ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா, வங்கதேசத்தின் கூட்டு நதிகள் ஆணையத்தின் 38-வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம்

Posted On: 26 AUG 2022 10:46AM by PIB Chennai

இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கூட்டு நதிகள் ஆணையத்தின் 38- வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் புதுதில்லியில் ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். வங்கதேச பிரதிநிதிகள் குழுவிற்கு அந்நாட்டின் நீர் வளங்கள் அமைச்சர் திரு ஜாஹீத் ஃபரூக் தலைமை வகித்தார். இவருடன் அந்நாட்டு நீர் வளங்கள் துணை அமைச்சர் திரு ஏ.கே.எம். இனாமுல் ஹோக் ஷமீமும் கூட்டத்தில் கலந்து கொண்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் மீண்டும் நடைபெற்றதால் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள நதிகளின் நீரை பகிர்வது, வெள்ளம் சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வது, நீர் மாசு பிரச்சனையை எதிர்கொள்வது போன்ற பரஸ்பர விருப்பம் உள்ள ஏராளமான இருதரப்பு விவகாரங்கள் பற்றி கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது. குஷியாரா நதியின் இடைக்கால நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்தன. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய-வங்கதேசம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஃபெனி ஆற்றிலிருந்து தண்ணீரை பயன்படுத்துவதற்கான வடிவமைப்பு மற்றும் இருப்பிடம் இறுதி செய்யப்பட்டதை இருதரப்பும் வரவேற்றன.

நிகழ்கால வெள்ள தரவுகளை இந்தியா வங்கதேசத்துடன் பகிர்ந்து வருவது, மிக முக்கியமான ஒன்றாகும். எதிர்பாராத வெள்ள நிகழ்வுகளை வங்கதேசம் எதிர்கொள்வதற்கு உதவிகரமாக தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கான காலத்தை அக்டோபர் 15 ஆம் தேதிக்கும் மேல் நீட்டித்து இந்தியா அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854557

***************


(Release ID: 1854625) Visitor Counter : 266