பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் அமோதில் பல்வேறு திட்டங்களைத் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமரின் உரை

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2022 6:34PM by PIB Chennai

குஜராத் முதல்வர் திரு புபேந்திர பாய் பட்டேல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர். பாட்டில் அவர்களே, மத்திய அமைச்சரும் குஜராத் மண்ணின் மைந்தருமான திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!

இன்று காலை இங்கு வரும்போது எனக்கு ஒரு சோகமான செய்தி கிடைத்தது. முலாயம் சிங் யாதவ் அவர்கள் இன்று மறைந்து விட்டார். அவரது மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு. முதல்வர்களாக நாங்கள் இருவரும் சந்திக்கும்போதெல்லாம் ஒருவர் மீது ஒருவர் சிறப்பான அன்பைக் கொண்டிருந்தோம். அவரது மறைவை ஏற்றுக் கொள்ளும் வலிமையை அன்னாரது குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் இறைவன் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.

நண்பர்களே,

இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் எனது குஜராத் மாநிலத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதோடு, என் பரூச் மாவட்டத்தையும் மிகுந்த துடிப்பானதாக மாற்றுகிறது. இங்கு அமைக்கப்பட உள்ள ரசாயன உற்பத்தி தொழிற்சாலைகளால் ஜவுளித்துறை பயனடையும். ஜவுளித்துறை பயனடைந்தால், பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயியும் பயனடைவார். இந்தத் துறை தான் மிக அதிக வேலை வாய்ப்பை வழங்குகிறது. உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கினால், அவை வெளிநாட்டு பட்டாசுகளைப் போல அல்லாமல், வெளிச்சம் குறைவாக இருந்தாலும், ஏழை சகோதரர்களின் இல்லங்களில் அது ஒளியை ஏற்றும்.

சகோதர, சகோதரிகளே,

2014-ஆம் ஆண்டு பிரதமராக நான் தில்லி சென்ற போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-ஆம் இடம் வகித்தது. தற்போது 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. 250 ஆண்டுகள் நம்மை ஆண்ட நாட்டைப் பின் தள்ளி 5-ஆம் இடத்திற்கு முன்னேறியது, நம் நாட்டின் பெருமையையும் புகழையும் அதிகரிக்கிறது. இளம் தலைமுறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், சிறிய ரக புத்தொழில் நிறுவனங்கள் முதலியோர் இந்த சாதனைக்கு வித்திட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் குஜராத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகளும், தடுப்பூசிகளும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பாதுகாத்துள்ளன. நாட்டில் உள்ள மருந்து நிறுவனங்களில் 25% குஜராத்தில் இருப்பது நமக்கு பெருமை.

நமது வளர்ச்சி பயணத்தில் பழங்குடி மக்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவேதான் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடி தினமாக நாம் அறிவித்தோம். சுதந்திரத்திற்காகப் போராடிய பழங்குடி மக்களின் நினைவகங்கள் குஜராத் உட்பட நாடு முழுவதும்  அமைக்கப்பட்டன. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியில் உறுதியேற்போம். பருச் மாவட்டத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்.

மிக்க நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை குஜராத்தி மொழியில் வழங்கியிருந்தார்.

 

*****

 

(Release ID: 1866564)


(வெளியீட்டு அடையாள எண்: 1867036) வருகையாளர் எண்ணிக்கை : 212