பிரதமர் அலுவலகம்

மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடுவின் பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் உரையாற்றினார்


“இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினத்தில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவைத் தலைவர், பிரதமர் ஆகியோர் சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள். மேலும் இவர்கள் அனைவரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர்கள்”

“எங்களின் குடியரசு துணைத் தலைவரான நீங்கள் இளைஞர்களின் நலனுக்காக அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறீர்கள்”

“உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் செவி மடுக்கப்படுகிறது, முக்கியத்துவம் தரப்படுகிறது, மதிப்பளிக்கப்படுகிறது, ஆனால், ஒருபோதும் எதிர்க்கப்படவில்லை”

“திரு வெங்கையா நாயுடு அவர்களின் நகைச்சுவையான பேச்சு கூட அறிவுபூர்வமாக இருக்கும்”

“நாட்டுக்கான உணர்வை நாம் பெற்றிருந்தால், நமது கருத்துக்களை முன்வைக்கும் கலையை நாம் கொண்டிருந்தால், பன்முக மொழிகள் மீது நாம் நம்பிக்கை வைத்திருந்தால், பின்னர் மொழியும், பிராந்தியமும் ஒருபோதும் நமக்கு தடையாக இருக்காது; இதனை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்”

“வெங்கய்யா நாயுடுவின் பாராட்டதக்க அம்சங்களில் ஒன்று இந்திய மொழிகள் மீதான அவரது ஆர்வம்”

“மாநிலங்களவையின் முன்னேற்றப் பயணத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை நீங்கள் எடுத்துள்ளீர்கள்”

“உங்களின் அணுகுமுறையில் ஜனநாயகத்தின் முதிர்ச்சியை நான் பார்க்கிறேன்”

Posted On: 08 AUG 2022 1:08PM by PIB Chennai

மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற குடியரசு துணைத்தலைவர் திரு.வெங்கய்யா நாயுடுவுக்கான பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் பிரதமர் திரு மோடி பங்கேற்றார். அலுவல் சார்ந்து மாநிலங்களவையின் தலைவரான திரு.வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்.

திரு வெங்கையா நாயுடுவின், அறிவுக்கூர்மை மற்றும் நகைச்சுவை மிக்க பல்வேறு தருணங்களை பிரதமர் நினைவுகூர்ந்தார்.  புதிய இந்தியாவின் தலைமைப் பண்புக்கான அடிப்படைகள் மாறி வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், “இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினத்தில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவைத் தலைவர், பிரதமர் ஆகியோர் சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள். மேலும் இவர்கள் அனைவரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர்கள்” என்றார். இது, மிகப்பெரிய மதிப்பீட்டின் குறியீடு மற்றும் புதிய சகாப்தத்தின் காட்சி என்றும் அவர் கூறினார்.

பொது வாழ்க்கையின் அனைத்து பணிகளின்போதும், இளைஞர்களின் நலனுக்காக குடியரசு துணைத்தலைவர் அளித்த தொடர்ச்சியான ஊக்குவிப்புகளை பிரதமர் நினைவுகூர்ந்தார். மாநிலங்களவையில் அவர் எப்போதும் இளைஞர்களை ஊக்குவித்தார். “எங்களின் குடியரசு துணைத்தலைவரான நீங்கள், இளைஞர்களின் நலனுக்காக எப்போதும் உங்கள் நேரத்தை செலவு செய்துள்ளீர்கள். உங்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இளைஞர் சக்தி மீது கவனம் செலுத்துவதாக இருந்தன என்று பிரதமர் மேலும் கூறினார். அவைக்கு வெளியே, குடியரசு துணைத்தலைவர் நிகழ்த்திய உரைகளில் 25 சதவீதம், நாட்டிலுள்ள இளைஞர்களின் நலனுக்கானவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பல்வேறு பணிகளில், திரு.வெங்கய்யா நாயுடுவுடன் தனக்கு இருந்த நெருங்கிய தொடர்பை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். குடியரசு துணைத்தலைவர், கட்சி தொண்டராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதை பிரதமர் பாராட்டினார். பாஜக தலைவராக நிர்வாகத் திறனுடனும், அமைச்சராக கடின உழைப்புடனும், அவைத்தலைவராக அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றியதை பிரதமர் பாராட்டினார். “நான் பல ஆண்டுகளாக திரு.வெங்கையா நாயுடுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அப்போது, பல்வேறு பொறுப்புகளிலும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதை நான் பார்த்துள்ளேன்” என்றும், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் வெங்கையா நாயுடுவிடம் இருந்து நிறைய கற்று கொள்ள வேண்டும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

