தன்னைத்தானே வலிமைப்படுத்தியுள்ளது. மக்கள் சக்தி, அறிவு சக்தி, நீர் சக்தி, எரிசக்தி ஆற்றல், பாதுகாப்பு சக்தி ஆகியவை இந்த ஐந்து உறுதிப்பாடுகளின் ஆற்றல்மிக்க தூண்களாகும். குஜராத்தில் ஜல்ஜீவன் இயக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதற்கும், மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்களை விரைவாக அமல்படுத்துவதற்காகவும் திரு புபேந்திரா பாய் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ஏழைகளின் நலனுக்காக நமது அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இதன் காரணமாக பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம் டிசம்பர் மாதம் வரை தொடரவிருக்கிறது. அதேபோல ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் எந்த ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் ஜாம்நகரில் உணவு உறுதி செய்யப்படுகிறது.

இந்தியாவின் அனைத்துப பகுதிகளில் இருந்தும் ஜாம்நகர் இணைக்கப்பட வேண்டும் என்பதால் ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பில் அமிர்தசரஸ்- பதிண்டா-ஜாம்நகர் வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தொழில் மற்றும் வர்த்தகத்தை மேற்கொள்வது சுலபமாக உள்ளது. அரசின் தலையீட்டையும், சிக்கல்களையும் குறைப்பதே எனது மிகப்பெரிய நோக்கம். எனவேதான் சிறு வணிகர்களை இன்னல்களுக்கு உள்ளாக்கும் சுமார் 2000 சட்டங்களை நான் நீக்கி உள்ளேன். 2014- ஆம் ஆண்டுக்கு முன்பு, உலகளவில் 10-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்திலேயே 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்று, இரட்டை எஞ்சின் அரசு அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளது, இந்த வேகத்தை நாம் தொடர வேண்டும். இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1866627

**************

 (Release ID: 1866627)


(Release ID: 1867361)