குடியரசு துணைத்தலைவரின் நகைச்சுவை மிக்க பேச்சாற்றல் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். “உங்கள் வார்த்தைகள் அனைத்தும் செவி மடுக்கப்படுகிறது. அவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால், ஒருபோதும் அவை நிராகரிக்கப்படவில்லை” என்று பிரதமர் குறிப்பிட்டார். “திரு வெங்கையா நாயுடு அவர்களின் நகைச்சுவையான பேச்சு கூட அறிவுப்பூர்வமாக இருக்கும். மொழிகள் மீதான அவரது ஆளுமை மிகவும் பாராட்டத்தக்கது” என்று பிரதமர் குறிப்பிட்டார். திரு.வெங்கையா நாயுடுவின் திறமை அவைக்கு உள்ளேயும், வெளியேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் பாராட்டினார். “திரு.வெங்கையா நாயுடு கூறும் வார்த்தைகள் ஆழமும், பொருளும் உடையவை. அவை இணையற்ற தன்மையுடையவை. அவை புத்திசாலித்தனம், பலம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டது” என்றும் பிரதமர் கூறினார்.

தென்னிந்தியாவில் திரு.வெங்கையா நாயுடு தொடங்கிய அரசியல் பயணம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அவரது குறிப்பிட்ட அரசியல் சித்தாந்திற்கு உடனடி வரவேற்புகள் இல்லை என்றார். ஒரு கட்சியின் தொண்டனாக தனது அரசியல் பயணத்தை தொடங்கி, அதன் தலைவராக உயர்ந்த திரு.வெங்கையா நாயுடுவின் கொள்கை மற்றும் அதன் உறுதிப்பாட்டை பிரதமர் பாராட்டினார். “நாட்டுக்கான உணர்வை நாம் பெற்றிருந்தால், நமது கருத்துக்களை முன்வைக்கும் கலையை நாம் கொண்டிருந்தால், பன்முக மொழிகள் மீது நாம் நம்பிக்கை வைத்திருந்தால், பின்னர் மொழியும், பிராந்தியமும் ஒருபோதும் நமக்கு தடையாக இருக்காது; இதனை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டார். குடியரசு துணைத்தலைவரின் தாய்மொழிப் பற்றை பிரதமர் பாராட்டினார். “வெங்கையா நாயுடுவின் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்று, இந்திய மொழிகள் மீதான அவருடைய ஆர்வம். நாடாளுமன்ற அவைக்கு தலைமை தாங்கியபோது, அவரது இந்த ஆர்வம் வெளிப்பட்டது. மாநிலங்களவையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வதில் அவர் பங்களிப்பு செய்தார்”.

“குடியரசு துணைத்தலைவரின் அணுகுமுறை, அவரது தலைமைப் பண்பு ஆகியவை மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகையை அதிகரித்தது. இது அவை நடவடிக்கைகளை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது” என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். “குடியரசு துணைத்தலைவராக நீங்கள் இருந்த ஆண்டுகளில், மாநிலங்களவையின் நடவடிக்கைகள் 70 சதவீதம் அதிகரித்ததுடன், உறுப்பினர்களின் வருகையும் அதிகரித்தது. மேலும், சாதனை அளவாக, 177 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன அல்லது விவாதிக்கப்பட்டன. மாநிலங்களவையின் முன்னோக்கிய பயணத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை நீங்கள் எடுத்துள்ளீர்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

குடியரசு துணைத்தலைவரின் சமயோசித, புத்திசாலித்தனமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை பாராட்டிய பிரதமர், ஒரு கட்டத்துக்கு அப்பால், அவையில் ஏற்படும் இடையூறுகள் பல்வேறு அவமதிப்புகளுக்கு ஆளாவதை உறுதியாக நம்பியதற்காக பாராட்டு தெரிவித்தார். “உங்கள் அணுகுமுறையில் ஜனநாயகத்தின் முதிர்ச்சியை காண்கிறேன்” என்று தெரிவித்த பிரதமர், “இக்கட்டான தருணங்களிலும் அவையை ஒழுங்குப்படுத்தும் உங்களின் அணுகுமுறை, தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை பாராட்டுகிறேன்” என்றார். “அரசு முன்மொழியட்டும்எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கட்டும்; சபை தீர்மானிக்கட்டும்” என்ற திரு.வெங்கையா நாயுடுவின் கருத்தை பிரதமர் பாராட்டினார். முன்மொழிவுகளை ஏற்க, நிராகரிக்க அல்லது திருத்த இந்த அவைக்கு உரிமை உள்ளது. ஆனால், பிற அவைகளிலிருந்து பெறப்படும் முன்மொழிவுகளை முடக்கி வைப்பதை ஜனநாயகம் ஏற்கவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.

மாநிலங்களவைக்கும், நாட்டிற்கும் குடியரசு துணைத் தலைவரின் வழிகாட்டுதல்கள் மற்றும் பங்களிப்புக்காக பிரதமர்  நன்றி தெரிவித்தார்.

                                               ***************



(Release ID: 1850019) Visitor Counter : 211